ஜப்பான்: ‘ஒகோனோமியாக்கியும்’ ஹிரோஷிமாவும்; ஒரு தொடர்பு!

Posted on ஜூலை 20, 2010

7


இன்று ஒரு இருதய நலக்குறிப்பு:

சிரிப்பு சிகிச்சை (Laughter therapy) என்பது ஆரோக்கியத்தை கூட்டுகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது! உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், மன உளைச்சல், எல்லாவற்றிற்க்கும் மேலாக, இருதய நோய்களை குறைக்க வல்லதாம் சிரிப்பு! அதனால சிரித்து வாழுங்கள், இருதய நோயை எதிர்த்து வாழுங்கள்!

‘ஹிரோஷிமா’ அப்படீன்னு சொன்னாலே கூடவே ‘நாகசாக்கி’ என்கிற பெயரும் ஒட்டிக்கொண்டு, ”அணுஆயுதம்-உலக அழிவு-குண்டு விழுந்த இடத்துல இன்னும் புல், பூண்டுகூட முளைக்கல” இப்படியான விஷயங்கள்தான் மேலோங்கி இருக்கிறது நம் நியாபகங்களில்.

அதுக்குக் காரணம், ஹிரோஷிமா பலியானது போலவே அமெரிக்க அணுகுண்டுக்கு, சில நாட்கள் கழித்து பலியான நாகசாக்கி எனும் நகரமும், அணுகுண்டு பாதிப்பினால் இவ்விரு நகரங்களிலும் ஏற்பட்ட உயிர்சேதம், பூமி மீதான பின்விளைவுகள் என நாம் படித்த உலக வரலாற்று உண்மைகள்தான்.  ஆமா, அதுக்கென்ன இப்போ அப்படீன்னு கேக்குறீங்களா?!

வேறொன்னுமில்ல, இரண்டாம் உலகப்போரின்போது அணுஆயுதத்துக்கு பலியாகி, ஆனால் இன்று அதில் பாதிக்கப்பட்டு நோயாளிகளான பலரைத்தவிர, அணு ஆயுத தாக்குதலின் சுவடுகள்கூட உலகத்தின் பார்வைக்காக சீரமைக்கப்பட்டு இருக்கிறதே தவிர, எல்லா விதங்களிலும் உலகின் பல முன்னேறிய நகரங்களுக்கு இணையான முன்னேற்றங்களையும், நவீனங்களையும் கொண்டு இயங்கிவரும் ஹிரோஷிமாவின் ஒரு சுவாரசியத்தைப் பத்தி உங்களுக்குச் சொல்லலாமேன்னு இந்த பதிவை எழுதுறேன்!

அப்போ பாதிக்கப்பட்ட நாகசாக்கி பத்தி சுவாரசியம் ஒன்னுமில்லையா? அதப்பத்தி யாரு சொல்லுவா அப்படீன்னு கேக்கக்கூடாது! ஏன்னா, நான் 3 வருடமா வசிக்கிற ஹிரோஷிமாவைப்பத்தி அனுபவப்பூர்வமா எழுதி, ஹிரோஷிமாவைப் பத்தி உங்களுக்கு இன்னும் இருந்துகிட்டு இருக்குற சந்தேகமான புரிதலைக் கொஞ்சம் மாத்தலாமேன்னுதான் இந்த அனுபவப் பதிவு!

ஒகோனோமியாக்கி, உங்களுக்கு பிடிச்ச உணவு!

ஒகோனோமியாக்கி (japantravelinfo.com)

ஒகோனோமியாக்கி அப்படீன்னா, முட்டைகோஸ், நூடுல்ஸுடன் மாமிசம், ஆக்டோபஸ், ஸ்க்விட், இரால், முட்டை, சில காய்கறிகள் இப்படி பல வகையான உணவு வகைகளை ஒன்றாகச் சேர்த்த ஒரு வித்தியாசமான, சுவாரசியமான உணவுன்னு அர்த்தம்! ஒகோனோமியாக்கி சரி, அதென்ன அது கூடவே ”உங்களுக்கு பிடிச்ச உணவு” அப்படீன்னு ஒரு பில்டப்பு? நாங்க ஒகோனோமியாக்கியை இன்னும் பார்க்கவே இல்ல, அப்புறம் எப்படி எங்களுக்கு பிடிச்ச உணவுன்னு சொல்ல முடியும் அப்படீன்னு கேக்குறீங்களா?

