2011: இந்த வருஷம் நான் ‘அதை’ செய்யவே மாட்டேன்….???

Posted on ஜனவரி 4, 2011

16


என்னங்க, தலைப்பே கொஞ்சம் தகராறா இருக்கேன்னு பார்க்குறீங்களா? உண்மைதான், ஆனா (என்னோட) வாசகர்களான உங்களுக்குத்தான் அது பழகிப்போயிருக்குமே இப்போ?! சரி அதவிடுங்க, நாம இப்போ மேட்டருக்கு வருவோம்…..

முதல்ல உங்க எல்லாருக்கும் மேலிருப்பானோட “இனிய புத்தாண்டு 2011 நல்வாழ்த்துக்கள்”. அப்புறம், புது வருஷம் பொறந்தாலே, “பழையன கழிதலும் புதியன புகுதலும்” அப்படீங்கிற அடிப்படையில, நம்ம வாழ்க்கையில சில விஷயங்கள் மறைஞ்சு சில விஷயங்கள் புதுசா தோன்றும்னு உங்கள் எல்லாருக்குமே தெரியும். அப்படிப்பட்ட விஷயங்கள்ல, போன வருஷம் செஞ்ச தப்பையெல்லாம் இந்த வருஷம் கண்டிப்பா செய்யவே கூடாது அப்படீன்னும், போன வருஷம் செய்யாத ஆனா கண்டிப்பா செய்ய வேண்டிய பல நல்ல விஷயங்களை செய்யவும், நல்ல பழக்கவழக்கங்களையும் ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த வருஷம் கண்டிப்பா முயற்சி செய்யனும் அப்படீன்னும் நெனக்கிறதுதான் ரொம்ப முக்கியமானதா இருக்கும்னு நெனக்கிறேன்.

அப்படிப் பொதுவா, புது வருஷத்துல எல்லாரும் செய்யனும்னு நெனக்கிற, உறுதிமொழி எடுத்துக்கிற முக்கியமான பல விஷயங்கள்ல மூனே மூனு ஆனா, நம்மோட நலவாழ்வுக்கு மிகவும் அடிப்படையான, ஆதாரமான, அத்தியாவசியமான  மூனு விஷயங்களப் பத்தியும், அவற்றை தொடர்ந்து வெற்றிகரமாக மேற்கொள்ளத் தேவையான சில உத்திகளையும்தான் இனி நாம இந்தப் பதிவுல சுருக்கமா பார்க்கப்போறோம். அதே மாதிரி, மேலிருப்பான் தளத்துல நான் செய்ய நினைக்கிற ஒரு விஷயத்தையும் இப்போ சொல்லிடலாம்னு நெனக்கிறேன்.

அது வேற ஒன்னுமில்லீங்க, இந்த வருஷம் நம்ம தளத்துல வரப்போற பதிவுகள கொஞ்சம் சுருக்கமா, ஆனா விவரமா எழுத முயற்சி பண்ணலாம்னு முடிவு செஞ்சுருக்கேன். (இப்படிச்சொன்ன உடனே சில பேரு, “ரொம்ப நன்றிப்பா. ஆக, இனிமே மேலிருப்பானோட பதிவுகள் வளவளான்னு இல்லாம, ஷார்ட்டா ஆனா ஸ்வீட்டா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்” அப்படீன்னு முனுமுனுக்கிற மாதிரி கேக்குது?!)

பொதுவான மூன்று புதுவருட உறுதிமொழிகள்!

மனுசனோட அன்றாட வாழ்க்கையில இருக்குற எத்தனையோ பிரச்சினைகள்ல, பொதுவா இருக்குறது கீழே இருக்குற மூனு முக்கியமான பிரச்சினைகள்:

 1. உணவுக்கட்டுப்பாடு/சரிவிகித உணவு (டயட்)
 2. உடற்பயிற்சி
 3. மன உளைச்சல் (ஸ்ட்ரெஸ்)

உணவுக்கட்டுப்பாடு/சரிவிகித உணவு (டயட்)!

2010-ல பல உறுதிமொழிகள்ல ஒன்னா, நொறுக்குத்தீனி, சிப்ஸ் இப்படி எதையுமே சாப்பிடறதில்லைன்னு ஒரு உறுதிமொழி எடுத்திருப்பீங்களே?! ஆனா என்ன பண்றது, ஒரு சிப்ஸ் பாக்கெட்டையோ, உங்களுக்குப் பிடிச்ச பிஸ்கெட்டையோ பார்த்த உடனே உறுதிமொழியெல்லாம் காணாமப்போயிருக்குமே? உண்மைதான், ஒரு விஷயத்தை அறவே தொடாம கட்டுக்கோப்பா இருக்குறது வெகு சிலராலதான் முடியுமாம். அப்படீன்னு நான் சொல்லல, ஸ்டான்ஃபோர்டு வருமுன் காக்கும் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கிருஸ்டோஃபர் கார்டனர்தாங்க சொல்றாரு!

அப்போ நம்மல மாதிரியான ஆளுங்க எல்லாம் என்ன பண்றதுன்னு கேட்டா, ஒரு உணவை அறவே நிறுத்தி டயட்ல இருக்குறதெல்லாம் எல்லாராலாயும் முடியாதுங்கிறதுனால, ஆரோக்கியமா சாப்பிட சில டிப்ஸ் கொடுக்கிறாரு நம்ம கார்டனர்……

 • பதப்படுத்தப்படாத, ஃப்ரெஷான உணவுகளையே முடிஞ்சவரைக்கும் சாப்பிடுங்க
 • கொஞ்சமா உணவை எடுத்து, அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுங்க
 • முக்கியமா பதப்படுத்தப்பட்ட அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை கடைகளில் வாங்கும்போது, உங்களுக்குத் தெரிஞ்ச போஷாக்குகள் குறிப்பிடப்பட்டு இருக்குற மாதிரியான உணவுகளை தேர்ந்தெடுங்க
 • ஒரு வாரத்துக்கு ஒரு முறை உங்க வீட்டுத் தோட்டத்திலோ அல்லது தெரிந்த விவசாயியின் வயலுக்கோ சென்று புது வகையான உணவுப் பொருள்களையும், இலவசமாக கிடைக்கக்கூடிய உணவுகளையும் சாப்பிடுங்க (ஆமா, நம்ம ஊருக்கு இது எவ்வளவு தூரம் சாத்தியம்??)

எல்லாத்தைவிட முக்கியமா, நீங்க உங்க சுய நலத்துக்காக சாப்பிட்டாலும், உலக (இயற்கை) நன்மைக்காக சாப்பிட்டாலும், 80:20 அப்படீங்கிற ஒரு விதியை கடைப்பிடிக்க முயற்சி பண்ணுங்க அப்படீங்கிறாரு கார்டனர். அது என்ன 80:20 விதி? அதாவது, நீங்க சாப்பிடுற 80 % உணவு உடல் ஆரோக்கியத்துக்காகவும், மீதமுள்ள 20 % உணவு ஆசைக்காகவும் இருக்கனுமாம்! ஆனா, அந்த 20 % கொஞ்சம் கொஞ்சமா 30, 40, 50 இப்படி ஏறிகிட்டே போகாம பார்த்துக்கனும். சரியா?

உடற்பயிற்சி!

ஒவ்வொரு ஜனவரி 1 ஆம் தேதியும், நம்மள்ல முக்கால்வாசிப்பேரு, இந்த வருஷம் போன வருஷத்தைவிட அதிகமா உடற்பயிற்சி  செய்யனும்னு கண்டிப்பா உறுதிமொழி எடுத்திருப்போம். ஆனா, அந்த உறுதிமொழியெல்லாம் நாம உணர்ச்சிவசப்பட்டு மாங்கு மாங்கு உடற்பயிற்சி செஞ்சு கை-கால்-முதுகு சுளுக்குறவரைக்கும்தான் எடுபடும். அப்புறம் உடற்பயிற்சின்னாலே ஆள விடு சாமீன்னு எஸ்கேப் ஆகிடுவோம். இல்லீங்களா?

இதை தவிர்க்க, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆரோக்கிய மேம்பாட்டு அமைப்பின் உதவி இயக்குனர் சில வழிகளைச் சொல்றாங்க. வாங்க என்னன்னு கேப்போம்…..

 • திடுதிப்புன்னு, உங்களுக்கு பரிச்சயமில்லாத, கடினமான உடற்பயிற்சிகளை ஆரம்பிக்காதீங்க
 • இந்த வருஷம் இன்னும் திடமான உடலை உருவாக்குவோம்னு உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிட்டு, ஒரு வாரத்துல திங்கள், புதன், வெள்ளி நாட்கள்ல மட்டும், வேலை முடிஞ்சு 30 நிமிஷம் நடக்க முயற்சி பண்ணுங்க
 • உங்களால முடியும்னு நீங்க நெனக்கிற உடற்பயிற்சிகளை மட்டும் செய்யுங்க. அது உங்க தன்னம்பிக்கையை வளர்த்து, கொஞ்சம் கொஞ்சமா பலமான உடற்பயிற்சிகளை செய்ய உதவும்

ஒரு வேளை உங்களால உங்க திட்டப்படி உடற்பயிற்சி செய்ய முடியாமப்போனா, உங்கள நீங்களே கீழவரும் சில கேள்விகள் கேட்டுப்பாருங்க…..

 1. என்னோட உடற்பயிற்சி திட்டம் செயல்படுத்தக்கூடியதுதானா?
 2. என்னோட உடற்பயிற்சி திட்டங்கள், என்னோட வாழ்க்கைமுறை மற்றும் கட்டுப்பாடுகளை உள்ளடக்கி இருக்கின்றனவா?
 3. என்னோட உடற்பயிற்சி திட்டங்கள், என்னோட விருப்பு-வெறுப்புகளுக்கு எதிராக  இருக்கின்றனவா?

அதேமாதிரி, ஒரு வேளை உங்க திட்டங்கள் சரியா வேலை செய்யலைன்னா, நான் ஒரு சோம்பேறி, என்னால இதெல்லாம் கண்டிப்பா முடியாது அப்படீன்னெல்லாம் உங்கள நீங்களே குறைச்சு மதிப்பிடவோ, மட்டப்படுத்திக்கவோ கூடாது! அதுக்கு பதிலா, உங்க நண்பரை எப்படி நீங்க நடத்துவீங்களோ அப்படியே உங்கள நீங்களே பாவிச்சு, உங்க உடற்பயிற்சி திட்டங்கள செயல்படுத்த முயற்சி பண்ணுங்க…..சரிங்களா?

மன உளைச்சல்!

கடந்த 2009 வருடம் ஏற்பட்ட உலக பொருளாதார சீர்கேடு, ஐ.டி பிரச்சினை இப்படிப்பட்ட பிரச்சினைகள்னால வேலையிழந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, வாழ்க்கை முன்னேற்றம் தடைபட்டு, உலகின் பெரும்பாலான மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளானாங்கன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். இப்படிப்பட்டவங்களுக்கு, மன உளைச்சலிலிருந்து விடுபட, மனநல மருத்துவர்களும், உளவியலாளர்களும் என்ன சொல்றாங்க?

நம்மில் பெரும்பாலானவங்களோட மன உளைச்சலுக்கு காரணம், நமக்கு இப்போ என்ன நடக்குதுங்கிறதுனால இல்லியாம். கடந்தகாலத்துல நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளையும், எதிர்காலத்துல என்ன ஆகுமோங்கிற கவலைகள்னாலயும்தான் மன உளைச்சல் ஏற்படுதாம்! அதனால, பழசையும் புதுசையும்பத்தி கவலைப்படுறத விட்டுட்டு (மறந்துட்டு) இப்போ என்ன பிரச்சினைன்னு கண்டுபிடிச்சி அதை சரிசெய்ய முயற்சிபண்ணுங்க சொல்றாங்க மனநல மருத்துவர்களும், உளவியலாளர்களும்!

பல ஆண்டுகளா மன உளைச்சல் பத்தின ஆய்வுல ஈடுபட்டிருக்கிற உளவியல்துறை பேராசிரியர் திரு.ஸ்பீகெல், FACES அப்படீங்கிற ஒரு முறையைப் பயன்படுத்தி மன உளைச்சலை எப்படிக் குறைக்கிறது சொல்றாரு…..

 1. உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்துற ஒரு விஷயத்தை கண்டு ஓடி ஒளியாம, அதை நேருக்கு நேராக சந்தித்து சரி பண்ண முயற்சி பண்ணுங்க
 2. ஒரு பிரச்சினையை நீங்க கிரகிக்கிற (அணுகுற) விதத்த கொஞ்சம் மாத்திப்பாருங்க
 3. எந்த ஒரு பிரச்சினையையும், தன்னம்பிக்கையோடு உள்வாங்கிக்கொண்டு, அந்த பிரச்சினையில இருக்குற விஷய்ங்கள்ல உங்களால சமாளிக்கக்கூடிய ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை சரி செய்ய முயற்சி பண்ணுங்க
 4. உணர்வுகள (உணர்ச்சிகளா) வெளிக்காட்டுங்க!
 5. சமுதாய உதவியை நாடுங்க (உற்றார்-உறவினர், நண்பர்களுடனான நட்பு ஒரு உற்சாகத்தையும், ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உணர்வையும் ஏற்படுத்தும்!)

மிக மிக முக்கியமா, உங்களோட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுதிமொழிகள்ல நீங்க தவறிட்டீங்கன்னா, உங்கள நீங்களே திட்டித்தீர்க்கவும், மட்டப்படுத்திக்கவும் செஞ்சீங்கன்னா, அது உங்கள நீங்களே காயப்படுத்திக்கிட்டு, இருக்குற காயங்களோட இன்னொன்னையும் சேர்த்துக்கிறமாதிரி. அதனால, எதாவது ஒரு உறுதிமொழியில தோத்துட்டீங்கன்னா, “சரி பரவாயில்ல, இனி இப்படி தவறாம பார்த்துக்கனும்”னு உங்கள நீங்களே தட்டிக்கொடுத்துக்கிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையில இறங்கனும் அப்படீங்கிறாரு உளவியல் பேராசிரியர் ஸ்பீகெல்!

இனி என்னங்க, இந்த வருடத்துக்கான உங்களோட எல்லா உறுதிமொழிகளும் வெற்றிகரமாக கடைபிடிக்கப்பட்டு, “இந்த வருடமும் உங்களுக்கு இனிய வருடமாக இருக்க” என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தொடர்புடைய சில பதிவுகள்:

உளவியல்: “நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு?!

ஆய்வு: வாரக்கடைசி தூக்கத்தால் “தூக்கக் கடனை” அடைக்க முடியாது!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

இன்ட்லியில ஓட்டு போடுங்க

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements