மூடிய இருதய அறுவை சிகிச்சையும் ஜீன் தெரபியும்!

Posted on ஒக்ரோபர் 19, 2009

6


இருதய அறுவைச் சிகிச்சை என்பது எப்படி மேற்கொள்ளப்படுகிறதென்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.இல்லை என்கிறீர்களா? கண்டிப்பாக தெரிந்திருக்கும், ஏனென்றால் நம்மவர்களின் திரைப்படங்களில் தவறாமல் இடம்பெறும் காட்சிகளுள் இதுவும் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. சரி , நாம் விஷயத்துக்கு வருவோம், அதாவது இருதய அறுவைச் சிகிச்சையை “திறந்த இருதய அறுவைச் சிகிச்சை” (open heart surgery)  என்று குறிப்பிடுவார்கள் மருத்துவத்துறையில்.இதன் பொருள் என்னவென்றால் இருதய அறுவைச் சிகிச்சையின்போது மார்பு பகுதி திறந்த வண்ணமே விடப்பட்டு, நோயாளியின் இருதயத்தில் இருக்கும் ஓட்டையோ அல்லது ரத்த நாளங்களுள் உள்ள அடைப்போ அறுவைச் சிகிச்சையின் மூலம் சரிசெய்யப்படும்!

ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்டு மூடிய அறுவைச் சிகிச்சை என்பது வெகுவிரைவில் சாத்தியமே என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்! அதெப்படி சாத்தியமாகும் என்கிறீர்களா? நிச்சயம் சாத்தியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.அவர்களின் இந்த உறுதியான நம்பிக்கைக்கு காரணம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? அதுதான் ஜீன் தெரபி என்னும் ஒரு நவீன மருத்துவ முறை! தற்பொழுது ஒரு வகை ரத்த சோகை நோய்க்கும் (sickle cell anaemia) மேலும் சில நோய்களுக்கும் வெற்றிகரமாக பயன்பட்டுவரும் இந்த சிகிச்சை முறையை முதன்முதலாக மாரடைப்பு என்னும் இருதய நோயை குணப்படுத்த முயன்று வெற்றியும் கண்டுள்ளனர் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மற்றும் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள்!

அதாவது, மாரடைப்பு போன்ற நோய்கள் பொதுவாக, இருதய செயல்பாடுக்கு தடை ஏற்படுத்தும் உடல் உபாதைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகவே இருக்கும். மாரடைப்பின் போது இருதய திசுக்கள் செயலிழந்து, ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு ரத்த நாளங்கள் வழியாக உந்துவதற்கு தேவையான ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் சக்தியை இழந்து விடுகின்றன.இதனால், ரத்த அழுத்தம் முற்றிலும் குறைந்து, அங்கங்கே தேங்கி பின், மூலை போன்ற பகுதிகள்  செயலிழக்கக் காரணமாகின்றன. இறுதியில்  நோயாளி இறக்க நேரிடுகிறது.ஆக, மாரடைப்புக்கு அடிப்படைக் காரணமாவது இருதயத் திசுக்களின் சுருங்கி விரியும் தன்மையின் செயலிழப்பே ஆகும்.

இந்தச் செயலிழப்பைத் தடுக்க,இருதயத்தின் சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமான பொருளை/காரணியை முதலில் நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.அதைக் கண்டறிந்த பின், செயலிழப்புக்கு காரணம் அந்த காரணியின் அளவு குறைவதா/அழிவதா போன்றவற்றை கண்டறிய வேண்டும். அவ்வாறு கண்டறிந்த பின், அதன் அளவை அதிகப்படுத்தியோ/குறைத்தோ திசுக்களை மீண்டும் செயல்படச்செய்ய வேண்டும்.அதைத்தான் செய்துள்ளார்கள் விஞ்ஞானிகள் ஜீன்தெரபியின் துணைகொண்டு!

பொதுவாக ஜீன்தெரபியானது, உடலில் பாதிக்கப்பட்ட ஒரு மரபனுவின் செயலை திரும்பச்செய்ய/மீட்டெடுக்க, எந்த மரபனு(ஜீன்) பாதிக்கப்பட்டுள்ளதோ அதே மரபனுவை உடலினுள் (குறிப்பிட்ட அந்த உடல்பாகத்திலுள்ள அனுக்களுள்) செலுத்தி அந்த மரபனுவின் செயல்பாட்டை மறுபடியும் சீறாக்குவதாகும்.மரபனு என்பது உடலுக்குத் தேவையான பல புரதங்களையும் ஏனைய பற்பல செயல்களுக்கு தேவையான என்சைம், ஹார்மோன் போன்றவற்றையும் உருவாக்க வல்லது.அத்தகைய மரபனுக்கள் (சுமார் 30,000), உடலின் சுமார் 1000 கோடி அனுக்களின் நியூக்லியஸ் எனும் கருவுக்குள்,  சுருள் சுருளாக பின்னிப்பினைந்து இருக்கும் க்ரோமோசோம்களுக்குள் நிறைந்திருக்கும்.எனவே ஜீன் தெரபியின் வெற்றியானது, வெளியிலிருந்து செலுத்தப்படும் ஜீன்கள்(மரபனு) க்ரோமோசோம்களுக்குள் சென்று ஒன்றி இணைவதில் உள்ளது.அத்தகைய சேர்க்கை சில காரணங்களினால் நிகழாவிடில் ஜீன் தெரபியானது தோல்வியையே சந்திக்கும்!

எனவே, ஜீன் தெரபி மேற்கொள்ள முக்கியமான ஒரு தேவை, வெக்டர்(vector) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மரபனு கடத்தி .அதாவது, மரபனு தாங்கி அனுவின் உள்சென்று, க்ரோமோசோம்களுக்குள் ஜீனை புகுத்தும் ஒரு கருவி என்றுகூட பொருள் கொள்ளலாம். அத்தகைய கடத்திகளாவன :

1. வைரஸ்( நோய் உண்டாக்கும் சக்தியை இழந்தவை)

2. நிர்வாண டி.என்.ஏ(Naked DNA) என அழைக்கப்படும் மரபுச்சுருள் (genome)

3. லைப்போசோம் (Liposome) என அழைக்கப்படும் ஒருவித கொழுப்புச் சத்து, என இன்னும் சில!

இவற்றுள் வைரஸ்களே மிகச்சிறந்த கடத்திகளாகச் செயல்படுவன என்பது உயிர்தொழில்னுட்பவியல் விஞ்ஞானிகளின் கருத்து. ஜீன் கடத்திகளாகச் செயல்படும் இத்தகைய வைரஸ்களின் நச்சுத்தன்மையை/ நோய் உண்டாக்கும் திறனை முற்றிலும் அழித்த பின்னரே அவற்றை ஜீன் தெரபிக்கு பயன்படுத்துவர்!

ஜீன் தெரபி பற்றிய சில காணொளிகளை நாம் கீழே காணலாம்…..

சரி, இதுவரையில் ஜீன் தெரபி குறித்த ஒரு சிறு முன்னுரையப் பார்த்தோம்.இனி செய்தியைப் பற்றிய சற்றே விரிவான குறிப்பைப் பார்ப்போம்.அதாவது, நான் மேற்குறிப்பிட்டவாறு இருதயத்தின் துடிப்புக்கு காரணமான திசுக்கள் சுருங்கி விரிய, ஒருவித புரதம் தேவைப்படுகிறது.இந்தப் புரதத்தின் பற்றாக்குறையினால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்கிறது ஆய்வு.எனவே ஜீன் தெரபியானது, “மாலிக்யூலர் மோடார்” என அழைக்கப்படும், இந்த புரதத்தை உற்பத்தி செய்யும் ஜீனை இருதய திசுக்களுக்குள் செலுத்தி, இழந்த செயல்பாட்டை திரும்பப் பெறச் செய்ய முயல்கிறது.இத்தகையதொரு சிகிச்சை வெற்றிபெறும் பட்சத்தில், இருதய திசுக்கள் மீண்டும் சுருங்கி விரிந்து இதயத் துடிப்பை சீறாக்கி விடும்.மாரடைப்பிலிருந்து மனிதன் பிழைத்தும் விடுவான்!

அத்தகையதொரு வெற்றியை அமெரிக்க விஞ்ஞானிகள் அடைந்துள்ளனர்.இது மனித திசுக்களிலும், முயலின் திசுக்களிலும் சாத்தியமாக்கப்பட்டு ஒரு நம்பிக்கையை விஞ்ஞானிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.இது மேலும் பல மனிதர்களின் திசுக்களில், பின்னர் உடலிலும் வெற்றியடையும் பட்சத்தில் மனிதர்கள் மாரடைப்பிலிருந்து மீண்டு மறுவாழ்வைப் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்!

ஆக,  மாரடைப்பை குணப்படுத்தும் இந்த ஜீன்தெரபி சிகிச்சையானது, மனிதர்களில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் நாளில் மூடிய இருதய அறுவைச் சிகிச்சையானது சாத்தியப்பட்டுவிடும்!   அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என நம்பிக்கையோடு கூறியுள்ளனர் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள்!

என்ன நண்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள் மூடிய இருதய அறுவைச் சிகிச்சை வந்துவிட்டால் மாரடைப்பு எனும் உயிர்க்கொல்லி நோய் காணாமல் போய்விடும்தானே? அந்த ஒரு பொன்னாளுக்காய் காத்திருப்போம் நம்பிக்கையுடன்!

“முயற்ச்சித் தன் மெய்வருத்தக் கூலி தரும்”