குடலுக்குள் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள்; வெளிவரும் அதிர்ச்சி கலந்த பல ஆச்சரியங்கள்!!

Posted on ஜூன் 7, 2011

8


நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும் “சுத்தம் சோறு போடும்” அப்படீன்னு! ஆனா, அந்த சுத்தத்துக்கு முதல் எதிரி கிருமிகள். கிருமிகள்னா கண்ணுக்கு தெரியுற கிருமிகள் மட்டுமில்ல, கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களான புழுக்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் இதெல்லாம் சேர்த்துத்தான்.

நமக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும், நம்ம உடலோட ஒட்டி உறவாடுற நுண்கிருமிகள்ல முதன்மையானது பாக்டீரியாக்கள்தான். ஏன்னா, நம்ம உடலின் தொடக்கமான தலைகள்ல ஆரம்பிச்சு கால்கள் வரைக்கும் மிகவும் அதிகப்படியான எண்ணிக்கையில், 24 மணி நேரமும் நமக்கு தெரியாமலேயே நம்முடலுடன் ஒட்டி உறவாடுகின்றன இந்த பாக்டீரியாக்கள்.

இந்த பாக்டீரியாக்கள்கிட்ட என்ன பிரச்சினைன்னா, “சரி பாக்டீரியாக்கள் உடம்புக்கு கெடுதல்தானே”ன்னு மருந்துகள பயன்படுத்தி உடலிலுள்ள மொத்த பாக்டீரியாக்களையும் அழிச்சுட முடியாது. அப்படி அழிச்சிட்டாலும் அதுவும் நமக்கு கெடுதல்தான்.

“என்னடா இவன், இப்படியும் சொல்றான் அப்படியும் சொல்றானே, ஒரே குழப்பமா இருக்குதே”ன்னு யோசிக்கிறீங்களா?

உண்மைதான். சரி, ஏன் பாக்டீரியாக்கள் எல்லாத்தையும் அழிக்க கூடாதுன்னு கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம் வாங்க……

அதுக்கு முன்னாடி பாக்டீரியா பத்தின இந்த பதிவை படிச்சிடுங்க!

அதாவது, மனித உடலுடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள்ல இரண்டு வகை உண்டு. ஒன்னு, மனித உடலிலுள்ள உணவிலிருந்து சத்துக்களை சாப்பிட்டுவிட்டு, மனித உடலின் ஆரோக்கியத்துக்காக பல ரசாயன மாற்றங்களை செய்யும்நல்ல பாக்டீரியா. இவை நம் எல்லாருடைய குடலிலும் இருக்கின்றன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் Gut microflora என்று பெயர். குடலிலுள்ள இவற்றின் எண்ணிக்கை என்ன தெரியுமா? உங்களில் யாருக்காவது தெரிஞ்சா மறுமொழி சொல்லுங்க பார்ப்போம்.

இரண்டாவது வகை, சுற்றுச்சூழலிலிருந்து பல வழிகளில் மனித உடலுக்குள் ஊடுருவி, மனித உணவின் எச்சங்களை உண்டுவிட்டு, அதே மனித உடலுக்கு குடற்புண் (அதாங்க அல்சர்!) உள்ளிட்ட பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் குணாதீசியம் கொண்ட கெட்ட பாக்டீரியா! அதாங்க இந்த, “உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்றது” அப்படீன்னு சொல்லுவாங்களே அந்த வேலையை பொறுப்பா செய்யுற ரொம்ப ரொம்ப கெட்ட பாக்டீரியா.

சரி, இப்போ உங்களுக்கு, “பாக்டீயாக்கள் எல்லாமே கெட்டது இல்ல, அதுல நல்ல பாக்டீரியாக்களும் இருக்கு. அதுவும் நம்ம குடலுக்குள்ள ஒரு ஓரத்துல (?), நாம சாப்பிடுற சாப்பாட்டுல இருக்குற மிச்சம் மீதிய சாப்பிட்டுட்டு, நமக்கு நல்லதுதான் செய்யுது” அப்படீன்னு தெரியும் இல்லீங்களா.

இனி, நம்ம குடலுக்குள்ள இருந்து நல்லது செய்யுற அந்த பாக்டீரியாக்கள் அப்படி என்னதான் நல்லது செய்யுது, அந்த நல்லதுனால நமக்கு/நம்ம உடலுக்கு என்னென்ன நன்மைகள்/தீமைகள் இருக்குன்னு, சமீபத்திய ஒரு ஆய்வு முடிவுகளோட வெளிச்சத்துல கொஞ்சம் விரிவா பார்ப்போம் வாங்க……

குடலுக்குள்ளே பாக்டீரியாக்கள்: உண்ட வீட்டுக்கே ரெண்டகமா?!

"குடல்வாழ் பாக்டீரியா"

நம்ம ஒவ்வொருத்தரோட குடலுக்குள்ளேயும் சுமார் 1000 ட்ரில்லியன் பாக்டீரியாக்கள் குடியும் குடித்தனமுமா இருக்குதாமாம். என்ன, “ஐயய்யோ, என் குடலுக்குள்ளே இவ்வளவு பாக்டீரியாக்களா?” அப்படீன்னு அரண்டு துள்ளிக்குதிக்கிறீங்களா? ஒன்னும் கவலைப்படாதீங்க, எல்லாம் நம்ம கூட்டாளிங்கதான்னு சொல்ல முடியாதுன்னாலும், அதுல முக்கால்வாசி பாக்டீரியாக்கள் நமக்கு நல்லதுதாங்க செஞ்சிக்கிட்டு இருக்குங்க…..

உதாரணமா,

  • நாம உண்ணும் உணவிலிருக்கும் சக்தியை பிரித்தெடுப்பது
  • நம்ம உடலை தொற்றுக்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது
  • குடல் உயிரணுக்களுக்கு போஷாக்குகளை அனுப்புவது

இப்படி நம்ம உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான பல வினைகளைத்தான் செய்கின்றன பெரும்பான்மையான குடல்வாழ் பாக்டீரியாக்கள். இப்படி நல்லது செஞ்சுக்கிட்டிருக்கிற பாக்டீரியாக்கள, தெரிஞ்சோ தெரியாமலோ நாம தொந்தரவு செஞ்சுட்டா, உதாரணமா நுண்ணுயிர்கொல்லிகளான ஆண்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிட்டால், இம்மருந்துகள் குடல் பாக்டீரியாக்களைக் கொன்று, குடலுக்குள் ஒரு கலவரமான நிலையை உருவாக்கிவிடுகின்றன. அதுமட்டுமில்லாம, சூப்பர் கிருமி என்றழைக்கப்படும் Clostridium difficile எனும் பாக்டீரியாவினால் உருவாகும், உயிருக்கே ஆபத்தான காலிட்டிஸ் நோய்கூட தோன்றிவிடக்கூடுமாம். யப்பாடி…..!

அதெல்லாம் பழைய கதைங்க, இப்போ புதுசு கண்ணா புதுசு அப்படீங்கிற மாதிரியான மேட்டர் என்னன்னு கேட்டீங்கன்னா…..

குடல்வாழ் பாக்டீரியாக்களும் மூளை கோளாறுகளும்!

இதுவரைக்கும், குடல்வாழ் பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த குறைபாடுகளான குடல் நோய்கள் போன்றவற்றை மட்டுமே உருவாக்கக்கூடியவை அப்படீன்னு நெனச்சிக்கிட்டு இருந்தாங்க ஆய்வாளர்கள். ஆனா, குடல்வாழ் பாக்டீரியாக்கள் குடல் நோய்கள் மட்டுமில்லாம, மூளையில் நிகழும் பல வேதியல் மாற்றங்களை பாதித்து, பழக்கவழக்கம் சார்ந்த குறைபாடுகள் மற்றும் உளவியல் நோய்கள் போன்றவற்றையும் உருவாக்கக்கூடியவை அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்காங்க கனடா நாட்டின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்!

ஐயய்யோ, இது என்ன புதுசா ஒரு குண்டைத் தூக்கி போடறாங்களே இவிய்ங்க அப்படீன்னு யோசிக்கிறீங்களா?

உண்மைதாங்க. குடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை, எண்ணிக்கை மற்றும் இயல்பு வாழ்க்கை ஆகியவற்றை பாதிக்கும் கிருமி தொற்றுகள் மற்றும் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளான ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளால், குடல் தொடர்பான நோய்கள் மட்டுமே ஏற்படும் என்னும் இதுவரையிலான நம்பிக்கை பொய்யாகிவிட்டது! மாறாக, குடல்வாழ் பாக்டீரியாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால், மூளை சம்பந்தமான குறைபாடுகளான பழக்கவழக்க மாற்றங்கள், மனச்சோர்வு மற்றும் படபடப்பு ஆகியவையும் ஏற்படும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது!

அதெல்லாம் சரி, இந்த ஆய்வினால நமக்கு வேற என்ன நன்மைகள் இருக்கு? அப்படீன்னு கேட்டீங்கன்னா……

இருக்குங்க! அப்படீன்னு சொல்றாரு இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் ப்ரிமைல் பெர்சிக். அதாவது, குடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை எந்த வகையிலாவது பாதிக்கப்பட்டால், அதை மீட்டுக்கொண்டுவர சில மருத்துவ வழிமுறைகள் உண்டு. அவற்றுள் ப்ரோபயாட்டிக்ஸ் என்றழைக்கப்படும், உயிருள்ள பாக்டீரியாக்களை உட்கொள்ளும் முறையும் அடக்கம். குடல்வாழ் பாக்டீரியாக்களின் சமநிலை பாதிப்படைவதால் உண்டாகும் முளை சார்ந்த குறைபாடுகளை களைய, ப்ரோபயாட்டிக்ஸ் மருத்துவ முறையை கையாள்வது நல்ல முயற்சியாக இருக்குமா, நல்ல பலனை தருமா என்னும் கோணங்களில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் வழிவகுத்துள்ள அப்படீங்கிறாரு பெர்சிக்.

அட பரவாயில்லையே அப்படீங்கிறீங்களா, இல்ல அட போங்கப்பா அப்படீங்கிறீங்களா? எதுவாயிருந்தாலும் ஒரு ரெண்டு வரி மறுமொழி எழுதி சொல்லிட்டு போயிடுங்க……

தொடர்புடைய சில பதிவுகள்:

99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?!

உங்க “பாக்டீரியா கையெழுத்து” தெரியுமா உங்களுக்கு?!

டாஸ்மாக்குக்கு, தண்ணியடிக்க போன “வைரஸ்” தீவிரவாதி!

“சிந்த்தியா”, விஞ்ஞான உலகின் அட்டகாசமான ‘செயற்கை’ புதுவரவு!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி

Advertisements