நாம் ஏன் உடல்நிலை சரியில்லை என்று பொய்சொல்கிறோம்?!

Posted on ஜூன் 14, 2010

7


“பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை……

சொன்னால் பொய் பொய்தானே……”

“ஒரு பொய்யாவது சொல் கண்ணே…..உன் காதல் நான்தான் என்று……

அந்த சொல்லில்…… நான் உயிர்வாழ்வேன்……”

இப்படி ஒருத்தர் தன்னோட காதலுக்காக பொய் சொல்றதும், பொய்யை ஏத்துக்கறதும் நம்ம ஊருல ஏக பிரசித்தம்னு உங்க எல்லாருக்கும் நல்லாவேத் தெரியும். ஆனா, பொதுவா பார்த்தா பொய் சொல்றது தப்பு. அப்படீன்னுதான் நம்ம பெற்றோரும் இந்தச் சமுதாயமும் நம்மை வழி நடத்துது இல்லீங்களா? ஏன்னா,

“பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது”

“வாய்மையே வெல்லும்”

இப்படியான பாரம்பறிய, கலாச்சாரத்தால் வகுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒழுக்க நெறிமுறைகள், கட்டுப்பாடுகள். ஆனா, இதே கலாச்சாரமும் பண்பாடும்தான் இப்படியும் சொல்லுது…..

“ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணாலும் தப்பேயில்ல”

ஆக, பொய் அப்படீங்கிறது பல வகையான கண்ணோட்டங்கள்ல பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் பொய் சொல்வது தவறு, ஆனால் சில சமயங்களில் பொய் சொல்லாமல் இருப்பதும் தவறு. இந்தப் பொய் இருக்குங்களே, அது ஒன்னு ரெண்டு வகையில்ல, பல வகைப்படும்! உதாரணமா, முன்னாடி பார்த்த மாதிரி காதலுக்காக பொய் சொல்றது, கல்யாணத்துக்காக பொய் சொல்றது, ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுங்கிறதுக்காக பொய் சொல்றது, நாலு பேர் நல்லாயிருக்கனுங்கிறதுக்காக பொய் சொல்றது இப்படி நிறைய.

இதுல ரொம்ப சுவாரசியமான பொய் உடல் நிலை சரியில்லைன்னு சொல்ற பொய்! இந்தப் பொய்யை நானும் சொல்லியிருக்கேன், நீங்களும் சொல்லியிருக்கீங்க, உலகத்துல எல்லாரும் எதாவது தருணத்துல சொல்லியிருப்பாங்க! பொதுவா, பள்ளிக்கூடத்துல/கல்லூரியில, அலுவலகத்துல விடுமுறை எடுத்துக்கிட்டதுக்காகத்தான் பெரும்பாலும் இந்தப் பொய் சொல்றது வழக்கம். அது தப்பில்லை, ஆனா அமெரிக்காவின் டினா லியோன் சொன்ன மாதிரி சொல்றது ரொம்ப தப்பு! வாங்க ஏன்னு பார்ப்போம்…..

கடந்த 2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பால்டிமோர் நகரைச் சேர்ந்த டினா லியோன் என்பவர் (Dina Leone) திடீரென்று ஒரு நாள் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு திடுக்கிடும் தகவலை பகிர்ந்துகொண்டார். “எனக்கு வயிற்றுப்புற்றுநோய் இருக்கிறது” என்பதே அது! அதோட நில்லாமல், தன் சோக நிலையைப் பற்றி தன் வலைப்பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்திலும் குறிப்பிட்டு, தன் சிகிச்சை நிலையைப் பற்றி அவ்வப்போது பகிர்ந்துகொண்டு வந்தாராம். இதன் பலனாக, 37 வயதான, இரு குழந்தைகளின் தாயான டினாவுக்கு, மிதமிஞ்சிய ஆதரவும், விரைவில் குணமடைய வாழ்த்தும் மடல்களும் குவிந்தன. மேலும், டினாவின் சிகிச்சைக்காகவும், தன் கடைசி ஆசைகளை பூர்த்திசெய்யவும் பணமும் அளித்தனர் அவர் நிலையை அறிந்த பொதுமக்கள்!

டினாவுடைய நிலை மிகவும் கொடுமையானது. அவரின் கதையும்தான்! ஏன்னு கேக்குறீங்களா, ஏன்னா டினாவோட கதையே ஒரு உலகமகா பொய்! அட, ஆமாங்க, இந்தப் பெண் சொன்னதெல்லாம் பொய்யுன்னு, அவர் சிகிச்சை எடுத்துக்கிட்டதா சொன்ன மருத்துவமனைகள்ல தீர விசாரிச்சப்போ அப்படியொரு நோயாளியே இல்லன்னு தெரியவந்தப்போதான் புரிஞ்சிருக்கு போலீசுக்கு! குட்டு உடைஞ்சி அகப்பட்ட பின்னாடி, 3 வருடமா தனக்கு கேன்சர்னு சொல்லி ஊரை ஏமாத்தினதா ஒப்புக்கிட்டாராம் டினா! அப்புறமென்ன, ஆரத்தி எடுத்தா வரவேற்பாங்க, திருட்டுக்கேசு புக் பண்ணி மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்களாம் டினாவை! இதுலேர்ந்து என்ன தெரியுது? பொய் சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்குதோ இல்லியோ, சிறைச்சாலை வாசம் கண்டிப்பா கிடைக்கும்னு தெரியுது!

அதெல்லாஞ்சரி, ஆமா நாம ஏன் உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்றோம்? உங்களுக்குத் தெரியுமா, தெரியலைன்னா பரவாயில்லை! வாங்க என்னு பார்ப்போம்….

நாம் ஏன் உடல்நிலை சரியில்லை என்று பொய்சொல்கிறோம்?!

“உடல் நிலை சரியில்லை என்று பொய் சொல்வதற்க்கு முக்கிய காரணம்/உந்துதல் மற்றவர்களின் பரிதாபத்தை சம்பாதிப்பதற்க்கு” என்கிறது உளவியல்! பொதுவா மக்கள், எல்லாரையும் (குறிப்பாக நண்பர்கள்/உறவினர்கள்) தன் பக்கம் ஈர்த்து, தனக்கு வாழ்த்துக்கள், பரிசுப்பொருட்கள் மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்களாம்!

ஆனா சில சமயங்கள் இந்த மாதிரியான பொய்கள், வெறும் பணத்துக்காக ஆசைப்பட்டுக்கூட சொல்லப்படுவதுண்டு! நோய்வாய்ப்பட்டவர்கள்/விபத்துக்குள்ளானவர்களுக்கான பரிதாபம் போன்று/தவிர்த்த வேறு எந்தவொரு உணர்வும்/நிலையும் மக்களின் பணத்தை பிறருக்காக செலவழிக்கத் தூண்டுவதில்லை! ஆனால், பரிதாபத்துக்காக செலவழிக்கப்படும் பணம் ஒருவரின் மருத்துவச் செலவுக்குத்தான் போகிறதா இல்லையா என்று கேட்டும் துணிவு அல்லது தைரியம் வெகுச்சிலருக்கே உண்டு!

உதாரணமாக, கடந்த 1999 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் போஸ்டன் மாநிலத்தைச் சேர்ந்த க்ரிஸ்டென் க்ளௌகெர்டி (Kristen Clougherty) என்னும் ஒரு பெண்மணி,  தனக்கு புற்றுநோய் இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குச் சொல்லியிருக்கிறார். எல்லாரும் சேர்ந்து, க்ரிஸ்டென்னுக்கு சிகிச்சைக்கான நிதி திரட்டும் விதமாக 5 கி.மீ ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இறுதியில் $50,000 நிதியும் திரட்டியிருக்கிறார்கள்.  அந்தப் பணம் எப்படி செலவாகியிருக்குமென்று உங்களில் யாருக்காவது, எதாவது யூகம் இருக்கிறதா? இல்லைன்னா மனசக் கொஞ்சம் திடப்படுக்குங்க. ஏன்னா, அந்த மொத்தப் பணத்தையும் ஒரு புது கார் வாங்குவதற்க்கும், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வதற்க்கும் பயன்படுத்திக்கொண்டாராம் க்ரிஸ்டென்! அடப்பாவிகளா….?!

இப்படி எத்தனையோ பொய் தொடர்பான உண்மைக் கதைகள் இருக்க, பொய் சொல்வதற்க்கு மேலே சொல்லாத சில காரணங்களும் உண்டாம். ஆனால் கொடிய இருப்பதாகப் பொய் சொல்லும் சிலருக்கு, ஒரு வகை மன நலக்குறைபாடு இருக்கிறதாம். ஆங்கிலத்தில் இதை  factitious disorder என்கிறார்கள். இக்குறைபாடு உள்ளவர்கள், இல்லாத ஒரு (கேன்சர் போன்ற) கொடிய இருப்பதாகப் பொய் சொல்லி, பல வருடங்கள்வரை அந்தப் பொய்யைக் காப்பாற்றியும் வருவார்களாம்?! அடங்கொக்காமக்கா…..இப்படியெல்லாம் வேற ஒரு கூத்து நடக்குதா?!

