“நியாபக மறதி குறைபாடு” அதிகம் தாக்குவது ஆண்களையே; ஆய்வு!!

Posted on ஜூன் 24, 2011

5


நியாபகம் வருதே….. நியாபகம் வருதே….. நியாபகம் வருதே…..!

பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருதே…..!!

அப்படீன்னு தொடங்குற சேரனின் ஆட்டோகிராப் படப் பாடல முனு முனுக்குறது நம்ம எல்லாருக்குமே பிடிக்கும்! இதுல ஆண்-பெண், பெரியவர்-சிறியவர் அப்படீங்கிற பாரபட்சமெல்லாம் கிடையாதுன்னு நெனக்கிறேன். ஆனா, நம்மளோட பழைய நினைவுகளை எல்லாம் நல்லா நியாபகம் வச்சிருந்தாதானே, அந்த நினைவுகளோட நியாபகம் வந்து இந்த மாதிரி நியாபகம் வருதே அப்படீன்னு பாட முடியும்?!

ஆமா, அதுக்கு என்ன இப்போ? அப்படீன்னுதானே கேட்க வர்றீங்க…….?!

அட, அதுலதாங்க சிக்கலே. அதுவும் பாரபட்சமா, முதிய வயதிலுள்ள ஆண்களுக்கு மட்டும் நினைவுகளை நியாபகம் வைத்துக்கொள்வதில் இருக்கிறது அப்படீன்னு சொல்லுது சமீபத்திய ஆய்வு ஒன்னு! அதாவது, சுமார் 70 வயதுக்கு மேலான ஆண்களுக்கு, நியாபக சக்தியும், சிந்திக்கும் திறனும் குறைந்துபோய்விடுகிறதாம். முக்கியமாக, இந்த குறைபாடானது பெண்களைக்காட்டிலும் சுமார் 1.5 தரம் அதிகமாக ஆண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறதாம்.

“என்ன கொடுமை சரவணன் இது” அப்படீங்கிற மாதிரியான இந்த பிரச்சினைய பத்தி ஆய்வாளர்கள் என்ன சொல்றாங்கன்னு இன்னும் விரிவா தெரிஞ்சிக்கலாம் வாங்க……

லேசான அறிவுத்திறன் குறைபாடு (Mild cognitive impairment)!

Image: Google

லேசான அறிவுத்திறன் குறைபாடு ( Mild cognitive impairment) அப்படீங்கிறது, பொதுவாக முதுமையடைதலால் ஏற்படும் நியாபக சக்தி மற்றும் சிந்திக்கும் திறன் குறைபாடுகளைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் குறிக்கும் ஒரு குறைபாடு! இந்த குறைபாடு காலப்போக்கில் நியாபக சக்தி குறைபாடு தொடர்பான ஒரு நோயான அல்ஷெய்மர்ஸ் நோயாக மாறிவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது நோயாளிகளில் அல்லாமல், சமூகத்தில் வாழும் பொதுவான, 70 முதல் 89 வயதான சுமார் 2050 மக்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதும், இந்த ஆய்வில் ஆண்கள் மற்றும் பெண்களின் நியாபக சக்தி மற்றும் சிந்திக்கும் திறன்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன என்பதும், இத்தகைய ஆய்வில் இதுவே முதல் ஆய்வு என்பதும் குறிப்பிடத்தக்கது என்கிறார் அமெரிக்காவின் மயோ க்ளீனிக் நிறுவனத்தின் இயக்குனர் ரொனால்டு பீட்டர்சன்!

மேலும், இந்த ஆய்வில், லேசான அறிவுத்திறன் குறைபாடானது ஆண்களில் 19% மற்றும் பெண்களில் வெறும் 14% மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டது. இந்த முடிவுகள் சரியானவை என்பது பிற ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டால், இந்த குறைபாட்டில் பாலினத்தின் பங்கு இருக்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபனமாகும் என்கிறார் பீட்டர்சன்!

உதாரணமாக, ஆண்களின் அறிவுத்திறனானது வாழ்க்கையின் தொடக்க காலங்களிலேயே குறையத்தொடங்கி மெதுவாக மேலும் மேலும் குறைந்துகொண்டே செல்லும். மாறாக, இந்த குறைபாடு பெண்களுக்கு வாழ்க்கையின் பிந்தைய காலங்களில் (தாமதமாக) தொடங்கி, டிமென்ஷியா போன்ற நோய்களாக விரைவில் மாறிவிடும் என்கிறார்!

இந்த ஆய்வில் சுவாரசியமான ஒரு கூற்றும் தெரியவந்துள்ளது. அது, இந்த ஆய்வில் பங்குபெற்ற குறைந்த படிப்பறிவு மற்றும் திருமணமே செய்துகொள்ளாத (பிரம்மச்சாரி) மக்களுக்கு லேசான அறிவுத்திறன் குறைபாடு ஏற்படும் விகிதாச்சாரம் மிகவும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது! 

இந்த ஆய்வில், நியாபக சக்தி மற்றும் அறிவுத்திறன் குறித்து தெரியவந்துள்ள இரு முக்கியமான விஞ்ஞான உண்மைகள்:

  1. நியாபக சக்தியில் (முதிய வயதினரைப் பொறுத்தவரையில்) ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் அல்லது பாலின வேற்றுமை இருக்கிறது. அதாவது ஆண்களுக்கு குறைவாகவும், பெண்களுக்கு சற்று அதிகமாகவும் இருக்கிறது.
  2. வயதானவர்களில் சுமார் 25%  நியாபக சக்தி பிரச்சினைகள் மற்றும் டிமென்ஷியா குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளதால், இவற்றுக்கான புதிய வகை சிகிச்சைகளை கண்டறிய வேண்டியது மிக மிக அவசியம் என்பது புலனாகிறது!

இந்த ஆய்வு மூலமா தெரியவந்திருக்கிற ஒரு ஆறுதலான செய்தி என்னன்னா, வயதான காலத்தில் ஏற்படும் இந்த லேசான அறிவுத்திறன் குறைபாட்டினை தவிர்க்க அல்லது சற்று தள்ளிப்போட ஒரு வழி இருக்கிறது எனபதுதான்! அது என்னன்னா, நம் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டு, கணக்குகள் போன்றவை போட்டு பழகுவதையும் அதிகப்படுத்திக்கொண்டோமானால், நியாபக சக்தி குறைபாட்டினை குறைத்து, தள்ளியும் போடலாம் என்பதுதான்.

என்னங்க, இனி நிறைய வாசித்து, கணக்குகள் போட்டு பழகலாமா…..?

தொடர்புடைய சில பதிவுகள்:

விஞ்ஞானம்: புத்திகூர்மைக்கான முத்தான 10 வழிகள்!!

அறிவை வளர்க்க “மூளை” மாத்திரைகள்?!

மர்மம்: மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!

மூளையை அழகாக்கும் உடற்பயிற்ச்சி தெரியுமா?!

அதிர்ச்சி: தொப்பையும் ‘டிமென்ஷியா’ நரம்புக்கோளாறும்!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பதிவு பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements