நோய்களைக் கண்டறியும் கையடக்க ‘ஸ்பார்ட்டான் கியூப்’!

Posted on ஜூன் 22, 2016

0


இணையத் தொடர்புடன் கூடிய கையடக்க கணினிகளான ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளின் வருகையால் உலகம் உள்ளங்கைக்குள்ளேயே சுருங்கிவிட்டது என்பது மிகையல்ல கண்கூடான நிதர்சனம். ஏனென்றால், ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் போதும் உணவு முதலான சகல சவுகரியங்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே அனுபவித்து விடலாம் என்பதுதான் இன்றைய எதார்த்தம். ஆனாலும் மனித வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களான திடீரென்று நோய்வாய்ப்படுதல் மற்றும் விபத்துகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது உதவ வேண்டிய மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதை உற்று நோக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு உயிரணுக்களின் உள்ளே இருக்கும், மரபியல் தகவல்கள் மற்றும் புரத உற்பத்திக்கான தகவல்களைத் தாங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன என்பதும், அத்தகைய மரபணுக்களை கண்டறிவதன் மூலம் வரவிருக்கும் மற்றும் வந்துவிட்ட நோய்களை கண்டறிய முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டு பல வருடங்களாகிவிட்டன. ஆனால் அத்தகைய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இயங்கும் கருவிகள் பரிசோதனைகளை ஒன்றரை மணி முதல் 2 மணி நேரத்தில் விரைவாக முடிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனாலும், அவை சாமானியர்கள் சுலபமாக எட்டிப் பறிக்க முடியாத எட்டாக் கனியாகத்தான் இருக்கின்றன. ஏனென்றால், அப்பரிசோதனைகளை மேற்கொள்ளும் கருவிகள் மிகவும் அரிதான மற்றும் பிரத்தியேகமானவையாய் இருப்பதால் பரிசோதனைகளும் மிகவும் விலையுயர்ந்தவையாகவே இருந்து வருகின்றன.

அதனால், மரபணு அடிப்படையிலான நோய் கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ளும் கருவிகளை மிகவும் சிறிய மற்றும் விரைவாக இயங்கக்கூடியவையாய் மாற்றுவதும், அவற்றின் விலையை வெகுவாக குறைப்பதும்தான் மரபணு பரிசோதனைத் துறையின் தற்போதைய இலக்காக இருக்கிறது. ஆனால், நோய் கண்டறியும் மரபணு பரிசோதனைகளை வெறும் 30 நிமிடங்களில் முடித்துவிட்டு, பரிசோதனையின் முடிவுகளை டேப்லட்டின் திரையில் காண்பிக்கக் கூடிய, நாலு அங்குல நீள, அகலங்களைக் கொண்ட கையடக்க ‘ஸ்பார்ட்டான் கியூப்’ எனும் அட்டகாசமான கருவியை உருவாக்கி அசத்தியிருக்கிறது அமெரிக்க நிறுவனமான ஸ்பார்ட்டான் பயோசயின்ஸ்!

அட, அட்டகாசமாகத்தான் இருக்கிறது! அது சரி, இந்த ஸ்பார்ட்டான் கியூப் எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது?

ஒரேயொரு டி.என்.ஏ இழையிலிருந்து லட்சக்கணக்கான டி.என்.ஏ இழைகளை வெறும் அரை மணி நேரத்தில் உற்பத்தி செய்யக்கூடிய அசாத்திய திறன்கொண்ட பாலிமரேஸ் செயின் ரியாக்சன் (Polymerase Chain Reaction) அல்லது PCR என்று அழைக்கப்படும் வேதியல் வினையின் அடிப்படையில்தான் ஸ்பார்ட்டான் கியூப் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட மரபணு நோய் இருக்கிறதா என்று பரிசோதிக்க, அவருடைய தாடையின் உட்புறத்திலிருந்து ஸ்வாப் எனப்படும் திசு மாதிரியை எடுத்து ஸ்பார்ட்டான் கியூப்புடன் வரக்கூடிய பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளுக்குத் தேவையான ரசாயனங்களை கொண்ட கார்ட்ரிட்ஜ்ஜில் வைத்து, பின்னர் அதனை ஸ்பார்ட்டான் கியூப்புக்குள் பொருத்திவிட்டால் போதும். மாதிரியிலிருந்து டி.என்.ஏவை  சேகரித்து, அதனை ஆய்வு செய்து, நோய் இருக்கிறதா இல்லையா என்ற முடிவை ஸ்பார்ட்டான் கியூப் தனது ஒயர்லஸ் டேப்லட் திரையில் முப்பதே நிமிடங்களில் காட்டிவிடும் என்கிறார் விஞ்ஞானி பால் லெம்!

தற்போது , சுமார் 6 லட்சம் முதல் 35 லட்சம் வரை இருக்கும் மரபணு பரிசோதனைக் கருவிகளின் விலையை வெகுவாக குறைப்பதோடு,  மரபணு பரிசோதனையை அங்கிங்கெனாதபடி எங்கும், சாமானிய மக்களும் சுலபமாக செய்யும் வகையில் மாற்றுவதே ஸ்பார்ட்டான் பயோசயின்ஸ் மற்றும் ஸ்பார்ட்டான் கியூப்பின் இலக்கு என்கிறார் பால் லெம்!

 

Advertisements