என்னது அவருக்கு புற்றுநோயா? ஐயய்யோ…..அப்போ அவரு அவ்வளவுதானா??!!

Posted on ஜூன் 13, 2011

6


என்னங்க அப்படிப் பார்க்குறீங்க?! ஐயய்ய, நீங்க நினைக்கிற மாதிரி (?) பதிவு சுவாரசியத்துக்காகவோ அல்லது கற்பனையாகவோ எழுதின தலைப்பு இல்லீங்க இது! இதுதான் யதார்த்தம். “புற்றுநோய்” அப்படீங்கிற வார்த்தையை காதில் வாங்கினாக்கூட நாம வாழுற இந்த சமூகம் நம்மை இப்படித்தான் எதிர்கொள்ளும்!

புற்றுநோய் குறித்த அறியாமையும், அவலநிலையும்!

புற்றுநோய் என்றால் என்ன? அப்படீங்கிற கேள்வியில ஆரம்பிச்சி, அது ஏன் உருவாகிறது, அதற்கான காரணங்கள் என்ன, உடல் ஆரோக்கியத்துக்கும் உயிர் வாழ்வதற்கும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன இப்படி பலப்பல கேள்விகள் பத்தி நம்மில் பலருக்கு அக்கரையோ, ஆர்வமோ கிடையாது. அவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிகளையும் எடுப்பதில்லை!

ஆனா, ஒருத்தருக்கு புற்றுநோய் வந்திருச்சி அப்படீன்னு யாராவது சொல்லிட்டா போதும், அங்கே முதல் ஆளா போய் நின்னு, என்னது அவருக்கு புற்றுநோயா? அப்படீன்னு ஒரு பேரதிர்ச்சியை முகத்துலயும் வார்த்தைகள்லேயும் வெளிப்படுத்தி,

“அடப் பாவமே…..! அவர் என்ன பாவம் பண்ணினாரோ தெரியலை. அவருக்கு புற்றுநோய் வந்திடுச்சி. புற்றுநோய்க்கு இதுவரைக்கும்/இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல (?). இனி என்ன செய்ய, அவரு இருக்கப்போறது 6 மாசமோ ஒரு வருஷமோ. அதுவரைக்கும் அவரை நல்லா பார்த்துக்குங்க” அப்படீன்னு சொல்லிட்டு போய்விடுகிறோம்.

“புற்றுநோயைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாம இருக்குறது கூட தப்பில்லைங்க. ஆனா, அந்த புற்றுநோயைப் பற்றி நமக்கு இருக்குற அரைகுறை அறிவை அடிப்படையா வச்சிக்கிட்டு, புற்றுநோய் குறித்த தவறான கருத்துகளை சமூகத்துல பரப்புறது மிகப்பெரிய தப்புங்க! இதை நாம எல்லாரும் புரிஞ்சிக்கிட்டு பொறுப்பா நடந்துக்க முயற்சிக்கனுமுங்க”

இப்படி குத்துமதிப்பா, யாரோ எங்கேயோ சொன்னது, சினிமாவுல பார்த்ததுலேர்ந்து தெரிஞ்ச அரைகுறை விவரங்களினடிப்படையில, தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தரோட வாழ்க்கையோட விளையாடிடுறாங்க நம்மில் பலர்! விளைவு, சம்பந்தப்பட்டவரின் புற்றுநோய் அவரின் உடல்நிலையை பாதிக்கிறதோ இல்லையோ, இம்மாதிரியான அவநம்பிக்கை, அரைகுறை அறிவின் வெளிப்பாடுகளாக வந்துவிழும் வார்த்தைகள், நோயாளியின் மனதை வெகுவாக பாதித்துவிடுகிறது.

இதனால், பல புற்றுநோயாளிகள் அவர்களின் புற்றுநோயின் நிலையை மருத்துவரை அணுகியெல்லாம் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. மாறாக அவர்களே குத்துமதிப்பாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதாவது,

மருத்துவமனைக்கே செல்லாமல் உயிரை மாய்த்துக்கொள்ளும் புற்றுநோயாளிகள்!

“நாம இன்னும் ஆறு மாசமோ, ஒரு வருஷமோதான் உயிரோட இருப்போம்(?). அதுவரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போவோமே! எதுக்கு இந்த விஷயத்தை போய் வீட்டுல இருக்குறவங்ககிட்ட சொல்லிக்கிட்டு, அவங்க சந்தோஷத்தையும் கெடுத்து, கடன் வாங்கியெல்லாம் செலவு செஞ்சுக்கிட்டு…..?! எப்படியிருந்தாலும் நம்ம புற்றுநோய் குணமாகப்போறதில்ல. ஏன்னா, எந்த புற்றுநோய்க்கும் (?) இன்னும் மருந்தே கண்டுபிடிக்கல(?). அப்புறம் ஏன் வீணா ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சுகிட்டு, வெட்டி செலவு செஞ்சுகிட்டு…..”

இப்படித்தான் நம்மில் பலர், பல மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கான தரமான சிகிச்சைகள் கிடைக்கும்போதும், தங்களைத் தாங்களே அறியாமையால் மாய்த்துக்கொள்கிறார்கள்! இது பேச்சுக்காக சொல்லும் கதையல்ல! அப்பட்டமான நிஜம்!!

“எனக்குத்தெரிந்த நண்பரொருவர், தனக்கு ஏற்பட்ட தொண்டைப்புற்றுநோயைப் பற்றி சுமார் ஒன்றரை வருட காலம் யாரிடமும் சொல்லாமல், எதேச்சையாக நண்பர்களுக்கு தெரிய வரும் வேளையில், புற்றுநோயின் மிக மிக முற்றிய நிலையில் அவர் இருக்க, அவரை வற்புறுத்தி உடனே  மருத்துவமனை அழைத்துச்சென்று பார்க்கும்பொழுது, அவருக்கு இன்னும் சில மாத காலமே வாழ்க்கை என்னும் துர்பாக்கிய நிலை தெரியவந்தது……”

ஆனால், தொண்டைப் புற்றுநோயின் யதார்த்தம் முற்றிலும் எதிர்மறையானது! அதாவது, தொண்டையில் பிரச்சினை என்று தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி பரிசோதித்து உண்மையை தெரிந்துகொண்டால், ஏற்பட்டிருப்பது புற்றுநோயென்றாலும், நோயின் ஆரம்ப நிலையிலும், சற்றே முற்றிய நிலையிலும் அதை முழுவதுமாக சரிசெய்து விட முடியும். அதற்கு இன்றைய மருத்துவ முன்னேற்றம் 100% உத்திரவாதமளிக்கிறது!

இதற்கு என்னதான் தீர்வு???

எனக்குத் தெரிந்தவரை இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. அதுதான் புற்றுநோயைப் பற்றிய சமுதாய விழிப்புணர்வு! புற்றுநோய் என்றால் என்ன என்னும் அடிப்படை கேள்வி தொடங்கி, புற்றுநோய்களை எதிர்கொண்டு எப்படி வெற்றிகரமாக மீண்டு வருவது என்பது குறித்த புரிதல் வரையிலான அத்தனை விவரங்களையும் தெரிந்துகொள்வதுதான் புற்றுநோய் குறித்த சமுதாய விழிப்புணர்வு!

இத்தகைய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கம் மற்றும் ஊடகத்துறையின் கடமை! ஆனால் யதார்த்தம் என்னவென்றால், புற்றுநோயை விட குறைவான எண்ணிக்கையில் உயிர்பலி கொண்டுவரும் எய்ட்ஸ் நோய்க்கு இருக்குமளவு விழிப்புணர்வு (அதான் உங்களுக்கு புள்ளிராஜாவுல ஆரம்பிச்சி தில்லுதுற வரைக்கும் நல்லா தெரியுமே!) புற்றுநோய்க்கு இல்லை என்பதுதான்!

இத்தகைய விழிப்புணர்வை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மருத்துவமனைகள் செய்துவருகின்றன என்றாலும் பலனொன்றும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரமாக இருந்துவந்த புற்றுநோய் இறப்புகள் இன்று பல லட்சங்களாக உயர்ந்து நிற்பதே அதற்கு சான்று. காரணம், புற்றுநோய் குறித்த பெரும்பாலான நூல்கள், பிரசுரங்கள் என எல்லாமே ஆங்கிலத்தில் இருப்பதுதான். தமிழில் புற்றுநோய் குறித்த விளக்கமான நூல்கள் மிக மிக குறைவு.

அதிலுள்ள வெற்றிடத்தை சிறிதளவேனும் நிரப்பிவிடும் முயற்சியாக எழுதப்பட்டதுதான் “ஏன் உருவாகிறது புற்றுநோய்” என்னும் தலைப்பிலான என்னுடைய புதிய நூல்! இதில் புற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், புற்றுநோயினால் உண்டாகும் உபாதைகள், புற்றுநோய்களை கண்டறியும் முன்பரிசோதனைகள், புற்றுநோய்களுக்கான நவீன சிகிச்சைகள், புற்றுநோய்களை தவிர்க்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான பல மர்மங்கள்  எனப் பல விவரங்களை, மிகவும் எளிமையாக எடுத்துச்சொல்ல முயன்றிருக்கிறேன்…….

“ஏன் உருவாகிறது புற்றுநோய்? எதிர்கொள்வது எப்படி?” நூலுக்கான எனது முன்னுறை…..

பிறப்பு, வளர்ச்சி, வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்த குணாதீசியங்கள், திறன்கள், குறைபாடுகள் மற்றும் இறப்பு என எல்லாம் ஒன்றோடொன்று இரண்டறக்கலந்த மனிதனின் தினசரி வாழ்க்கையை, அவிழ்க்கப்படாத பல மர்ம முடிச்சுகள் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. மனிதனைத்தாக்கும் உயிர்கொல்லியான புற்றுநோயும் அதற்கு விதிவிலக்கல்ல!

ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அந்த நான்கில் மூன்று பேர் பெற்றோர், ஆசிரியரின் சொற்படி நல்வழிப்பாதையில். ஆனால் ஒரு பிள்ளை மட்டும் ஏனோ தவறான பாதையில் தறிகெட்டு போய்விடுகிறது! அதற்கு காரணம், பிள்ளை வளர்ப்பில் பெற்றோரின் கவனக்குறைவு, கூடா நட்பு, ஊழ்வினைப்பயன், முன்ஜென்ம பாவ புண்ணியம் அல்லது மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாத வேறு ஏதோ ஒரு காரணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு குடும்பத்து பிள்ளைகளில் தவறிப்போன ஒரு பிள்ளைபோல, ஒரு உயிரணு குடும்பத்தில் தவறிப்போய் தறிகெட்டு வளரும் ஒரு உயிரணுதான் இந்த புற்றுநோய் உயிரணு/புற்றணுவும்! ஒரு ஆரோக்கியமான உயிரணு ஏன், எப்படி புற்றணுவாகிறது? அதை எதிர்கொள்வது எப்படி என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு தெளிவாக விடை சொல்ல முயற்சித்துள்ளேன்.

புற்றுநோய் குறித்த அடிப்படை புரிதல், பல நூல்கள் வாசித்த அனுபவம், ஆய்வனுபவம் மற்றும் ஆய்வறிக்கைகளின் முடிவுகளிலிருந்து, கவனமாக தொகுக்கப்பட்ட தகவல்கள் என ஒரு வருடக் கால உழைப்பில் உருவான கலவைதான் இந்த நூல்!

இந்நூல் எழுத வாய்ப்பளித்த பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. எனது முந்தைய நூலான “பாலியல்-இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?” எனும் தலைப்பில் வெளிவந்த நூலிற்கு வாசகர்கள் வழங்கிய வரவேற்பிற்கும், அதேபோல் இ ந் நூலினை வாசிக்கத் தொடங்கியிருக்கும் தங்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூறுகிறேன்.

அன்புடன்,

பத்மஹரி.

எனது வேண்டுகோளாக சில வரிகள்…..

இது வியாபார நோக்கத்தோடு எழுதப்பட்ட நூலல்ல! முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த அறியாமையை அகற்றி, அது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்ட நூல்! புற்றுநோய் குறித்த விழிப்புணர்வால் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் என்பது நிதர்சனமான உண்மை! அதை நோக்கிய பயணத்தில் எனக்கு உதவுங்கள்……

இந்நூல் குறித்த செய்தியை உங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து, இந்த நூல் பலரை சென்றடைந்து, புற்றுநோய் குறித்த ஒரு அடிப்படை புரிதலும், சமுதாய விழிப்புணர்வும் ஏற்பட உதவுங்கள்!

இந்நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

Blackhole Media  Publication Limited,

No.7/1, 3-rd Avenue, Ashok nagar,

Chennai-600 083. India

மின்னஞ்சல்: admin@blackholemedia.in

செல்பேசி: +91 9600123146, +91 9940015085 

Website: http://blackholemedia.in/

தொடர்புடைய சில பதிவுகள்:

செக்ஸ்: “பாலியல், இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?”, வாங்கிவிட்டீர்களா?

பதிவர் எழுதிய நூல் – ஒரு அறிமுகம்

நூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன ?

பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? – பத்மஹரி மென்நூல் தரவிரக்கத்துடன்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements