மிருதுவான ரோபாட்களை உருவாக்கும் ரப்பர் தசைகள்.

Posted on ஜூன் 22, 2016

0


உலகம் வேகமாக ரோபாட் மயமாகி வருகிறது. இன்னும் சில வருடங்களில் மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் செய்யும் ரோபாட்களை, பொதுவிடங்கள் அல்லது நம் பணியிடங்களில் சந்திக்க, கடந்துபோகவேண்டிய சூழல் வந்துவிடும். அதனால் மனிதர்களுடன் பணியாற்றும், மனிதர்களுக்கு உதவும் ரோபாட்கள் மனிதர்களைப் போன்றே மிருதுவான உடலோடு இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி அத்தகைய ரோபாட்களை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள் உலக ரோபாட்டிக் தொழில்நுட்பத் துறை பொறியாளர்கள்.

‘காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்று மனித உடல் பற்றிய சித்தர் பாடல் ஒன்று உண்டு. இந்த பாடல் வரிகள் பிராண வாயு அல்லது ஆக்சிஜன் இல்லாத, சுவாசமற்ற உடலால் இயங்க முடியாது எனும் அறிவியல் உண்மையை வலியுறுத்துகின்றன. மிகவும் சுவாரசியமாக, இந்தப் பாடலில் கூறியிருப்பது போல காற்று அடைத்த, ‘எலாஸ்டோமர்’ எனும் ஒருவகை மிருதுவான ரப்பரால் ஆன, ஆக்சுவேட்டர் (Actuator) எனப்படும் ஒரு மோட்டாரை உருவாக்கி அசத்தியிருக்கிறார்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜார்ஜு ஒயிட்பீல்டு தலைமையிலான ஆய்வாளர்கள். தற்போது இந்த ரப்பரைக் கொண்டு எலும்பிலுள்ள தசைகளின் இயக்கத்தை முழுமையாக பிரதிபலிக்கும் ரப்பர் தசைகளைக் கொண்ட ரோபாட்களின் உற்பத்தி தொடங்கியிருக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

எலாஸ்டோமர் ரப்பரைக் கொண்டு உருவாக்கப்பட்ட தேனடை போன்ற வடிவம் கொண்ட எந்திர பாகத்துக்குள் காற்று செலுத்தப்படும். பின்னர் அந்த தேனடை பாகத்தில் இருக்கும் மொத்த காற்றையும் உறிஞ்சி இழுத்து காற்று அடைக்கப்பட்டிருந்த பகுதிகளில் ஒரு வெற்றிடம் ஏற்படுத்தப்படும். இதன் காரணமாக தேனடை போன்ற பாகமானது சுருங்கும். அதன் விளைவாக ஒரு நகர்வு உண்டாகும். காற்றின் அடிப்படையில் சுருங்கி விரியும் தன்மைகொண்ட இத்தகைய கருவிகளை ‘வெற்றிடத்தால் தூண்டப்படக்கூடிய தசை போன்ற வடிவங்கள்’ அல்லது vacuum-actuated muscle-inspired pneumatic structures (VAMPs) என்கிறார்கள். தற்போது இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கைத் தசைகள் போல இயங்கும் மாதிரிகளை உருவாக்கியுள்ளனர்.

முக்கியமாக, இதற்கு முந்தைய ஆக்சுவேட்டர்களைப் போலல்லாமல் தசைகளின் இயக்கங்களை முழுமையாக பிரதிபலிக்கும் இந்த புதிய ஆக்சுவேட்டர்களில் 2 மி.மீ. நீளமுள்ள ஓட்டைகளை ஏற்படுத்திய பின்னரும் அவை தடையின்றி சாதாரணமாக இயங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை இந்த ஆக்சுவேட்டர்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு ரோபாட்டுக்கு பெரிய பாதிப்பு ஒன்று ஏற்படும் பட்சத்தில், சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்துகளும் இல்லாமல் அவை செயலிழந்து போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, மனித தசைகளைப் போலவே அதிர்வுகளைத் தாங்கி இயங்கக்கூடிய இந்த ஆக்சுவேட்டர்களைப் பயன்படுத்தி முதற்கட்டமாக, காய்கறி மற்றும் பழக் கிடங்குகளில் பணிபுரியும் மிருதுவான ரோபாட்டுகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது ஆய்வாளர் ஜார்ஜு ஒயிட்பீல்டு அவர்களின் நிறுவனமான சாப்ட் ரோபாட்டிக்ஸ். ஆனால் எதிர்காலத்தில்,  வயதானவர்கள் அல்லது உடல் பாகம் செயலிழந்தவர்களுக்கு உணவு ஊட்டக்கூடிய மற்றும் சேவைத் துறையில் பணியாற்றக்கூடிய மிருதுவான, அதே சமயம் பாதுகாப்பான ரோபாட்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சாப்ட் ரோபாட்டிக்ஸ் நிறுவனம்!