முன்ச்சாஸென் சிண்ட்ரோமும் (Munchausen’s syndrome) குழந்தைத் தொடர்பான பொய்களும்!

பொதுவா பள்ளிக்கு/வேலைக்குத் தாமதமாய் சென்று உடல் நிலை சரியில்லையென்று பொய் சொல்லும் நம்மில் பலருக்கு, குழந்தைகளை வைத்து பொய் சொல்லி மோசடி செய்வது தெரிந்திருக்க நியாயமில்லைதான் என்றாலும், குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று பொய் சொல்லி மக்களின் பரிதாபத்தையும், இன்னபிறவற்றையும் சம்பாதிக்கும் பெற்றோர்கள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது!

முன்ச்சாஸென் சிண்ட்ரோம்: ஒருவர் தன் குழந்தைக்கு கொடிய நோய் இருக்கிறது என்று பொய் சொல்லி, அதன் மூலம் ஆதாயம்/பரிதாபம் தேட முயற்ச்சிப்பது முன்ச்சாஸென் சிண்ட்ரோம் என்று குறிப்பிடப்படுகிறது! உதாரணமாக, கடந்த 2003 ஆண்டு , 7 வயதான ஹன்னா மில்ப்ராண்ட் (Hannah Milbrandt) என்னும் சிறுமிக்கு புற்றுநோய் இருப்பதாய் பொய் சொல்லிய அவளின் பெற்றோர், அந்தாஆண்டு முழுக்க $10,000 நன்கொடையாக பெற்றிருக்கிறார்கள் பொதுமக்களிடமிருந்து. இறுதியில் அந்தச் சிறுமிக்கு புற்றுநோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது! இம்மன நலக் குறைபாடு குறித்த மேலதிக விவரம் இங்கே

முன்ச்சாஸென் சிண்ட்ரோம் குறித்த ஒரு காணொளி உங்களுக்காக…..

முன்ச்சாஸென் சிண்ட்ரோம் என்னும் இக்குறைபாடு மிகவும் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது! ஆனால், factitious disorder என்னும் மேற்குறிப்பிட்ட மனநலக் குறைபாடு நாம் எதிர்ப்பார்ப்பதைவிட அதிக அளவிலேக்கூட சமுதாயத்தில் ஏற்படக்கூடுமாம்! ஏன்னா, செய்தித்தாள்கள் மற்றும் போலிசால் கண்டுபிடிக்கப்படும் நிகழ்வுகள்/சம்பவங்கள் மட்டுமே நம் பார்வைக்கு வருகின்றன, ஏனைய மற்றவை கண்டுபிடிக்கப்படாமலே சம்பந்தப்பட்டவர் “எரியும் வீட்டில் இழுத்தவரை லாபம்” என்பதைப் போல முடிந்தவரை சுருட்டிக்கொண்டு தப்பித்துக்கொள்வதும் உண்டு என்பதுதான் நிதர்சனம்!

“இம்மாதிரியான பொய்யர்/புரட்டர்களின் பொய்க்கூத்து, உண்மையாகவே புற்றுநோய் போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, அல்லலுரும் நோயாளிகளின் நிலையை மேலும் பரிதாபக்குறியதாக்கிவிடும்” என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட  ஒருவர் பொய்யர் டினா லியோனிடம் வருத்தம் தெரிவித்தாராம்! ஆனால் வரலாற்றைப் பார்த்தோமானால், இம்மாதிரியான பொய்யர்களின் மோசடியால், உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் குணம், பொதுமக்களைவிட்டு என்றுமே போகாது என்கிறது ஒரு செய்தி!

அது சரி, உங்களுக்கு தெரிஞ்சி யாராவது இந்த மாதிரியான பொய் சொல்லி மாட்டிக்கிட்டு இருக்காங்களா?

தொடர்புடைய சில இடுகளைகள்:

உளவியல்:பணியிடங்களில் சொல்லப்படும் பொய்கள்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Like This!

Add to Google Buzz