தினத்தந்தியில் எனது தொடர்….அறிவியல் ஆச்சரியங்கள்!

Posted on திசெம்பர் 24, 2011

3


வணக்கம். எல்லாரும் நல்லாயிருக்கீங்களா? உங்களை எல்லாம் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு. சொந்த வேலைகள் காரணமா வலைப்பக்கமே வர முடியல. ஆனா இப்போ வந்துட்டோம்ல.

உங்க எல்லாருடைய ஊக்கத்துனால எழுத்தாளரான நான், நண்பர், எழுத்தாளர் சேவியர் அவர்களுடைய அன்பினால் தினத்தந்தி இளைஞர் மலரில் “அறிவியல் ஆச்சரியங்கள் எனும் ஒரு அறிவியல் தொடர் எழுத ஆரம்பிச்சிருக்கேன். பத்திரிகைகளில் அறிவியல் தொடர்பாக நான் “தொடர் கட்டுரை” எழுதுவது இதுவே முதல் முறை. அதுவும் தினத்தந்தி போன்ற கோடிக்கணக்கான வாசகர்களைக் கொண்ட பத்திரிகையில் எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.

சனிக்கிழமை தோறும் வெளியாகும் தினத்தந்தியின் இலவச இணைப்பான “இளைஞர் மலர்” இதழில் வரும் எனது தொடரை வாய்ப்பிருந்தால் படியுங்கள். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளை அறியத்தாருங்கள். நன்றி

ஒரு எதிரி நண்பன் ஆகிறான்…..!

நண்பன் பகைவன் ஆவதும், பகைவன் நண்பன் ஆவதும் பொது வாழ்விலும், அரசியலிலும் சகஜம். ஆனால் மனித உடலுக்கு தீமை செய்யும் வைரஸ்கள் ஒருபோதும் நல்லது செய்யாது என்பது மருத்துவ உண்மை. இப்போது இந்த உண்மை பொய்யாகப் போகிறது. சில வைரஸ்கள் நமக்கு நண்பன் ஆகப்போகிறது என்கின்றன புதிய ஆய்வுகள்.

“என்னது, வைரஸ்கள் நமக்கு நண்பனா? அட, இது நல்ல கதையா இருக்கே” என்கிறீர்களா?

வைரஸ்

அட, ஆமாங்க!  உடலுக்குள் இருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்களை விடுத்து புற்றணுக்களை (புற்றுநோய் உயிரணுக்கள்) இனம்கண்டு கொல்லக்கூடிய அளவில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட வைரஸ்களை பரவிய புற்றுநோயுள்ள நோயாளிகளின் உடலுக்குள் செலுத்தி, சோதனைமுறையில் சிகிச்சை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் Jennerex என்னும் அமெரிக்க உயிர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தைச் சேர்ந்த புற்றுநோய் ஆய்வாளர்கள். இந்த ஆய்வு முடிவுகள் பிரபல அறிவியல் இதழான Nature-ல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் ‘புற்றுநோய் கொல்லி’ வைரஸ்களைக்கொண்டு புதிய வகை புற்றுநோய் மருந்து சாத்தியப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், வெவ்வேறு அளவுகளில் வைரஸ்களைக் கொண்ட ஊசிகளை, வேவ்வேறு வகையான பரவிவிட்ட புற்றுநோயுடைய நோயாளிகளின் உடலுக்கு செலுத்தியிருக்கிறார்கள். 10 நாட்கள் கழித்து, நோயாளிகளின் புற்றுநோய் கட்டிகளை அறுவை செய்து பரிசோதித்தபோது, மிக அதிகப்படியான வைரஸ் அளவுள்ள ஊசிகள் போடப்பட்ட 8 நோயாளிகளில் 7 பேரின் புற்றுநோய் கட்டிகளில் வைரஸ்கள் இனப்பெருக்கம் அதிகமானதும், அதனால் பின்விளைகள் ஏதும் ஏற்படாததும் கண்டறியப்பட்டது. மேலும், ஊசி போடப்பட்டபின் பல வாரங்கள் கழித்து, வைரஸ் ஊசி போட்டுக்கொண்ட நோயாளிகளில் பாதி பேருக்கு புற்றுநோய்கள் வளர்வது முற்றிலும் நின்றதும், ஒருவரின் புற்றுநோய் சுருங்கிவிட்டதும் கண்டறியப்பட்டது. இத்தகைய சில முயற்சிகள் முந்தைய ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு புற்றுநோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்ட மரபணுமாற்றம் செய்யப்பட்ட வைரஸ் எப்படி செயலாற்றுகிறது என்பதை பதிவு செய்த முதல் இதுவே என்பதுதான் இந்த ஆய்வின் விசேஷம்!

நம் உடலில் புற்றுநோய் கட்டிகள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி தொடர்ந்து வளர்வதற்கு ஒரு முக்கிய காரணம், புற்றுநோயானது நம் உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அடக்கிவிடுகிறது என்பதுதான். ஆனால் இதுதான் வைரஸ்களுக்கு சாதகமாகிவிடுகிறது. அதாவது, பொதுவாக உடலுக்குள் செல்லும் வைரஸ்களை நம் நோய்எதிர்ப்பு சக்தி கொன்றுவிடும். ஆனால், புற்றுநோயால் கட்டுப்படுத்தப்படும் நோய்எதிர்ப்பு சக்தியால் சுதந்திரமாக செயல்படும் வைரஸ்கள், புற்றணுக்களுள் சென்று அவை வெடித்துச் சிதறும்வரை உள்ளேயே இனப்பெருக்கம் செய்கின்றன. இப்படித்தான் வைரஸ்கள் மூலம் தனக்குத்தானே வேட்டு வைத்துக்கொள்கின்றன புற்றணுக்கள்!

இச்சோதனைமுறை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுள்ள JX-594 எனும் மரபணுமாற்ற வைரஸ்களை உருவாக்க, சின்னம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட, உடலின் நோய்எதிர்ப்பு சக்தியின் தாக்குதலை லாவகமாக தவிர்க்கும் திறனுடைய “வாக்சீனியா வகை வைரஸ்களை” பயன்படுத்தியுள்ளனர். இவ்வைரஸ்களுக்குள், புற்றணுக்களுக்கான உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டும் தன்மையுடைய ஒரு புரதமான GM-CSF-னை உருவாக்கும் மரபணுவை பொருத்தினார்கள். இப்புரதத்தின் திறனைப் பயன்படுத்தியே மரபணுமாற்றம் செய்யப்பட்ட வைரஸ்கள் புற்றணுக்களை வெற்றிகரமாக அழிக்கின்றன.

புற்றுநோய் கட்டிகளுக்குள் ஊசி மூலம் நேரடியாக செலுத்தப்பட்டால், புற்றணுக்களை மட்டும் தேடிப்பிடித்துக் கொல்லும் திறனுடைய பல மரபணுமாற்ற வைரஸ்கள் தற்போது பெருமளவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால், உடலின் ரத்த ஓட்டத்துக்குள் செலுத்தப்பட்டு, ரத்தத்தில் இருக்கக்கூடிய உடலின் பிற பகுதிகளுக்கு பரவும் திறனுள்ள புற்றணுக்களை தேடிப்பிடித்துக் கொல்லும் திறனுடைய மரபணுமாற்ற வைரஸ்களே இப்போதைய உடனடி தேவை என்கிறார் இந்த துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் மூத்த ஆய்வாளரான, அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பொதுமருத்துவமனையின் சாமுவெல் ராப்கின்!

எது எப்படியிருந்தாலும், இந்த புதிய வகை மரபணுமாற்ற வைரஸ்களின் வருகை, இந்த துறையின் புதிய புதிய மரபணுமாற்ற வைரஸ் உருவாக்கும் முயற்சிகளை ஊக்குவிப்பதோடு, தற்போது கல்லீரல் புற்றுநோயாளிகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் ஆரம்பநிலை வெற்றிகண்டிருக்கிறது என்று நம்பிக்கையளிக்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஜென்னரெக்ஸ் நிறுவனத்தின் டேவிட் கர்ன்!

இனிவரும் காலங்களில் புற்றுநோய் மருத்துவர்கள் “மரபணுமாற்ற வைரஸ்களை ‘நண்பேண்டா’ என்று கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

(நன்றி தினத்தந்தி)

தொடர்புடைய சில பதிவுகள்:

ஆபத்து: உங்க செல்ஃபோன் எவ்வளவு (SAR) கதிர்வீச்சை வெளியிடுகிறது?!

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

செல்போன் பயன்படுத்தினால் மூளைப்புற்றுநோய்?!

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பதிவு பிடிச்சிருந்தா இன்ட்லியில ஒரு ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements