எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்த உலகின் முதல் மனிதன்!!! (300-வது பதிவு)

Posted on ஜனவரி 20, 2011

23


எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. “ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சுத்தான் வேட்டை நாயா ஆக முடியுமுன்னு”, அது மாதிரி நானும் இந்த வலைப்பதிவை கவிதையில ஆரம்பிச்சு, அறிவியல எழுத முயற்சி பண்ணி அப்புறம் கொஞ்ச நாளைக்கு சினிமாவுக்கு தாவி, கடைசியில ஒருவழியா இன்னிக்கு இருக்குற அறிவியல் பிரதானமான ஒரு கலவை வலைத்தளத்துல வந்து நின்னுட்டேன்!

நின்னு கொஞ்சம் திரும்பி பார்த்தா, அட இது நம்ம 300-வது பதிவு! பொதுவா போரடிக்கிற அறிவியல பிரதானமா, ஆனா கொஞ்சம் சுவாரசியமா எழுதி, உங்க எல்லாரோட புண்ணியத்துல இன்னிக்கு 300-வது பதிவு வரைக்கும் வந்து சேர்ந்துட்டேன். அதுக்காக உங்க எல்லாருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றிங்க!!

ஆனா என்ன, இந்த வலையை தொடர்ந்து படிக்கிற உங்கள்ல சிலருக்குத்தான், “மேலிருப்பான் வலைப்பதிவுகள் தொடர்ந்து வந்தா நல்லாயிருக்குமே” அப்படீன்னு தோனும்?! உண்மைதாங்க, அதுக்கு நீங்க என்னைக் கோவிச்சுக்கிறதுக்கு பதிலா என்னோட (ஆய்வுத்) துறையைத்தான் கோவிச்சுக்கனும்.

சரி அத விடுங்க, நாம இன்றைய பதிவுல என்னத்தப்பத்தி பார்க்கப்போறோம்னு பார்ப்போம் வாங்க……

மேலிருப்பான்ல கடந்த மே.21, 2010 ஆம் தேதி ”எய்ட்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!” அப்படீன்னு ஒரு பதிவு எழுதியிருந்தேன். ஆனா, அன்றைய நிலைமையில அந்த சிகிச்சையை மிக கடினமான, ஆபத்தான மற்றும் விலையுயர்ந்ததாகவும், ஒருத்தருக்கு வெற்றிகரமாக முடிஞ்ச இந்த சிகிச்சை மத்தவங்களுக்கும் சரிவருமா அப்படீங்கிற ஒரு சந்தேகத்தையும் குறிப்பிட்டு எழுத வேண்டியிருந்தது!

ஆனா, அந்தப் பதிவுல இருந்த சில சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி இருக்கிறது, உலக எய்ட்ஸ் தினமான கடந்த 12.1.2011 ஆம் தேதி வெளியான ஒரு மருத்துவச் செய்தி! அது என்ன செய்தி, அதுல என்ன பெரிய விசேஷம், அதனால மருத்துவ உலகத்துக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கு என்ன நன்மை அப்படீங்கிறதயெல்லாம் உங்ககிட்ட சுருக்கமா சொல்லத்தான் இந்தப் பதிவு. வாங்க அது என்னன்னு கொஞ்சம் சாவகாசமா பார்ப்போம்……

டைமொதி ரே ப்ரௌன் (படம்:Google)

செய்தி: உலக எய்ட்ஸ் தினத்தன்று ஒரு மருத்துவ அதிசயம்! “பெர்லின் பேஷன்ட்” என்றழைக்கப்படும் டைமொதி ரே ப்ரௌன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு, லியூக்கீமியா புற்று நோயை குணப்படுத்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது மருத்துவர்கள், பிரபல மருத்துவ வார இதழான ப்ளட் (ரத்தம்)-ல் அந்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்த சிகிச்சையின்மூலம் எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு கிடைத்துவிட்டது/எய்ட்ஸ் நோயை குணப்படுத்திவிட முடியும்” என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள்!

கூடுதல் சுவாரசியம்: கடந்த மாதம் பிரபல டைம் இதழின், 2010-க்கான டாப் 10 மருத்துவ சாதனைகளில் “எய்ட்ஸ்  வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொண்ட ஆரோக்கியமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்தானது சுமார் 73% குறைவு” என்னும் ஒரு எய்ட்ஸ் ஆய்வையும் (கண்டுபிடிப்பை) சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!

“மரபனுமாற்ற ஸ்டெம் செல்”லும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையும்!

சிகிச்சை முறை: சி.டி 4 டி செல்கள் (CD4 T cells) என்னும், ஒருவகை நோய் எதிர்ப்பு அனுக்களின் படலங்களிலுள்ள சி.சி.ஆர் 5 (CCR5) என்னும் புரதத்தின் வழியாகவே எய்ட்ஸ் கிருமிகளான HIV நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து இறுதியில் நோயாளிகளைக் கொன்றுவிடுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சையில், இந்த புரதம் இல்லாத/நீக்கப்பட்ட (டெல்டா 32, Delta 32) ஸ்டெம் செல்களை டைமொதி ரே ப்ரௌன் என்னும் எய்ட்ஸ் நோயாளிக்கு செலுத்தி, எய்ட்ஸ் நோய் கிருமிகள் பெருகுவதை தடுத்து, எய்ட்ஸ் நோய் குணமாக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்தபின் இரண்டு வருடம் கழித்த பிறகும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் மீண்டும் வளராமல் இருப்பதற்கான காரணம், நோயாளியின் உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் தொடர்ந்து வளர்ந்து மேலும் லட்சக்கணக்கான HIV எதிர்ப்பு டி செல்களை உருவாக்கி, எய்ட்ஸ் நோயிலிருந்து பூரண குணமடையச் செய்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஊர்ஜிதப்பட்டுள்ளது!!

டைமொதி ப்ரௌனுக்கு செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் வெற்றியானது, இன்னும் பாதுகாப்பாகவும், தரமானதாகவும் மெறுகேற்றப்பட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலகின் சுமார் 33 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்க உதவக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்திருப்பது மறுக்க முடியாத உண்மையே!!

தொடர்புடைய சில பதிவுகள்:

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

ஒளிந்து விளையாடு; எய்ட்ஸ் (HIV) கிருமியும் மேக்ரோஃபேஜஸும்

டாஸ்மாக்குக்கு, தண்ணியடிக்க போன “வைரஸ்” தீவிரவாதி!

“சிந்த்தியா”, விஞ்ஞான உலகின் அட்டகாசமான ‘செயற்கை’ புதுவரவு!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

பிடிச்சிருந்தா இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements