கருந்துளை: உலகங்களை அழிப்பவன்! 

Posted on ஜூன் 17, 2017

0


ஆமா…., நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? 
என்னங்க அப்படி பாக்குறீங்க? மேலே இருக்குற கேள்வி நான் உங்களைப் பார்த்து கேட்டேன்னு நெனச்சிக்கிட்டீங்களா? அட நீங்க வேற. நான் ஏங்க உங்கள அப்படி கேட்கப் போறேன். அது நான் இல்லீங்க! இந்த ‘கருந்துளை’ (ப்ளாக்ஹோல்) அப்படீன்னு சொல்றாங்களே….அதுதாங்க மனுசப் பயலுகளான நம்ம எல்லாரையும் பார்த்து ‘நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?’ அப்படீன்னு கேட்குது! 

ஏன்னு கேக்குறீங்களா? அப்படிக் கேளுங்க. அதுதான் இந்த கட்டுரையோட அடிநாதமே! வாங்க என்னன்னு பார்ப்போம். அப்புறம் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் பாருங்க. இந்த கட்டுரையை மேலே படிக்கிறதுக்கு முன்னாடி மனசைக் கொஞ்சம் திடப்படுத்திக்குங்க. வேணும்னா உங்க இஷ்ட தெய்வங்களை எல்லாம் கூட கும்பிட்டுக்குங்க. ஏன்னா தைரியம் வரும் பாருங்க அதுக்குச் சொன்னேன். சரி இப்போ நாம செய்திக்கு வருவோம்.

கருந்துளையும் உலகங்களின் அழிவும்! 

கருந்துளை அல்லது ப்ளாக்ஹோல் என்பதை தனக்கு அருகில் வரக்கூடிய ‘பொருட்களை எல்லாம் அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டுவிடக்கூடிய கரிய நிறத்திலான மிக மிக (இன்னும் எவ்வளவு மிக வேணும்னாலும் நீங்க போட்டுக்கலாம். ஏன்னா அது அவ்ளோ) மிகப்பெரிய ஒரு துளை’ அப்படீன்னு சொல்லலாம். ஆனா இதுல சுவாரசியம் என்னன்னா, இயற்பியலில் இப்போ பரிச்சயமாக இருக்குற எந்த ஒரு கோட்பாடு அல்லது விதி இப்படி எதனைக் கொண்டும் கருந்துளை ஏன் இருக்கிறது, அது எப்படி உருவானது போன்ற எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்க முடியாது அப்படீங்கிறதுதான்! கருந்துளை அப்படீன்னு ஒன்னு இருக்குன்னு முதல்ல கண்டுபிடிச்சவரு, ‘தியரி ஆப் ரிலேட்டிவிட்டி’ அல்லது ‘சிறப்பு மற்றும் பொது சார்புக் கோட்பாடு’ அப்படீங்குற ஒரு ஒப்பற்ற ஒரு கோட்பாட்டை, ஒளியுடைய வேகத்தை கண்டுபிடிச்சு நமக்கு கொடுத்த சகலகலா வல்லவரான நம்ம ஐன்ஸ்டீன் ஐயாதான்.

ஆனா பாருங்க, அவரோட ஆய்வில் முதன்முதலில் கருந்துளை தொடர்பான முடிவுகளை கண்டுபிடிச்சப்ப, ‘நம்ம பிரபஞ்சத்துல இப்படி ஒரு விஷயம் இருக்க வாய்ப்பே இல்லை’ன்னு அவரே முதல்ல கருந்துளைகளை நம்பவே இல்லையாம்! ஆனா அவரைச் சொல்லிக் குத்தமில்ல. ஏன்னா, நம்ம பிரபஞ்சத்துல இருக்குற சூரியன் சந்திரன் உள்ளிட்ட கிரகங்கள், அவ்வளவு ஏன் கேலக்சி என்று சொல்லக்கூடிய மொத்த விண் மீன் மண்டலத்தையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடக் கூடிய அளவுக்கு இந்த கருந்துளைகள் ஆபத்தானவைன்னு சொன்னா யாருக்குமே புரிஞ்சுக்கிறதுக்கும் நம்புறதுக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். ஏன்னா, சில நூற்றாண்டுகளுக்கு முன்னாடி இருந்த நம்ம மனுஷப் பயலுவ, உலகம் உருண்டைன்னு சொன்னதையே நம்பாம பல விஞ்ஞானிகளோட உசுரையே எடுத்த கொலைகாரப் பயலுவதான….!? இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, இப்போக்கூட ஒரு குரூப்பு ‘உலகம் தட்டைதான்னு’ அடிச்சு சொல்லிக்கிட்டு திரியுதுன்னா பார்த்துக்குங்க. 

சரி நாம கருந்துளை பற்றிய அடுத்த தகவலுக்கு வருவோம். ஆக, ஒரு வழியா கருந்துளை இருக்கு, அது மிகப்பெரியது அப்படின்னு சில பல ஆய்வுகள் மூலமா நிரூபிச்சு பல தசாப்தங்கள் ஆகிப்போச்சு! ஆனா இப்போ விஷயம் என்னன்னா, பிரபஞ்சத்துல இருக்குற பல கருந்துளைகளோட அளவு மற்றும் பொருண்மை எவ்வளவுன்னு கணக்கிட்டு அவற்றை சூரியனுடன் ஒப்பிட்டு ஒரு வீடியோ வடிவத்துல யூடியூப்ல பதிவேற்றி இருக்காங்க YouTuber morn1415 அப்படீங்கிற ஆய்வுக்குழுவினர். அந்த தகவல்களைக் கேட்டீங்கன்னா தலை சுத்தி கீழேயே விழுந்துடுவீங்க. இல்லைன்னா உங்க மூளையே வலிக்க ஆரம்பிச்சுடும்னா பார்த்துக்குங்களேன். அதனால, நீங்க உண்மையிலேயே ஒரு தைரியசாலின்னா மேலே படிங்க. 