அட அது வேற ஒன்னுமில்லீங்க. ஜப்பானிய மொழியில ‘ஒகோனோமி’ அப்படீன்னா ‘உங்களுக்கு பிடிச்ச அல்லது நீங்கள் விரும்பும்’ அப்படீன்னு அர்த்தம். ‘யாக்கி’ அப்படீன்னா ‘சமைத்த உணவு அல்லது சுட்ட உணவு’ அப்படீன்னு அர்த்தம். ஆக, ஒகோனோமியாக்கி அப்படீங்கிறதுக்கு ‘உங்களுக்கு பிடித்த சுட்ட உணவு’ அப்படீன்னு அர்த்தம்!

இந்த ஒகோனோமியாக்கிதான் ஹிரோஷிமாவோட பிரபலமான (இந்த ஆஸ்தான அப்படீன்னெல்லாம் சொல்லுவாங்களே அப்படி!) உணவு வகை. நம்ம ஊருல திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா, செட்டிநாட்டு பிரியாணி, மைசூர் செட் தோசை, மசால் தோசை எல்லாம் இருக்கு இல்லீங்களா அது மாதிரி! ஆனா, இந்த ஒகோனோமியாக்கியை ஜப்பானோட எல்லா மாநிலங்களிலும் நீங்க சாப்பிட முடியும்.

அப்புறம் எப்படி ஹிரோஷிமாவோட ஆஸ்தான உணவுன்னு சொல்ல முடியும்னு யோசிக்கிறீங்களா? கண்டிப்பா முடியும். ஏன்னா, ஹிரோஷிமாவோட ஒகோனோமியாக்கிக்குன்னு ஒரு பாணி இருக்கு. அதுதான் ‘அடுக்கு’ ஒகோனோமியாக்கி (layered okonomiyaki)! அதை எப்படி செய்றாங்கன்னு கீழே இருக்குற காணொளியில முதல்ல பார்த்துடுங்க. அப்புறமா விவரமா நான் சொல்றேன்….

ஹிரோஷிமா ஒகோனோமியாக்கி!

ஹிரோஷிமா பாணி ஒகோனோமியாக்கியைப் பொறுத்தவரை, ஒரு பெரிய தோசை கல்லுல முதல்ல மைதா மாவுல ஒரு சின்ன தோசை போடுவாங்க. அதுக்கப்புறமா, நீளமான நறுக்கிய முட்டைகோசை அந்த மைதா தோசைமேல பரப்புவாங்க. கொஞ்ச நேரம் வேக விட்டுட்டு, அதுக்கு மேல ஒரு வகையான கருணைக் கிழங்கு, சோயா முளைகளை (soya sprout) பரப்புவாங்க. இந்த அடுக்குக்கு மேல உப்பு, மிளகு, எல்லு இதல்லாம் கலந்து ஒரு தூள்/பொடியை தூவிடுவாங்க!

கொஞ்ச நேரம் கழிச்சு, கொஞ்சமா எண்ணை ஊத்தி இதுவரைக்கும் மிதமான சூட்டுல வெந்துகிட்டு இருக்குற அடுக்குல மெலிதாக வெட்டிய 4 துண்டு பன்றி இறைச்சியை (pork slice) வைப்பாங்க.  சிறிது நேரம் கழித்து, அடுக்கை அப்படியே திருப்பி போடுவாங்க. அடுத்து, அரைவேக்காட்டில் இருக்கும் ”சோபா” அப்படீங்கிற ஒரு வகை நூடுல்ஸை தோசைக் கல்லுல பரப்பி நன்றாக வேக வைத்து, அதுக்கு மேல முட்டைக்கோஸ் அடுக்கை தூக்கி வச்சிடுவாங்க.

இதுக்கிடையில, முட்டை உடைச்சி ஊத்தி வேக வச்சி, கடல் உணவான ஸ்விட் அப்படீங்கிற மீனை ஒரு பக்கம் நல்லா வேக வச்சி அதை எடுத்து முட்டை மேல வைப்பாங்க. இனிமே ஒகோனோமியாக்கி க்ளைமேக்ஸ்தான்! அதாவது, இன்னொரு முட்டையை ஆம்லேட் போடுவது போல் போட்டு, முட்டைக்கோஸ்-நூடுல்ஸுடன் கூடிய அடுக்கை தூக்கி ஆம்லேட்மேல் வச்சிடுவாங்க!

கடைசியா இந்த அடுக்குமேல, ஒகோனோமியாக்கி சாஸ்  அப்படீன்னு ஒரு சாஸை தடவி, முட்டையுடன் இருக்கும் மீனை எடுத்து மேல வச்சி பரிமாறுவாங்க! எல்லாத்துக்குமேல மயோனேஸ் அப்படீங்கிற ஒரு முட்டை சாஸை ஊத்தி அலங்கரிச்சி, சூட்டோட சூடா ரெண்டு குச்சியால (அதாங்க சாப் ஸ்டிக்கு!) எடுத்து சாப்பிட்டோம்னு வைங்க, அட அட…..என்ன ருசி என்ன ருசி! சுவைன்னா சுவை அப்படியொரு சுவை. அந்த சுவையில, நம்ம ஊரு பிரியாணி, தோசை, இட்லி இதெல்லாம் ஜப்பான்ல கெடைக்கலையேங்கிற கவலையெல்லாம் பறந்தே போயிடும்னா பாருங்களேன்?!

அட, நெசமாத்தாங்க! நேத்து கூட போய் ஒகோனோமியாக்கியை ஒரு கட்டு கட்டிட்டு வந்தேன்னா பார்த்துக்குங்க! இந்த நாட்டுல எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு வகைன்னா இதுதாங்க!

கான்சாய், டோக்கியோ ஒகோனோமியாக்கி!

ஆனா, இதே ஒகோனோமியாக்கியை வித்தியாசமா (?) ஒசாகா, டோக்கியோ மாதிரியான நகரங்கள்லயும் செய்றாங்க. அது ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல! ஏன்னா, அதுல எல்லாத்தையும் ஒன்னா போட்டு கலக்கி, கடைசியா நம்ம ஆம்லேட் போடுற மாதிரி தோசை கல்லுல போட்டு வேக வச்சிருவாங்க!

இதை பார்க்குறதுக்கும் சப்புன்னுதான் இருக்கும். சாப்பிட்டாக்கூட அப்படித்தான்! நீங்களே பாருங்களேன் இந்த காணொளியில…….

ஆக, ஒகோனோமியாக்கி பத்தி இப்போ உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும்! இனிமே தெரிய வேண்டியது, இன்றைய காலகட்டத்துல ஹிரோஷிமா நகரம் எப்படி இருக்கு அப்படீங்கிறதுதான்! வாங்க தெரிஞ்சிக்குவோம்…..

அன்று அமெரிக்காவின் ‘சின்ன பையனிடம்’ அடிவாங்கிய, ஹிரோஷிமா இன்று!

எனக்கு விவரம் தெரிஞ்சதுலேர்ந்து, ஜப்பானுக்கு வர்றதுக்கு முன்னாடி (2007 மார்ச் மாதம்) வரைக்கும், ஹிரோஷிமா அப்படீன்னு சொன்னாலே, உடனே எல்லாரும் சொன்னதா எனக்கு நியாபகத்துல இருக்குறது, “அமெரிக்கா போட்ட அணுகுண்டு ஏற்படுத்தின பாதிப்புனால, ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தது மட்டுமில்லாம, தப்பியவர்களுக்கு இரத்தம் மற்றும் தோல் புற்றுநோயும், குண்டு போட்ட இடத்துல இன்னிக்கு வரைக்கும் ஒரு புல் பூண்டு கூட முளைக்கவில்லையாம்” அப்படீங்கிற விஷயங்கள்தான்!’

இந்த புல் பூண்டு கூட முளைக்கவேயில்லை அப்படீங்கிறத கேட்கும்போதெல்லாம், ஒரு உயிரியல் மாணவனா என்னால அதை ஏத்துக்க முடியல. ஏன்னா, அணுகுண்டு தாக்குதலின் பாதிப்பு வருடக்கணக்கில் மண்ணின் செழிப்பை பாதிக்குமா அப்படீன்னு ஒரு கேள்வி இருந்துகிட்டே இருந்தது! உங்கள்ல சில/பல பேரு, இப்படி என்னை மாதிரியே  கேள்விப்பட்டு, இன்னும் அதை நம்பிக்கிட்டுகூட இருக்கலாம்!

ஆனா, அது எதுவும் உண்மையில்ல! அதாவது, அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் காரணமாக சில வகை இரத்த மற்றும் தோல் புற்றுநோயினால் மக்கள் பாதிக்கப்பட்டு இறந்ததும், இன்னும் பல பேர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் இருப்பதும் உண்மை. அது பாதிக்கப்பட்டவரின் சந்ததிக்கும் தொடர்வதும் உண்மை. ஆனா, இந்த புல் பூண்டு முளைக்கல அப்படீங்கிறதெல்லாம் உண்மையில்ல! ஏன்னா….

”என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்….,  ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்…..,

ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்….., உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்…..”

அப்படீன்னு நம்ம பட்டுக்கோட்டையார் பாடினது போல, சும்மா அட்டகாசமா விவசாயம் பண்றாங்க ஹிரோஷிமாவுல! அணுகுண்டு பாதிப்பெல்லாம் சில வருடங்களுக்கு மட்டும்தான். இவங்க வயல்களோட அழகைப் பார்த்தா, நாமளும் விவசாயம் பண்ணலாமேன்னு தோனுற அளவுக்கு செழிப்பாகவும், அழகாகவும் இருக்கு வயல்வெளிகள்!

எல்லா துறைகளிலும் கோலோச்சும் ஹிரோஷிமா!

அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இப்படி எல்லாத்துறைகளிலும் கோலோச்சுகிறது ஹிரோஷிமா! அதற்க்கு ஒரு சின்ன சான்று, உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த/பரிச்சயமான மகிழ்வுந்து (அதாங்க காரு!) உற்பத்தியாளரான மஸ்டா நிறுவனம்! அதாங்க, நம்ம ஊருல ‘ஸ்வராஜ் மஸ்டா’ அப்படீன்னு ஒரு வாகனம் இருக்குமே (இப்போகூட இருக்குதா?!) அந்த வாகனத்தின் ஜப்பானிய நிறுவனம்!

மஸ்டா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் தொழிற்சாலை ஹிரோஷிமாவில்தான் இருக்கிறது! இன்று மகிழ்வுந்து விற்பனையில் உலகின் முன்னனி நிறுவனங்களுடன்ம் போட்டி போடும் அளவுக்கு உயர்ந்துள்ள மஸ்டா நிறுவனம் ஹிரோஷிமாவில்தான் தன் தலைமை அலுவலகத்தை பல ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணித்து வருகிறது!

'கண்ணாடித் தவளை' Image credit: Masayuki Sumida/Hiroshima University

விஞ்ஞானத்தில் ஹிரோஷிமாவின் சாதனைகளைப் பற்றி சொல்லனும்னா, நான் முனைவர் பட்டப்படிப்பு பயின்றுவரும் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் ”கண்ணாடித் தவளை” ஒரு அழகிய உதாரணம்! இந்தத் தவளையின் சிறப்பு என்னன்னா, தவளையை வெட்டிக் கொலை செய்யாமலேயே உடலியல் மாற்றங்களான புற்றுநோய் மற்றும் உடல்  பாகங்களின் வளர்ச்சி இப்படி எல்லாத்தையும் பார்க்க முடியும்.

பொதுவா பள்ளி கல்லூரிகள்ல, தவளையின் உடல் பாகவளர்ச்சி பத்தி படிக்கனும்னா அதை டிசெக்ட் செஞ்சு/வெட்டித்தான் பார்க்க அல்லது படிக்க முடியும். ஆனா, இந்த கண்ணாடித் தவளையை கொலை செய்யாமலே உடல் பாகவளர்ச்சி முழுமையும் சோதனைக்கூடத்துல தொடர்ந்து ஆய்வு செய்ய/படிக்க முடியும்!

இப்படி ஹிரோஷிமாவின் முன்னேற்றம், வளர்ச்சி பத்தி இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்! ஆனா, பதிவு நீளமாயிடும், உங்களுக்கும் கண்ணைக் கட்டிடும்ங்கிறதுனால இத்தோட நிறுத்திக்கிறேன். இப்படித்தான், அணுகுண்டுக்கு பலியான நாகசாக்கி நகரமும் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு இன்று வளர்ந்து நிற்க்கிறது!

ஆக, இனிமே ஹிரோஷிமா அப்படீன்னு சொன்னா அணுகுண்டுத் தாக்குதல் தவிர, ஒகோனோமியாக்கி, மஸ்டா, கண்ணாடித் தவளை இப்படியான விஷயங்களும் உங்களுக்கு நியாபகம் வரும்னு நெனக்கிறேன். உங்க குழந்தைகளுக்கும் அப்படியேன்னு நம்புறேன்!

இதைத் தொடர்ந்த சுஷி, சாஷுமி அப்படீங்கிற சமைக்காத மீன் உணவான ஜப்பானிய உணவு வகை பத்தி உங்கள்ல சில/பல பேருக்கு இருக்குற சந்தேகங்களை தீர்க்க ஒரு அனுபவப் பதிவை மேலிருப்பானில் கூடிய விரைவில் நீங்க எதிர்ப்பார்க்கலாம்! ஆமா, இந்தப் பதிவு பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க…..

தொடர்புடைய சில பதிவுகள்:

ஜப்பானின் “ரோபோ” மாடல் அழகி : நடையா இது நடையா! (150-வது இடுகை)

ஜப்பான் சுற்றும் வாலிபன்….!

“ஜூ ஹச்சி கிப்பு”

“ஜூ ஹச்சி கிப்பு-2″

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தவும்