ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்கும் AVA! அதை ஊக்குவிக்கும் AIR INDIA!!

Posted on மே 16, 2011

13


எல்லாருக்கும் வணக்கம். நல்லா இருக்கீங்களா?

ஊருக்கு போய்ட்டு வந்தோமே, சரி ஒரு பதிவு போட்டு வேர்டுப்றஸ் வலையகத்துல ஒரு அட்டென்டன்ஸ் போட்டுடலாம்னு பார்த்தா, அது ஒரு விழிப்புணர்வு பதிவா ஆகிப்போச்சு! அதனால நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க, இதுலயும் நிறைய சுவாரசியங்கள் இருக்குங்க! வாங்க அது என்னன்னு பார்ப்போம்…..

அணு உலை பாதிப்பிலேர்ந்து ‘வெற்றிகரமா’ தப்பிச்சு(?), கொஞ்ச நாளைக்காவது நிம்மதியா இருக்கலாமுன்னு இந்தியா பக்கம் வந்தா, வந்து இறங்கின உடனே “வாப்பா வா, வந்துட்டியா? உன்னத்தான் ரொம்ப நாளா எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தேன்” அப்படீன்னு சொல்லாத குறையா வரவேற்ற நம்ம ஊரு உச்சி வெயில்ல ஆரம்பிச்சு, ஒரு ரூபாய் பொருளுக்குக்கூட M.R.P-க்கு மேல 50 காசு அதிகமா விலைவச்சி மக்கள அடிக்காம காசு பிடுங்குற சில்லரை/மொத்த விலை கடைக்காரர்கள்/வியாபாரிகள், எந்த வேலை செய்யனும்னாலும் கிம்பலம் எதிர்பார்க்குற அரசு ஊழியர்கள் இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் மல்லு கட்டி மல்லு கட்டியே ஒரு மாத கால விடுமுறை முடிஞ்சு போச்சு!

இதுக்கு இடையில, கருணாநிதி நாட்டை கொள்ளையடிச்சிட்டாரு அதனால அம்மாவுக்குத்தான் ஓட்டு போடனும், அப்பத்தான் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம்(?) பொறக்கும்னு தேர்தல் இம்சைகள் செஞ்சுக்கிட்டிருந்த ‘அறிவுஜீவி’ பொதுஜனத்தோட தொல்லைகள் வேற பெருந்தொல்லையா இருந்துச்சி. அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி (தேர்தல் முடிவுகள 15 நாட்கள் கழித்து வெளியிடுவது போன்ற) நடவடிக்கைகள் எடுத்த தேர்தல் கமிஷன் அதிகாரி பிரவீன் குமார் ஒரு பெரிய ஆறுதல்! டி.என் சேஷனுக்கு அப்புறம் அரசியல்(வியா?)வாதிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமா இருக்குற இன்னொரு அதிகாரியா பிரவீன் குமார் இருக்குறது, “தமிழ்நாட்டுக்கு நல்லா காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது”ன்னு குடுகுடுப்பைக்காரன் சொல்ற மாதிரிதான் தோணுச்சி எனக்கு!

சொந்த வேலைகள் காரணமா பெருசா ஊர் சுத்தி பார்க்க முடியலைன்னாலும், அம்மா மற்றும் குடும்பத்தினரோட சாவகாசமா பேசி, சாப்பிட்டு பொழுதைக் கழிக்க முடிஞ்சது ஒரு பெரிய சந்தோஷம். முக்கியமா சில நெருங்கிய நண்பர்கள் (வலை நண்பர்கள் உட்பட) மற்றும் என்னோட முதல் நூலை வெளியிட்ட ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பக ஆசிரியர் மற்றும் ஊழியர்கள சந்திச்சது ஒரு பெரிய சந்தோஷமான நிகழ்வு. அதுமட்டுமில்லாம, பதிப்பக ஆசிரியர் யாணன் மற்றும் எழுத்தாளர் சேவியர் அவர்களுடன் உரையாடியது ஒரு இனிமையான நிகழ்வு!

இப்படி அங்கேயும் இங்கேயுமா ஒரு மாத கால விடுமுறை கழிந்து, ரொம்ப நாளா பணி நிறுத்தம்/ஸ்டரைக் செஞ்ச ஏர் இந்தியா அலுவலகத்துல, நான் போகப்போற விமானம் குறித்த தகவல்கள கேட்டு, அதில் எந்த மாற்றமுமில்லை அப்படீங்கிறத முன்கூட்டியே நல்லா ஊர்ஜிதப்படுத்திக்கிட்டு, சரி கெளம்பலாம்னு ஆயத்தமாகிகிட்டு இருந்தா, கெளம்புற அன்னிக்கு 9 மணிக்கு தொலைபேசியில ஏர் இந்தியா அலுவலகத்துல இருந்து ஒரு அழைப்பு. என்னடான்னு கேட்டா, நீங்க போகவிருந்த 6.10 மணி விமானம் கேன்சல் ஆகியிடுச்சி. அதுக்கு பதிலா 12.30 மணிக்கு ஒரு விமானம் இருக்கு, அதுலதான் நீங்க போயாகனும். அதத்தவிர வேற வழியில்லைன்னு ஒரு குண்டைத்தூக்கி போட்டாங்க!

என்ன இப்படி திடீர்னு வந்து சொல்றீங்க? இதையெல்லாம் முன்கூட்டியே சொல்ல மாட்டீங்களா? இதெல்லாம் சரியில்லீங்க அப்படி இப்படி காச் மூச்னு ஒரு பரேடு கட்டிட்டு, சரி போகட்டும்னு அரக்க பரக்க கெளம்பி ஒரு வழியாக 11.45க்கு விமான நிலையம் வந்து சேர்ந்தேன். அங்க இருந்த கவுண்டர்ல ரெண்டு சவுண்டு விட்டுட்டு, போர்டிங் பாஸ் வாங்கி, தமிழகத்துக்கு ஒரு பிரியா விடையை குடுத்துட்டு, விமானத்துல ஏறி அப்பாடான்னு உக்காந்தாச்சு!

AVA நிறுவனமும், அன்பளிப்பென்னும் பகல்கொள்ளையும்! உஷாரைய்யா உஷாரு…..

சரி, விமானத்துலதான் ஏறி உக்கார்ந்துட்டோமே இனிமே ஒன்னும் பிரச்சினையில்லைன்னுதான் நானும் நெனச்சேன். ஆனா, அப்படி நெனச்சிக்கிட்டு இருக்கும்போதுதான் அந்த நெனப்பு மேல மண்ணு விழுந்தமாதிரி, விமானத்துல கொடுத்த உணவோட வந்து விழுந்தது AVA Gift coupon அப்படீன்னு அச்சடிக்கப்பட்டிருந்த ஒரு அட்டை! என் நெனப்புல ஏன் மண்ணு விழுந்ததுன்னு மேல படிச்சீங்கன்னா உங்களுக்கே நல்லா புரியும்!

பொதுவா நாம எல்லோரும் இலவசமா கொடுத்தா எதை வேணும்னாலும் வாங்குவோம். பத்தும் பத்தாததுக்கு நம்ம கலைஞரோட தாராள ஆட்சியில இலவசத்தை அள்ளி அள்ளி வேற கொடுத்து இலவசத்துக்கு ஒரு ‘மரியாதையே’ வந்து போச்சு இப்பெல்லாம்?!

சரி, அன்பளிப்புதானேன்னு அட்டையை பிரிச்சா, அது ஒரு சுரண்டல் அன்பளிப்பு போலிருக்கு. அட அதாங்க ஸ்க்ராட்ச் கார்டு! சரி சுரண்டி பார்ப்போமேன்னு சுரண்டினேன். அட, இங்க பார்ரா. ரூ.4000 மதிப்புள்ள(?) Paul Phillipe அப்படீங்கிற ஒரு பிரபல ப்ராண்டட் கைக்கடிகாரம் அல்லது ஒரு முத்து மாலை எனக்கு பரிசா கெடைக்கப்போகுதுன்னு போட்டிருந்தது அதுல! சரி, நமக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்கத்தான் செய்யுது அப்படீன்னு மேற்கொண்டு விவரத்தைப் படிச்சா, அந்த அன்பளிப்பை வாங்க, வரியாக ரூ.499 செலுத்தி பெற்றுக்கொள்ளவும் அப்படீன்னு போட்டிருந்தது.

சரி, ரூ.4000 மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரத்துக்கு, வெறும் ரூ.499 வரியா கொடுக்குறதுல என்ன தப்புன்னு (பகுத்தறிவைப் பயன்படுத்தி?) முடிவு பண்ணிக்கிட்டு, டெல்லி விமான நிலையத்துல இறங்கி அங்கே இருக்குற AVA counter நோக்கி போனேன். அதெல்லாம் சரி,  AVA அப்படீன்னா என்னன்னே உங்களுக்கு இன்னும் சொல்லல இல்ல. சரி வாங்க பார்ப்போம்….

அதாவது, AVA Merchandising Pvt. Ltd அப்படீங்கிறது, டெல்லி பக்கத்துல இருக்குற, குர்கோவன் நகரத்துல இருந்து இயங்குற ஒரு வணிக நிறுவனம். கைக்கடிகாரம், கணினி உள்ளிட்ட பல பொருட்களை இணையதளம் மூலமாக மற்றும் நேரடியாகவும் விற்பனை செய்கிற ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் ஏர்-இந்தியாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு விமான பயணிகளுக்கும் பல பொருட்களை விற்பனை செய்கிறது. அதன் ஒரு அங்கமாகவே இந்த அன்பளிப்பு படலம்!

ஏமாற்றாதே ஏமாற்றாதே…..! ஏமாறாதே ஏமாறாதே…..!

சரி, திரும்பவும் நாம அன்பளிப்புக்கு வருவோம். என்னோட அன்பளிப்பான Paul Phillipe கைக்கடிகாரம் அல்லது முத்து மாலையை வாங்க AVA counter போனேன். அங்கிருந்த ஊழியரிடம் என்னோட கூப்பனை கொடுத்தேன். அவன் என்னை பார்த்து கொஞ்சம் புன்னகைத்தான் (அவன் எதுக்கு சிரிச்சான்னு இப்போ சந்தேகமா இருக்கு. ஏன்னா, அவன் சிரிப்பு கொஞ்சம் நக்கலா இருந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு! அதாவது, இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ அப்படீங்கிற மாதிரி?!)

அப்புறம் கைக்கடிகாரம் வேணுமா, முத்து மாலை வேணுமான்னு கேட்டான். எனக்கு முத்து மாலை மேல நம்பிக்கை வரல, ஆனா கைக்கடிகாரத்தை நம்பி வாங்கலாம் போல இருந்ததுனால அதை கொடுன்னு கேட்டேன். அவன் அதுக்கான வரிப்பணம் ரூ.499 கேட்டான். கொடுத்து கைக்கடிகாரத்தை வாங்கி, அதுக்குள்ள வாரண்டி கார்டு, மேனுவல் எல்லாம் இருக்குதான்னு பார்த்தேன். ரெண்டுமே இருந்துச்சி. ஆனா, அது ரெண்டு மேலயும் சின்னதா ஒரு டவுட்டு! எங்கேயோ இடிக்குதே அப்படீங்கிற மாதிரி இருந்துச்சி.

சரி, விடு சரியாத்தான் இருக்கும்னு வாங்கிட்டு வந்துட்டேன். ஜப்பான் வந்த பின்னாடி, சரி நாம வாங்கின பால் ஃபிலிப்பி கைக்கடிகாரம் பத்தி மேலதிக விவரம் தெரிஞ்சிக்கலாமேன்னு கூகுள்ல தட்டிப்பார்த்தேன். கைக்கடிகாரத்தோட பேரை படிச்சவுடனேயே AVA நிறுவனத்தோட குட்டு உடைஞ்சுப்போச்சு. எப்படின்னு கேக்குறீங்களா? மேல படிங்க…..

Paul philippe அப்படீங்கிறதுதான் ஒரிஜினல்/உண்மையான வாட்ச் ப்ராண்டோட ஸ்பெல்லிங். ஆனா, என்னோட கைக்கடிகாரத்துல இருந்தது Paul phillippe அப்படீங்கிற ஸ்பெல்லிங் (ஒரு l அதிகமா இருக்கு பாருங்க!). ஆக, இது ஒரிஜினல் இல்ல டுபாக்கூரு அப்படீங்கிறது நிரூபனமாயிடுச்சி! இதை நான் இன்னும் உறுதிசெய்துகொள்ள உதவியது கீழுள்ள தளங்கள்ல,  AVA நிறுவனத்தால ஏமாற்றப்பட்ட பலரால் பதிவு செய்யப்பட்ட பெட்டிஷன்கள்!

http://www.consumercomplaints.in/?search=paul%20phillippe

http://www.consumercourtforum.in/f10/fraud-ava-merchandising-5281/

இதையெல்லாம் படிச்சப்பின்னாடி AVA நிறுவனம் எவ்வளவு பெரிய மோசடி/டுபாக்கூரு நிறுவனம்னு தெளிவா புரிஞ்சுப்போச்சு எனக்கு (என்ன, உங்களுக்கும்தானே?!). அப்புறமா ஒரு முக்கியமான டவுட்டு! அது என்னன்னா, அந்த இலவச(?), டுபாக்கூரு(?) கைக்கடிகாரத்துக்காக, வரியாக நான் கொடுத்த ரூ.499-ம் வீண் பண விரயமா இல்ல, அந்த அளவுக்காவது அந்த கைக்கடிகாரத்து மதிப்பு இருக்குமான்னு?! இது அந்த டுபாக்கூரு AVA நிறுவனத்து மட்டும்தான் வெளிச்சம்னு நெனக்கிறேன்?!

நானாவது பரவாயில்லீங்க, கைக்கடிகாரத்துக்கு ரூ.499 தான் கொடுத்தேன். ஆனா, பல பேரு அந்த விற்பனை அட்டையில இருக்குற ப்ளாக்பெர்ரி மொபைல் உள்ளிட்ட பல பொருட்கள பல ஆயிரங்கள் கொடுத்து, க்ரெடிட் கார்டு மூலமா வாங்கிட்டு, மாதக்கணக்கா/வருடக்கணக்கா இன்னும் தங்களுக்கு பொருளும் வரல, பொருளுக்கான பணத்தையும் திருப்பி தரல அப்படீன்னு புலம்பிக்கிட்டு இருக்காங்க. அவங்கதான் ரொம்ப பாவம்.

ஆக, இந்த பதிவை எழுதுவதன் நோக்கம் என்னன்னா, இம்மாதிரியான மோசடி நிறுவனங்களை உங்களுக்கு தோலுறித்துக்காட்டி, அதற்கு நேரடியாகவோ(?)/மறைமுகமாகவோ துணைபோகும் ஏர்-இந்தியா மற்றும் ஜெட்லைட் மாதிரியான விமான நிறுவனங்களையும் அடையாளங்காட்டுவதுமே!

அதனால உஷாரய்யா உஷாரு….! விமான பயணத்துல AVA மூலமா பகல்கொள்ளை உஷாரய்யா உஷாரு!!

முக்கியமா, இந்த பதிவை படிக்கிற உங்கள்ல சிலர்/பலர், உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக ஏர்இந்தியா, ஜெட்லைட் விமானங்களை இனி வரும் காலங்கள்ல கண்டிப்பா பயன்படுத்தக்கூடும். அப்படி பயன்படுத்தும்போது, “இம்மாதிரியான இலவச மோசடிகள் மற்றும் பணம் கொடுத்து பொருள் வாங்குவதில் உள்ள உள்குத்துகள், மோசடிகள் போன்றவற்றை பகுத்தறிந்து, உஷாரா இருங்க. உங்க பணத்தை கவனமா செலவு பண்ணுங்க” அப்படீன்னு தாழ்மையோட கேட்டுக்கிறேன்.

இது தொடர்பா உங்களுக்கும் ஏதாவது சொந்த அனுபவம் இருந்தா, அதையும் நீங்க மறுமொழி மூலமா பகிர்ந்துக்கிட்டா இந்த பதிவுக்கும், விழிப்புணர்வுக்கும் வலு சேர்த்த மாதிரி இருக்கும். நன்றி…..

தொடர்புடைய சில பதிவுகள்:

ஊரை ஏமாற்றும் “மூளைப்பயிற்ச்சி விளையாட்டு” மென்பொருள்கள்?!

கிக்கு ஏறுது புத்தி(I.Q) இறங்குது?!

ஃபேஸ்புக்கும் சில அதிர்ச்சித் தகவல்களும்

ஃபேஸ்புக்: செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி

Advertisements