அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

Posted on மார்ச் 15, 2011

10


சிறிய விஷயத்தை ஊதிப்பெரிதாக்குவதாக முந்தைய இடுகையில் ஊடகங்களை குறைகூறிய நான், பூதாகரமாக வெடிக்கக்கூடிய ஒரு விஷயத்தை புஸ்வானம்போல காட்டி (?), “ஒன்னும் பிரச்சினையில்ல சமாளிச்சிடலாம்” என்பதுபோல சப்பைகட்டு கட்டிக்கொண்டிருக்கிறதா இந்த ஜப்பானிய அரசு என்று ஒரு கேள்வியை எழுப்பி, இந்த பிரச்சினை குறித்த உங்களனைவரின் அபிப்ராயங்களை தெரிந்துகொள்ளலாமென்று இந்த சிறு இடுகையை பதிவு செய்ய எண்ணினேன்!

கடந்த 1945 ஆம் ஆண்டு, ஜப்பானின் ஹிரொஷிமாவும், நாகசாக்கியும் அமெரிக்க அணுகுண்டினால் தாக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட பேராபத்து/பாதிப்புகளுக்குப்பின் ஜப்பான் சந்தித்திருக்கும்/சந்திக்கும் மற்றொரு பேராபத்து இந்த பூகம்ப-சுனாமி மற்றும் அணு உலைகள் தொடர்பான பேராபத்து குறித்த ஐயப்பாடுகள் என்கிறார்கள் உலக வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்கள்!

நம்ம வடிவேலுவை “எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்டா…., இவன் ரொம்ப நல்லவன்டா” எனும் ரௌடிகளைப்போல,

எத்தனை சீற்றங்கள், அணுகுண்டு வெடிப்புகள், சுனாமிகள் வந்தாலும் அஞ்சா நெஞ்சன்களாக எதிர்த்து போராடி/எதிர்நீச்சல் போட்டு, வாழ்வின் தடைக்கற்களையே படிக்கற்களாக மாற்றிக்கொண்டு முன்னேறும் ஜப்பானியர்களின் தன்னம்பிக்கையை, தனக்கு சாகதகமாக பயன்படுத்திக்கொண்டு, “ஒரு தட்டு சோற்றில் முழு பூசணிக்காயை மறைத்த” கதையாக, அணு உலையின் பேராபத்தினை குறைத்துக்காட்டி (?) மழுப்பிக்கொண்டிருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது சில தினங்களாக வெளிவரும் ஜப்பானிய அரசின் செய்திகளும், அறிக்கைகளும்!!

சரி சரி கதை சொல்லிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை, நான் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்…..

வெடிக்கும் அணு உலைகளின் கூரைகளும், சுற்றுச்சூழலுக்குள் பரவும் கதிரியக்கமும்??!!

Picture: smh.com.au

முந்தைய இடுகையில் சொன்னதைப்போல, அணு உலையினுள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் யுரேனிய கம்பிகள் பாதி அளவுக்கு வெளியில் நீட்டிக்கொண்டு வருகின்றன. அதனால் யுரேனியம் உருகுகிறது, அதன் விளைவாக உருவாகும் கதிரியக்க வாயுக்கள் அடங்கிய நீராவியினால் அணு உலைக்குள்ளே காற்றழுத்தம் மற்றும் வெப்பம் அதிகமாகிறது! இது தொடர்ந்தால், அணு உலை வெடித்துச்சிதறிவிடும் பேராபத்து ஏற்பட்டுவிடும்.

இதை தவிர்க்க, அணு உலையினுள் பெருகிக்கொண்டிருக்கும் கதிரியக்க வாயுக்களான சீசியம்-137 மற்றும் அயோடின்-121 மற்றும் ஹைட்ரஜன் அடங்கிய நீராவியினை சுற்றுச்சூழலுக்குள் வெளியிட்டே ஆக வேண்டும்! இதன் காரணமாக இதுவரை சில முறைகள் அந்த கதிரியக்க நீராவியினை சுற்றுச்சூழலுக்குள் வெளியிட்டுவிட்டார்கள். இதன் விளைவாக, ஃபுகுஷிமாவின் அணுமின் நிலையத்தைச் சுற்றிய மக்கள் வாழும் பகுதியில் 23.18 மைக்ரோ சீவர்ட்ஸ் அளவிலான கதிரியக்க வாயுக்கள் பரவியிருக்கின்றன. மனிதர்களுக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும் கதிரியக்க அளவு 100 மைக்ரோ சீவர்ட்ஸ் என்கிறார்கள்!

முக்கியமாக, முந்தைய இடுகையில் தாய் இச்சி 1 என்னும் அணுமின் நிலையத்தின் 1 மற்றும் 3 என்னும் இரு அணு உலைகளின் கூரைகள் வெடித்துச்சிதறின என்று குறிப்பிட்டிருந்தேன்.  15.3.2011 செவ்வாய்கிழமையான இன்று, தாய் இச்சி 1 அணுமின் நிலையத்தின் 2 (6.30 a.m) மற்றும் 4 (11 a.m) என்னும் மேலும் இரு அணு உலைகளின் கூரையும் வெடித்துச்சிதறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது! இந்நான்கு அணு உலையின் கூரைகள் வெடித்ததில், தாய் இச்சி 1 அணுமின் நிலையத்தின் அணு உலை 1-ச்சுற்றிய கட்டிடத்தை ஒட்டிய இடங்களில் சுமார் 8200 மைக்ரோ சீவர்ட்ஸ் கதிரியக்கமும், அணு உலை 2-சுற்றிய கட்டிடத்தை ஒட்டிய இடங்களில் சுமார் 400 மில்லி சீவர்ட்ஸ் கதிரியக்கம் வெளியாகியுள்ளது என்பது ஆபத்தான செய்தி!! 1000 மைக்ரோ சீவர்ட்ஸ் என்பது 1 மில்லி சீவர்ட்ஸ் என்பதை நினைவில் கொள்க!

மேலும் தாய் இச்சி 2 அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6 என்னும் இரு அணு உலைகள் வேலை செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன! ஆனால் தற்போது, இவற்றிலும் காற்றழுத்தம் மற்றும் வெப்பம் அதிகரித்து வருவதாக சற்றுமுன் வந்த ஜப்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன! அதையும் பாதுகாக்க தொடங்கியுள்ளது அணு உலைகளை பராமறித்து வரும் டோக்கியோ எலெக்ட்ரிக் நிறுவனம்!!

மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

இவர்கள் நிமிடத்துக்கு ஒரு விதமாக அணு உலையின் கூரைகள் வெடித்திருப்பதாகவும், கதிரியக்கம் பரவியிருப்பதாகவும் பல விவரங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள் தொலைக்காட்சிகளில்! இதில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு பரவிக்கொண்டிருக்கும் கதிரியக்கம் பாதுகாப்பான அளவுக்குள் இருக்கிறதா, இல்லை அதை தாண்டிவிட்டதா என்பது குறித்து ஒரு தெளிவான கருத்து எனக்கு இன்னும் ஏற்படவில்லை!

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. “சில அணு உலைகளினுள்ளே இருக்கும் யுரேனியம் கம்பிகள் சிறுக சிறுக உருகிக்கொண்டிருக்கின்றன. அதனால் சுற்றுச்சூழலுக்குள் வெளியிடப்படும் கதிரியக்க வாயுக்களும், கதிரியக்கமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றன!!”.

அரசாங்கமும் பல செய்தியறிக்கைகள், ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை சுற்றியிருக்கும் மக்கள் 30 கி.மீ தொலைவுக்கு வெளியே இருக்க சொல்லி வலியுறுத்துதல், அதற்குப்பின்னும் வீட்டுக்கு வெளியே வராமல் இருக்க சொல்லி வலியுறுத்துதல், சுற்றுச்சூழலுக்குள் இருக்கும் கதிரியக்க அளவுகள் என்ன என்பது போன்ற பல விவரங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறது!

ஜப்பானின் இந்த அணு உலைகள் தொடர்பான பாதிப்பு குறித்து பேசிய அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர், இப்போது ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இந்த அணு உலை தொடர்பான பாதிப்பானது, கடந்த 1986 ஆம் ஆண்டு, ஏப்ரல் 26 ஆம் தேதி, உக்ரேன் நாட்டின் செர்னோபைல் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட, உலகில் இதுவரை ஏற்பட்டுள்ள அணு உலை விபத்துகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் செர்னோபைல் அணு மின் நிலைய விபத்துக்கும், கடந்த 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் த்ரீ மைல் ஐலாண்ட் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட, த்ரீ மைல் ஐலாண்ட் அணு மின் நிலைய விபத்துக்கும் இடைப்பட்ட அளவிலான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள்!!

மேலே குறிப்பிட்டுள்ள அணு மின் நிலைய ஆபத்துகளால் இன்றுவரையிலும் பல ஆபத்துகள் தொடர்கின்றன என்கிறது அவைபற்றிய விக்கிபீடியா குறிப்புகள். அவ்விரு இடங்களை சுற்றி சுமார் 30 கி.மீ தொலைவில் வாழ்ந்த மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இன்றுவரையிலும் பாதிப்பு தொடர்ந்து வருகின்றது என்கின்றன அவைபற்றிய விக்கிபீடியா குறிப்புகள்!! (விக்கிபீடியா இணைப்புகளுக்குச் செல்ல மேலே அடிக்கோடிடப்பட்டுள்ள எழுத்துக்களில் சொடுக்கவும்!)

இப்போ இங்கே இருக்குற நான் உள்ளிட்ட எல்லோருக்கும், மேலும் ஏற்படக்கூடிய பூகம்பங்கள்/சுனாமிகள் மற்றும் அணு உலை விபத்து ஆகியவை குறித்த மிதமிஞ்சிய குழப்பமும், ஐயமும் மட்டுமே கூடிக்கொண்டிருக்கிறது! ஆனால் என்ன செய்ய……

“இதுவும் கடந்து போகும் என்றே முன்னேறிச்செல்ல வேண்டியிருக்கிறது”

ஜப்பான் குறித்த இற்றைப்படுத்தப்பட்ட (ஆங்கில) செய்திகளுக்கு இங்கு செல்லுங்கள்

தொடர்புடைய சில பதிவுகள்:

ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்…..

சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..

உலக அழிவு: இன்னும் 100 வருடங்களில் அழியப்போகும் ‘மனித’ இனம்!!

தொடர்புடைய பிற பதிவர்களின் சில பதிவுகள்:

இன்னமும் வேண்டுமா??

ஜப்பான் அணு உலை வெடிப்பு – ஒரு விஞ்ஞானியின் பார்வையில் !

அணு உலைகளை பாதுகாக்க மறுத்த ஜப்பான் முதலாளித்துவம்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி

Advertisements