“வளரும் பயிர் முளையிலேயே தெரியும்”
அப்படீன்னு ஒரு பழமொழிய நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க! வளரும் ஒரு பயிரின் எதிர்கால வளர்ச்சி நிலையை, அதன் முளையினுடைய செழிப்பு/ஆரோக்கியத்திலேயே சுலபமாக கண்டறிந்துவிடலாம், அப்படீங்கிறது இந்தப் பழமொழியோட அர்த்தம். அதெப்படி ஒரு முழுப்பயிரோட வளர்ச்சியை அதன் ஒரு சிறு பாகமான முளையை வைத்து கணக்கிடுவது என்று ஒரு கேள்வி எழும்?! இல்லீங்களா?
கண்டிப்பா கணக்கிட முடியும், காரணம் முளையில் நிறைந்துள்ள, உயிர்களின் ஆதார அனுக்களான ஸ்டெம் செல்கள். இந்த ஸ்டெம் செல்கள் எல்லா தாவரங்களின் குறுத்துகளிலும் இருப்பவை! ஸ்டெம் செல்கள் பத்தி உங்களில் சில/பலருக்குத் தெரிந்திருக்கும்! இதுவரைக்கும் ஸ்டெம் செல்கள் பற்றி உங்களுக்கு எந்த மாதிரியான புரிதல் இருக்கு, அதன்மீதான உங்களின் ஆர்வம் எவ்வளவு, இப்படி எதுவும் எனக்குத்தெரியாது. ஆனால், ஸ்டெம் செல்கள் பற்றிய பல்வேறு குழப்பங்களும், சந்தேகங்களும், சர்ச்சையான கருத்துக்களும் நிச்சயம் உங்களில் சிலருக்காவது இருந்தே ஆகவேண்டும். காரணம் ஸ்டெம் செல் ஆய்வுக் குறித்து வெளிவரும் சூடான பல செய்திகள்!
இத்தொடரின்மூலம், ஸ்டெம் செல் குறித்த ஒரு எளிய அறிமுகமும், குறைந்தபட்சம் உங்களின் சில சந்தேகங்களுக்கான தெளிவான விளக்கத்தையுமாவது என்னால் தர முடியும் என்ற நம்பிக்கையில், இதோ உலக உயிர்களின் ஆதார அனு/செல்லான ஸ்டெம் செல் உலகினுள்ளே உங்களுடன் ஒரு அறிவியல் சுற்றுலா…..
ஸ்டெம் செல் என்றால் என்ன?
மனித உடலிலுள்ள சுமார் 1 லட்சம் கோடி அனுக்களின் ஆதாரம் அடிப்படையில் ஒரு வகையான அனு/செல், அதுதான் ஸ்டெம் செல்! இவ்வகையான அனுக்கள் உலகின் பல செல் உயிரிகள் அனைத்திலும் உண்டு. ஸ்டெம் செல்கள் அடிப்படையில் உயிர் தோன்றக் காரணமான இரு செல் உயிர்/சிசுவினுள்ளே இருப்பவை (பார்க்க படம்). உடலின் பிற அனுக்களுக்கு இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே உண்டு. அது ஸ்டெம் செல்லின் பிரத்தியேகமான இரண்டு குணங்கள்…..
- தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு (ஆங்கிலத்தில் Self renewal), ஒரே பண்புடைய மற்றொரு அனுவை தானே உருவாக்கிக்கொள்ளும் திறன்
- உடலின் உள்ள எல்லா வகையான (210 வகை!) அனுக்களாகவும் தன்னை உருமாற்றிக்கொள்ளும் (கிட்டத்தட்ட கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற) ஒரு அமானுஷ்ய திறன்! (Totipotency/Pluripotency)
உடலின் எந்த ஒரு அனு/செல்லுக்கு, தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலின் 210 வித்தியாசமான அனுக்களாகவும் தேவையான தருணத்தில், தன்னை உருமாற்றிக்கொள்ளும் திறனும் இருக்கிறதோ அந்த செல்லையே ஸ்டெம் செல் என்கிறது உயிரியல்/அறிவியல்.
இது தமிழில் குறுத்தனுக்கள் அல்லது பலுக்கல் என்னும் கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது! (தாவரங்களில் குருத்துக்களிலும், மனிதர்களின் வளரும் தன்மையுள்ள சில உடல் பாகங்களிலும் இருப்பவையாதலால் இப்பெயர்!)
ஸ்டெம் செல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இயற்க்கையான ஸ்டெம் செல்கள் அடிப்படையில் இரு வகைப்படும். அவை,
- சிசு ஸ்டெம் செல்கள் (Embryonic Stem cells, ESC) (சிசுக்களில் இருப்பவை)
- திசு ஸ்டெம் செல்கள் (Tissue stem cells/Adult stem cells) (உடலின் சில வகையான திசுக்களில் இருப்பவை)
இயற்கையான அப்படீன்னு சொன்னாலே செயற்க்கையான ஒன்று இருக்க வாய்ப்பு இருக்குமில்லையா? ஸ்டெம் செல்களிலும் அது உண்டு. செயற்கை ஸ்டெம் செல்கள் என்ற ஒரு வகை ஸ்டெம் செல்களும் உண்டு. அவை, தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் அல்லது இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல்கள் (Induced pluripotent stem cells, iPS cells). அதாவது,
உடலின் சில வகை (தோல், ரோமம்) அனுக்களை மரபனுவியல் தொழில்னுட்பத்தின் மூலம், சில வகையான மரபனுக்களைக் கொண்டு ஸ்டெம் செல்லாக மாறத் தூண்டப்பட்டு, மனிதனால் செயற்க்கையாக உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களே தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் எனப்படுகிறது!
ஸ்டெம் செல் குறித்த ஒரு அழகான அறிமுகக் காணொளி உங்களுக்காக…..
ஸ்டெம் செல்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள். அனேகமா இப்போ உங்களுக்கு ஓரளவுக்குப் புரியலாம் ஸ்டெம் செல் ஆய்வுகள் ஏன் சர்ச்சைக்குள்ளாகின்றன அப்படீன்னு?! (புரியலைன்னாலும் பரவாயில்லை தொடரின் ஒரு பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்)
இவை மூன்றையும் தவிர்த்து, ஒரு புதுவகையான ஸ்டெம் செல்களும் ஆய்வுலகை கொஞ்சம் ஆட்டித்தான் படைத்துக்கொண்டிருக்கின்றன 1995 ஆம் ஆண்டிலிருந்து. அவை, புற்றுநோய் ஸ்டெம் செல்கள் (Cancer stem cells) எனப்படுகின்றன.
புற்றுநோய் ஸ்டெம் செல்கள்!
உடலில் ஏற்படும் எல்லாவகையான புற்று நோய்களுமே, சிகிச்சைக்குப்பின் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மையுடையவை! இதற்க்கான அடிப்படைக் காரணங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் நடத்தப்பட்ட புற்றுநோய் ஆய்வில், சில புற்று நோய்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை அனுக்கள், ஸ்டெம் செல்களின் பிரத்தியேக குணங்களான, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் மற்றும் புற்றுநோயின் எல்லா வகையான செல்களையும் உருவாக்கும் தன்மையுடனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது! புற்றுநோயிலுள்ள இவ்வகை அனுக்கள் திசு ஸ்டெம் செல்களிலிருந்து, மரபனு சேதங்களால் (மரபனுத்திரிபு/mutation) பாதிப்படைந்து, புற்று நோய் அனுக்களாக மாறியிருக்கக் கூடும்/வேண்டும் என்ற யூகத்தினடிப்படையில், இவ்வகை அனுக்களை புற்றுநோய் ஸ்டெம் செல்கள் என்கிறது புற்றுநோயியல்/புற்றுநோய் ஆய்வு உலகம்! ஆக,
புற்றுநோயிலுள்ள, திசு ஸ்டெம் செல்களிலிருந்து, மரபனு சேதங்களால் (மரபனுத்திரிபு/mutation) பாதிப்படைந்து, அதனால் புற்றுநோய் அனுக்களாக மாறி, பொதுவான புற்றுநோய் அனுக்களை தாக்கும் தன்மையுள்ள, சிகிச்சையின் கதிர்வீச்சு மற்றும் வேதியல் மருந்துகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் திறனைப் பெற்று, புற்றுநோய்க்கு அழியா வரம் அளிக்கும் இவ்வகையான அனுக்களை புற்றுநோய் ஸ்டெம் செல்கள் என்கிறார்கள் புற்றுநோயியல் ஆய்வாளர்களில் ஒரு சாரார்! (அடியேன் பத்மஹரி, முனைவர் பட்ட ஆய்விற்க்காக மார்பகப் புற்றுநோய் ஸ்டெம் செல்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்!) மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள்
என்னங்க, இப்பவே கண்ணக் கட்டுதா? நோ நோ….அதுக்குள்ள கண்ணக்கட்டினா எப்படி? இன்னும் பாதி கிணறு கூட தாண்டலியே?! இப்போதான் தொடரோட முக்கியமான பகுதிக்கு வந்திருக்கோம்…..
ஏன்னா இனிமேதான் உங்களுக்கு, புற்றுநோய்க்கும் ஸ்டெம் செல்களுக்கும் நடந்த திருமணத்தைப் (?) பற்றிய ஒரு சுவாரசியமான உண்மைச் சம்பவக்கதை ஒன்னு சொல்லப்போறேன்……
புற்றுநோய் மருத்துவத்தில் ஸ்டெம் செல்கள்!
ஸ்டெம் செல்கள் தாங்கள் பிறந்த பயனையே புற்றுநோய் மூலமா அடைஞ்சிது, தெரியுமா உங்களுக்கு? ஒன்னும் புரியலீங்களா? அதாவது, ஸ்டெம் செல்கள் ஆய்வு வெறும் ஆய்வாக மட்டுமே இல்லாம, மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு சில உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மனித இனத்தை காக்கும் வல்லமை படைத்தது என்பதை கடந்த 1975 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவச் சிகிச்சை நிரூபித்தது. அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க…..
ஸ்டெம் செல்-ரத்தப் புற்றுநோய், 30 வது திருமண நாள்!
ஒரு இளைஞர் ஒரு உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்படுவது என்பதே மிகவும் கொடுமையானது. அதைவிடக்கொடுமையானது, அந்த நோய் சிகிச்சையே/மருந்தே இல்லாத, சில வருடங்களிலேயே உயிரைக் குடித்துவிடும் தன்மையுடையது என்பது!
அப்படிப் பாதிக்கப்பட்ட 16 வயது இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்த திரு.டேவிட் ஸ்டால். அவரை பாதித்த அந்த நோய், லிம்ஃபோமா என்னும் ஒரு வகையான உயிர்கொல்லி ரத்தப்புற்று நோய்! எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையானது, 30 வருடங்களுக்கு முன் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டது. ஏன்னு கேக்குறீங்களா?
1970-களில், புற்றுநோய் ஆய்வு/சிகிச்சை முறைகள் அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்த நாட்கள் அவை! அப்போதெல்லாம் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டது என்று சொன்னால், அவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பது போன்ற ஒரு புரிதல் மக்களிடையே பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! ஆக, புற்றுநோய்=இறப்பு என்பதைப் போன்றது என்கிறார் ஸ்டால்!
திடீரென்று ஒரு நாள், மிக மோசமான வயிற்று வலியால் துடித்தார் ஸ்டால். மருத்துவமனைக்கு சென்றவருக்கு வயிற்றில் ஏதோ நுண்ணுயிரி தொற்றுனோய் இருப்பதாகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஆனால், திடீரென்று ஒரு நாள் மூச்சுக் கூட விடமுடியாமல் தவித்தவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சில சோதனைக்குப்பின், ஒரு X-ray அவருக்கு நுரையீரல் முழுவதும் ஒரு திரவம் நிரம்பியிருப்பதாகக் காட்டியது! 15 நிமிடங்களுக்குப் பின் வந்திருந்தால் இறந்திருப்பார் என்றார்கள் மருத்துவர்கள்!மேலும் சில சோதனைகளுக்குப்பின், மின்னசோட்டா பல்கலைக்கழக மருத்துவமனை (University of Minnesota Hospital) அவரின் வயிற்றில் திராட்ச்சைபழ அளவிலான ஒரு புற்று நோய்க்கட்டி இருப்பதாக உறுதி செய்தது! அது Burkitt’s lymphoma என்னும் ஒரு ரத்தப் புற்றுநோய், வெறும் 5% பிழைக்கும் வாய்ப்பையே பெற்றிருந்தார் ஸ்டால்! மருத்துவர்களால் அவரின் புற்றுநோய் வளர்வதை குறைக்கத்தான் முடிந்தததே தவிர தடுக்க முடியவில்லை!
“புற்று நோய் மிக வேகமாக வளர்வதாகவும், பிழைப்பதற்க்கான நம்பிக்கை எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள்”, என்கிறார் ஸ்டால்! வாழ்க்கை இருண்டே போய்விட்டது அவருக்கு! ஆனாலும், ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் இருப்பதாகச் சொன்னார்கள் மருத்துவர்கள்?!
அது சோதனை முறையிலான எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை (Experimental Bone marrow transplant) சோதனை முறையிலான என்றால், இதுவரை யாருக்கும் பலனளிக்காத ஒரு சிகிச்சை என்று அர்த்தம்! அந்தக் காலகட்டத்தில், லியூக்கிமியா என்னும் ரத்தப் புற்றுநோய்க்கு மட்டுமே எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!
“எலும்பு மஞ்சையில் உள்ள ஸ்டெம் செல்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்த அனுக்களை மீண்டும் உருவாக்கி, புற்று நோயிலிருந்து நோயாளியை பாதுகாக்குமாம்”
எப்படியிருந்தாலும் பரவாயில்லை, கடவுள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, இந்த சோதனைமுறை சிகிச்சையை முயன்றே பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்கள், ஸ்டாலும் அவரது குடும்பத்தாரும்! ஆனால், சிகிச்சையை கடவுள் செய்யவில்லை. மின்னசோட்டா பல்கலைக்கழக எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை மருத்துவர் ஜான் கெர்சீதான் (John Kersey, M.D) செய்தார்!
“வேறு ஒருவரின் எலும்பு மஞ்சையை ஒரு நோயாளிக்கு செலுத்துகிறோம் என்றால், ஒரு புது ‘நோய் எதிர்ப்பு சக்தியை’ கொடுக்கிறோம் என்று அர்த்தம்! எலும்பு மஞ்சையால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோயாளியின் புற்றுநோயை எதிர்த்து போராடி அழிக்கும் திறன் கொண்டது என்பதை கவனத்தில் கொள்க” என்கிறார் ஜான் கெர்சீ!
இறுதியில், லிம்ஃபோமா ரத்தப்புற்று நோய்க்கு உலகின் முதல் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சையை, கடந்த அக்டோபர் 7, 1975-ல், நோயாளி ஸ்டாலின் அவர்களின் சகோதரரின் எலும்பு மஞ்சையையும், கதிர்வீச்சு மற்றும் மருந்து சிகிச்சையையும் (radiation and chemotherapy), சேர்த்து வெற்றிகரமாக செய்து முடித்தார்!
இன்று, சிகிச்சைக்கு பின்னான 30 வருடங்களுக்கு பிறகு, எலும்பு மஞ்சை மாற்றும் சிகிச்சைதான் லிம்ஃபோமா புற்றுநோய்க்கு, நம்பிக்கையான, உயிர்காக்கும் ஒரு சிகிச்சையாய் நிலைபெற்றுள்ளது! டேவிட் ஸ்டால், Golden Valley company என்னும் ஒரு நிறுவனத்தில் தொழில்னுட்ப வல்லுனராக பணியாற்றுகிறார்! மீன் பிடித்தல், கோல்ஃப் விளையாட்டுகள் எனப் பல்வேறு அன்றாட செயல்களில் ஈடுபடுகிறார் திடகாத்திரமாக!
இப்போது ஸ்டால் மருத்துவமனை செல்வதில்லை, கெர்சீயை மருத்துவத்துக்காக சந்திப்பதில்லை! ஆனால், அவர்களிருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டெம் செல்-புற்றுநோய் மருத்துவச் சிகிச்சையின் 30 வது ஆண்டுவிழாவை சேர்ந்து கொண்டாடினார்கள்!
கதை கதையாம் காரணமாம் அப்படீன்னு ஸ்டெம் செல் சிறப்புக்கான கதை சொல்லக் கிளம்பி, ஒரு வழியா முடிச்சாச்சு! அதுக்காக நீங்க கதையை நியாபகத்துல வச்சிக்கிட்டு, ஸ்டெம் செல்களை மறந்துடாதீங்க! இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்துல நாம என்னென்ன பார்க்கப் போறோம்னு ஒரு சின்ன பட்டியலையும் கீழே படிச்சிட்டு மறந்துடாமா இந்தத் தொடர் பத்தின உங்க மேலான கருத்துகளையும் மறுமொழியா/மின்னஞ்சலா எனக்கு எழுதி அனுப்புங்க!
அடுத்த பாகத்தில்……
- சிசு ஸ்டெம் செல்லும் சில/பல சர்ச்சைகளும்
- பல்வேறு ஸ்டெம் செல் சிகிச்சைகள்
டிஸ்கி: ஸ்டெம் செல்கள்/குறுத்தனுக்கள் (Stem cells) எனும் மனித உடலின் ஒரு வகை மூல/ஆதார அனுக்களைப் பற்றிய இத்தொடரில் இடம்பெறும் கருத்துக்கள், செய்திகள், விவாதங்கள் யாவும் இத்துறை குறித்த என் அடிப்படை அறிவு/புரிதலே! அவற்றில் தவறிருக்கவும் வாய்ப்பிருப்பமையால், வாசகர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு தொடரில் இடம்பெறும் தொடர்புகளுக்குச் சென்று, மேலதிக விவரங்களை சேகரித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி.
தொடர்புடைய இடுகைகள்:
natbas
ஜூன் 7, 2010
பயனுள்ள, தகவல்க்கியல் நிறைந்த பதிவைத் துவக்கி வைத்திருக்கிறீர்கள். இதன் தொடர் பதிவுகளை எதிபார்க்கிறேன்.
ஸ்டெம் செல்கள் மருத்துவத்துறையின் திருப்புமுனைக்கு அடிகோலும் என்பதில் ஐயமில்லை. http://www.gizmag.com/retina-created-from-human-stem-cells/15243/ என்ற சுட்டியில் ஸ்டெம் செல்களைக் கொண்டு கண்ணின் ரெடினாவை உருவாக்கியிருக்கிறார்கள் என்ற ஆச்சர்யமான தகவல் தெரிகிறது. மனித உறுப்புகள் ஒவ்வொன்றையும் இவைற்றைக் கொண்டு வடிவமைக்கும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது (மூளை? என்ற சந்தேகம் வருகிறது-…)
மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஸ்டெம் செல்களை மூளைக்குள் செலுத்தி புற்றுநோயை இன்னும் வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என்று சொல்கிற புரட்சிகரமான ஆய்வு பற்றி அண்மையில் இந்த செய்தி படித்தேன் http://www.newscientist.com/article/mg20627633.800-stem-cells-turn-into-seekanddestroy-cancer-missiles.html?DCMP=OTC-rss&nsref=online-நியூஸ்
தங்களது பதிவுகள் மருத்துவ அறிவியலின் இந்த கூர்முனை ஆய்வு பற்றிய தெளிவை எங்களுக்கு உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.
தொடரட்டும் உங்கள் சேவை! நன்றி.
padmahari
ஜூன் 7, 2010
//மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஸ்டெம் செல்களை மூளைக்குள் செலுத்தி புற்றுநோயை இன்னும் வெற்றிகரமாக குணப்படுத்த முடியும்//
இதை நானும் படித்தேன். இது பற்றி ஒரு பதிவு எழுதும் எண்ணமும் இருக்கிறது!
//தங்களது பதிவுகள் மருத்துவ அறிவியலின் இந்த கூர்முனை ஆய்வு பற்றிய தெளிவை எங்களுக்கு உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.//
உங்க நம்பிக்கையை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன்!
மிக்க நன்றிங்க நட்பாஸ்!!
தணிகாசலம்
ஜூன் 7, 2010
சினை முட்டையுனுள் விந்துவின் ………..(பெயர் தெரியவில்லை) நுழைந்து உருவாகிறதே முதல் செல் அதுதான் சிசுஸ்டெம் . சரிதானே? பின்னர் இந்த சிசு ஸ்டெம்செல் எப்போதிருந்து திசுஸ்டெம்செல்லாக மாறுகிறது ?? அது தன்னுடைய totipotency இயல்பால் மாறிக்கொண்டால் எதாவது காலக்கட்ட நிர்ணயம் உண்டா ?
standard therapy, stem line therapy என்று குறிப்ப்பிட்டுள்ளீர்கள். stem line therapy-ல் தான் CSCகள் கொல்லப்படுகின்றன. அப்படியிருக்க standard therapy தேவையா? அல்லது வேறு காரணங்கள் உண்டா ? மனித உடலிலுள்ள ஒருகோடி லட்சம் அணுக்களில் ஸ்டெம்செல்களும் இருக்கின்றனதானே ! குழப்புகிறேனோ ? என்ன செய்வது சந்தேகம் வந்துவிட்ட பிறகு என்னால் சும்மா இருக்க முடியாதையா!
ஒருவேளை கேள்விகள் சிறுபிள்ளைத்தனமாக ஆய்வாளருக்குப் படலாம்.
பொறுத்தருள்க.
padmahari
ஜூன் 7, 2010
சினை முட்டை+விந்து=சைகோட் (egg+sperm=zygote), ஒரு இரு செல் உயிர்! இந்த இரு செல் சைகோட் இன்னும் வளர்ந்து பல செல் நிலைக்குப் போனபின் (blastocyst) இந்த பல செல்களுக்குள் ஒரு சில அனுக்கள் மட்டுமே ஸ்டெம் செல்கள் எனப்படுகின்றன. அவைதான் சிசு ஸ்டெம் செல்கள்! இந்த சிசு ஸ்டெம் செல்கள் திசு ஸ்டெம் செல்களாக மாறுவதில்லை!
உடலின் பல்வேறு திசுக்களுக்கு வித்திடுவது மட்டுமே சிசு ஸ்டெம் செல்களின் வேலை. ஒவ்வொரு திசுவுக்குள்ளும் இருக்கும் ஸ்டெம் செல்களே திசு ஸ்டெம் செல்கள்! ஆக சிசு ஸ்டெம் செல்லும் திசு ஸ்டெம் செல்லும் முற்றிலும் வேறானவை. அவற்றின் குணங்களும் வேறுபடும்!
//அது தன்னுடைய totipotency இயல்பால் மாறிக்கொண்டால் எதாவது காலக்கட்ட நிர்ணயம் உண்டா ?//
ஆம் உண்டு. totipotency, ஒரு சிசு குறிப்பிட்ட ஒரு வளர்ச்சியை அடையும் வரையே. அதன்பின் multipotency (முதல் படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்)
//standard therapy, stem line therapy என்று குறிப்ப்பிட்டுள்ளீர்கள். stem line therapy-ல் தான் CSCகள் கொல்லப்படுகின்றன. அப்படியிருக்க standard therapy தேவையா? அல்லது வேறு காரணங்கள் உண்டா ? //
standard therapy தேவையா? என்று கேட்பதைவிட, stem line therapy இன்றைய சூழலில் எத்தனை சதவிகிதம் சாத்தியம் என்று கேட்பது பொருத்தமாயிருக்கும். ஏன்னா, ஒவ்வொரு புற்று நோயிலும் உள்ள CSC க்களை சரியாகக் கண்டுபிடித்து கொல்வது இன்றைய தொழில்னுட்ப முன்னேற்றத்தில் இன்னும் முழுமையாகச் சாத்தியப்படவில்லை! எனவே standard therapy யானது, stem line therapy முழுமையாக சாத்தியப்படும்வரை அவசியமே!
//மனித உடலிலுள்ள ஒருகோடி லட்சம் அணுக்களில் ஸ்டெம்செல்களும் இருக்கின்றனதானே !//
ஆமாம். கண்டிப்பாக!
உங்க கேள்வி சரியனாவைதான். சிறுபிள்ளைகளால் இம்மாதிரியான கேள்விகளை கேட்க முடியாது என்றே நினைக்கிறேன்! 🙂
நன்றி!
மின்னுது மின்னல்
ஜூன் 7, 2010
குட் போஸ்ட் சார் !!
கதிரியக்க சிகிச்சைகள் இப்போது செயல் படுத்த படுகிறதே அதன் பிளஸ் மைனஸ் என்ன??
தொடருங்கள்
padmahari
ஜூன் 7, 2010
வாங்க மின்னுது மின்னல்,
//கதிரியக்க சிகிச்சைகள் இப்போது செயல் படுத்த படுகிறதே அதன் பிளஸ் மைனஸ் என்ன??//
நல்ல கேள்வி.
ப்ளஸ்: வெற்றிகரமாக எல்லா புற்று நோய் அனுக்களையும் முற்றிலும் இருந்த சுவடே இல்லாமல் அழித்துவிடுவது!
மைனஸ்:
1.முடி உதிர்தல்
2.நல்ல அனுக்களையும் சேர்த்து அழித்துவிடுவது
3.மேலும் உடல் ரீதியான பல பின் விளைவுகளை உண்டாக்குவது
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மின்னுது மின்னல்! தொடர்ந்தும் இணைந்திருங்க, மீண்டும் சந்திப்போம்!
யூர்கன் க்ருகியர்
ஜூன் 7, 2010
ரொம்ப அருமையான கட்டுரை..
பகிர்வுக்கு நன்றி சார்
padmahari
ஜூன் 7, 2010
மிக்க நன்றி யூர்கன்!
Abarajithan
ஜூன் 7, 2010
ரத்தப் புற்றுநோய் என்பது லியூக்கேமியாவா அல்லது லிம்போமியாவா?
padmahari
ஜூன் 7, 2010
ரத்தப்புற்று நோய் என்பது லியூக்கீமியாதான்! விட்டா சேமியாவான்னு கேப்பீங்க போல, லிம்போமியா இல்லீங்க லிம்ஃபோமா! இது நோய் எதிர்ப்பு சக்தி பகுதியின் ஒரு வகையான திரவத்தின் செல்களான லிம்ஃபோசைட்கள் (இவையும் ஒரு வகை ரத்த அனுக்களே!) என்னும் அனுக்களில் ஏற்படும் ஒரு புற்று நோய். இதுக்கு தமிழாக்கம் இல்லீங்கோவ் (குறைந்தபட்சம் எனக்குத் தெரியாது!)
ரோஸ்விக்
ஜூன் 10, 2010
தொடர்ந்து தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன் ஹரி. தொடருங்கள்.
அருமையான விஷயம்.
padmahari
ஜூன் 10, 2010
ரொம்ப சந்தோஷம் ரோஸ்விக்! கண்டிப்பா தொடர்ந்து எழுதுவேன்…..
ஆனா ஒரு சின்ன வருத்தம். வந்திருக்குற மறுமொழிகள்ல…..
இது எத்தனை பேரைப் போய்ச் சேர்ந்தது?
அறிவியல் படிக்காத நம்மவர்களின் ஸ்டெம் செல் பத்தின இப்போதைய புரிதல் என்ன?
அதுக்கு இந்தத் தொடர் எந்த அளவுக்கு கைகொடுக்கும்?
இப்படி இன்னும் நிறைய கேள்விகளுக்கு விடை தெரியாம போனதுனால, இனி இந்தத் தொடரை எந்த திசையில், எந்த புரிதல் நிலையில் கொண்டு செல்வது பொருத்தமாய் இருக்கும் என்பது இன்னும் விளங்கவில்லை. ஆனால் எனக்கு அது ஒரு போதும் ஒரு தடையல்ல. ஸ்டெம் செல்கள் பற்றிய என் சிற்றறிவின் புரிதலைக் கொண்டு தொடர்ந்து பயணிப்பது என்று எப்போதோ முடிவு செய்தாயிற்று! கேள்விகள் இருப்பின் கேளுங்கள் ரோஸ்விக். நன்றி!
natbas
ஜூன் 10, 2010
ஸ்டெம் செல் பற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுதினால் அப்படி ஆனா ஆவன்னாவிலிருந்து துவங்கிவீர்களோ, அது போல் இந்த தொடர் பதிவை அணுகினால் வாசகர்களின் ஆவல் பிச்சுக்கிட்டு வரும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
ரோஸ்விக்
ஜூன் 10, 2010
அப்பறம் உங்க ஆராய்ச்சி படிப்பு எப்படி போகுது?
padmahari
ஜூன் 10, 2010
ஆராய்ச்சி பணமில்லாம கொஞ்சம் தாமதமாக போய்க்கிட்டுருக்கு! ஆனாலும், புற்றுநோய் ஸ்டெம் செல் ஆராய்ச்சிங்கிறதுனால, சுவாரசியத்துக்கும் சர்ச்சை/விவாதங்களுக்கும் பஞ்சமே/குறைவே இல்லாம, ரொம்ப காரசாரமா போய்க்கிட்டிருக்கு! இன்னும் ரொம்ப தூரம் போகனும், அதனால முயற்ச்சித் திருவினையாக்கும்னு நம்ம்ம்ம்ம்ம்பி…..போய்க்கிட்டிருக்கேன்! 🙂
natbas
ஜூன் 10, 2010
உங்க முயற்சி வெற்றி பெற, நீங்க ஆராய்ச்சி மூலம் திருப்புமுனையை ஏற்படுத்த இங்கே தமிழகத்தில் நாங்க உங்களுக்காக கை தட்டிக்கிட்டு இருக்கோம் (கை கூப்பணும்னா சொல்லுங்க, கோவிலுக்குப் பொய் கூப்பிருவோம்!)…
சாதனைகள் பல படிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
padmahari
ஜூன் 10, 2010
உங்க அன்புக்கும், ஆதரவுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளும், வணக்கங்களும்! நீங்க நெனக்கிற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய ஆய்வாளனெல்லாம் இல்லீங்க. என்னைவிட சிரத்தையோட, அற்பணிப்போட ஆய்வு செய்கிற எத்தனையோ பேர் இந்த உலகத்துல, ஏன் நம்ம தமிழகத்துல இருக்காங்க. உங்க ஊக்கத்தை உங்க சார்பா அவங்களுக்கு இந்தத் தருணத்துல நான் சொல்லிக்க விரும்புறேன்! வாழ்க ஆய்வுலகம், அதை ஊக்குவிக்கும் பொதுமக்கள்! நாளைய பொழுது நமக்கும், உலகத்தாருக்கும் நன்றாக புலர விழைகிறேன்! நன்றி.
@ஸ்டெம் செல் தொடர் பற்றி:
உங்க மறுமொழி ஒரு நல்ல யோசனையைக் கொடுத்திருக்குங்க நட்பாஸ். கண்டிப்பா அடுத்த பகுதி நீங்க எதிர்ப்பார்க்கிற மாதிரியே இருக்கும்! நன்றி.
irissenthil
ஜூன் 21, 2011
nantri. thodarga.
padmahari
ஜூன் 29, 2011
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி செந்தில். மீண்டும் சந்திப்போம்….. 🙂
jansi
ஜனவரி 6, 2013
nice sir
Pramilasuresh
செப்ரெம்பர் 28, 2013
pls clarify the difference – standard & stem therapy
moosa
மார்ச் 10, 2014
U r simple But very Powerful