சுனாமியின் கோரமுகம் ஜப்பானின் பக்கம்!! மக்களோ சகஜநிலையை நோக்கி…..

Posted on மார்ச் 13, 2011

34


சிறு நகைச்சுவை பூச்சுகளுடன் வேர்டுபிரஸ் மூலம் அறிவியலை தமிழில் சொல்லி வந்த எனக்கு, இந்த ஒன்றரை வருட பதிவுப்பயணத்தில் முதல் முறையாக ஒரு இக்கட்டான சூழல்! அது, தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் காட்சிகளாக செய்திகளாக நீங்கள் பார்த்த, படித்த நிகழ்வுகளை ஜப்பானிலேயே சற்று (வெகு) தொலைவில் இருந்து பார்த்த, கேட்ட அனுபவத்தினை பகிர்ந்துகொள்ள/பதிவுசெய்ய வேண்டிய கடமையே!

(கண்ட காட்சிகளையும், கேட்ட செய்திகளையும் என்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளாக எண்ணி ஜீரணிக்கவே வெகு நேரம் பிடித்தது எனக்கு! கனத்துப்போன மனது ஏனோ காட்சிகளை எழுத்துக்களாக பதிவுசெய்ய ஒத்துழைக்கவில்லை!)

பூகம்பத்தை சூரியன் உதித்து மறையும், காலை எழுந்து இரவு உறங்கச் செல்லும்வரை நிகழும் அன்றாட வாழ்வியலின் யதார்த்த நிகழ்வுகளுள் ஒன்றாக்கி,  வாழப்பழகிவிட்ட ஜப்பானியர்களின் வாழ்க்கைமுறை இங்கு வாழ்ந்த சில வருடங்களில் எனக்கும் கைவந்துவிட்டதில் ஆச்சரியப்பட பெரிதாக ஒன்றுமில்லை!

அப்படித்தான் ஆய்வுச்சோதனைகளுடன் தொடங்கியது 11.3.2011 வெள்ளியான நேற்றைய தினம் எனக்கும், அவரவர் பணிகளுடன் சக ஜப்பானியர்களுக்கும். நாளின் பிந்தைய பொழுதின் தொடக்கத்தில் மத்திய உணவுக்குப்பின் வேலையை தொடங்கிய சில மணி நேரத்தில் சக ஆய்வுமாணவனான மலேசிய நண்பன்,

“ஜப்பானின் ஹோன்ஷூ மாநிலத்தில், 7.8 அளவில் ஒரு பெரிய பூகம்பமாம் என்றான். ஓ….அப்படியா, இதெல்லாம் ஜப்பானில் சகஜம்தானே. ஆமாம், இந்த ஹோன்ஷூ மாநிலம் ஜப்பானின் வடக்கிலா அல்லது தெற்கிலா? என்ன, பெரிய உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கிறதா என்ன” என கெள்விகளை அடுக்கினேன் ஏற்பட்டுவிட்ட பூகம்பத்தைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத நான்?! (இது ஜப்பானியர்களின் வாழ்க்கைமுறை எனக்கும் பழகிப்போனதின் வெளிப்பாடு!)

“இன்னும் சரியான விவரமெதுவும் தெரியவில்லை. ஆனால் இது பொதுவாக நிகழும் பூகம்பம் போல அல்ல எனத்தெரிகிறது” என்றான் நண்பன்.

சில நிமிடங்களில் அதே நண்பன், “ஹரி, பூகம்பம் மட்டுமில்லையாம். சுனாமியும் டோக்கியோவின் கடலோரப்பகுதிகள் மற்றும் சென்டாய் நகரங்களை தாக்கத்தொடங்கியுள்ளாதாம்” என்று பதறினான்!

“அய்யய்யோ, உண்மையாகவா? என் இந்திய நண்பர்கள் பலர் டோக்கியோவிலும், சென்டாயிலும் இருக்கிறார்களே. என்ன ஆனார்களோ?!” என்று பதறி அறையை விட்டு வெளியேறினேன் (யதார்த்தமுடைத்து உயிர்களை பலிவாங்க கிளம்பிவிட்ட இயற்கைத்தாயின் கோரமுகம் ஜப்பான் பக்கம் திரும்பிவிட்டதை உணரத்தொடங்கிய) நான்!

நவீன கையடக்க வானொலி ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, அதிலிருந்து வெளியாகும் செய்திகளை கேட்டுக்கொண்டிருந்தார் என் ஆய்வு மேற்ப்பார்வையாளரான பேராசிரியர். நிலைமையின் வீரியம் நன்கு புரியத்தொடங்கியது எனக்கு!

மெதுவாக அவரருகே சென்று, “அய்யா, என்ன பிரச்சினை? பூகம்பமா, சுனாமியா? மக்களின் இப்போதைய நிலை என்ன? இந்த வானொலியில் அந்த விவரங்கள் எல்லாம் வருமா என்றேன் அப்பாவியாக!

அவரும் “ஆமாம் ஹரி, பூகம்பம் தாக்கிய சில மணி நேரத்திலேயே சுனாமியும் ஏற்பட்டிருக்கிறதாம். இன்னும் நிலைமையை இன்னும் சரியாக உணர முடியவில்லை. ஆனால், பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது” என்றார் சற்று கலக்கத்துடன்!

இப்படித்தான் தெரியவந்தது ஜப்பானின் சென்டாய், டோக்கியோ, ஃபுகுஷிமா பகுதிகளை தாக்கிய சுனாமி பற்றிய செய்தியெனக்கு! அதனைத்தொடர்ந்து என் இந்தியத்தோழி ஒருவர் தன் கணவர்மூலம் அறியப்பெற்ற சுனாமி செய்தியைக்கொண்டு என்னை நலம் விசாரித்ததில் தொடங்கி, என் உறவினர்கள் பலரின் அழைப்புகளை ஏற்று பதிலளித்துக்கொண்டிருந்த நான், அதற்கிடையில் டோக்கியோவில் இருந்த என் தோழிகள் இருவரை தொலைபேசியில் அழைக்க முயற்சித்தேன். நெட்வொர் பிசி என்ற நீண்ட காத்திருப்புக்குப்பின், ஒரு தோழியின் இணைப்பு கிடைக்கவே,

“டோக்கியோவில் என்ன ஆச்சு? நீ நல்லாயிருக்கியா? வேலைக்குப்போன உன் கணவனின் நிலையென்ன? ஒன்னும் பிரச்சினையில்லைதானெ” என்றேன் இடைவிடாத கேள்விகளுடன் நானறிந்த யாருக்கும் அசம்பாவிதமேதும் நிகழ்ந்திருக்கக்கூடாத என்று எண்ணியபடி!

“அய்யோ ஹரி, நான் மைக்ராஸ்கோப்பில் சோதனை கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டிடம் ஆடத்தொடங்கியது, அருகிலிருந்த ரசாயன குடுவைகள் அடுக்குகளிலிருந்து கீழே விழுந்து உடையத்தொடங்கின. நான் பதறியடித்து வெளியே வந்து நண்பர்களுடன் சேர்ந்து கட்டிடத்தை விட்டு கீழே இறங்கிவிட்டேன். வேலைக்குப்போன என் கணவனின் நிலையென்னவென்று தெரியவில்லை, தொலைபேசி இணைப்பும் கிடைக்கவில்லை” என்றாள் தோழி (யாருக்கும் பெரிதாக பாதிப்பு ஒன்றுமிருக்காது என்ற நம்பிக்கையுடன்கூடிய) என் எண்ணங்களை கலைத்துப்போட்டபடி!

சூழ்நிலையின் தற்போதைய நிலையை அறிய, என் இந்தியத்தோழி இணையம்வழி அனுப்பிய சில இணைப்புகளில் சென்று சுனாமி தாக்கிய பகுதிகளின் படக்காட்சிகளை மெல்ல பார்க்கத்தொடங்கினேன்.

படம்: PTI graphics

பல உயிர்களை தாங்கி நிற்கும் கட்டிடங்களையும், நிலப்பரப்பையும் தன் நெடுநாளைய கோரப்பசிக்கும் இறையாக்கிக்கொண்டிருக்கும் கடலன்னையின் அலைக்கரங்கள், ஊர்திகளையும் கட்டிடங்களையும் தன்னுள்ளே விழுங்கிக்கொண்டே முன்னேறிச்செல்லும் படக்காட்சி என் கண்முன் விரிய விரிய, நான் வசிக்கும் ஹிரோஷிமாவிற்கு சில நூறு மைல்கள் தள்ளிதான், சுனாமி இப்படியொரு கோர விளையாட்டைத் தொடங்கி நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்னும் மனவலியூட்டிய யதார்தத்தை ஏனோ மனது ஏற்க மறுத்தது.

இயல்புகளை கலைத்துப்போட்டு, யதார்த்தத்துக்கு பரபரப்பூட்டி, வாழ்க்கை வாழ்வதற்கே என்று உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ஜப்பானியர்களை (பிற உலகத்தவரையும்) சற்று நிதானிக்கச் செய்து, “நான் எப்போதும் சாந்தசொரூபி அல்ல மனிதா” என்று எச்சரிக்கை செய்வதே இந்த இயற்கை அன்னைக்கு வேலையாய்ப் போய்விட்டது என்று புலம்பத்தொடங்கிவிட்டது மனது இப்போது!

சிறு குழந்தையை கிள்ளி அழவைத்து பார்க்கும் குரும்புக்காரர்களைப்போல, வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் ஜப்பானியர்களை இயற்கை, பூகம்பம் எனும் தன் கோர முகத்தின் ஒரு ஓரத்தை அவ்வப்போது காட்டி விளையாடி/பயமுறுத்திக்கொண்டிருந்தது நாமனைவரும் அறிந்ததே! ஆனால் ஜப்பானியர்களோ,

“1945-ல் அமெரிக்காவின் சின்னப்பையன் (Litttle boy/Atom bomb) அணுகுண்டினால் ஏற்பட்ட பெரும் பாதிப்பிலிருந்து பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்த எங்களுக்கு பூமித்தாயின் பூகம்ப விளையாட்டு புதிரொன்றுமல்ல! வாழ்க்கைப் பாடத்துக்கான பாடவகுப்புகளே?!” என்று பூகம்ப பாதிப்புகளை எதிர்கொள்ளும் வண்ணம் கட்டிடங்கள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை மாற்றியமைத்துக்கொண்டு எதிர் நீச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், இயற்கை “சுனாமி என்னும் ஆழிப்பேரலையின் வீச்சுக்கு முன் உங்கள் தொழில்நுட்ப வினோதங்கள் ஒரு பொருட்டே அல்ல” என்று நிரூபித்துவிட்டது இம்முறை!

ஜப்பானிய வரலாற்றில், 140 வருடங்களுக்கு பின் இப்போதுதான் இத்தகைய ஒரு பூகம்பமும் (8.9 ரிக்டர்) சுனாமியும் ஜப்பானைத்தாக்குகின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள்.

“வாழ்க்கையின் துயர்களால் விழியில் நிரம்பி வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிற்கும் மக்களே புள்ளிவிவரங்கள்” என்னும் ஒரு விஞ்ஞானியின் வார்த்தைகள் நினைவில் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை!

இதே சுனாமியும், இடைவெளிகள் விட்டு தாக்கும் பூகம்பங்களும் பிற உலகத்தவரை தாக்கியிருந்தால், “பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்” என்று மனதொடிந்து களைத்து உட்கார்ந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால், ஜப்பானியர்களின் எதிர்நீச்சல் குணமும், சுனாமியின் வெறியாட்டத்துக்கு எதிரான அவர்களின் செயல்பாடுகளும், சுனாமிக்கு பிந்தைய இயல்பு வாழ்க்கைக்கான ஆயத்தங்களும்  எனக்கு,

“நாங்கல்லாம் சுனாமியிலேயே சுவிம்மிங் அடிக்கிறவங்க, இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி மாதிரி” என்னும் ஒரு தமிழ் சினிமா நகைச்சுவையே நியாபகப்படுத்துகின்றன!

ஜப்பானியர்களைப் பொறுத்தவரை அது அப்பட்டமான நிதர்சனமும்கூட! இதைத்தான் நிரூபிக்கிறது சுனாமி வந்தபோது தான் ஓடியதாகவும், கட்டிடங்கள் கண்முன்னே மூழ்கத்தொடங்கியதாகவும் கண்களில் நீருமின்றி, பாதிப்பின் தாக்கம் தன்னில் மீதமுமின்றி பொதுமக்களுக்கு தொலைக்காட்சி வழியாக விளக்கிய ஒரு பாதிக்கப்பட்டவரின் இயல்பு! ஜப்பானியர்களின் எதிர்நீச்சல் குணத்துக்கு என் தலைவணக்கம்! வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகளில் இது முக்கியமான ஒன்று நண்பர்களே!!

கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப்போல, இறந்தவர்களின் இதுவரையிலான எண்ணிக்கை 1600 என்கின்றன சில செய்திகள். ஆனால் மூன்று ரயில்களைக் காணவில்லையென்றும், அதிலிருந்த மக்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லையென்றும், தொடரும் மீட்புப்பணிகளால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றும் வந்துகொண்டிருக்கும் செய்திகள் ஏனோ செய்திகளாகவே தெரியவில்லை! காதோரம் ஒலித்துக்கொண்டிருக்கும் ஆபாயச்சங்கு போலத்தான் தோன்றுகிறது!

பயத்தை அதிகப்பபடுத்தும் விதமாகவும், வயிற்றில் புளியைக்கரைக்கும் விதமாகவும் வரும் படக்காட்சிகளுடன்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகளை கண்டுவிட்டு,

நீ நல்லாயிருக்கியா? நீயிருக்கிற இடத்துல ஒன்னும் பிரச்சினையில்லையே?

லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோனதாவும், ஜப்பானில் வாழும் இந்தியர்களை இந்திய விமானம் நம்ம நாட்டுக்கு திரும்பக் கூட்டிக்கொண்டும் வருதாமே?

“ரொம்ப பிரச்சினையாயிருந்தா பேசாம நீயும் கெளம்பி வந்துவிடு ஹரி” என்று பயத்தினூடே கேள்விகளை அடுக்கி வீட்டுக்கு திரும்ப அழைக்கும் அம்மாவில் தொடங்கி, குடும்பத்தவர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோருக்கும்,

“நானிருக்கும் ஜப்பான் பகுதி சுனாமியால்/பூகம்பத்தால் தாக்கப்படவில்லை. ஆனால், சுனாமி தாக்கிய டோக்கியோ, ஃபுகுஷிமா மற்றும்  சென்டாயிலிருந்த என் இந்திய நண்பர்களும், ஜப்பானியர்களில் பலரும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. நிலைமை சுமூகமாகும் என்று நம்புகிறோம்” என்று சோகத்தையும், நம்பிக்கையும் மீண்டும் மீண்டும் பதியவைத்தே கழிந்தது நேற்றைய மற்றும் இன்றைய பொழுதுகள்!

நாளைய பொழுது நல்லதாகவே புலரும் என்ற நம்பிக்கையில் நானும், ஜப்பானியர்களும்!! சகஜநிலையை நோக்கிய பாதையில் மிக வேகமாக ஜப்பானியர்கள். அவர்களின் பாதைகளில் துயர் நீங்கவும், உடல் மரித்து உயிர் நீத்தாலும்,  உற்ற உறவுகள்/நட்புகளின் உள்ளங்களில் நினைவுகளாக தொடர்ந்து வாழப்போகும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், ஜப்பானில் சகஜ நிலை விரைவில் திரும்பவும் பிரார்த்தனை செய்யுங்கள் நண்பர்களே!

பின் குறிப்பு: கடந்த ஒன்றரை மாதங்களாக வலைப்பக்கம் வரமுடியாமல் ஆய்வு வேலையில் மூழ்கிப்போன என்னை,  நலம் விசாரித்து ஜப்பானின் தற்போதைய நிலைகுறித்து எழுதி  பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்ட நண்பர் வெங்கடேஷ் அவர்களின் அன்புக்கு நன்றி சொல்லி, என் உணர்வுகளை பதிவு செய்யவே இந்தப்பதிவு! எப்போதும்போலவே இப்போதும் நீண்டுவிட்ட பதிவுக்காக மன்னியுங்கள் நண்பர்களே! நன்றி….

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி

Advertisements