“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள்” மருத்துவரை தூர வைக்கும்?! இது அறிவியல்பூர்வமாக உண்மையா???

Posted on ஜூன் 22, 2011

11


பழமொழி அப்படீங்கிறது, நம்ம முன்னோர்கள் சொல்லி, அது வழிவழியாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு, (பொருள் தெரியுதோ/புரியுதோ இல்லியோ) நாமளும் வாய்ப்பு கிடைக்கும்போது, குறிப்பிட்ட ஒரு சூழ்நிலைக்கு ஒரு பழமொழி பொருத்தமாயிருக்கும்னு நம்ம்ம்ப்பி அப்பப்போ, அங்கங்கே சொல்றோம் இல்லீங்களா?

உதாரணமா சொல்லனும்னா,

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை”

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது”

“குரைக்கிற நாய் கடிக்காது”

“பாம்பின் கால் பாம்பறியும்”

இப்படி நம்மூர்ல நெறைய பழமொழி இருக்குது (எனக்கு இப்பொ நியாபகம் வந்தது இவ்ளோதான்…..ஹி ஹி). ஆனா இம்மாதிரியான பழமொழிகளில் இருக்கும் உண்மைகள்/அவற்றுக்கான விளக்கங்கள் நம்மில் பலருக்கு தெரியாதென்றே நினைக்கிறேன். தெரிஞ்சவங்க சண்டைக்கு வந்துடாதீங்கப்பா…….

இதே மாதிரி, நம்ம ஊர்ல வழக்கத்தில் இருக்குற, ஆனா அடிப்படையில் வேற்று நாட்டவர்களுடையதான பழமொழிகளும் சில உண்டு. உதாரணமா சொல்லனும்னா…..

“ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கும்” (An apple a day; keeps the doctor away)

எனக்கு பொதுவா பழமொழிகள் கேட்கும்போது, அது தொடர்பான உண்மைகள் அல்லது அவை உருவான காரணங்கள் பத்தி தெரிஞ்சிக்கனும்னு ஒரு ஆர்வம் பிறக்கும். அப்படித்தான் இந்த ஆப்பிள் பழமொழி பத்தி, ரொம்ப நாளா யோசிச்சிகிட்டே இருந்தேன். அதுமட்டுமில்லாம, இது நமக்கு தெரிஞ்ச மத்த பழமொழிகள் மாதிரி இல்ல. ஏன்னா, “கழுதைக்கு கற்பூர வாசனை தெரிஞ்சா நமக்கென்ன தெரியயலைன்னா நமக்கென்ன” அப்படீன்னு விட்டுட்டு போயிடலாம்.

ஆனா, ஒரு  நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டா, நெசமாவே(?) மருத்துவரை தூரத்திலேயே வச்சிடலாமான்னு தெரிஞ்சிக்கலைன்னா, என் தலையே வெடிச்சிடும் போல இருக்கும் சில சமயம்! என்னோட (என்னை மாதிரி இன்னும் பலரோட) இந்த பிரச்சினைக்கு ஒரு விஞ்ஞானப்பூர்வமான தீர்வு சொல்றதுக்குன்னு ஒரு ஆய்வு செஞ்சிருக்காங்க. அந்த ஆய்வு முடிவுகள் என்ன சொல்லுது அப்படீங்கிறதப்பத்தி தெளிவா தெரிஞ்சிக்க, புரிஞ்சிக்கத்தான் இந்த பதிவு! நான் ரெடி…..என்ன நீங்க ரெடியா?

இனி ஆப்பிள்னு சொன்னா மருத்துவர் அதிருவாரா?!

உடல் ஆரோக்கியத்துக்கு நிறைய பழங்கள் சாப்பிடனும்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா “அது ஏன் ஆப்பிள் மட்டும் சாப்பிட்டா மருத்துவரை தூர வைக்கலாமுன்னு சொல்றாங்க? ஆப்பிள்ல அப்படி என்னதான் இருக்கு?” அப்படீங்கிறதையெல்லாம் தெரிஞ்சிக்கனும்னு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானி முனைவர் பஹ்ராம் அர்மாண்டி ஒரு ஆய்வு செஞ்சாரு……

45 முதல் 65 வயதான சுமார் 160 பெண்களை இரு பிரிவுகளாக பிரிச்சிக்கிட்டு, ஒரு பிரிவினருக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் என்ற கணக்கில் உலர்ந்த ஆப்பிள் உண்ணக் கொடுக்கப்பட்டது. ஆனால் மற்றொரு பிரிவினருக்கு உலர்ந்த ப்ரூன் வகை பழங்கள் உண்ணக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் 3-வது, 6-வது மற்றும் 12-வது மாதங்களில் இவ்விரு பிரிவினரின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவுகளை பார்த்த ஆய்வாளர் அர்மாண்டிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்!

ஏன்னு கேளுங்க……

ஏன்னா, உலர்ந்த ஆப்பிள் சாப்பிட்டு வந்த பெண்களுக்கு மட்டும் ஆப்பிள் சாப்பிட்ட 6 மாதங்களுக்கு பிறகு, அவர்களின் உடலிலுள்ள கெட்ட கொழுப்புச்சத்து என்றழைக்கப்படும் “எல்.டி.எல் கொலஸ்டிரால் (LDL cholesterol)” சுமார் 23% குறைந்துபோயிருந்ததாம். அடேங்கப்பா…..!!

என்ன அடேங்கப்பா, அதனால என்ன இப்போ? அப்படீன்னு நீங்க கேட்டீங்கன்னா……

கெட்ட கொலஸ்டிரால் மட்டுமல்லாது உடல் எடையையும் குறைக்கவல்லது ஆப்பிள்!!

இருதய நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமான கெட்ட கொலஸ்டிராலை, 23% வரை குறைக்கவல்ல ஆப்பிளின் நற்குணம் அல்லது திறன் அத்தோடு நின்றுவிடவில்லை! மாறாக, உடலிலுள்ள கெட்ட கொலஸ்டிராலை 23% குறைக்கும் அதேசமயம், உடலிலுள்ள நல்ல கொலஸ்டிரால் என்றழைக்கப்படும் “ஹெச்.டி.எல் கொலஸ்டிராலை (HDL cholesterol)” சுமார் 4% அதிகரிக்கவும் செய்கிறதாம் இந்த ஆப்பிள். அப்படிப்போடு…..!!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா, ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் இல்லீங்க, மூனு மாங்காய் அடிக்கலாமாம்?! அட ஆமாங்க! கெட்ட கொலஸ்டிராலை குறைத்து கொஞ்சம் நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்தும் ஆப்பிள், இன்னொரு ஒத்தாசையும் செய்யுது நம்ம உடலுக்கு! அது என்னன்னா, உடலுக்கு சுமார் 240 கலோரிகளை கொடுக்கும் 75 கிராம் உலர்ந்த ஆப்பிளானது, அதை உண்டுவந்த பெண்களின் உடல் எடையை அதிகரிக்கவில்லையாம். மாறாக, சராசரியாக சுமார் 1.5 கிலோ உடல் எடையை குறைத்திருந்ததாம்!

“அட அட அட….., நாம இதுவரைக்கும் சாதாரணமா நெனச்சிக்கிட்டு இருந்த (?) ஆப்பிள்ல, இவ்வளவு சமாச்சாரம் இருக்குதா? இத நம்பவே முடியலையே……?!”

இப்படியெல்லாம் நீங்க சந்தேகப்படுவீங்கன்னு நல்லா தெரிஞ்சிதானோ என்னவோ, நம்ம ஆய்வாளர் அர்மாண்டி அய்யா, வெறும் 160 பெண்கள்ல செய்த இந்த ஆய்வை நாடுமுழுவதும் உள்ள மக்களைக்கொண்டு நாடுதழுவிய ஒரு ஆய்வாக தொடர முடிவு செஞ்சிருக்காரு. அதுக்கான முயற்சிகளையும் தொடங்கிட்டாருன்னா பார்த்துக்குங்க! சரி சரி, அவரோட ஆய்வுகள் வெற்றிபெற நம்மளோட வாழ்த்துக்கள தெரிவிச்சிடுவோம்…..வாழ்த்துக்கள் அர்மாண்டி அவர்களே!

ஆப்பிளோட இந்த உடல் எடையைக் குறைக்கும் திறனுக்கு அதிலுள்ள பெக்டின் என்னும் வேதிப்பொருளே காரணமாயிருக்கக்கூடும் அப்படீங்கிறாரு அர்மாண்டி!

ஆக, ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டா, இருதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களை தவிர்த்து மருத்துவரை தூர வைக்கலாம்னு அர்மாண்டி அவர்களோட ஆய்வு முடிவுகள் சொல்லுது. என்னங்க, இனி தினமும் ஒரு ஆப்பிள் மறக்காம சாப்பிடுவீங்கதானே? நான் முயற்சி பண்ணலாமுன்னு இருக்கேங்க…..நீங்க எப்படி?

கொசுறு தகவல்: எல்லாஞ்சரிதான், இந்த ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் மருத்துவரை தூர வைக்கும் அப்படீங்கிற பழமொழி (?) எப்படி, எந்த காரணத்துக்காக வந்ததுன்னு உங்கள்ல யாருக்காவது தெரியுமா? தெரிஞ்ச சொல்லுங்க……

நான் ஒரு க்ளூ வேணுமுன்னா தர்றேன். அது என்னன்னா, இந்த பழமொழி ஒரு வியாபார நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது!

தொடர்புடைய சில பதிவுகள்:

ஆபத்து: மாரடைப்புக்கு பலியாகிக்கொண்டிருக்கும் இந்தியா!!

அதிர்ச்சி: ‘குள்ளமானவர்’களையே குறிவைத்துத் தாக்கும் ‘இருதய’ நோய்கள்?!

ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

உயிரியல் கடிகாரமும் உடல் பருமனும்…..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements