உலகம் சுற்றும் “சூரிய விமானம்”

Posted on ஜூன் 22, 2016

0


‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன். பறவைகள் எப்படி பறக்கின்றன என்று உற்றுநோக்கிய மனிதன், பறவைகள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி நாமும் பறப்பதற்கு ஓரு வாகனத்தை உருவாக்கினால் என்ன என்று சிந்தித்து செயல்பட்டான். அதன் பலனாகவே இன்று பல ஆயிரம் மைல்களை சில மணி நேரங்களில் கடந்து செல்லக்கூடிய விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன! கடந்த 1903-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதியன்று ரைட் சகோதரர்களின் உதவியுடன் அதிகபட்சமாக 852 அடி தூரத்தை, 59 வினாடிகளில் வெற்றிகரமாக கடந்து தனது முதல் பயணத்தை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கியது விமானம். அன்று தட்டுத் தடுமாறி தொடங்கிய விமானப் பயணம் இன்று 112 வருடங்களில் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சீறிப் பாய்ந்து பறக்கக்கூடிய சூப்பர்சானிக் விமானம் என்று அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வேகத்தில் பிச்சு உதறும் விமானத்துறை விவேகத்தில் கோட்டை விட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு விமானம் மின்னல் வேகத்தில் சீறிப் பாய வேண்டுமானால் அது பல ஆயிரம் லிட்டர் நச்சு நிறைந்த எரிவாயுவை குடித்தாக வேண்டும். அதன் விளைவாக வெளியிடப்படும் டன் கணக்கிலான கண்ணுக்குத் தெரியாத புகையில்,  ஆபத்தான வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு, சல்பேட்டுகள் மற்றும் நச்சுத் துகள்கள் என சுற்றுசூழலை மாசுபடுத்தி உலக வெப்பமயமாதலை அதிகப்படுத்தும் மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் இருக்கின்றன. உதாரணமாக, விமானங்களின் பொறி அல்லது எந்திரத்தை உற்பத்தி செய்யும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கணிப்புப்படி ஒரு A380 விமானம் விண்ணில் பறக்க சுமார் 3,500 கார்களுக்கு தேவையான ஆற்றல் வேண்டும். அதாவது ஒரு விமானப் பயணி பறக்க சுமார் 6 கார்களை இயக்கத் தேவையான ஆற்றல் அவசியம் என்று கூறப்படுகிறது. ஆக, விமானங்கள் வேகம், சொகுசுத் தன்மை ஆகிய பலவற்றில் தொழில்நுட்ப முன்னேற்றம் பெறும் அதே சமயத்தில், சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் சுத்தமான எரிவாயுவை பயன்படுத்தும் நவீன விமானங்களை விஞ்ஞானிகள் உருவாக்கத் தவறிவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.

ஆனால் சுவாரசியமாக, சுத்தமான விமானம் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வந்துவிட்டது ‘சோலார் இம்ப்பல்ஸ் 2’. சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி உலகத்தை சுற்றிவர முயன்று வருவது குறிப்பிடத்தக்கது. தனது இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 17,000 சோலார் செல்கள் மற்றும் பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இரவில் பயன்படுத்த ஏதுவாக, 500 கிலோ எடை அளவு கொண்ட லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைக்கிறது இந்த சோலார் இம்ப்பல்ஸ். ஆனால் சுவாரசியமாக, ஒரு ஜம்போ ஜெட் வகை விமானம் அளவு பெரிய சோலார்  இம்ப்பல்சில் ஒரேயொரு விமானி உட்கார மட்டுமே இடமுண்டு என்பது கவனிக்கத்தக்கது.

விரைவில் விமானப் பயணத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய, ஒரு பெரிய காரின் எடை மட்டுமே கொண்ட  சோலார்  இம்ப்பல்ஸ்சின் நீண்ட கால வெற்றியானது, பகலில் சூரிய ஒளி மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட பேட்டரிகளில் சேமித்து வைத்து, பின்னர் இரவு நேரத்தில் விமானத்தின் நான்கு எந்திரங்களை இயக்குவதில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் அபு தாபியில் பறக்கத் தொடங்கிய சோலார்  இம்ப்பல்ஸ் 2 விமானம் ஓமன், இந்தியா, மியான்மர, சீனா மற்றும் ஜப்பான் என பல நாடுகளுக்குச் சென்று, கடைசியாக 2015 ஜூன் மாதத்தில் ஜப்பானில் இருந்து ஹவாய் நாட்டுக்குச் செல்ல, சுமார் 7200 கிலோமீட்டர் தூரத்தை 5 நாட்களில் கடந்து சாதனை செய்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே மிக நீண்ட தூர சோலார் விமானப் பயணம் மேற்கொண்டவர் என்ற உலக சாதனையை சத்தமில்லாமல் செய்திருக்கிறார் விமானி ஆந்த்ரே போர்ஷ்பெர்க்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சோலார் இம்ப்பல்சில் உள்ள பேட்டரிகள் மிக அதீதமாக சூடாகி அதனுடைய சேமிக்கும் திறன் குறைந்தது கண்டறியப்பட்டது. மெல்லமாக, ஆனால் தொடர்ந்து வளர்ந்துவரும் இந்த சோலார் விமான முயற்சியானது தற்போது அதீதமாக பயன்படுத்தப்பட்டு வரும், புதைபடிம பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நச்சு நிறைந்த எரிவாயுவை விமானப் பயணங்களில் முற்றிலும் தவிர்க்க, கூடிய விரைவில் உதவும் என்று நம்பப்படுகிறது.

solar-impulse-2-000001.jpg.650x0_q70_crop-smart