காத்திருக்கும் ஆபத்து – சிவப்பு பெரும் பூதம்

Posted on ஜூன் 23, 2016

0


அன்றாட வாழ்க்கைக்கும், உணவுக்கும் சூரிய வெளிச்சத்தை நம்பி வாழும் மனிதனுக்கு அந்த சூரியன் மற்றும் வானத்தில் மின்னும் இதர நட்சத்திரங்கள் குறித்த அறிவியல் அறிவு அவசியம் என்பதை சங்க இலக்கியங்கள் படைத்த நம் தமிழ்ச் சான்றோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு,

“செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்று பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்…” (புறநானூறு:30)

எனத் தொடங்கும் சூரிய மண்டலம் குறித்த புறநானூற்றுப் பாடல் ஒரு சோற்றுப் பதம்! ஆக, சூரியன் மற்றும் சூரிய மண்டலம் குறித்த அடிப்படை அறிவு அவசியம் என்பது தெளிவாகிறது.

சுவாரசியமாக, சூரிய வெளிச்சத்துக்கு காரணம் சூரியனுக்குள் எரிந்துகொண்டு இருக்கின்ற ஹைட்ரஜன் வாயு என்றும், இன்னும் 540 கோடி ஆண்டுகளில் சூரியனுக்குள் இருக்கும் மொத்த ஹைட்ரஜன் வாயுவும் தீர்ந்துபோய் சூரியன் ஒரு சிவப்பு பெரும் பூதமாக மாறிவிடும் என்றும் இதுவரையிலான வானியல் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம் தன்னுடைய  ஹைட்ரஜன் வாயு மொத்தத்தையும் எரித்துவிட்ட பின்னர் தோன்றும் உருவமே என்று அழைக்கப்படுகிறது.  முக்கியமாக, சிவப்பு பெரும்பூதம் தோன்றிய பின்னர், உள்நோக்கிய ஈர்ப்பு சக்தியின் அழுத்தம் காரணமாக நட்சத்திரமானது சுருங்கி, அதனுள் இருக்கும்  ஹீலியம் அணுக்கள் ஒன்றாக இணைந்து கரிமம் உற்பத்தி ஆகுமாம். இவ்வினைகள் காரணமாக ஏற்படும் மிக அதிகமான வெப்பமானது நட்சத்திரத்தை ஒரு பலூன் போல சுமார் 200 மடங்கு பெரிதாக்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நம் சூரியனுக்கு இந்த நிலை ஏற்படும்போது, சூரியனை சுற்றிவரும்  பூமியானது சூரியக் கதிர்களால் சுட்டுப் பொசுக்கப்பட்டு நதிகளும் கடல்களும் கொதித்து நிராவியாகிவிடும். அதுமட்டுமல்லாமல் நம் சுற்றுச்சூழல் எரிந்து சாம்பலாகி பூமி அண்டவெளியின் ஆழத்துக்குள் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது! துரதிர்ஷ்டவசமாக, சிவப்பு பெரும்பூத தோற்றத்தின் தொடக்கத்திலேயே பூமியிலுள்ள உயிர்கள் அழிந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும், சிவப்பு பெரும்பூதமான சூரிய விரிய விரிய புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களை விழுங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பூமி அழிந்துவிடும். ஆனால் சுவாரசியமாக, அழிவு பூமிக்குத்தானே தவிர உயிர்களுக்கு அல்ல என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்! ஆமாம், அதெப்படி சாத்தியமாகும்?

தற்போதைய பரபரப்பான வானியல் ஆய்வு எதுவென்றால் ‘உயிர் வாழ்க்கைக்கான சாத்தியக் கூறுகளைக் கொண்ட புறக்கோள்’களை கண்டறிவதுதான். இந்த நோக்கத்துடன்தான் தற்போது உலகத்திலுள்ள பெரும்பாலான வானியல் ஆய்வுக் கருவிகள், செயற்கைக் கோள்கள் மற்றும் தரையிலுள்ள தொலைநோக்கிகள் என அனைத்துமே அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்களை வலை விரித்து தேடி வருகின்றன. சுவாரசியமாக, அந்த வலையை இன்னும் சற்று பெரிதாக்கி நம் தேடுதலை தொடங்க வேண்டும் என்று கூறுகின்றனர் கார்நெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள். ஏனென்றால், சிவப்பு பெரும்பூதமான பின்னர் நட்சத்திரங்களால் உயிர் வாழ்க்கைக்கு உதவ முடியாது என்ற முந்தைய கருதுகோள்களை நிராகரிக்கும் வண்ணம் சிவப்பு பெரும்பூதங்களாலும் உயிர்வாழ்க்கைக்கு உதவ முடியும் என்று கண்டறிந்துள்ளனர் வானியல் ஆய்வாளர் ராம்செஸ்  ராமிரெஸ்சின் ஆய்வுக்குழுவினர்.

இவர்களின் கூற்றுப்படி, நம் சூரியன் சிவப்பு பெரும்பூதமாகும் வேளையில், தற்போது சூரிய வெளிச்சத்தில் 25-ல் ஒரு பங்கு வெளிச்சத்தை பெரும் வியாழன் மற்றும் 90-ல் ஒரு பங்கு பெரும் சனி  கிரகத்தின் நிலவுகள் உயிர் வாழ்க்கைக்கு தேவையான அளவு வெப்பம் மற்றும் வெளிச்சத்தைப் பெரும் தூரத்தில் இருக்கும் என்றும், அதே இடத்தில் சுமார் 20 கோடி முதல் 900 கோடி ஆண்டுகள் வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில், முழுமையான சூரிய அழிவுக்குப் பின்னர் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் வியாழன் மற்றும் சனி கிரகங்களின் நிலவுகளில்தான் என்கிறது ராமிரெஸ்சின் புதிய ஆய்வு!