விண்வெளியில் உயிா் மூலக்கூறு!

Posted on ஜூன் 22, 2016

0


பூமியில் பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, அதன் காரணமாக அதிகரித்துவரும் உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள், அவற்றால் உண்டாகும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் போன்றவை மற்றும் அதிவேகமாக நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய பல காரணங்களால் மனிதன் தன் பெட்டி, படுக்கையைக் கட்டிக்கொண்டு நிலவுக்கு போய் வாழலாமா அல்லது செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களில் வாழலாமா என்று சிந்தித்து வரும் நவீன காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும், பூமியில் உயிர்கள் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு திட்டவட்டமாக பதில் சொல்ல இன்னும் இங்கே ஆளில்லை!

ஆனால் மிகவும் சுவாரசியமாக, உயிர்களின் தோற்றத்துக்கு அடிப்படையான மூலக்கூறுகளாக கருதப்படும் டி.என்.ஏ மற்றும் புரதங்களை உற்பத்தி செய்யும் அமினோ அமிலங்கள் ஆகியவற்றில் காணப்படும் அடிப்படையான வேதியல் பண்புகளில் ஒன்றான சமச்சீரின்மை (chirality) கொண்ட கரிம மூலக்கூறு ஒன்று நட்சத்திரங்களுக்கு இடையிலுள்ள விண்வெளி பகுதியான இன்டெர்ஸ்டெல்லார் பகுதியில் உலகில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது பூமியில் உயிர்கள் எப்படி தோன்றியிருக்கும் என்பது குறித்த நம்முடைய புரிதல்களை பெரிதும் மேம்படுத்தக்கூடியது. மிகவும் முக்கியமாக, நம்முடைய பிரபஞ்ச வெளி அல்லது விண்மீன் மண்டலத்தில் உள்ள பூமி தவிர்த்த பகுதிகளில் உயிர்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்த புரிதலையும் ஏற்படுத்தவல்லது இந்த கண்டுபிடிப்பு என்கிறார்கள் விண்வெளி ஆய்வாளர்கள்.

புரோப்பிலீன் ஆக்சைடு (propylene oxide) என்று அழைக்கப்படும் சமச்சீரின்மை கொண்ட இந்த கரிம மூலக்கூறு, பால் வீதி ( Milky Way) என்று அழைக்கப்படும் நமது விண்மீன் மண்டலத்தில் இருந்து சுமார் 390 ஒளி வருட தூரத்தில் இருக்கும்  Sagittarius B2 எனப்படும் மிகப்பெரிய வாயு மேகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சூரியனை விட சுமார் 30 லட்சம் மடங்கு அதிக எடைகொண்ட  Sagittarius B2-வில் சமச்சீரின்மை கொண்ட மூலக்கூறு இருப்பதும், அத்தகைய முதல் மூலக்கூறு புரோப்பிலீன் ஆக்சைடு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பிரபஞ்சத்தில் உயிர்மூலக்கூறுகளுக்கு முன்பு தோன்றியிருக்கக்கூடிய prebiotic மூலக்கூறுகள் எப்படி தோன்றியிருக்கும், அவை உயிர் தோற்றத்துக்கு எப்படி உதவியிருக்கும் போன்ற பல்வேறு முக்கியமான புரிதல்களை ஏற்படுத்தும் என்கிறார் வர்ஜீனியாவில் உள்ள தேசிய ரேடியோ வானியல் நோக்கத்தில் பணிபுரியும் வேதியலாளர் பிரெட் மெக்கையர்!

உயிர்களின் தோற்றத்துக்கு உதவக்கூடிய அமினோ அமிலங்கள், புரதங்கள், என்சைம்கள் மற்றும் சர்க்கரைகள் ஆகிய அனைத்து மூலக்கூறுகளும் இடது கைப்பக்க அல்லது வலது கைப்பக்க தோற்றம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தோற்றத்தில் மட்டுமே உற்பத்தி ஆகக்கூடியவை என்பது தெரியும். ஆனால் இந்த உயிர் மூலக்கூறுகள் அனைத்தும் ஏன் சமச்சீரின்மை பண்பு கொண்டவையாய் இருக்கின்றன, ஒரு குறிப்பிட்ட தோற்றம் மட்டும் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பவை பற்றி இன்னும் முழுமையாகத் தெரியவில்லை! ஆனால், விண்கற்கள், நுண்கோள்கள் ஆகியவற்றில் சமச்சீரின்மை கொண்ட மூலக்கூறுகள் இருப்பது இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, நட்சத்திர பேரிடைவெளியில் சமச்சீரின்மை கொண்ட மூலக்கூறு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, இத்தகைய மூலக்கூறுகள் விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் மற்றும் நுண்கோள்கள் ஆகியவற்றை சென்றடையும் முன்னர் விண்வெளியில் எந்த பகுதியில், எப்படி உற்பத்தி ஆகின்றன என்பது குறித்த ஆய்வுகளை இனி முழுவீச்சுடன் மேற்கொண்டால் உயிர்களின் தோற்றம் குறித்த உண்மைகளை கண்டறிய முடியும் என்கிறார் பிரெட் மெக்கையர்!

117445_web