சரி, கருந்துளைகளோட அளவுக்குப் போறதுக்கு முன்னாடி, ஒரு கருந்துளை எப்படி உருவாகுதுன்னு பார்ப்போம். எந்த ஒரு பொருளையும் கருந்துளை ஆக்க முடியும்! அப்படி ஒரு பொருளை கருந்துளையா மாத்தனும்னா நீங்க அந்த பொருளை அதனுடைய ஷ்வார்ஸ் சைல்டு ரேடியஸ் (Schwarzchild radius) வருகிற வரைக்கும் நசுக்கனும்! 

ஆமா, ஷ்வார்ஸ் சைல்டு ரேடியஸ் அப்படீன்னா என்ன? 

எளிமையாக சொல்லனும்னா, நம்ம சூரியனை ஒரு கருந்துளையா மாத்தனும்னு வச்சுக்குங்க. முதல்ல அதை ஒரு சிறிய நகரம் அளவுக்கு நசுக்கி சின்னதா ஆக்கணும். ஆக, ஒரு சிரிய நகரத்தின் அளவுதான் சூரியனுடைய ஷ்வார்ஷ் சைல்டு ரேடியஸ்! அதே மாதிரி, நம்ம பூமியை கருந்துளையா ஆக்கணும்னா அதை ஒரு வேர்க்கடலை அளவுக்கு நாம நசுக்கனும் அல்லது சுருக்கணும். இதை யோசிச்சு பார்க்கவே ‘சும்மா அதிருதில்ல’ மாதிரி இல்லியா உங்களுக்கு? இதுக்கே இப்படின்னா, இதுவரைக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளைகளிலேயே மிகச்சிறியது உண்மையில் எவ்வளவு பொருண்மை கொண்டதுன்னு தெரிஞ்சா அப்படியே ஆடிப்போயிடுவீங்க. XTE J1650-500 அப்படீங்குற பெயர்கொண்ட கருந்துளைதான் இருக்குறதுலேயே சின்னதாம். அதுமட்டுமில்லாம நியூ யார்க்கில் இருக்குற மான்ஹாட்டன் அளவுதான் இருக்குமாம். ஆனா அதோட பொருண்மை (அல்லது எடை) எவ்வளவு தெரியுமா? சுமார் மூன்று மூதல் நான்கு சூரியன்கள் அளவுக்கு எடை கொண்டதாம். வெளங்கிடும்!

அடுத்து, மீடியமான அளவுகொண்ட ஒரு கருந்துளைக்கு M82 X-1-ன்னு பேரு. இது செவ்வாய் கிரகம் அளவுக்கு பெருசா இருக்குமாம். ஆனா அதோட எடை சுமார் ஆயிரம் சூரியன்களுக்கு இணையானதாம். என்ன, இப்பவே கண்ணைக் கட்டுற மாதிரி இருக்குல்ல? எனக்கும்தான்! ஆனா, இருங்க இதுவரைக்கும் ட்ரெய்லர்தான் பார்த்துருக்கீங்க. இனிமேதான் மெயின் பிக்சரே வரப் போகுது……!! 

மிக மிக மிகப்பெரிய கருந்துளைகள் பல இருக்குதாம். அதுக்கு ஆங்கிலத்துல ‘சூப்பர் மாசிவ் ப்ளாக்ஹோல்’னு (supermassive black hole) பேரு. இந்த மாதிரியான மிகப்பெரிய கருந்துளைகள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு மிகப்பெரிய விண் மீன் மண்டலத்தின் மத்திய பகுதிகளிலும் இருக்கின்றனவாம். இந்த சூப்பர் மாசிவ் கருந்துளைகளோட எடை எவ்வளவுன்னா, சுமார் 2000 கோடி சூரியன்களுடைய எடை அளவாம். சரி, இதுக்கு மேல எழுதினா எனக்கே தலை சுத்தி மயக்கம் வந்துடும். அதனால நீங்க என்ன பண்றீங்கன்னா, நல்லா சாப்பிட்டுட்டு தெம்பா வந்து கீழே இருக்குற வீடியோவ ஒரு முறை நல்ல கவனமா பாருங்க. கருந்துளைகள் பத்தி நான் மேலே சொன்ன எல்லா தகவல்களும் அழகா அனிமேஷன்ல காட்டியிருக்காங்க. கண்டிப்பா பாருங்க. 

பாத்து முடிச்சீங்கன்னா, பதிவுத் தொடக்கத்துல நான் சொல்லியிருக்குற மாதிரி ‘ஒரு கருந்துளைக்கு முன்னாடி நாம எல்லாரும் ஜுஜூபி கூட இல்ல. அதுல பல கோடியில ஒரு சிறு பகுதி’ அப்படீன்னு கண்டிப்பா உங்களுக்கு தோணும்! 

மீண்டும் அடுத்து ஒரு சுவாரசியமான பதிவுல சந்திப்போம் மக்களே….அதுவரை டாட்டா பை பை…….

அன்புடன், 

ஹரிநாராயணன்.

Advertisements