பூச்சிகளை பிடிக்கும் ‘எந்திரன்’!

Posted on பிப்ரவரி 16, 2012

1


எலியைப்பிடிக்க பயன்படும் எலிப்பொறியைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். அது ஒரு எந்திரம். ஆனால் பூச்சியைப் பிடிக்கும் பூச்சிப்பொறியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஓ தெரியுமே, பூச்சியைப் பிடிக்க பயன்படும் எந்திரம்தானே பூச்சிப்பொறி என்கிறீர்களா? அதுதான் இல்லை.

பூச்சிப்பொறி என்பது பூச்சிகளை பொறி வைத்துப் பிடித்து உண்ணும் ஒரு தாவரம். அந்த தாவரத்தின் பெயர் வீனஸ் ஃப்லைட்ராப். முட்களாலான விளிம்புகளைக் கொண்ட இலைகளையுடைய இந்த தாவரம், அதன் இலைகளையே பூச்சியைப் பிடிக்கும் பொறிகளாகப் பயன்படுத்துகின்றன.

அதாவது, உணர்ச்சி மிகுந்த அல்லது எளிதில் தூண்டப்படக்கூடிய மெல்லிய ரோமங்கள் நிறைந்த இரு இலைகளின் உட்பகுதியில் ஒரு பூச்சி வந்து அமர்ந்தவுடன் ‘படக்’கென்று அவை மூடிக்கொள்ளும். மூடிய இலைகளினுள்ளே அகப்பட்டுக்கொண்ட பூச்சியை, வீனஸ் ஃப்லைட்ராப் தாவரத்தின் என்சைம்கள் பின் மெல்ல மெல்ல கரைத்து உணவாக்கிக்கொள்ளும்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம். பூச்சியை பிடித்து உண்ணும் இந்த வீனஸ் ஃப்லைட்ராப் தாவரம் போலவே ஒரு எந்திரமிருந்தால் எப்படியிருக்கும்?

இப்படியொரு கேள்வி உங்களுக்கும் எனக்கும் எழுந்தால் அது வெறும் கற்பனையாகவே கரைந்துபோயிருக்கும். ஆனால், இந்த கேள்வி சில ரோபோ தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கு தோன்றியதால், வீனஸ் ஃப்லைட்ராப் தாவரம் போலவே பூச்சிகளை பிடித்து உண்ணும் ‘பூச்சிப்பொறி எந்திரன்’ பிறந்துவிட்டான். பூச்சிகளை பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, இரண்டு தொடக்க நிலை ரோபோக்கள் உலகின் இரு சோதனைக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்று, தென்கொரியாவின் சியோல் நகரிலுள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘வடிவ-நியாபகத்திறன்’ பொருட்களாலானது (shape-memory materials). மற்றொன்று, அமெரிக்காவின் மைனே பல்கலைக்கழகத்தில், தங்க நேனோதுகள்களாலான செயற்கை தசைகளைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சியோல் நகர ரோபோவில், ஒரு வடிவ-நியாபகத்திறனுள்ள உலோக சுருளால் இணைக்கப்பட்ட கார்பன் இழைகளாலான இரு இலைகள் இருக்கின்றன. இந்த ரோபோவில் இருக்கும் உலோக சுருள் ஒரு சராசரி எலிப்பொறியைப் போலவே செயல்படுகிறது. அதாவது, ஒரு பூச்சி அல்லது வேறொரு பொருளின் கனமானது உலோக சுருளை சுருக்குவதால் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு இலைகளும் எதிரெதிர் திசையில் வேகமாக இழுக்கப்படுகின்றன. இச்சமயத்தில் ரோபோவின் இலைகளுக்கு நடுவில் இருக்கும் பூச்சியானது அகப்பட்டுக்கொள்கிறது.

ஆனால், மைனே பல்கலைக்கழக ரோபோவில் ஒரு மின்மண்டலத்தின் தாக்கத்தில் வளையும் தன்மையுள்ள அயன்களாலான பல்பகுதிச்சேர்வை உலோக கலவை (ionic polymeric metal composite, IPMC) பயன்படுத்தப்படுகிறது. ஒரு மின்னழுத்தத்தின் தாக்கத்தில் IPMC சுருங்கும்போது, அது கிட்டத்தட்ட வீனஸ் ஃப்லைட்ராப்பின் இலைகளிரண்டும் சுருங்குவதைப் போலவே இருக்கிறது என்கிறார் இதனை உருவாக்கிய பொறியாளர் மோசன் ஷாஹின்பூர்.

தங்க மின்முனைகளால் பூசப்பட்ட பல்பகுதிச்சேர்வை படிமத்தாலான இலைகளில், IPMC மின்முனைகளாலான ரோமங்கள் உருவாக்கப்பட்டன. இரு இலைகளும் ஒரு செப்பு மின்முனையால் இணைக்கப்பட்டன. ஒரு பூச்சியானது பல்பகுதிச்சேர்வை படிமத்தில் வந்து உட்காரும்போது, IPMC ரோமங்கள் இரு இலைகளுக்கும் தகவலனுப்புகின்றன. உடனே இரு இலைகளும் படக்கென்று மூடிக்கொள்கின்றன.

இந்த இருவகையான பூச்சி பிடிக்கும் ரோபோக்களும் பூச்சி உண்ணும் ரோபோக்களாக மாற வேண்டுமானால், பிடித்த பூச்சிகளை அவை செரிமானம் செய்தாக வேண்டும். அதற்கு, பிடித்த பூச்சிகளை செரிமானம் செய்யும் வகையிலான இயக்க-வேதியல் குடல் ஒன்று இந்த ரோபோக்களின் உடலில் பொருத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், செரித்த பூச்சியிலிருந்து சக்தியும் உருவாக்கப்பட வேண்டும். ஆக, இவையெல்லாம் சாத்தியப்பட்டால் ஒரு பூச்சி உண்ணும் பூச்சிப்பொறி எந்திரன் அல்லது ரோபோ தயார். அத்தகைய ஒரு ரோபோ சாத்தியப்பட்டால் ஒரு பெரிய சாதனைதான்.

எப்படியோ, பூச்சியை பிடிக்கும் ரோபோக்கள் வந்துவிட்டன. இனி, இரவுகளில் இம்சைகளைக் கொடுக்கும் பூச்சிகளிலிடமிருந்து ஒரு விடுதலை கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்……

Advertisements