உலகின் முதல் “செயற்கை இதயம்” அமெரிக்க நோயாளிக்கு பொறுத்தப்பட்டது!!!

Posted on பிப்ரவரி 4, 2011

16


இதயமே….. இதயமே….. உன் மௌனம் என்னை கொல்லுதே….. இதயமே!

காதலில் மௌனமாகிப்போகும் இதயம் காதலை மட்டும்தான் கொல்லும்! ஆனால், நோய்வாய்ப்பட்டு மௌனமாகிப்போகும் ஒரு இதயம் சம்பந்தப்பட்ட மனிதரையே கொன்றுவிடும்!!

நோய்வாய்ப்பட்டு மௌனமாகிப்போகும் இதயங்களுக்கு காரணமானவை இதயநோய்கள். இதயத்தினுள்ளும், இதயத்துக்கு வேளியேயும் செயல்படும், இதயத்துடன் தொடர்புடைய ரத்த நாளங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஏற்படும் இதயநோய்கள் பலவகைப்படும். அவை….,

  • கரோனரி இதய நோய்: இதய தசைகளான கார்டியாக் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் கரோனரி தமனியில் அடைப்புகள் ஏற்படுவதால், மாரடைப்புக்கு காரணமாகும் நோய்!
  • கார்டியோ மயோபதி: (ஏதோ அம்பிகாபதி அமராவதி போன்ற பெயருடைய) இந்த இதய நோய், சில பல காரணங்களால் செயல்படாமல் போகும் இதய தசைகளினால் ஏற்படும் மாரடைப்பு மூலம் நோயாளியைக் கொன்றுவிடும்!
  • கார்டியோ வேஸ்குலர் நோய்: இதயத்தையும், இதயத்துக்கு (கெட்ட) ரத்தத்தை எடுத்துவரும்  நாளங்கள் மற்றும் இதயத்திலிருந்து (நல்ல) ரத்தத்தை உடலுக்கு கொண்டுசெல்லும் தமனிகள் ஆகியவற்றையும் பாதிக்கும் பல்வேறு நோய்கள் கார்டியோ வேஸ்குலர் நோய் எனப்படுகின்றன!
  • இதய செயலிழப்பு நோய்: இதயத்தில் ரத்தம் நிரம்புவதையும், இதயத்திலிருந்து ரத்த வெளியே அனுப்பப்படுவதையும் பாதிக்கும் நோய் இது. இதனால் இதயம் செயலிழந்து போகிறது
  • உயர் ரத்தக் கொதிப்பு இதய நோய்: உயர் ரத்தக் கொதிப்பினால் இதயத்துக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக ஏற்படும் பல இதய நோய்கள்

இப்படி பல்வேறு நோய்களால பாதிக்கப்படும் இதயம், தன்னோட இயல்பான செயல்பாட்டினை இழந்துவிடுகிறது. ஆமாம், இதயத்தோட இயல்பான செயல்பாடு என்ன? அது எப்படி செயல்படும்?

இயற்கை இதயமும், அது செயல்படும் விதமும்!

படம்: விக்கிப்பீடியா

இதயத்துல, இடது பக்கம் 2, வலது பக்கம் 2 என மொத்தம் நாலு அரைகள் இருக்கும். ஆரோக்கியமான ஒரு இதயம், நுரையீரலலிருந்து பிராண வாயுவுடன் பல்மொனரி தமனி வழியாக வரும் நல்ல ரத்தத்தை இடது பக்க மேல் அரையில் (ஆரிக்குல்) வாங்கி, கீழ் அரைக்கு (வென்ட்ரிக்குல்) அனுப்பும். உடலின் பாகங்களிலிருந்து நாளங்கள் மூலமாக சேகரிக்கப்பட்ட, இருபெரிய நாளம் வழியாக கரிமள வாயுவுடன் வரும் ரத்தத்தை வலது பக்க மேல் அரையில் வாங்கி,  கீழ் அரைக்கு அனுப்பும். இரண்டு மேல் அரைகள் வழியாக இரண்டு (பெரிய) கீழ் அரைகளில் வாங்கப்பட்ட நல்ல ரத்தமும், கெட்ட ரத்தமும், கலக்காமல் இருக்க எல்லா அரைகளுக்கும் தடுப்புச்சுவர் இருக்கும்!

இடது கீழரையிலிருக்கும் நல்ல ரத்தம் அயோர்ட்டா என்னும் பெரிய தமனி மற்றும்  ஒரு சிறிய தமனி மூலம் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்லும். வலது கீழரையிலிருக்கும் கெட்ட ரத்தம் நாளம் மூலமாக சுத்திகரிப்புக்காக நுரையீரலுக்கும் செல்லும். இதுதான் இதயம் செயல்படும் விதம். இதை கீழுள்ளெ காணொளியில விவரமா பாருங்க……

இப்படி இயங்க வேண்டிய இதயம் பல இதயநோய்கள் காரணமா இயங்காமப் போனா பேஸ்மேக்கரில் ஆரம்பித்து பல்வேறு வகையான கருவிகளைக் கொண்டு இயங்க வைப்பாங்க. ஆனா, இம்மாதிரியான கருவிகள் ரத்தத்தை ரத்த நாளம்/தமனி வழியாக உந்தித்தள்ள மட்டுமே உதவும். ஆனால், முழுமையாக செயலிழந்த ஒரு இதயமுள்ளவர் உயிர்வாழ மாற்று இதயம் மட்டுமே ஒரே வழி! அதற்காக இதுவரையில் (இன்னமும்) மூளைச் சாவடைந்த ஒருவரின் இதயத்தை எடுத்து பொருத்துவதே வழக்கமாக இருந்தது (இருக்கிறது!).

ஆனால், அமெரிக்காவின் சான் டியாகோ மருத்துவ மையத்தில், கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, உலகில் முதல் முறையாக நவீன முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு செயற்கை இதயம், மருத்துவர் ஜேக் கோப்லாண்ட் என்பவரால் ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. அதைபத்திதான் நாம இனி சுருக்கமா பார்க்கப்போறோம்!

உலகின் முதல் செயற்கை இதயம்!

சின்கார்டியாவின் செயற்கை இதயம் (படம்: விக்கிப்பீடியா)

பொதுவா ஒருத்தருக்கு இதயம் செயலிழக்கத் தொடங்கிய உடனே, மாற்று இதயம் பொருத்தப்படலைன்னா, அவருடைய  முக்கியமான உடல் பாகங்களான சிறு நீரகம், கல்லீரல், குடல், நுரையீரல் மற்றும் மூளை ஆகியவை பாதிக்கப்படும். இதை தவிர்க்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டதுதான் செயற்கை இதயம். இதயத்தின் வென்ட்ரிக்கல் என்றழைக்கப்படும் கீழரைகள் செயலிழந்து போவதே பெரும்பாலான இதய செயலிழப்புக்கு காரணம். செயலிழந்த கீழரைகளுக்கு ஒரு மாற்றாக செயல்படுவதே இந்த செயற்கை இதயம்! மேலும், செயற்கை இதயம் ஒரு நிரந்தரத் தீர்வல்ல!! மாற்றும் இதயம் கிடைக்கும்வரை ஒருவருக்கு உயிரளிக்கும் ஒரு தற்காலிக இதயமே இந்த செயற்கை இதயம்!

உதாரணமாக, இந்த செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையில்…..”தன் 20 களில் இதயத்தைக் தாக்கும் ஒரு வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இதயம் செயலிழந்துபோக, அவருக்கு மாற்று இதயம் கிடைக்கும் வரை அவரை உயிர் பிழைக்கச்செய்ய, அவருடைய நெஞ்சை அறுவை சிகிச்சை மூலம் திறந்து, செயலிழந்த இதயத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டனர். செயலிழந்த இதயம் நீக்கப்படும்வரை இதய-நுரையீரல் எந்திரம் ஒன்றின்மூலமாக நோயாளிக்கு பிராண வாயு நிறைந்த ரத்தம் செலுத்தப்படும். செயலிழந்த இதயத்தின் மேல் அரைகளை (ஆரிக்குல்) மட்டும் விட்டுவிட்டு, கீழரைகளை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் செயற்கை இதயத்தை பொருத்திவிடுகின்றனர்! அதற்குப்பின் இதய-நுரையீரல் எந்திரத்தை நிறுத்திவிடுகின்றனர். இப்போது, நிமிடத்துக்கு சுமார் 8 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்யத் தொடங்கிவிடுகிறது செயற்கை இதயம்!! செயற்கை இதய செயல்பாட்டை கீழுள்ள காணொளியில நீங்களே பாருங்க…..

இச்சிகிச்சைக்குப்பின், செயலிழந்தபோன பழைய இதயத்தால், செயலிழக்கத்தொடங்கிய நுரையீரல் உள்ளிட்ட பல உடல் பாகங்கள் மீண்டும் செயல்படத்தொடங்கிவிடுகின்றன. ஆக, இந்த செயற்கை இதயத்தின் முக்கிய பங்கு, மாற்றும் இதயம் கிடைக்கும்வரை ஒரு இதய நோயாளியின் பல முக்கியமான பாகங்கள் செயலிழக்காமல் பாதுக்காப்பதே! ஏன்னா, ஒவ்வொரு வருஷமும் இதய செயலிழப்புக்குள்ளாகும் 6,70,000 பேர் வாழும் அமெரிக்காவில், எந்த நேரமும் சுமார் 3100 பேர் இதய மாற்று அறுவைச்சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சைக்காக கிடைக்கும்/இருக்கும் மாற்று இதயங்களின் எண்ணிக்கை வெறும் 2,200 தான்! ஆக,

மீதமுள்ள சுமார் 900 நோயாளிகளின் உயிருக்கான உத்திரவாதத்தை (இதயம் செயலிழந்தபின்)  6 மாதங்கள் முதல் சுமார் 1000 நாட்கள் வரை கொடுப்பது சின்கார்டியாவின் (தற்காலிக) செயற்கை இதயங்களே என்கிறார் மருத்துவர் ஜேக் கோப்லாண்ட்!

இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் நோயாளிகள் நடமாடவும் முடியும் என்கிறார் கோப்லாண்ட்! உலகளவில், இதுவரை சுமார் 850 பேருக்கு இந்த செயற்கை இதயத்தை பொருத்தியிருக்கும் கோப்லாண்ட், இந்த சிகிச்சைபெறும் நோயாளிகள் மாற்று இதயம் கிடைக்கும்வரை வீட்டிலிருந்தே ஓய்வெடுக்கமுடியுமா என்பது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

நம்ம சினிமாவுலத்துல சொல்ற மாதிரி……

“இது வெறும் ட்ரெயிலர்தாங்க. முழுபடம் இனிமேதான் வரப்போகுது” அப்படீங்கிறாங்க சில இதய விஞ்ஞானி/மருத்துவர்கள். ஏன்னா, பாதி நம்ம இதயத்தோட சேர்ந்து செயல்படுற ஒரு செயற்கை இதயத்தைத்தானே நாம பார்த்தோம், இன்னும் பத்து வருஷத்துல, முழுதான ஒரு செயற்கை இதயத்தையே உடலுக்குள் பொருத்தி செயல்பட வைகக் முடியும்ங்கிறாங்க இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள்!

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, செய்ற்கை இதயம், கல்லீரல், நுரையீரல் இப்படி நெறைய கண்டுபிடிச்சி, முழு செயற்கை மனிதனான மனிதன் 2.0/Human 2.0 கூடிய சீக்கிரம் உருவாக்கிடுவாங்க போலிருக்கு! ஆனா, இங்கே அது முக்கியமில்ல! மனிதனின் உடலில் செயலிழந்த போகும் இதயம் உள்ளிட்ட பல பாகங்களை செயற்கையாக உருவாக்குவதன்மூலம், அவை இல்லாமல் உயிரிழந்துபோகும் மனிதனுக்கு வாழ்க்கையை பரிசளிக்க முடியும் என்னும் கலியுக சாதனையே முக்கியமானது. நீங்க என்ன நெனக்கிறீங்கன்னு மறுமொழியில சொல்லுங்க!

தொடர்புடைய சில பதிவுகள்:

மரணத்தை வென்று புன்னகையுடன் ஹன்னா க்ளார்க்!

மூடிய இருதய அறுவை சிகிச்சையும் ஜீன் தெரபியும்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி