ஜப்பானில் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், கதிரியக்க அளவுகள்; ஒரு பார்வை!

Posted on ஏப்ரல் 2, 2011

6


ஜப்பானில் இன்னும் சரிசெய்யப்படாத அணு உலைகளினால், சுற்றுச்சூழலுக்குள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுவரும் கதிரியக்க கழிவுகள் ஜப்பானிய மற்றும் உலக மக்களிடையே பல்வேறு பயங்களையும், பெரும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருவது நாமனைவரும் அறிந்ததே.

அது தொடர்பான சில அதிகாரப்பூர்வ செய்திகளை படிக்க நேர்ந்ததும், உடனே அதனை உங்களுடன் பகிர வேண்டும் என்ற உந்துதலால் ஒரு பதிவை எழுதினேன். ஆனால் அதனை முழுமையாக முடிக்க போதிய நேரமின்மையால் அரைகுறையாக நிறுத்திவிட்டு தொடரும் போட வேண்டிய சூழல். அதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்காக என்னை மன்னியுங்கள். அதன் தொடர்ச்சியான பின்வரும் பதிவை படிக்கும்முன் முந்தைய பதிவை இங்கு சென்று படித்துவிடுங்கள்.

ஃபுகுஷிமாவிலிருந்து வெளியாகும் கதிரியக்க கழிவுகள் இன்னும் நின்றபாடில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட அணுஉலைகளிலிருந்து கழிவுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டவண்ணமே இருக்கிறது. ஆனால், இக்கழிவுகள் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படும் வேளையில், வெளியிடப்பட்ட கதிரியக்கத்தால் ஏற்படக்கூடிய நீண்டகால பின்விளைவுகள், எந்த விதமான கதிரியக்க வாயுக்கள்/துகள்கள், எவ்வளவு அளவுகளில் நிலத்தில் படிந்துள்ளன என்பதைப்பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது!

சுமார் 30 வருடங்கள் வரை அரைவாழ்வு காலம் (அழியாமல் இருக்கும் காலம்) கொண்ட சீசியம்-137 படிந்துள்ள அளவுகளை பொறுத்து, எந்த இடம் எவ்வளவு காலம்வரை மனித குடியிருப்பு மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக மாறும் என்பது கணிக்கப்படும்!

கதிரியக்க அளவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள்!

கடந்த ஞியாயிற்றுக்கிழமையன்று, சர்வதேச அணு சக்தி முகமை (International Atomic Energy Agency, IAEA) வெளியிட்டுள்ள செய்தியறிக்கையின்படி, ஜப்பானிலுள்ள மொத்தம் 47 மாநிலங்களில் (prefectures) சுமார் 16 மாநிலங்களில் நிலத்தில் படிந்துள்ள கதிரியக்கத்தின் அளவு, அயோடின்-131 ஒரு சதுர அடிக்கு 860 பெக்கெரல்கள் (860 becquerels per square metre, Bq m−2) என்றும், சீசியம்-137 அளவு 100 பெக்கெரல்கள் (100 Bq m−2) என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ஜப்பானின் 28 மாநிலங்களில், கடந்த 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கதிரியக்க அளவுகள் அதிகரிக்கவில்லை என்றும் கூறுகிறது சர்வதேச அணு சக்தி முகமை!

ஆனால், ஃபுகுஷிமாவுக்கு நேர் வடமேற்கேயுள்ள யமாகாதா மாநிலத்தில் படிந்துள்ள கதிரியக்க அயோடின்-131 அளவு ஒரு சதுர அடிக்கு 7500 பெக்கெரல்கள் (7500 Bq m−2) என்றும், சீசியம்-137 அளவு 1200 பெக்கெரல்கள் (1200 Bq m−2) என்றும் தெரியவந்துள்ளது. இந்த அளவு காய்கறி/கீரைகள் வளர்ப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது! ஃபுகுஷிமா மா நிலத்துக்கான கதிரியக்க அளவுகள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன மற்றும் சரியாக கணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, ஜப்பானின் இக்கணிப்புகள் அமெரிக்காவின் சக்தி துறையின் (US Department of Energy) கணக்கெடுப்புகளுடன் ஒத்துப்போகிறது என்பது ஒரு பெரிய ஆறுதல்!

ஆக, காற்றடித்தாலும், மழை பெய்தாலும் கதிரியக்கத்தின் அளவுகளில் பெரிதாக மாற்றமொன்றும் இல்லை என்று இந்த குறுகிய கால கணக்கெடுப்பின் மூலம் கூறப்படுகிறது!

மேலும், இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, மிக அதிகபட்சமான கதிரியக்க அளவுகளாக மணிக்கு 0.125 மில்லி சீவர்ட்ஸுக்கும் மேலான அளவுகளே (greater than 0.125 millisieverts per hour; mSv h−1) குறிப்பிடப்படுகிறது. அதுவும் அணு உலையைச் சுற்றிய 40 கிலோ மீட்டர் தூரத்தில் மட்டுமே! (பல மாதங்களுக்கு தொடர்ந்து கதிரியக்கம் தொடர்ந்தால்) மனிதர்களில் ஆரோக்கிய கேடுகள்/நோய்களை உண்டாக்கும் கதிரியக்க அளவுகளான 0.3 மில்லி சீவர்ட்ஸ் வரை இன்னும் ஒரு இடத்திலும் கணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், சில இடங்களில் இருக்கும் கதிரியக்க அளவுகள் அப்படியே தொடருமேயானால் ஒரு வருடத்தில் 1000 மில்லி சீவர்ட்ஸை எட்டிவிடும். அப்படி எட்டினால், அதனால் பாதிக்கப்படும் மக்கள் கதிரியக்க கோளாறுகளான வாந்தி, முடி கொட்டுதல் மற்றும் வெள்ளை ரத்த அணு எண்ணிக்கை குறைவு போன்றவற்றிற்கு ஆளாகக்கூடும் என்பது அதிர்ச்சி தருகிறது!

அணு உலையைச் சுற்றிய 20 கி.மீ ஒட்டிய பெரும்பாலான பகுதிகளில் 0.012 மில்லி சீவர்ட்ஸுக்கும் குறைவான  அளவுகளிலேயே கதிரியக்கம் பரவியுள்ளது என்றாலும், இந்த கதிரியக்க அளவானது, இங்கிலாந்தில் அணு உலை பணியாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒருவருட கால பாதுகாப்பு கதிரியக்க அளவான 100 மில்லி சீவர்ட்ஸை விட 5 மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது! மொத்தத்தில் ஃபுகுஷிமாவை சுற்றிய பகுதியிலிருக்கும் கதிரியக்க அளவுகள் செர்னோபில் அளவை விட மிக மிக குறைவே என்பது ஒரு பெரிய ஆறுதல் என்கிறார் இயற்பியலாளர் ஜிம் ஸ்மித்!

ஜப்பானில் நிலம் மற்றும் கடல்நீரில் பரவியுள்ள கதிரியக்க அளவுகளும், பின்விளைவுகளும்!

சில நாட்களுக்கு முன்புவரை கதிரியக்கம் காற்றில் கலந்துவிட்டது எல்லோரும் வெளியில் செல்லாதீர்கள், மழையில் நனையாதீர்கள், வெளிகாற்றை சுவாசிக்காதீர்கள் (!) என்று சொல்லிவந்தார்கள். ஆனால் இப்போது, கதிரியக்கம் நிலத்திலும், கடல் நீரிலும் பரவிவிட்டதால் நிலத்தில் விளையும் காய்கறி, பழங்கள், மற்றும் கீரைகளையும் உண்பதை நிறுத்துங்கள் என்று சொல்ல…இல்லை இல்லை தொடர்ந்து இம்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். இது குறித்த ஒரு விஞ்ஞான ரீதியிலான புரிதல் ஏற்படாவிடில் தலையே வெடித்துவிடும்போல் இருந்தது எனக்கு (உங்களில் சிலருக்கும் கண்டிப்பாக இருந்திருக்கும்!).

