ஆபத்து: உலக மக்கள்தொகையை உள்ளடக்க 2030-ஆம் ஆண்டில் இரண்டு பூமி வேண்டும், ஆய்வு!!

Posted on ஒக்ரோபர் 30, 2010

18


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

இருதயநலத்தை பாதுகாக்க உடல் எடையைக் குறைப்பது மிக மிக அவசியம். ஆனா, எடையை மிக மிக குறுகியகாலத்துல (ஓவர்னைட்ல) குறைக்கனும்னு நெனக்கிறது/முயற்ச்சி செய்யுறது அபத்தம்! அது ஒரு நீண்ட நாள் முயற்ச்சியா இருக்கனும்! அந்த முயற்ச்சியில உடற்பயிற்ச்சியும், உடல் உழைப்பும் முக்கிய அம்சமா இருக்க வேண்டியதும் அவசியம்!

உலக மக்கள்தொகைப் பெருக்கத்தோட ஆபத்தான விளைவுகளைப் பத்தி சொல்லனும்னா,  நேரடியாவே உலக அழிவுன்னு ரெண்டே வார்த்தையிலையும் சொல்லலாம், அப்படியில்லைன்னா உணவுப்பற்றாக்குறையில ஆரம்பிச்சி, சுற்றுச்சூழல் சீர்கேடு, இயற்கை சமநிலை சீர்குலைவு இப்படி சொல்லிக்கிட்டே போய் கடைசியில உலக அழிவுன்னு நீட்டி முழக்கியும் சொல்லலாம். நாம இப்படிச்சொல்லி முடிக்கிறதுக்குள்ளேயே சில அல்லது பல லட்சம் குழந்தைகளோ/உயிர்களோ புதிதாகப் பிறந்திருக்கும் இந்த உலகத்துல அப்படீங்கிறதுதான் நிதர்சனம்!

ஏன்னா, மக்கள்தொகைப் பெருக்கம் அப்படி ஒரு வேகத்துல போய்க்கிட்டிருக்கு. ஆனா, இன்னொரு விஷயமும் பல வருஷமா நடந்துகிட்டுதான் இருக்கு. அது என்னன்னா, நாம எப்படிச் சொன்னாலும், “நீங்க என்ன வேணும்னாலும் சொல்லிக்கிட்டே இருங்க, நான் எம்பாட்டுக்கு புள்ளக் குட்டிகளைப் பெத்துப்போட்டு, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு பொதுச்சேவை (?) செஞ்சுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கேன்”னு பல குடி’மகன்களும், குடிமகள்களும் குழந்தைத் தொழிற்சாலையின் பொறுப்பான ஊழியர்களா இருந்துக்கிட்டு இருக்குறாங்கன்றதுதான்!

அதனால, இவங்களுக்கெல்லாம் நல்லா உறைக்கிற மாதிரி, மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்பான பாதகங்கள எடுத்துச்சொல்ல வேண்டியது (படித்த/படிக்காத) நம்ம ஒவ்வொருத்தரோட கடமை! உறைக்கிற மாதிரின்னா எப்படிச் சொல்றதுன்னு ஒரே குழப்பமா இருக்குதுங்களா?

கவலைய விடுங்க! படித்த/படிக்காத பாமர மக்கள்னு எல்லாத்தரப்பு மக்களுக்கும், மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்பான விளைவுகள்னால என்ன ஆகும்னு, பட்டுன்னு புரியுற மாதிரி சொல்ற வேலைய சுலமாச் செய்யுது சமீபத்தில் வெளியான, உலக வனவாழ்வு நிதி நிறுவனத்தின் “வாழும் கோள்” (“Living Planet” report by WWF) என்னும் ஒரு ஆய்வறிக்கை! அதப்பத்திதான் நாம இந்தப் பதிவுல கொஞ்சம் விலாவாரியா பார்க்கப்போறோம்……

2030-ல் புத்தம் புது பூமி வேண்டும்!

வாழும் கோள் அறிக்கை

இப்போ நாம “யார் வீட்டு “……”, பாய்போட்டு அழுவு” அப்படீங்கிற மாதிரி, இயற்கை சமநிலை சீர்குலைஞ்சா நமக்கென்ன, தாவர-விலங்குகள் அழிஞ்சுபோனா நமக்கென்ன, கரிமள வாயு அதிகமானா நமக்கென்ன, ஓசோன் படலத்துல ஓட்டை விழுந்தா நமக்கென்ன (இப்படி இன்னும் எண்ணற்ற அவலங்கள்) எது நடந்தாலும் எனக்கென்னன்னும், எனக்கும் என் குடும்பத்துக்கும் மூனு வேளை சாப்பாடு, இருக்குறதுக்கு வீடு, வாழ்க்கையை அனுபவிக்கிறதுக்கு வேலை/பணம் இது இருந்தாப் போதும்னும், சுத்தி நடக்குற எல்லாப் பிரச்சினைகளையும் கண்டுக்காம, அசட்டையா இருந்துவந்ததுனால……

நாம் வாழும் இந்த பூமியின், இயற்கை வளங்களின் அளவுக்கதிகமான பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிக மிக அதிகமாக ஆகிவிட்ட காரணத்தால், தற்போதைய உலக நிலவரம் (எல்லாவகையிலும்) தொடரும்பட்சத்தில், உலக மக்கள் மற்றும் பிற ஜீவராசிகளின் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டுமென்றால், வருகிற 2030 ஆண்டில் மற்றுமொரு பூமி அவசியம் என்கிறது உலக வனவாழ்வு நிதி நிறுவனத்தின் “வாழும் கோள்” ஆய்வறிக்கை!

என்னங்க இப்போ புரியுதா, நாம எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில இருக்கோமுன்னு? என்னத்த புரிஞ்சு என்னத்த பண்ண?! ஏன்னா, இதையும் கேட்டுட்டு, நம்ம ஆளுங்க சில/பல பேரு, நம்ம வடிவேலு மாதிரி, “ஆஹா…..கெளம்பிட்டான்யா, கெளம்பிட்டான்யா”ன்னு நம்மளப்பத்தி நாலு நக்கலு, கிண்டலு எல்லாத்தையும் பண்ணி கெக்கே பெக்கேன்னு சிரிச்சுட்டு, பத்தோட பதினொன்னா, இந்தச் செய்தியை குப்பையில போட்டுட்டு, திரும்பவும் அவங்கவங்க “வேலை”கள்ல இறங்கிடுவாங்க எப்பவும்போல!

இன்னும் சிலர், “உலக அழிவு பத்தி எவ்வளவோ படிச்சிட்டோம், இதப் படிக்க மாட்டோமா என்ன” அப்படீன்னு சர்வ சாதாரணமாவும் சொல்லிட்டுப் போயிடுவாங்க?! ஆனா, ஒன்னுங்க. சில நாட்களுக்கு முன்னாடிதான், இன்னும் நூறு வருடங்களில் உலக அழிவுன்னு விஞ்ஞானி திரு. ஃப்ராங்க் ஃபென்னர் சொல்லியிருந்ததப்பத்தி ஒரு பதிவு எழுதினேன் மேலிருப்பான்ல! இப்போ, 2030-ல இன்னொரு பூமி வேணுமுன்னு இன்னொரு செய்தி வந்துடுச்சி! ஆக, “மக்கள்தொகைப் பெருக்கத்துல நாம எவ்வளவு வேகமா இருக்கோமோ அதைவிட பல மடங்கு வேகத்துல உலக அழிவு நம்மள நெருங்கிக்கிட்டு இருக்குதோ”ன்னு ஒரு உணர்வு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை இம்மாதிரியான செய்திகளைப் படிக்கும்போது! வாழும் கோள்/living planet பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே

ஏன் 2030-ல் இரண்டு பூமி வேண்டும்?

உலக வாழ்க்கையின் பல்வேறு கூறுகளின் கணக்கெடுப்புப்படி, கடந்த 2007 ஆம் ஆண்டிலேயே, உலக மக்கள்தொகையான சுமார் 6.8 பில்லியன் (680 கோடி) மக்கள், பூமியின் வாழ்க்கைநிலை வரையரைகளைத் தாண்டி, சுமார் 50% அதிகமாக பூமியின் வளங்களைப் பயன்படுத்தி வருவதாக உலக வனவாழ்வு நிதி நிறுவனத்தின் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

 1. வருங்கால உலக மக்கள்தொகைப் பெருக்கம், நுகர்வு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிவற்றுக்கான மிக குறைந்தபட்ச அளவீடுகள்/அணுமானங்களினடிப்படையில் பார்த்தாலே, தற்போதைய நிலவரப்படியுள்ள கரிமள வாயு கழிவு அதிகரிப்பு மற்றும் இயற்கை வளப் பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கவும், உலக மக்களை உள்ளடக்கவும், வருகிற 2030 ஆம் ஆண்டுவாக்கில், மற்றுமொரு பூமி கண்டிப்பாக தேவைப்படும் என்கிறது வாழும் கோள் ஆய்வறிக்கை!
 2. அதுமட்டுமில்லாமல், தற்போதுள்ள நிலவரப்படி ஒரு சராசரி அமெரிக்கப் பிரஜை பயன்படுத்துமளவுக்கு உலக மக்கள் அனைவரும், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் பட்சத்தில், 2030-ல் இரண்டு பூமியல்ல, மொத்தம் நான்கரை பூமி தேவைப்படுமாம்! அடப்பாவிகளா……???

இத்தகைய ஒரு அறிக்கையானது, கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி, ஜப்பானின் நகோயா நகரில் நடந்த, ஐக்கிய நாடுகள் சபையின் “உயிரியல் பல்லுயிர் வளர்ச்சி” சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்பட்ட, “உலக உயிரின அழிவு” பற்றிய கருத்தரங்கு/கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது!

உலக உயிரின அழிவு கருத்தரங்கில், உயிரின அழிவானது உலகளவில் சுமார் 30% என்றும், பூமியின் மத்திய ரேகையை ஒட்டிய நாடுகளான ட்ராபிக்ஸில் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையில், சுமார் 60% என்றும் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்கள் உயிரியல் வல்லுனர்கள் என்பது நாம் எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று!

குறைந்த வருமானமுள்ள, மத்திய ரேகையை ஒட்டிய நாடுகளில் ஏற்படும் உயிரின அழிவானது மிக மிக அதிகமான வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும், ஆனால் வளர்ந்த நாடுகளில் எதுவுமே நடக்காதது போல, அமைதிப்பூங்காவான ஒரு மாய உலகத்தில், அளவுக்கதிமான இயற்கை வள நுகர்வு மற்றும் கரிமள வாயு கழிவு வெளியேற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் மற்றுமொரு இடியைத் தூக்கித் தலையில் போடுகிறார் உலக வனவாழ்வு நிதி நிறுவனத்தின் இயக்குனரான திரு.ஜிம் லீப் (Jim Leape, director general of WWF International).

ஆக, ஒன்னும் சொல்றதுக்கில்ல?! “எங்கே செல்லும் இந்தப் பாதை…..யாரோ யாரோ அறிவார்”தான்!!

ஆமா, இதுக்கெல்லாம் முக்கிய காரணம் என்ன?

“ஏய், அதெல்லாம் சரிதாம்ப்பா! இதுக்கெல்லாம் முக்கிய காரணம் என்னன்னுதான் கொஞ்சம் எடுத்துச்சொல்லேன், குறைந்தபட்சம் இனிமேலாவது உலக அழிவை தடுக்க முயற்ச்சி பண்ணுவோம்” அப்படீன்னு கேக்குறீங்களா?! (“ஆமா, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன புண்ணியம்?” அப்படீன்னு நக்கல், நையாண்டி செய்கிற அவநம்பிக்கையாளர்களும், வாய்ப்பேச்சு வீரர்களும், அதிபுத்திசாலிகளும் மன்னிக்க. “நம்மால முடிஞ்ச எதையாவது செஞ்சுத்தான் பார்ப்போமே” அப்படீன்னு நம்பிக்கையுடன் உலக அழிவை/வாழ்க்கையை எதிர்நோக்கும் நம்பிக்கையாளர்களும், களப்பணியாளர்களும் மேலே வாசிக்க!)

உலகின் தற்போதைய இந்த அவலநிலைக்கு, முக்கிய காரணங்களாக இந்த ஆய்வறிக்கை முன்வைக்கும் கருத்துக்களாவன:

 1. இதுவரையிலான மற்றும் கடந்த 50 வருடங்களாக 11 மடங்கு அதிகரித்துள்ள கரிமள வாயு வெளியேற்றம்/பெருக்கம்
 2. கரிமள வாயு வெளியேற்றத்தில் முதலிடம் வகிக்கும் உலகின் முதல் பத்து நாடுகளாவன: அரபு நாடுகள், கட்டார், டென்மார்க், பெல்ஜியம், அமெரிக்கா, எஸ்டொனியா, கனடா, ஆஸ்திரேலியா, குவைத் மற்றும் அயர்லாந்து!

கரிமள வாயு பெருக்கத்தைக் குறைக்க மாற்று ஏற்பாடுகள் எதாவது இருக்குதா?

photo credit: examiner.com

உலக வனவாழ்வு நிதி நிறுவன கூற்றுப்படி, அதிக அளவு கரிமள வாயு வெளியேற்றம்/கழிவு இல்லாமலேயே அதிகபட்ச வளர்ச்சியை அடைய முடியும். அதற்க்கு நம் உணவுப் பழக்கம் மற்றும் சக்தி நுகர்வு ஆகியவற்றில் நாம் சில தேர்வுமாற்றங்களை செய்தாலே போதும்!”

கரிமள வாயு பெருக்கத்தைக் குறைக்க மேலும் சில மாற்று ஏற்பாடுகள்:

விவசாயம்/தோட்டக்கலை:

 • ரசாயனக் களைக்கொல்லிகளை தவிர்த்து இயற்கைவழியில் களைகளை அகற்ற வேண்டும்
 • இலைகளை எரிக்காமல், மக்கவைத்துப் பின் உரமாக பயன்படுத்த வேண்டும்
 • மரக்கன்றுகளை நட வேண்டும்
 • இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்
 • விவசாயத்துக்கு உதவும் வாகனங்களுக்கு “பயோடீசல்” பயன்படுத்துங்கள் (இது நம்ம ஊர்ல இல்லைன்னு நெனக்கிறேன்?!

இது தவிர வேறு வழிகள் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்……

அலுவலகம்:

 • ஜெராக்ஸ் அல்லது நகல் எடுக்கும் தேவைகளை குறையுங்கள், தாள்களில் இரண்டு பக்கமும் அச்சடியுங்கள்
 • மறுசுழற்ச்சி செய்யப்பட்ட தாள்களையே பயன்படுத்துங்கள்
 • சுற்றுச்சூழலுக்கு உகந்த “சோயா இன்க்” (Soy based ink) பயன்படுத்த முயற்ச்சியுங்கள்
 • மின்சார விளக்குகள்/சாதனங்களை தேவை இல்லாதபோது அனைத்துவிடுங்கள்
 • மறு உபயோகத்துக்கு உகந்த பாட்டில்களை பயன்படுத்துங்கள்
 • பேப்பர் உபயோகத்தைக் குறைத்து, மாற்றாக துணிகளை பயன்படுத்துங்கள்
 • அலுவலகத்துக்கு வாகனத்தில் செல்ல நெரிசல் குறைந்த நேரத்தையும், வாகனத்தைத் தவிர்த்து பொது போக்குவரத்து (ரயில், பேருந்து) வாகனங்களை பயன்படுத்துங்கள்
 • குளிரூட்டும் சாதனங்களின் தேவை குறையுங்கள்
 • ப்ளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைத்து விடுங்கள்

இது தவிர வேறு வழிகள் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்……

உணவு:

 • மாமிச உணவுகளை குறைத்து/தவிர்த்து, தாவரம் சார்ந்த உணவுகளை தேர்வுசெய்யுங்கள்
 • கடல் சார்ந்த உணவுகள்/மீன்களை அதிகம் உண்ணுங்கள் (இதிலும் அழியும் நிலையில் உள்ளவற்றை தவிர்த்து, பிற மீன்களை உண்ணுங்கள்
 • காய்கறி/பழம்/மளிகை வாங்க அருகில் உள்ள கடையை தேர்ந்தெடுத்து, சொந்தத் துணிப் பையை கொண்டுசெல்லுங்கள்
 • கடையிலும் இயற்கை/இயற்கை வழியில் உற்பத்தி செய்த உணவுகளையே அதிகம் வாங்குங்கள்

இது தவிர வேறு வழிகள் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்……

மாற்று சக்தி தேர்வுகள்:

 • நம் தினசரி சக்தி (Energy) தேவைக்கு, சூரிய ஒளி சக்தி (Solar energy), காற்றுமூலம் உருவாக்கப்படும் சக்தி (Wind energy) பயன்படுத்தத் தொடங்குங்கள்
 • கணினி பயன்பாட்டை குறையுங்கள்/தேவையில்லாத போது அனைத்துவிடுங்கள்
 • சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான சக்தி தேர்வுகளையே செய்யுங்கள்

இது தவிர வேறு வழிகள் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்……

இரண்டு பூமிக்கான தேவையை தவிர்க்க என்னதான் வழி/தீர்வு?

“வாழும் கோள் ஆய்வறிக்கை முன்வைக்கும் சவால் மிக மிகத் தெளிவான ஒன்று. அசுரவேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் உலக மக்களின் தேவைகளை, இருக்கும் ஒரு பூமியின் வளங்களைக் கொண்டே பூர்த்திசெய்து கொள்ள “எப்படியாவது (?), ஏதாவது (?) ஒரு வழியை நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றும், நாம் அனைவரும், நாம் என்ன உண்ண வேண்டும் மற்றும் எப்படி சக்தியை உற்பத்தி செய்ய மற்றும் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த நம் தேர்வுகளை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும் என்கிறார் உலக வனவாழ்வு நிதி நிறுவனத்தின் இயக்குனரான திரு.ஜிம் லீப்!

அவரு சொல்றது இருக்கட்டும், நம் ஒவ்வொருவரில் வித்தியாசமான வாழ்க்கைமுறை வரையறைகளுக்குட்பட்டு, இந்தப் பிரச்சினையை நம்மால என்னென்ன செய்ய முடியும்னு நல்லா யோசிச்சு, நம்ம தினசரி வாழ்க்கைத்தேர்வுகளை புத்திசாலித்தனமா செய்ய முயற்ச்சி பண்ணுவோம்.

நான் மேலே சொல்லியிருக்குறது எனக்குத் தெரிஞ்ச மிகக் குறைந்தபட்ச பரிந்துரைகளைத்தான். அதில் தவறுகளும் இருக்கலாம். அதனால, உங்களுக்குத் தெரிஞ்ச பரிந்துரைகளை தயவுசெஞ்சு கொஞ்சம் மறுமொழியில எழுதிட்டுப் போனீங்கன்னா நம்ம எல்லாரோட வாழ்க்கைக்குமே அது நல்லா இருக்கும்!

அப்புறம், மிக மிக முக்கியமா……

 1. “மக்கள்தொகையை குறைக்க/கட்டுப்படுத்த முயற்ச்சி பண்ணனும். அதுக்காக நாம கல்யாணம் பண்ணி குழந்தைகளை அதிகமா பெத்துக்காம இருந்துட்டா மட்டும் போதாது.
 2. நம்மைச் சார்ந்த படித்த/படிக்காத/பாமர மக்களுக்கு மக்கள்தொகைப் பெருக்கத்துனால ஏற்படுற பாதகங்கள வாய்ப்பு கிடைக்கும்போது எடுத்துச்சொல்லி புரியவச்சி, அவங்களையும் மக்கள்தொகைப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தூண்ட வேண்டும்!”

தொடர்புடைய சில பதிவுகள்:

தாவரம், விலங்கு (இயற்கை) ரொம்ப பாவமுங்க….ஒரு வாசகரின் கோபம்!!

உலக அழிவு: இன்னும் 100 வருடங்களில் அழியப்போகும் ‘மனித’ இனம்!!

டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியப்போகிறது?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements