உங்களின் ஒரு கையெழுத்து!மாறிவிடக்கூடும் தமிழக மீனவர்களின் தலையெழுத்து!!!

Posted on ஜனவரி 31, 2011

8


கிரி படத்துல வர்ற வடிவேலு ரொம்ப நல்லவன்னு சொன்னதுக்காகவே தர்ம அடி வாங்கிக்கிட்டு நம்மள எல்லாம் சிரிக்க வச்சாரு! ஆனா, நமக்கு காலங்காலமா இந்திய தேசிய(?)த்துல நடக்குற அநியாயத்தைத்தான் அப்படி ஒரு காமெடி மூலமா சொல்லாம சொல்லிட்டு போயிருக்காரோன்னு தோனுது சில தினங்களா தமிழக மீனவர்கள் குறித்து வெளியாகும் செய்திகள்!

நான் தமிழக மீனவர்கள் சமீபத்துல சுட்டுக்கொல்லப்பட்டதைத்தான் சொல்றேன்னு உங்கள்ல பலருக்கு நல்லாப்புரியும்னு நெனக்கிறேன். (அப்படிப்புரிஞ்சாலும் சிலபேர் அதைப்பத்தி நீ ஏன் எழுதுற அப்படீன்னு கேட்டீங்கன்னா, மேல படிங்க புரியும்!). அறிவியல எழுதவே நேரமில்லாத நான் இதை ஏன் எழுதுறேன்னா, இந்த ஒரு விழிப்புணர்வை பதிவு செய்யலேன்னா, நான் தமிழனா பொறந்ததுக்கே அர்த்தமில்லாமப் போயிடும். நான் மட்டுமில்ல, ‘தமிழர்’களாகிய நாம எல்லாருமே பொறந்ததுக்கு அர்த்தமில்லாம போயிடும்! கீழ்வரும் ‘கடமை’ குறித்த விழிப்புணர்வுக்கு அப்புறந்தான் தமிழ் வலைப்பதிவு, அறிவியல் தமிழ் எல்லாமே!

தமிழக மீனவர்களைக் காக்கும் உங்களின் ஒரேயொரு (இணையக்) கையெழுத்து!

படம்: கூகுள்

சினிமா பார்க்கவும், சினிமா செய்திகள்/கிசு கிசு படிக்கவும், சமூக வலைப்பின்னல் தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் மாதிரியான தளங்களில் அரட்டை அடிக்கவும், வலைப்பதிவுல-கவிதை, கட்டுரை, அரசியல், அறிவியல் எழுத-படிக்கவும், வியாபாரங்கள் செய்யவும், எல்லாத்தைவிட அதிகப்படியா ஆபாசப்படம் பார்க்கவுமே பெரும்பாலும் பயன்பட்டு வருகிற இணையத்தை, பல புரட்சிகரமான செயல்களைப் செயல்படுத்தவும் இணையவாசிகளான நாம பயன்படுத்தலாம். அது எப்படி?

பெட்டிஷன் ஆன்லைன் அப்படீன்னு ஒரு இணையதளம் இணைய வழி போராட்டங்கள், புரட்சிகளின் வழியாக பொதுமக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற (இணையப்) பொதுமக்கள் மூலமாக உதவுகிறது! எப்படின்னு கேட்டா, இந்தத் தளத்துல பெட்டிஷன்களாக முன்வைக்கப்படுற கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களில் கோடிக்கணக்கான இணைய வாசிகள் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டா போதும். அது உரியவருக்கு (அரசுக்கு!) சென்றடைந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்!

இதுக்காக ஒருத்தர் செய்ய வேண்டியது என்னன்னா, கடிதத்தைப் படிச்சிட்டு, Click here to sign the petition அப்படீங்கிற பொத்தானை அழுத்தி, அதுக்கப்புறம் தோன்றுகிற ஒரு சின்ன படிவத்துல, ஒரே ஒரு நிமிஷம் செலவு பண்ணி, நம்ம பேரு, மின்னஞ்சல் முகவரி, சில கருத்துகள் இப்படி மூனே மூனு விஷயங்களப் பூர்த்தி செஞ்சுட்டு, அதுக்கு கீழே இருக்குற இன்னொரு பொத்தானை திரும்பவும் அழுத்தினா போதும்!

இப்போ, நீங்க என்ன செய்யனும்னா…..

நம்ம தமிழினம் (மீனவர்கள்) சிங்கள இனவெறியர்களின் கோரப்பசிக்கு தொடர்ந்து பலியாகிக்கொண்டிருப்பதைக் தடுக்கவேண்டி, இந்திய அரசுக்கு, மாண்புமிகு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு,

பொருள்: தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என்று தொடங்கும் பெட்டிஷன் (கடிதம்)…..

“சமீபகாலங்களில், தமிழக கடலோரப்பகுதிகளில் மட்டும் சுமார் 539 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாகப்பட்டினத்தைசேர்ந்த மீனவச் சமுதாயத்தின் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஆகியவை இலங்கைக்கு எதிரான எதிர்பலைகளை தமிழர்கள் மத்தியில் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தமிழகக் கடலோர மீனவக்குடும்பங்களில் உயிர்பயமும் அதிகரித்துள்ளது. இதற்குமுன்பு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் ஏற்பட்ட இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான ஒரு தீர்வைக் கண்டிருக்கும் இந்திய அரசை நாங்கள் நம்புகிறோம். அதுபோலவே எங்கள் மீனவர்களின் உயிரிழப்புகளை நிறுத்த ஒரு தீர்வை இந்திய அரசிடம் எதிர்பார்க்கிறோம்”

இந்தியாவிலும் இதர உலக நாடுகளிலும் வாழும் இந்தியர்களான நாங்கள் பின்வரும் எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்:

இந்திய அரசு…..

  • சிங்களர்கள் இந்திய மீனவர்களை தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை எச்சரிக்கவேண்டும்
  • தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது உடமைகள் ஆகியவற்றை பாதுகாக்க போதுமான கடற்படையை ரோந்தில் ஈடுபடுத்த வேண்டும்
  • “தமிழக மீனவர்களின் தினசரி செயல்பாடுகளின் இயங்குதளமான கச்சத்தீவை இலங்கை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்” என்று இலங்கை அரசிடம் கோர வேண்டும்
  • ஒருவேளை, இரு அரசுகளும் கச்சத்தீவை ஒரு பொது உடமையாக பாவிக்குமேயானால், IMLB விதிகளை தளர்த்தி, இரு நாட்டு மீனவர்களும் நிபந்தனை ஏதுமின்றி அங்கு மீன்பிடிக்க வழி செய்ய வேண்டும். இவ்வேண்டுகோளுக்குப்பின்னும், மேலும் ஒரு முறை இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறினால், இந்திய அரசுக்கு உண்மையாகவே தன் குடிமக்களின்மீது அக்கரையிருக்குமேயானால், இலங்கையுடனான நல்லுறவை துறந்து, சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தி முடிகிறது!

இந்தப் பெட்டிஷன்லதான் நீங்க எல்லாரும் கையெழுத்து போடனும் (மேல நான் சொல்லியிக்குற மாதிரி!).

இணையத்துல இருக்குற இந்த பெட்டிஷனுக்கு சுமார் ஒரு லட்சம் கையெழுத்துகள் இருந்தாதான் இந்த பெட்டிஷன் எடுபடுமாம். இதுல ஒரு கொடுமை என்னன்னா,

  • காலையில எந்திரிச்சு இரவு உறங்கப்போறது வரைக்கும் ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட்டே கதியாய் கிடக்குற
  • தமிழ் வளர்க்க (?) சுமார் 7000 தமிழ் வலைப்பதிவுகளை தொடங்கி, தமிழை மட்டும் வளர்க்காம, ஆபாசம், குரூரம், சமூதாய சீர்கேடு, அவதூறுகள் இப்படி எல்லாத்தையும் சேர்த்து வளர்த்துகிட்டு இருக்குற
  • யாராவது பதிவெழுதினா மீ த ஃபர்ஸ்ட், எஸ் சார், வட போச்சே இப்படியெல்லாம் கமெண்டு போட வலைப்பதிவு மேல் விழி வச்சி காத்துக்கிடக்குற
  • வலைப்பதிவுகள்ல சினிமா விமர்சனம், ,கிசு கிசுக்களையெல்லாம் பத்தி பக்கம் பக்கமா எழுதி தள்ளுகிற

இன்னும் இத்யாதி இத்யாதி….க்காகவெல்லாம் இணையமே கதின்னு கிடக்குற என் இனிய தமிழினம், சில நாட்களா இணையத்துல இருக்குற, தமிழினம் காக்கக்கூடிய இந்த பெட்டிஷன்ல, வெறும் 60 நொடிகளை செலவிட்டு போடக்கூடிய கையெழுத்துக்கு, இதுவரைக்கும் போட்டிருக்கிற கையெழுத்துகளோட எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வெறும் 3 ஆயிரத்துச் சொச்சம்தான்!

அடக் காலக் கொடுமையே, தமிழன் இப்படியிருந்தா தமிழ்நாடு வெளங்குமா? நாம இப்படி இருக்குறதுனாலதான், சினிமா நடிக்க வர்றவன்ல ஆரம்பிச்சி, மீன் புடிக்க வர்ற சிங்களத்தான் வரைக்கும் நம்மள அசிங்கப்படுத்திட்டும், கிரி வடிவேலுவைவிட கேவலமா அடிச்சியும், உச்சக்கட்டமா சுட்டுக்கொன்னுட்டும் போறானுங்க! இதையெல்லாம் பார்த்துட்டும் நாம என்ன பண்ணுவோம், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு…..இ இ இ…..பல்லை இளிச்சிக்கிட்டு வாங்க வாங்கன்னு ஏக தடபுடலா வரவேற்று திரும்பவும் வாழ வைப்போம்!

மத்தவங்க வாழ்ந்துட்டுப்போகட்டும், அதுக்காக நாம சாக வேணாமே! அதனால உங்க எல்லார்கிட்டேயும், இந்தப் பதிவு மூலமா நான் என்ன கேட்க விரும்புறேன்னா, தயவு செஞ்சு இந்த இணைப்புக்கு சென்று உங்களின் ஒரே ஒரு நிமிடத்தைச் செல்வு செய்து அந்த பெட்டிஷனில் கையெழுத்து போடுங்கள். நம் மீனவச் சொந்தங்கள் ஒருவரும் இனி வரும் நாட்களில் சிங்கள் வெறியர்களின் இனவெறியாட்டத்துக்கு பலியாகவே கூடாது!

பெட்டிஷனில் கையெழுத்துப்போட நீங்க செல்ல வேண்டிய முகவரி: http://www.petitiononline.com/TNfisher/petition.html

“முக்கியமா, சக பதிவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இந்த பெட்சிஷன் பத்தின செய்தியை உங்க வலைப்பதிவுலயும் நீங்க விரும்புற மாதிரி எதாவது ஒரு வகையில பதிவு செய்தோ அல்லது உங்கள் வலைத்தளத்தின் ஒரு மூலையில், சில வரிகளுடன், ஒரு சிறு இணைப்பாக  கொடுத்தோ, ஒரு லட்சம் கையெழுத்து இலக்கை எட்ட உதவுங்களேன்!”

பதிவுல உங்க மனசு புண்படும்படியா நான் எதாவது எழுதியிருந்தா அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ஆனா, எம்மேல ஒரு வேளை கோபம் இருந்தாலும்(?) அதுக்காக கையெழுத்து போடாம விட்டுடாதீங்க நண்பர்களே! இந்தப் பதிவு மூலம் சில நூறு/ஆயிரம் கையெழுத்துகளேனும் பெருகும் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன். நன்றி

தமிழக மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சில இணையதளங்கள்:

http://www.savetnfisherman.org/

http://twitter.com/savetnfisherman

http://www.facebook.com/savetnfisherman

தொடர்புடைய (சக பதிவர்களின்) சில பதிவுகள்:

இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?

மீனவர்களுக்காக ஒரு கையெழுத்து

மீனவர்களுக்காக குரல் கொடுப்போம்…!!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

 

Advertisements