மகிழ்ச்சியை வாங்கும் பணம்; இது எவ்வளவு தூரம் உண்மை? விடை சொல்கிறது ஆய்வு!

Posted on ஒக்ரோபர் 1, 2010

10


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

மன உளைச்சல் நிறைந்த பணி/வேலைகளே ஒருவரின் மாரடைப்புக்கு பெரிதும் காரணமாக இருக்கின்றனவாம். அதனால், உங்கள் பணி/வேலை உங்களை அதிகமான மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வுக்கு உட்படுத்தினால், அந்த வேலையை விட்டு வேறு ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்வது சாலச் சிறந்தது என்கிறார்கள் இருதயநல மருத்துவர்கள்!

இந்த உலகத்துல எதுவுமே இல்லாமகூட வாழ்ந்துடலாம். ஆனா பணம் மட்டும் இல்லாம வாழவே முடியாது. ஏன்னா, பணம் பத்தும் செய்யும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். ஆக, பணம் இல்லாம வாழ்க்கையே இல்லை அப்படீங்கிற கருத்த, உலகத்தையே உருவாக்கினதா சொல்ற கடவுளோடவே ஒப்பிட்டுப்பாடினாரு ஒரு கவிஞரு…..

“காசேதான் கடவுளப்பா…..அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா……?!”

அது சரி, ஆமா பணத்தை ஏன் ஆனானப்பட்ட கடவுளோடவே ஒப்பிட்டுப்பார்க்குறாங்க? அதுக்கான காரணம் உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும். அதாவது, மனித வாழ்க்கையின் ஆதாரமான ஆசை என்கிற உந்துதலால், மனிதர்களுக்கு ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய வல்லவரு, உலகத்தின் சகலகலா வல்லவராக நம்பப்படும் கடவுள். ஆனா, இந்த 21 ஆம் நூற்றாண்டுல அந்தக் கடவுளாலயே பூர்த்தி செய்ய முடியாத ஆசை/தேவையைக் கூட பணம்/காசு பூர்த்தி செய்துவிடும் அப்படீங்கிற நிதர்சனத்தை வலியுறுத்தத்தான், அனேகமா காசேதான் கடவுளடா பாடியிருக்காரு அந்த கவிஞரு?!

ஒரு மனிதனின் ஆசைகள் நிறைவேறிட்டா, அவனோட மனசு மகிழ்ச்சியடையும். பணமிருந்தா, மனுசனோட பெரும்பாலான ஆசைகள் நிறைவேறிடும். ஆக, பணமிருந்தா மகிழ்ச்சியை வாங்கிடலாம் அப்படீன்னு ஒரு கருத்து நம்ம மனித சமுதாயத்துல இருக்கு! இப்படியொரு கருத்து எவ்வளவுதூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுன்னு மக்கள்கிட்டக் கேட்டா, வாழ்க்கையைப் பத்தின அவரவரின் புரிதலினடிப்படையில, ஏகப்பட்ட கருத்துகள முன்வைப்பாங்கங்கிறது உண்மைதான்னாலும், அதுல பெரும்பாலானவங்களோட கருத்து, “ஆமாம், பணமிருந்தால் மகிழ்ச்சியை வாங்கிவிடலாம்” என்பதாகத்தானிருக்கும் அப்படீன்னு நம்மலால யூகிக்கத்தான் முடியுமே தவிர திட்டவட்டமா சொல்ல முடியாது! அப்படியே ஒருத்தர் அடிச்சு (?) சொன்னாலும், சமுதாயத்தைச் சேர்ந்த எல்லாரும் அதை ஏத்துக்க மாட்டாங்க!!

ஆனா, இதுவே ஒரு திட்டமிட்ட ஆய்வுமூலமா, “பணத்தால் மகிழ்ச்சியை வாங்கிவிட முடியுமா” அப்படீங்கிற கேள்விக்கு பதில் சொல்ல முயற்ச்சிப் பண்ணினா, ஒரு நம்பகமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்மை சிந்திக்க வைக்கக்கூடிய ஒரு கருத்து/முடிவுக்கு கண்டிப்பா வரமுடியும் இல்லீங்களா? அப்படியொரு திட்டமிடப்பட்ட ஆய்வுமூலமா, பணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான ஒரு தொடர்பை, விஞ்ஞானப்பூர்வமாக விளக்கிச்சொல்லும் ஒரு ஆய்வுப்பத்தின, ஒரு சிறுகுறிப்பைத்தான் இனி நாம இந்தப் பதிவு முழுக்க பார்க்கப்போறோம். வாங்க, பணத்துக்கும் மகிழ்ச்சிக்குமான தொடர்பை அப்படியே பிரிச்சு மேஞ்சுடலாம்……

வருமானமும் மகிழ்ச்சியும், அவிழும் ஒரு முடிச்சு!

Image credit: glitterfly.com

நம்மில் பலர் நம்பிக்கொண்டிருப்பது போல, “பணமிருந்தால் வாழ்க்கையில் ஒரு ஒட்டுமொத்த திருப்தி கிடைக்குமென்பது உண்மைதான். ஆனால், தேவைக்கதிகமான பணம் வாழ்நாள் முழுவதிலும் மகிழ்ச்சியும், குதூகலமும் இருக்கும் என்பதற்க்கான உத்தரவாதத்தை தருவதில்லை” என்று, வருமானம் மற்றும் மகிழ்ச்சி குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

“ஒருவரின் வருமானம் உயர உயர அவர்களின் வாழ்க்கையின் ஒட்டுமொத்த திருப்தி அதிகரித்தது என்றபோதும், ஒரு நாளின் பல தருணங்களில் ஒருவர் அடையும் மகிழ்ச்சியானது, அவர்களின் சமுதாய மற்றும் உடல் ரீதியிலான கூறுகளையே பெரிதும் சார்ந்திருந்தது” என்கிறது இந்த சர்வேயின் முடிவுகள். அதாவது, குறிப்பிட்ட ஒரு நாளில் ஒருவர் புகைப்பிடித்தாரா அல்லது அந்த நாளை தனிமையில் கழித்தாரா என்பதைப் பொறுத்தே அவரின் அன்றைய சந்தோஷம்/மகிழ்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது என்பதே இந்த சர்வே முடிவுகள் முன்வைக்கும் கருத்து!

இந்த சர்வேயின் முடிவுகள், இதையொத்த மற்றுமோர் சர்வதேச மகிழ்ச்சி குறித்த ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன என்பதே இந்த ஆய்வின் மற்றுமோர் சுவாரசியம். அதாவது, சர்வதேச மகிழ்ச்சி குறித்த ஒரு ஆய்வில், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. உதாரணமாக, தினசரி மகிழ்ச்சி அளவிலனடிப்படையில், சுமார் 132 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 26-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது!

மனநலம், வாழ்க்கையில் முழுமையான திருப்தி ஆகியவற்றை பாதிக்கும் வருமானம்!

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்தப் புதிய ஆய்வில், அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளார்கள் டேனியல் கானேமேன் மற்றும் அங்குஸ் டீட்டன் ஆகியோர் அடங்கிய குழு, ஒருவரின் வருமானம் அவரின் இருவகையான நலங்களான, உணர்வுரீதியான நலம்/மனநலம் மற்றும் வாழ்க்கையில் முழுமையான திருப்தி ஆகியவற்றை பாதிக்கிறதா என்றும் அப்படி பாதித்தால் எந்த விதத்தில் பாதிக்கிறது என்றும் அறிய முற்பட்டார்கள். இந்த ஆய்வை மேற்கொள்ள, ஒவ்வொரு நாளும் சுமார் 1000 அமெரிக்கர்களின் கருத்துகளை சேகரித்த, கேளப் நிர்வாகத்தின் “கேளப் ஹெல்த்வேய்ஸ் வெல்பீயிங் இன்டெக்ஸ் (Gallup-Healthways Well-Being Index)”-லிருந்து சுமார் 4,50000 கருத்துகளை ஆராய்ந்த்தார்கள்! மேலும், இந்த ஆய்வில் வருமானத்தில் ஏற்பட்ட எண்ணிக்கை மாற்றத்தை தவிர்த்து விழுக்காடு மாற்றங்களை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

“உதாரணமாக, ஒருவரின் வருமானத்தைப் பொறுத்தவரை, அவரின் மாத வருமானத்தில் ஏற்பட்ட 100 டாலர் ஏற்றம், குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய ஒரு மாற்றத்தை, அதே அளவு ஒரு நிதி நிறுவனத்தின் உயர்பதவியிலிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தவில்லை! ஆனால், இவ்விருவரின் வருமானத்தின் இரட்டிப்பு இவ்விருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

வாழ்க்கைத்தரம் குறித்த மதிப்பீட்டிற்க்காக, ஆய்வில் கலந்துகொண்டவர்கள் “1 முதல் 10” வரையிலான எண்ணிக்கையில்,  மிகவும் மோசமான வாழ்க்கை தொடங்கி மிகவும் பிரமாதமான வாழ்க்கை என்கிற அடிப்படையில், தங்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். உணர்வுரீதியிலான நலம்/மனநலம் குறித்த மதிப்பீட்டிற்க்காக,  ஆய்விற்க்கு முந்தைய தினம், ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட சாதகமான/மகிழ்ச்சியான உணர்வுகள்  அல்லது பாதகமான/சோகமான உணர்வுகள் குறித்த கேள்விகளுக்கு சரி/தவறு என்னும் பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்!

ஆய்வின் முடிவில், ஆய்வில் கலந்துகொண்டவர்களில் சுமார் 85%, ஆய்விற்க்கு முந்தைய தினம் தாங்கள் அதிகமான சாதகமான உணர்வுகளான மகிழ்ச்சி, குதூகலம், சிரிப்பு/புன்னகை ஆகியவற்றை அனுபவித்ததாகவும், 24% மட்டுமே அதிகமாக சோகமான மற்றும் கவலையான உணர்வுகளை அனுபவித்ததாகவும் தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களின் சராசரியான வாழ்க்கைத்தர மதிப்பீடு 6.76 என்றும் அதில் அதிகபட்சமாக சில 10 வரையிலும் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

உடல் நலக்குறைவு, தலைவலி, தனிமை, வயது முதிர்ந்தவர்கள் பராமரிப்பது போன்றவை குறைந்த உணர்வுரீதியிலான நலத்துடன் தொடர்புடையதாக இருந்தது என்றும், ஒரு கல்லூரி பட்டதாரியாக இருப்பது வாழ்க்கைத்தர மதிப்பீட்டில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அந்த கல்லூரி பட்டம் அவர்களின் தினசரி மகிழ்ச்சிக்கு எந்த விதத்திலும் காரணமாக இருக்கவில்லை என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

பணம் பாதாளம் வரை பாயுமா? சில வரையரைகள்!

பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என்பது போன்ற பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். ஆனால், பணம் உண்மையிலேயே பத்தும் செய்யுமா? அல்லது பாதாளம் வரைதான் பாயுமா? வாங்க பணம் என்னதான் செய்யுது, அதோட வரையரைதான் என்ன அப்படீங்கிறதப் பார்ப்போம்……

இந்த ஆய்வில், “ஒருவரின் குறைந்த வருமானமானது, அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் துரதிஷ்டங்களான, விவாகரத்து, உடல் நலக்குறைவு மற்றும் தனிமை உள்ளிட்டவையால் ஏற்படும் மன உளைச்சலை அதிகப்படுத்துவது” கண்டறியப்பட்டது! உதாரணமாக, சுமார் 3000 டாலர் மாத வருமானம் ஈட்டுபவர்களில், 38% தங்களின் தினசரி வாழ்க்கையில் தலைவலி, நிறைந்த சோகம், கவலைகள் நிறைந்திருப்பதாகவும், ஆனால் 19% இவை இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!

ஆனால், சுமார் 1000 டாலர் மாத வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதே தலைவலிகள் அவர்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கிறது என்றும், உதாரணமாக இவர்களில் சுமார் 70%, தலைவலி ஏற்பட்டபோது சோகத்துடன் தொடர்புடைய “நீல உணர்வுகள்” ஏற்பட்டதாகவும், 38% தலைவலி ஏற்படாதபோது நீள உணர்வுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆனால் மிகவும் சுவாரசியமாக, சராசரியாக சுமார் 75,000 டாலர் ஆண்டுவருமானம் உள்ளவர்களின் வாழ்க்கையில், பணமானது அவர்களின் தினசரி மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதில் எந்த விதத்திலும் உதவியாய் இல்லை என்று தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

ஆக, சுமார் 75,000 டாலருக்கு மேல் ஆண்டுவருமான ஈட்டுபவர்களுக்கு, அந்தப் பணமானது அவர்களின்  உணர்வுரீதியிலான நலம்/மன நலத்துடன் தொடர்புடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளான, நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, வலிகள் மற்றும் நோய்களை தவிர்ப்பது மற்றும் ஓய்வு நேரத்தை சந்தொஷமாக கழிப்பது போன்றவற்றை மேம்படுத்த எந்த விதத்திலும் உதவவில்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள் டேனியலும், அங்குஸும்!

அதாவது, ஒருவரின் ஆண்டுவருமானமானது, 75,000 டாலருக்கும் அதிகமாக உயரும்பட்சத்தில், மகிழ்ச்சியான உணர்வுகளை வாங்கும் சக்தி அல்லது திறனானது, சில பாதகமான காரணிகளால் ஒரு சம நிலையை அடைந்துவிடுகிறதென்றும், அதற்க்குச் சான்றாக “அதிக வருமானமானது, ஒருவரின் சின்ன சின்ன சந்தோஷங்களை குறைத்துவிடுகிறது” என்பதைக் கண்டறிந்த மற்றுமொரு  முந்தைய ஆய்வு முடிவுகள் இருக்கின்றன என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் டேனியலும், அங்குஸும்!

அது சரி, இதையெல்லாம் படிச்சதுக்கப்புறம் உங்களுக்கு என்ன தோணுது? பணம் மகிழ்ச்சியை வாங்குவது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்……

பின்குறிப்பு: ஆய்வுப்பணிகள் மற்றும் சர்வதேச கான்ஃபெரென்ஸ் காரணமாக வெளியூர் சென்றிருந்தமையால், சுமார் இருவாரங்களாக பதிவேதும் எழுத முடியாமைக்காக வருந்துகிறேன். இருந்தபோதும், என் வலையை வாசித்து ஆதரவு அளித்துக்கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்! இனிவரும் காலங்களிலும், காலதாமதமாக வரும் பதிவுகளை ஆதரித்து என்னை தொடர்ந்து ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி.

தொடர்புடைய சில பதிவுகள்:

வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?

உளவியல்: காதலின் “அறிவியல்” கண்களின் வார்த்தைகளில்?!

ரகசிய ஆய்வு: ஆஸ்கர் விருது பரிந்துரைகள் பற்றிய ரகசியங்கள்!

உலகத்தின் மிக மோசமான பத்து ஃபோபியாக்கள்(பயங்கள்)!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!