சின்னச் சின்ன செயல்கள் 1: முகம்தெரியா மனிதர்களுடன் ஒரு முடிச்சு!!

Posted on நவம்பர் 11, 2010

18


இன்று ஒரு இருதயநலக்குறிப்பு:

உணவுக்கட்டுப்பாடு (டயட்) தொடங்குவதற்க்கு முன்பு, டயட்டீஷியன் அல்லது மருத்துவதுவரிடம் சரியான ஆலோசனை பெறவேண்டியது மிகவும் அவசியம். ஏன்னா, திட்டமிடப்படாத உணவுக்கட்டுப்பாடு , மன உளைச்சல் மற்றும் உணவு/போஷாக்குப் பற்றாக்குறையில் முடிந்துவிடும். அதை தவிர்க்க ஆலோசனைப்பெற்று உணவுக்கட்டுப்பாடு செய்யுங்கள்.

சமீபத்துல, தோழி நந்தினியோட வலைப்பக்கத்துல சின்ன, ஆனா அழகான ஒரு பதிவைப் படிச்சேன். மனசுக்குள்ள ஒரு நெகிழ்வை ஏற்படுத்திய பதிவு அது. மனுசன உயிரியல்ரீதியா சொல்லனும்னா, “மனிதன் ஒரு சமுதாய விலங்கு” அப்படீன்னுதான் சொல்றாங்க. காரணம், மனுசன் தானும் நல்லா வாழ்ந்து, தன்னை ஒரு அங்கமாகக் கொண்ட சமுதாயத்துக்கும் சில நன்மைகளைச் செய்து வாழ்கிறான் (?)/வாழவேண்டும் என்பதற்க்காக!

ஆனா, சமீபகாலமா பார்க்கிற/படிக்கிற/கேள்விப்படுகிற பல செய்திகளைப் பார்த்தா, மனுசனை இனிமே சமுதாய விலங்குன்னு சொல்லாம வெறும் விலங்குன்னுதான் சொல்லனும் போலிருக்கு! இப்படிச் சொன்னாக்கூட சில பேர் சண்டைக்கு வந்துடுவாங்க. ஏன்னா, மனுசனைப்போய் விலங்குன்னு சொல்லி விலங்குகளை கேவலப்படுத்திட்டேன்னு?! அவங்க மேல கோபப்படுறதுல எந்த அர்த்தமும் இல்ல. அதுக்கு பதிலா ஏன் இப்படி ஒரு கீழ்/அவல நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டது அப்படீன்னு யோசிக்கறதுதான் புத்திசாலித்தனம்!

அப்படி யோசிச்சோமுன்னா, நமக்காக மட்டுமே செலவிடுற 90% நேரத்துல, கொஞ்சத்தைக்கூட நம்மைச் சுத்தி இருக்குற மனுசங்களுக்கும் (முடிஞ்சா ஏனைய உயிர்களோட நன்மைக்காகவும்) செலவிடாம நாம எல்லாருமே, சுயநலமா வாழுறதுனாலதான் மனுசனுக்கு இப்படியொரு அவல நிலைன்னு உங்களுக்கு புரியலாம்! சரி புரிஞ்சா என்ன செய்யமுடியும்னு நீங்க கேக்கலாம். அதைச்சொல்லத்தான் இந்தப் பதிவு. வாங்க என்னன்னு பார்ப்போம்….

நம்மால முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு உதவி செய்யனும்னு சொன்னா, “நம்ம தினசரி வாழ்க்கையில, நம்மோட வேலைகளை செய்யவே நேரம் பத்த மாட்டேங்குது, இதுல எங்கே போய் நம்ம நேரத்தை மத்தவங்களுக்காக செலவிடுறதுன்னு” சிலர் அலுத்துக்கலாம். உண்மைதான். ஆனா நம்ம தினசரி வாழ்க்கையில, நம்மலோட நேரமா நாம நினைக்கிற நேரத்துல பல நிமிடங்கள் நம்மலோடது இல்லைங்கிறதுதான் யதார்த்தம். உதாரணமா, நாம எங்கே, எதிலே போனாலும், போக்குவரத்து நெரிசல் காரணமா தாமதமாக/பொறுத்திருக்க வேண்டிய நேரத்தைச் சொல்லலாம்.

இது எப்படி இருக்குன்னா, “வரும்…..ஆனா வராது” அப்படீங்கிற என்னத்தக் கண்ணையா நகைச்சுவை மாதிரி. அதனால, “உங்களோட…..ஆனா உஙகளோட இல்லை” அப்படீங்கிற வரையறைக்குட்பட்ட அந்த நேரத்துல கொஞ்சத்த நாம மத்தவங்களுக்காக செலவிடலாம்!

என்னது, போக்குவரத்து நெரிசல் காரணமா கிடைக்குற சொற்ப நேரத்தை மத்தவங்களுக்காக செலவிடலாமா?! என்ன இது சுத்த மடத்தனமான யோசனையா இருக்குன்னு யோசிக்கிறீங்களா? கண்டிப்பா இல்ல!

முகம்தெரியாத மனிதர்களுடன் ஒரு முடிச்சு!

படம்: pic4news.com

ஏன்னா, நம்ம தினசரி வாழ்க்கையோட ஒரு அங்கமாகிப்போன ஆம்புலன்ஸ் (அவசர சிகிச்சை வாகனம்?) வண்டியை, ஒரு நாள்ல ஒருமுறையாவது நாம கடந்துபோற வாய்ப்பு கண்டிப்பா நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கும். அப்படி ஒரு ஆம்புலன்ஸ் நம்மைக் கடந்துபோகும்போது, “பாவம், யாரோ எவுரோ, ஏதோ இக்கட்டான நிலைமையில மருத்துவமனைக்குப் போறாங்க” அப்படீங்கிறதோட நிறுத்திக்கிட்டு, சரி சரி சீக்கிரம் போங்கப்பா, வேலைக்கு நேரமாச்சி அப்படீன்னு அடிச்சி புடிச்சி நாம போக வேண்டிய இடத்துல உடனே போறதைத்தான் செஞ்சிருப்போம் இதுவரைக்கும். இல்லீங்களா?

ஆனா, இனிமே ஒரு ஆம்புலன்ஸ் நம்மைக் கடந்துசெல்லும்போது, அதுக்குள்ளே இக்கட்டான நிலையிலேயோ, உயிருக்கு போராடிக்கொண்டோயிருக்கும் முகம்தெரியாத அந்த நபருக்காக, நம்மோட ஒரு சில விநாடி அல்லது நிமிடங்களைச் செல்வு செய்து, அவர்களின் உபாதை விரைவில் குணமடைந்து, அவரும் அவரது குடும்பத்தாரும், நம்மைப் போலவே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பிரார்த்தனை செய்வோம். ஆத்திகர்கள் சரி, கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் என்ன செய்வது? ஒன்னும் பிரச்சினையில்ல, சம்பந்தப்பட்டவர் நல்லா இருக்கனும், குணமடையனும்னு எண்ணுகிற உணர்வு மட்டுமே போதும். அதனால, நாத்திகர்கள் அவங்க குணமடையனும்னு நெனச்சா மட்டுமே போதுமானது

இப்படி நம்ம தினசரி வாழ்க்கையில கிடைக்கிற சொற்ப நேரத்துல, நம்மைச் சுத்தி வாழ்பவர்களின் நலனுக்காக நாம நெறையவே பங்காற்ற முடியும். இதைப்படிக்கும் சிலர், மத்தவங்களுக்காக ஒன்னும் செய்யாம, அவங்க நல்லா இருக்கனும்னு வெறுமே நினைக்கிறதுனால என்ன பெருசா ஆயிடப்போகுதுன்னு சந்தேகப்படலாம். கண்டிப்பா  நல்லது நடக்கும்.

ஏன்னா, “எண்ணத்தப் போல வாழுடி மகளே” அப்படீன்னு ஒரு பழமொழி உண்டு கிராமப்புறங்கள்ல. அதுக்கு, நாம நினைக்குறது கண்டிப்பா நடக்கும். ஆனா, நம்மோட அந்த எண்ணத்தோட தீவிரத்தன்மையைப் பொறுத்து அது நடப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்னு சில ஆய்வுகளிலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று எழுத்தாளர் திரு.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள், அவருடைய “எண்ணங்கள்” அப்படீங்கிற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சின்ன வயசுல இந்த விஷயங்கள் கேள்விப்பட்டது இப்போ நினைவுக்கு வருகிறது.

அதனால, முடிஞ்சவரைக்கும் இப்படியொரு பழக்கத்தை, நம்மோட தினசரி வாழ்க்கையில வழக்கப்படுத்திக்க முயற்ச்சி பண்ணுவோம். அதுமட்டுமில்லாம, இம்மாதிரியான சின்ன சின்ன செயல்கள் உங்களுக்குத் தெரிஞ்சா, என்னோடயும், நம்ம வாசகர்களோடயும் தயவு செஞ்சு மறுமொழிமூலம் பகிர்ந்துக்குங்க. இல்லைன்னா, உங்களுக்குத் தெரிஞ்ச அந்த சின்னச் செயல் குறித்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க (harinarayananj@gmail.com). அதை உங்க பெயரோடு, ஒரு பதிவா பதுவு செஞ்சுடுறேன்.

மேலும், இப்போ இருக்குற பணிச்சூழல் காரணமா, முன்புபோல அறிவியல் பதிவுகளை அடிக்கடி எழுத முடியறதுல்ல. அதனால, இனிமே மேலிருப்பான்ல சின்ன சின்ன செயல்கள் (சி.சி.செ) அப்படீங்கிற தலைப்புல எனக்கு தெரியவரும் விஷயங்களை பகிர்ந்துக்க முடிவு செஞ்சுருக்கேன். அதுக்கான உங்களோட மேலான ஆதரவையும் எதிர்பார்க்குறேன். அதேசமயம், நல்ல அறிவியல் கொஞ்சம் தாமதமா வந்தாலும், தொடர்ந்து மேலிருப்பான்ல வரும் அப்படீங்கிறதையும் தெரிவிச்சுக்கிறேன். நன்றி

(இந்தப் பதிவு எழுத தூண்டுதலாக அமைந்த தோழி நந்தினிக்கும், அவரது பதிவுப்பகிர்வுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்)

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements