நரம்பு மறுவளர்ச்சி சாத்தியமே

Posted on ஜூன் 22, 2016

0


இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், விண்வெளிக்கு சுற்றுலா சென்று வருவது, நிலவில் வாழ்வது, மனிதனுக்கு நிகராக இயங்கும் செயற்கை மனிதர்களை உருவாக்குவது என கிட்டத்தட்ட எல்லாமே சாத்தியமாகி வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவம் என்று வரும்போது பல இடங்களில் தொழில்நுட்பம் கை கொடுப்பதில்லை என்ற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது. உதாரணமாக, அல்ஷெய்மர்ஸ், டிமென்ஷியா உள்ளிட்ட பல நரம்பியல் நோய்கள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டால் இறுதிவரை அவற்றோடுதான் வாழ்ந்தாக வேண்டும். ஏனென்றால் நரம்புகள் ஒருமுறை சேதமடைந்த அல்லது சிதைவுற்ற பிறகு அவை மீண்டும் வளர்வதுமில்லை சீரமைவதுமில்லை! இதன் காரணமாக, எவ்வளவு நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும், நரம்பியல்  குறைபாடுகளை குணப்படுத்த இன்றுவரை எந்த சிகிச்சையும் கிடையாது என்பதே உண்மை.

உலக நரம்பியல் ஆய்வாளர்கள் எவ்வளவு ஆய்வுகள் மேற்கொண்டு முயன்று வந்தாலும் நரம்பு சார்ந்த நோய்களுக்கான சிகிச்சைகளை கண்டறிவதைப் பொறுத்தவரை ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகத்தான்’ இருக்கிறது நிலைமை இன்றுவரை! ஆனால் மிகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, நரம்புகளில் உள்ள மைட்டோகாண்டிரியா எனும் ஆற்றல் மையங்களின் நகர்வுகளை தூண்டுவதன் மூலம், நரம்புகளின் மறுவளர்ச்சியை தூண்டி அவற்றை சீரமைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது அமெரிக்காவிலுள்ள தேசிய நரம்பியல் குறைபாடுகள் மற்றும் பக்கவாத நிறுவனத்தின் ஆய்வாளர் சூ ஹாங் ஷெங் தலைமையிலான ஆய்வுக்குழு!

உடலிலுள்ள அனைத்து வகையான உயிரணுக்களின் செயல்பாடுகளுக்கும் தேவையான ஆற்றலை அவற்றிலுள்ள மைட்டோகாண்டிரியா என்னும் பகுதிதான் கொடுக்கிறது. அதுபோலவே, உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் பரவிச் சென்று நீண்டு வளரும் திறனை நரம்புகளுக்கு கொடுப்பவை இந்த மைட்டோகாண்டிரியாக்கள்தான்.  உயிரணுக்களின் ஆற்றல் மையங்கள் என்று அழைக்கப்படும் இந்த மைட்டோகாண்டிரியாவின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, முதிர்ச்சியடைந்த உயிரணுக்களில் உள்ள மைட்டோகாண்டிரியாக்களை சிண்டாபிலின் எனும் புரதமானது நகர முடியாதபடி ஒரே இடத்தில் கட்டிப்போட்டு விடுகிறது. அதனால், இளம் உயிரணுக்களில் உள்ள மைட்டோகாண்டிரியாக்கள் போல அங்கும் இங்கும் நகரும் திறனை முதிர்ச்சியடைந்த உயிரணுக்களில் உள்ள மைட்டோகாண்டிரியாக்கள் இழந்து விடுகின்றன.

நரம்புகளில் உள்ள மைட்டோகாண்டிரியாக்களின் நகர்வுகளை தூண்டுவதன் மூலம் நரம்பு மறுவளர்ச்சி மற்றும் சேதமடைந்த நரம்புகளின் சீரமைப்பு ஆகியவற்றை தூண்ட முடியுமா என்பதைக் கண்டறிய, முதலில் சேதமடைந்த நரம்புகளில் உள்ள சிண்டாபிலின் புரதத்தை மரபணு அளவில் நீக்கப்பட்டது. அதாவது, சோதனைக்கூடத்தில் வளர்க்கப்படும் நரம்பு உயிரணுக்கள் மற்றும் எலிகளின் உடலிலுள்ள நரம்புகள் ஆகியவற்றில் உள்ள சிண்டாபிலின் மரபணுவை நீக்குவதன் மூலம் சிண்டாபிலின் புரதமானது நரம்பு உயிரணுக்களில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எலிகளின் உடலிலுள்ள சேதமடைந்த சையாடிக் நரம்புகள் (sciatic nerves) எனப்படும் பெரிய நரம்பு உயிரணுக்கள் மறுவளர்ச்சியடைந்தது கண்டறியப்பட்டது. அதிசயமான இந்த உயிரியல் நிகழ்வுக்கு பின்னர், சேதமடைந்த நரம்புகளில் உள்ள மைட்டோகாண்டிரியாக்களின் நகர்வுகளைத் தூண்டுவதன் மூலமாக நரம்பு மறுவளர்ச்சி மற்றும் சீரமைப்பு ஆகியவற்றை தூண்ட முடியும் எனும் அறிவியல் உண்மை உலகில் முதல் முறையாக உறுதிசெய்யப்பட்டது.

நரம்பியலாளர் ஷெங் தலைமையிலான இந்த அட்டகாசமான ஆய்வுக்குப் பின்னர், நரம்புச் சிதைவுக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உடலிலுள்ள சேதமடைந்த நரம்புகளின் மைட்டோகாண்டிரியாவை நகரச் செய்வதன் மூலம், நரம்பு வளர்ச்சியைத் தூண்டி அல்ஷெய்மர்ஸ் உள்ளிட்ட நரம்புக் கோளாறுகளை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சுவாரசியமாக, மைட்டோகாண்டிரியா செயல்பாடுகளுக்கும் வயது முதிர்ச்சிக்கும் தொடர்புகள் இருக்கும் காரணத்தால், முதிர்ச்சியடைந்த உயிரனுக்களிலுள்ள மைட்டோகாண்டிரியாவின் நகர்வுகளைத் தூண்டுவதன் மூலம் வயது முதிர்ச்சியைக் கூட தடுத்து நிறுத்தி என்றும் இளமையாக இருக்கும் வாய்ப்புகள் இருக்கலாம் என்கின்றனர் நரம்பியலாளர்கள்.

nerve-cell-energy_1024

Advertisements