ஜப்பானிய அரசு முதலில் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுற்றிய 30 கிலோமீட்டர் தொலைவுக்கு வெளியே சென்றுவிடும்படிதான் மக்களை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த தூரம் இன்னும் பல் கிலோமீட்டர்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும் போலிருக்கிறது. காரணம், அணுமின் நிலையத்தை ஒட்டிய 40 கி.மீ தூரத்தில், வடமேற்கு திசையில் மண்ணில் கலந்திருக்கும் கதிரியக்கத்தை அறிய, ஜப்பானிய அறிவியல் துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட கதிரியக்க சோதனைகளில்,

ஒரு கிலோ மண்ணில் இருக்கும் சீசியம்-137 அளவு 163,000 பெக்கெரல்கள் (163,000 Bq kg−1) என்றும், அயோடின்-131 அளவு 1,170,000 பெக்கெரல்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், பயிர்கள் விளையும் (விவசாய) நிலங்களுக்கான அனுமதிக்கப்பட்டுள்ள கதிரியக்கத்தின் அளவு, ஒரு கிலோ மண்ணுக்கு சில  நூறு பெக்கெரல்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.  மிக முக்கியமாக, மண்ணில் கலந்துள்ள சீசியம்-137-தின் அளவு 100,000 பெக்கெரல்கள் அளவிலிருக்குமேயானால், அத்தகைய இடங்கள் மனித வாழ்க்கைக்கும், விவசாயத்துக்கும் முற்றிலும் தகுதியற்றைவை ஆகிவிடுகின்றன என்பதால், அங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேறிவிட அல்லது வெளியேற்றப்பட வேண்டியது அவசியம் என்கிறார் இயற்பியலாளர் ஸ்மித்!

சீசியம்-137 அளவு லட்சக்கணக்கான பெக்கெரல்கள் இருக்கும் இடங்களின் விளக்கமான வரைபடங்கள் உருவாக்கப்பட்டால் உடனே அப்பகுதி மக்களை வெளியேற்ற வசதியாக இருக்கும் என்கிறார் ஸ்மித்! அணு மின் நிலையத்தை ஒட்டிய 20 கி.மீ தூரத்தில் வாழ்ந்த சுமார், 200,000 பேர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்தாலும், கடந்த 25 ஆம் தேதி ஜப்பானிய அரசு மேலும் 10 சதுர கி.மீ தூரத்தில் உள்ள மக்களை வெளியேற சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறது!

கடலில் நீரில் கலந்துள்ள கதிரியக்கத்தின் அளவுகள், பின்விளைவுகள்; ஒரு பார்வை!

அதிர்ஷ்டவசமாக, ஃபுகுஷிமா அணு உலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கதிரியக்கத்தின் பெரும்பாலான பகுதிகள் கடல் நீரிலேயே கரைக்கப்பட்டுவிட்டதால், நிலத்துக்கு ஏற்படவிருந்து பெரும் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டிருந்தாலும், கடல் நீரில் கலந்துவிட்ட கதிரியக்கம் அதற்கேயுறிய பாதிப்புகளையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தியே தீரும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று!

ஜப்பானிய அரசின் அறிவியல் துறையால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, கரையில்ருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள கடலின் மேல்மட்ட நீரில் லிட்டருக்கு 24.9 முதல் 76.8  பெக்கெரல்கள் அளவில் அயோடின்- 131 மற்றும் லிட்டருக்கு 11.2 முதல் 24.1 பெக்கெரல்கள் அளாவில் சீசியம்-137 கலந்துள்ளது. கடல் நீரிலுள்ள இக்கதிரியக்க அளவுகள் தொடர்ந்து குறைந்துவருகின்றன என்பது ஒரு ஆறுதல்.

மாறாக, சர்வதேச அணு சக்தி முகமையின் செய்தியறிக்கையின்படி, அணு உலைகளைச் சுற்றிய பகுதியில் அயோடின்- 131 லிட்டருக்கு 74000 பெக்கரல்களும், சீசியம்-137 மற்றும் சீசியம்-134 கலந்த கதிரியக்கம் லிட்டருக்கு 12,000 பெக்கெரல்கள் அளவிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. முக்கியமாக, கடலோரப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இக்கதிரியக்கத்தின் அளவு வெறும் 4000 பெக்கெரல்களுக்கு குறைவானதே எனும் தகவல் வயிற்றில் கொஞ்சம் புளியைக் கரைப்பதை தவிர்க்கத்தான் முடியவில்லை!

அணு உலை விபத்துகளின் காரணமாக, ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தை ஒட்டிய 20 கி.மீ தொலைவில் உள்ள கடல்பகுதிகளில் மீன் பிடிப்பதை தடை செய்திருக்கிறது ஜப்பானிய அரசு! கடல் பாசி மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்களும் அதிக அளவிலான கதிரியக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் சாத்தியங்கள் இருப்பதால், அவற்றின் ஏற்றுமதிகளும் தடை செய்யப்பட வேண்டியது அவசியம் என்கிறார் ஒரு அமெரிக்க விஞ்ஞானி! அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகளால் கடல் நீரானது கதிரியக்கத்தால் மிக மோசமாக மாசடைந்து இருக்கிறதென்றாலும், கடல் நீரின் அளவை கணக்கிடுகையில் கதிரியக்கம் வெகுவாக நீர்த்துப்போக வாய்ப்புள்ளது. அதனால் பின்விளைவுகள் வெகுவாக குறைந்துவிடும் வாய்ப்புள்ளது என்று நம்புவதாக சொல்கிறார் ஜிம் ஸ்மித்!

அதிர்ச்சிகரமாக, கடந்த 27.03.2011 ஞியாயிற்றுக்கிழமையன்று ஃபுகுஷிமா அணு உலைகளின் அடித்தளத்திலிருந்து கதிரியக்கம் நிறைந்த கழிவுநீரானது வெளியேற்றப்பட்டது. அதிலிருந்து மிகவும் ஆபத்தான கதிரியக்க அளவான மணிக்கு 1000 மில்லி சீவர்ட்ஸ் அளவிலான கதிரியக்கம் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த கதிரியக்க கழிவுநீரானது கடற்கரையை ஒட்டிய 70 மீட்டர் தொலைவிலிருக்கும் குழாய்களுக்குள் கசிந்து வருவதால், அப்பகுதியின் கடல் நீரையும், நிலத்தடி நீரையும் மிக மோசமாக மாசுபடுத்தும் வாய்ப்புள்ளது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது!

இருந்தாலும், இத்தகைய ஒரு ஆபத்து ஏற்படாதவண்ணம் தடுத்து நிறுத்த அணு உலை பணியாளர்கள் பெருதும் முயன்று வருவதாக உறுதியளிக்கிறார் ஜப்பானிய அரசின் தலைமை கேபினட் செயலாளரான யூகியோ எடானோ! ஆனால், அணு உலைகளிலிருந்து கதிரியக்க கழிவுகள் தொடர்ந்து வெளியேற்றப்படும் வேளையில், அதனால் ஏற்படக்கூடிய மனித இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் இழப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

மாறாக, அணு உலைகளிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படும் வேளையில், சுற்றுச்சூழலிலுள்ள கதிரியக்கத்தின் அளவுகள் உடனடியாக குறைந்துவிடும். நிலத்தில் படிந்துள்ள  குறைந்த அரைவாழ்வு காலம் கொண்ட கதிரியக்க வாயுக்களும் உடனடியாக குறைந்துவிடும் என்பது ஆறுதலான தகவல்.

உதாரணமாக, 8 நாட்கள் அரைவாழ்வு காலமுடைய அயோடின்-131 அளவு உடனடியாக குறைந்துவிடும் என்று நம்பலாம்! அதிர்ஷ்டவசமாக, அணு உலைகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படும்/வெளியேற்றப்பட்டுள்ள கதிரியக்க கழிவுகளின் பெரும்பான்மையான பகுதி அயோடின்-131 வாயுவினாலானது என்பது கெட்டதிலும் ஒரு நல்லது என்றிருப்பது நமக்கு சாதகமே!

ஆனா, இப்போ பிரச்சினை என்னன்னா, “ஃபுகுஷிமாவின் அணு உலைகள் முற்றிலும் சீர் செய்யப்பட/நிறுத்தப்பட இன்னும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் அப்படீங்கிறதுதான்! மிக முக்கியமா, வடமேற்கு ஜப்பானில் படிந்துள்ள அணுக்கதிரியக்க வாயுக்கள் குறைய, முற்றிய அழிந்துபோய் அந்த பகுதி சகஜ நிலைக்கு திரும்பி, மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றதாய் மாற இன்னும் பலப்பல வருடங்கள் பிடிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

இனி என்ன செய்ய போகிறோம்?

முதல்ல 1986-ல ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்து, அதற்கப்புறம் அமெரிக்காவின் த்ரீ மைல் ஐலாண்ட் அணு உலை விபத்து, இப்போ ஜப்பான்ல ஃபுகுஷிமாவின் அணு உலை விபத்து! இப்படி ஒரு தொடர்கதையாகிப்போன உலக அணு உலை விபத்துகளுக்கு அடிப்படை காரணமென்ன?

மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாக மாறிப்போன மின்சாரம்!

இன்றைய சூழல்ல மின்சாரம் இல்லாம மனுஷனால வாழ முடியுமா? சத்தியமா முடியாது?! அப்போ, மின்சாரத்தை குறைந்த செலவுல அதிகமா கொடுக்குற அணுசக்தியை பயன்படுத்துறத தவிர வேற வழியே இல்லையா? கண்டிப்பா இருக்கு, ஆனா குறைந்த செலவுல இல்ல! சில மடங்கு அதிகமான செலவுல(?) மின்சாரம் கொடுக்குற, நம் சுற்றுச்சூழலையும் மனித வாழ்க்கையும் பாதிக்காத சில பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழுள்ள இணைப்புகளிலுள்ள பதிவுகளை படிங்க……

நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம், இது நாளைய உலகின் கணக்கு!

நீர்+சூரிய ஒளி+காற்று=மின்சாரம், இது நாளைய உலகின் கணக்கு-2

ஆக, உலக மின்சார தேவைக்காக மனிதர்களையும், விலங்கு தாவர மற்றும் இதர உயிர்களையும் இயற்கை சீற்றமல்லாத செயற்கை சீற்றங்களான அணு உலை விபத்துகளுக்கு தொடர்ந்து பறிகொடுப்பதை தவிர்க்க/தடுக்க சூரிய ஒளி, காற்றுல இருந்து மின்சாரம் தயாரிக்கிறதுதான் சரியான வழியா இருக்கும்னு நான் நினைக்கிறேன். ஆமா நீங்க?

பின் குறிப்பு:

நான் ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தியா செல்வதால் அடுத்த ஒரு மாத காலத்துக்கு பதிவுகள் எழுத முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனா, நீங்க படிக்கிறதுக்கு மேலிருப்பான்ல எவ்வளவோ அறிவியல், உளவியல், தொழில்நுட்ப பதிவுகள் காத்துக்கிட்டு இருக்குங்க. அதனால இன்னும் ஒரு மாசத்துக்கு அதை தொடர்ந்து படிச்சிக்கிட்டே இருந்தீஙகன்னா அதுக்குள்ள நான் திரும்பி வந்து மீண்டும் பதிவு எழுத ஆரம்பிச்சிடுவேன். செய்வீங்களா…….ரொம்ப நன்றி!

அப்போ நான் போய்ட்டு வரேன்…….. 🙂

தொடர்புடைய சில பதிவுகள்:

சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..

ஜப்பானில் அணு உலைகளின் கூரைகள் வெடிப்பு; சில அறிவியல் விளக்கங்கள்…..

அடைகாத்துக் கொண்டிருக்கப்படும் அணுவென்னும் அபாயம்!! மக்கள்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்??!!

ஜப்பானில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் கதிரியக்கம்! உண்மை நிலவரம்தான் என்ன?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி

Advertisements