ஜப்பானில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கதிரியக்கம்! உண்மை நிலவரம்தான் என்ன?

Posted on மார்ச் 31, 2011

11


ஜப்பானின் ஃபுகுஷிமாவிலுள்ள தாய்இச்சி அணுமின் நிலைய 4 அணுஉலைகளின் கூரைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்துச்சிதரியது குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை எழுதிய பின்னர், கடந்த 15 நாட்களாக அணு உலைகளில் வெடிப்போ, பெரிய அசம்பாவிதமோ எதுவும் ஏற்படவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல்.

ஆனால், அணு உலைகளை குளிர்விக்கும் பொருட்டு உட்செலுத்தப்படும் கடல் நீர், சில தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்ட நல்ல நீர் அணு உலைகளுக்குள் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்றும் தெரியவந்தது. ஏனென்றால், உப்புத்தண்ணீரான கடல் நீரை கொண்டு குளிர்விப்பதால், அணு உலையினுள்ளே இருக்கும் யுரேனிய கம்பிகளும் மற்ற அணு உலை கட்டுமானங்களும் விரைவில் சேதமடைந்து, அதன் காரணமாகவும் அணு உலை வெடிக்கும் அபாயம் இருப்பதாலேயே கடல் நீரை தவிர்த்து நல்ல நீரை செலுத்தினார்கள்!

“எல்லாஞ்சரிதான், ஆனா ஒரு விஷயம் மட்டும் இன்னும் இடிக்குதே” என்பதுபோல அணு உலைகள் வெடிக்காமலிருக்க தொடர்ந்து குளிர்விக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதிலிருந்து சுற்றுச்சூழலுக்குள் வெளியிடப்படும் அணுக்கதிரியக்கம் நிறைந்த காற்றும், திரவங்களும் மட்டும் நின்றபாடில்லை! இதுதான் “எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல” கதிரியக்க ஆபத்து குறித்த பயங்களையும், புரளிகளையும் உலகெங்கிலும் வளர்த்துக்கொண்டிருப்பதற்கு காரணம்!

ஜப்பானில் (பெரும்பாலும் வெளி நாட்டுக்காரர்கள் மூலமாக) பரவிவரும் பயங்கள், புரளிகளுக்கு உதாரணமாக,

“(உலகில்) இனி எப்போ மழை பெய்தாலும் அதில் நனைவதால் கதிரியக்க ஆபத்துகளுக்கு ஆளாகிவிடுவோம். அதனால் மழையில் தவறியும் நனைந்துவிடக்கூடாது”

” நிலத்தடி நீரில் கதிரியக்கம் கலந்து பரவிவிட்டதால், தண்ணீர் குழாயில் வரும் நீரை அருந்தக்கூடாது. மினரல் வாட்டரை மட்டும்தான் அருந்தவேண்டும்”

“கதிரியக்க ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அயோடின் மாத்திரைகளை வாங்கி விழுங்குவது நல்லது”

“ஜப்பானில் விற்பனையில் இருக்கும் காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி, மீன் இப்படி எல்லாவற்றிலும் கதிரியக்கம் பரவிவிட்டது. அதனால் கடைகளில் சென்று இவற்றை வாங்கக்கூடாது. அதற்கு மாற்றாக, அமேசான் போன்ற ஆன்லைன் (இணையதள) கடைகளில் இப்பொருட்களை வாங்குவது நல்லது”

இப்படி புரளிகளை அடுக்கிக்கிட்டே போகலாம். ஆனா, இம்மாதிரியான புரளிகள்/செய்திகள் எங்கிருந்து வருகிறது? அதை வெளியிடுவது யார்? இந்த புரளிகளில் இருக்கும் உண்மைத்தன்மை எவ்வளவு/எத்தனை விழுக்காடு? இதை நம்புவதா கூடாதா?

இப்படி பலப்பல கேள்விகள் இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும்! ஆனா அதுக்கான சரியான/நம்பத்தகுந்த விடைகளும், விளக்கங்களும்தான் ரொம்பக் குறைவா இருக்கு. இந்த கதிரியக்க பரவல் குறித்த ஆதாரப்பூர்வமான செய்திகள், அறிவியல் விளக்கங்கள் சிலவற்றை நான் படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு!

ஜப்பானில் கதிரியக்கம் பரவல்; ஆதாரப்பூர்வமான உண்மை நிலவரம்!

ஃபுகுஷிமா அணுமின் நிலைய விபத்து தொடர்பான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் போன்றவற்றின் அடிப்படையில்

படம்: கூகுள்

வெளியாகியுள்ள சமீபத்திய செய்தியறிக்கையின்படி அணு உலைகளிலிருந்து வெளியாகும் கதிரியக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் பாதுகாப்பு குறித்த பெரியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

கதிரியக்க கண்காணிப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, அணு உலைகளில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் பெரும்பாலும் அணுமின் நிலையத்தைச் சுற்றிய வடமேற்கு பகுதியிலேயே மிகவும் ஆபத்தான அளவுகளில் இருக்கிறது என்று தெரிகிறது! அணு உலை கூரைகளின் வெடிப்பின்போது வெளியான கதிரியக்கத்தை விட குறைந்த அளவிலேயே இப்போது கதிரியக்கம் வெளியாகிறது என்றாலும், கதிரியக்க கழிவுகள் வெளியிடப்படுவது தொடர்கிறது! அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய கணிப்புகள் திட்டவட்டமாக சொல்லும்படியாக இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்!

இது குறித்த திட்டவட்டமான கணிப்புகள் மேற்கொள்ளப்பட இன்னும் காலம் பிடிக்கும். இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை. ஆனால், ஏற்படப்போகும் விளைவுகளிலிருந்து உடனே மக்களை பாதுகாக்கும் ஜப்பானிய அரசின் முயற்சிகளான, பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மக்களை உடனே வெளியேற்றுவது, மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்வது மற்றும் மீன் பிடிப்பது போன்றவற்றை தடை செய்வது போன்றவை முழுவீச்சில் நடந்துவருகிறது என்கிறார் இதில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து நாட்டின் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக இயற்பியலாளர் ஜிம் ஸ்மித்!

அணுக்கதிரியக்கம் குறித்த ஆரம்பநிலை கணிப்புகளின்படி, ஃபுகுஷிமாவின் அணு உலைகளிலிருந்து வெளியாகியுள்ள கதிரியக்கம், 1986-ம் ஆண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய ரஷ்ய அணுஉலை விபத்தான செர்னோபில்லில் வெளியான அளவில் பத்தில் ஒரு பங்கு என்றும், வெளியான கதிரியக்கத்தை காற்று பசிபிக் பெருங்கடலுக்குள் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது!

ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகரிலுள்ள மத்திய வானிலை மற்றும் அகநில இயக்கவியல் ஆய்வுமையத்தின் கடந்தவார கணிப்புப்படி, ஃபுகுஷிமாவிலிருந்து வெளியான கதிரியக்க புகைமண்டலமானது, தற்போது வட அரைக்கோளத்தில் பரவிவிட்டதாகவும், காற்றுமண்டலத்தில் கலந்துள்ள கதிரியக்க வேதியல்களான அயோடின்-131 மற்றும் சீசியம்-137 ஆகியவை மிக மிக குறைந்த (negligible levels) அளவிலேயே ஜப்பானுக்கு வெளியேயுள்ள நாடுகளுக்கு பரவியுள்ளது என்று தெரியவருகிறது! மாறாக, ரஷ்ய செர்னோபில் அணுஉலை விபத்தில் வெளியான கதிரியக்கம் நிலத்திலேயே முடக்கப்பட்டிருந்ததால், ஐரோப்பாவின் பல இடங்களுக்கு பரவிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த கதிரியக்க பரவலால் ஜப்பானின் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, அங்குள்ள கதிரியக்க அயோடின் மற்றும் சீசியத்தின் அளவுகள் என்ன போன்ற இன்னும் பல விவரங்கள் இதன் தொடர்ச்சியாக வரும் அடுத்த பாகத்தில் பார்ப்போம். நேரமின்மை காரணமாகவே இந்த பாகப்பிரிவினை. மன்னிக்கவும்……
தொடரும்……

தொடர்புடைய சில பதிவுகள்:

அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்…..

சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி