தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!

Posted on ஒக்ரோபர் 22, 2010

31


இன்று ஒரு இருதய நலக்குறிப்பு:

ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும் அவசரமில்லாமல், மெதுவாக உண்ணவேண்டியது அவசியம். இரவு உணவு எளிதில் செரிமானமாகக்கூடிய, குறைந்த கொழுப்புள்ள உணவாக இருக்கவேண்டும்! மேலும், உடல்பருமன் ஒரு முக்கியக்காரணமான தொலைக்காட்சியை, உணவு உண்ணும்போதும் தவிர்த்தல் நலம்!

இந்த உலகத்துல பிறந்து வளர்கிற ஒவ்வொருவருக்கும் பல கனவுகளுண்டு. அவற்றில் 99% தன்னலத்துடன் தொடர்புடையது! இதை (தக்க ஆதாரங்களுடன்) மறுப்பவர்கள் யாரேனும் இருப்பின், அவர்களுக்கு என் தலைவணக்கம்! ஆனா, 99% பொதுநலமும் வெறும் 1% தன்னலமும் (அதுகூட தன்னலமில்ல, இயற்க்கை நியதி/வாழ்க்கையின் போக்கு!) இருக்குறவங்கள கண்டிப்பா விரல்விட்டு எண்ணி விடலாம். அவர்கள்ல ஒருத்தரப்பத்தித்தான் இந்தப் பதிவு. அதுக்காக அறிவியல் பதிவு எழுதலைன்னு நான் மன்னிப்பெல்லாம் உங்கக்கிட்டு கேட்கப்போறதில்லை. ஏன்னா, இந்தப் பதிவு முன்வைக்கப்போற செய்திதான் வாழ்வாதாரம், அதுவும் பலவகையில் அறிவியலே!

இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் பதிவை நான் எழுதுறது, “சத்தியமா, நானும் ரொம்ப நல்லவன்னு” காமிச்சிக்கிறதுக்காக இல்லவே இல்லை!! ஏன்னா, என்னைச்சுற்றி வாழும் சராசரிகள் மாதிரியே, என்னைப்பற்றியே 99% எண்ணி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நானும் ஒரு சுயநலவாதியே! அதனால, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாம (?) நீங்க மேல படிக்கலாம்……

சரி இப்போ நாம விஷயத்துக்கு வருவோம்……

இப்பத்திக்கு, நம்ம தமிழ் நாட்டோட சூப்பர் ஸ்டாரு யாரு? சத்தியமா இதுவரைக்கும் எனக்கு யாருமே சூப்பர் ஸ்டாரா தெரியல! ஆனா, அப்படியொரு பட்டத்துக்கு சிலர் ஆசைப்படாமலே அவர்களுக்கு கிடைச்சிருக்கறதாவும், இன்னும் பலர் அந்தப் பட்டத்தை எப்படியாவது நாம வாங்கிடனும்னு, ஒரே ஆளா 100 பேரை பறந்து, பறந்து அடிக்கிறதும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் தெய்வம்னு சொல்லுறதும், இலவச திருமணங்கள் நடத்தி வக்கிறதும், ஏழைகளுக்கு பிரியாணி வாங்கி போடுறதுமா சினிமாவுலயும், எப்பவாவது தீபாவளி/பொங்கலுக்கு நிஜவாழ்க்கையிலயுமாவும் செஞ்சுகிட்டு இருக்குறதா அப்பப்போ செய்திகள்ல படிக்கிறதுண்டு!

இவுகள்லாம் எப்படி சூப்பர் ஸ்டாரானாங்க?

நம்ம ரசிகப்பெருமக்கள், ஒரு சினிமா கதாநாயகனோட ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போது தவறாம, (ஏழை-பாழை/ஆதரவற்றோர் இப்படி…) பலபேரோட ஒரு நாள்/பல நாள் பட்டினியை போக்கக்கூடிய பல நூறு லிட்டர் பாலையும், மோரையும் கட்டிட உயரத்துக்கு எழுப்பப்பட்டிருக்குற அவுகவுக சினிமா கதாநாயகத்தலைவர்களோட கட் அவுட்கள்ல, கீழே விழுந்து செத்துப்போனாலும் பரவாயில்லைன்னு ஊத்துறதுனாலயும், முதல் நாள் படம் பார்க்க எத்தன ஆயிரம் கொடுத்துவேணும்னாலும் டிக்கெட் வாங்கி பார்க்குறதுனாலயும், இன்னும் (எனக்குத் தெரியாத/புரியாத) பல காரணங்கள்னாலயும்தான்! ஆனா, இதுல 99% நிழலுலக அசாத்தியங்கள் சம்பந்தப்பட்டது!!

அதுமட்டுமில்லாம, ஆனா ரொம்ப முக்கியமா இவுகளோட ஒரு படம் வெளியாச்சுன்னா, இந்த ஊடகங்கள்ல (இப்போ வலையுலகத்தையும் சேர்த்து) வர்ற செய்திகள், விமர்சனங்கள் இருக்கே, யப்பா….., கணினியில பார்க்கும்போதே முழி பிதுங்கிடும். அவ்வளவு செய்திகள் இருக்கும். இதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச செய்திதான். அதனால, இனிமேலும் உங்க பொறுமையை சோதிக்காம, தமிழ் நாட்டோட புதிய சூப்பர் ஸ்டார் பத்தின சி.என்.என் அறிவிப்புக்கே போயிடலாம் வாங்க…..

தமிழகத்தின் புதிய சூப்பர் ஸ்டார், மதுரையைச் சேர்ந்த “நாராயணன் கிருஷ்ணன்”!!

இன்னிக்கு சக பதிவர் ஒருத்தரோட பதிவுல, CNN நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், நடத்திவரும் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படீங்கிற போட்டியின் ஒரு வேட்பாளரா, நம்ம மதுரையைச் சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதா படிக்க நேர்ந்தது. “அட இங்கப்பார்ரா”, அப்படீன்னு ஒரு சக தமிழனா பெருமைப்பட்டுக்கிட்டு, அவரைப்பத்தி விவராமாப்படிக்க சில தொடர்புகளுக்கு போனேன். அவரப்பத்தி ஒவ்வொரு விஷயம் படிக்கும்போதும், நெகிழ்ச்சியாகவும், குற்ற உணர்ச்சியுடனும், நாமளும் ஏதாவது செய்யனும்னும், அவருக்கு/அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவி செய்யனும்னும், பலவிதமான உணர்வுகள் மனசை ஒரு மாதிரி இம்சை பண்ண ஆரம்பிச்சிட்டுது.

அதான், அவரு 2010-ன் தலைசிறந்த ஹீரோவா ஆகுறதுக்கு,  அவருக்கு உங்களோட ஓட்டுப்போடச் சொல்லி கேட்டுக்கிட்டு, அவரு ஹீரோ ஆகுறது மூலமா, இந்த நாட்டோட, தமிழகத்தோட அசிங்கமான பல முகங்கள்ல ஒன்றான, வறுமையை ஒழிக்க மற்றும் சமுதாய அக்கரையின்மை, பொதுநலத்தன்மை இதையெல்லாம் வளர்த்துக்க, நமக்கு ஒரு உந்துசக்தி, ஊக்கம், இடித்துறைத்தல், வழிகாட்டியா திரு. நாராயணன் கிருஷ்ணன் அவர்களுடைய லட்சியம் , கொள்கைகளப்பத்தி  கொஞ்சம் எழுதலாமேன்னு இப்படியொரு பதிவை எழுதுறேன்!

யார் இந்த நாராயணன் கிருஷ்ணன்?

என்னை மாதிரி, உங்கள மாதிரி பள்ளிப்படிப்பை முடிச்சுக்கிட்டு, சமையற்கலையில் தங்கப்பதக்கத்துடன் பட்டப்படிப்பை முடிச்சி, பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணியிலமர்ந்தவர்தான் நம்ம ஹீரோ கிருஷ்ணன்! பணியில் சிறந்து, அதற்க்கான அங்கீகாரமாய் பல விருதுகளை வாங்கிய கிருஷ்ணனுக்கு, சுவிட்சர்லாந்தில் பணிபுரிவதற்க்கான ஒரு அரிய வாய்ப்பை ஓட்டல் நிறுவனம் வழங்குகிறது! அந்த வேலைக்குச் செல்ல, வீடு சென்று பெற்றோரிடம் விடைபெற்றுச்செல்ல மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.

அவர் சுவிட்சர்லாந்து செல்வதற்க்குமுன், கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிலில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்க்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞ கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!

ஏன்னா, அப்போ அவரு மனக்கண் முன்னாடி, 500 ரூபாயில் வாங்கிய ஃப்ரைடு ரைசில், பாதியை சாப்பிட்டு, நாகரீக அடிப்படையில் மீதியை அப்படியே விட்டுச்செல்லும், ஐந்து நட்சத்திர ஓட்டலின் மேல்தட்டு வாடிக்கையாளர்களே வந்துசெல்கிறார்கள்! உணவோட மதிப்பு தெரியாம, இல்லாதவர்களின் கனவான உணவை உதாசீனப்படுத்திச்செல்லும், இதுமாதிரியானவங்களுக்கு சமைச்சுப்போட்டு, உள்ளிருக்கும் மனிதத்தைக்கொன்றுவிட்டு, பை நிறைய காசு பார்க்கும், ஒரு சராசரி சமையற்காரனாய் (அதுவும் வெளிநாட்டில்) குப்பைக்கொட்டுவதைவிட, தனக்கான உணவை தானே கேட்டுக்கூட பிச்சையாய் பெறமுடியாத, புத்திசுவாதீனமில்லாத பலரின் தினப்பசியை போக்குவதை மன நிறைவோடு செய்யலாம்னு முடிவு பண்ணிக்கிறாரு! அப்போ அவருக்கு வயசு 21……

அன்றிலிருந்து இன்றுவரை, 29 வயதாகும் கிருஷ்ணன் மதுரையைச் சேர்ந்த புத்திசுவாதீனமில்லாதவர்களுக்கு, தேடிச்சென்று கொடுத்த காலை, மதிய மற்றும் இரவு உணவின் எண்ணிக்கை 12 லட்சம்! இவர் தொண்டு தினசரி 400 பேருக்கு உணவு வழங்குவதுடன் முடிந்துவிடுவதில்லை! அவர்களில் சிலருக்கு முடிதிருத்துவது, நகம்வெட்டுவது தொடங்கி, அவர்கள் இறந்துவிட்டால் கொள்ளி போடுவது வரை நீள்கிறது வேலையைத்துறந்து, பல நல்லுள்ளங்களின் ஆதரவில் பெறும் பணத்தில் உணவளிக்கும் கிருஷ்ணன் அவர்களின் நிகரில்லாத் தொண்டு!

இந்த எட்டுவருட வாழ்க்கைப்பாதையில், தன்னை பெற்றுவளர்த்த தாய் தந்தையரை தன் லட்சியப்பணிக்கு ஆதரவாய் மாற்றியது முதல், “பாவம் கிருஷ்ணனை முனியடித்துவிட்டது” என்று, கண்டவனையும் தலைவனாக எண்ணி வாழும் தங்கள் பரிதாபமான நிலையை உணராமல் முனுமுனுத்த பல தமிழர்களை கடந்து வந்தது வரை, வெற்றிகரமாக இன்னும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா எண்ணும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!

இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! ஆனால், அவரின் நோக்கம் இந்த அங்கீகாரங்களல்ல! இவையெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டுமல்ல! ஏன்னா, அவரோட தாரக மந்திரம், ” ஆதரவற்ற, புத்திசுவாதீனமற்ற என் மக்களைக் காக்க வேண்டும்” என்பது மட்டுமே! ஆனா, உலகளவிலான இந்த அங்கீகாரம், அவருடைய தொண்டுக்கும், தொண்டு நிறுவனமான அக்ஷயாவுக்கும் ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தி, அவரின் தற்போதைய பிரச்சினையான, மாதத்தின் மூன்று நாட்களுக்கு தேவையான 1200 பேரின் மூன்று வேளை உணவைத் தயாரிக்கத் தேவையான பணத்தை அவருக்கு பெற்றுத்தரவும், அவர் தொடர்ந்தும் தொண்டுசெய்யத் தேவையான பணத்தை பெறவும் உதவுமென்றே நம்புகிறேன். (மீதமுள்ள 27 நாட்களுக்கான பணத்தேவை, நம்மிடையேயுள்ள பல நல்லுள்ளங்களின் நன்கொடையினால் நிறைவேற்றப்படுகிறது!).

இதுல கொடுமை என்னன்னா……

அவரோட இந்த எட்டு வருட தொண்டு வாழ்க்கையில, 2004 ஆம் ஆண்டு தொடங்கி அவரை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஊடகத்தார்கள்ல, CNN-IBN தொலைக்காட்சியோட Reliance Real Heroes நிகழ்ச்சியும், இந்தியா டுடே,  தினமலர் ஆகிய பத்திரிக்கைச் செய்திகளின் எண்ணிக்கை வெறும் 10 உட்பட்டவை அப்படீங்கிறதுதான் கொடுமையிலும் கொடுமை!

இந்தப் பதிவு மூலமா நான் சொல்ல/கேட்க நினைக்கிறது என்னன்னா,

சினிமாக்காரங்களையே துரத்தி, துரத்தி படமெடுத்தும், கிசு கிசு செய்தி எழுதியும், ஒரு திரைப்படம் வெளிவரும்போது பக்கம் பக்கமா படம்போட்டும், செய்தி எழுதியும் சினிமாவை வாழ வைக்கிற ஊடகத்தாரும்….,

அதைப்பார்த்து பல நிழலுலக  சூப்பர்ஸ்டார்களை தொடர்ந்து உருவாக்கி, அவர்களின் படங்கள் வெளியாகும்போது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அவர்களையே மீண்டும் மீண்டும் கோடிகளில் புரளச்செய்யும் ரசிகப்பெருமக்களாகிய நாமும்…..,

புத்தி சுவாதீனமில்லாதவங்களுக்கும், நலிந்தவர்களுக்கு தொண்டுசெய்யக்கூட வேணாம், குறைந்தபட்சம்  நமக்கு தெரிந்த/இன்னும் தெரியாத சில பல கிருஷ்ணன்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து இந்த சமுதாயத்தை மேம்படுத்த, உலக அரங்கில் இந்திய-தமிழகத்தை தலைநிமிர்ந்து நடக்கச்செய்ய……,

1. இந்தத் தொடர்புக்குச்சென்று நம்ம புது ( நிஜ உலக) சூப்பர் ஸ்டாரு நாராயணன்  கிருஷ்ணன் 2010-ன் உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்களுள் ஒருவராக தேர்வுபெற ஒரு ஓட்டு போடுவோம்…..

2. முடிஞ்சா நம்மால முடிஞ்ச ஒரு தொகையை, இங்கே போய் நன்கொடையாக கொடுத்து, அது அவரோட தொண்டு நிறுவனத்துக்கு உதவச்செய்வோம்……

3. மிக மிக குறைந்தபட்சமா, இவரப்பத்தின விவரங்கள நம்ம ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் பக்கங்கள்ல வெளிப்படுத்தி, நம்ம நண்பர்களையும், பொதுமக்களையும் இவருக்கு ஓட்டுப்போடவும், உதவவும் சொல்லுவோம்…..

இதையெல்லாம் உங்களச் செய்யச்சொல்லிக்கேட்டுக்கத்தான் இந்தப் பதிவு…….

செய்வீங்களா?

நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் தொண்டு நிறுவன முகவரி இங்கே (http://www.akshayatrust.org/index.php)

தொடர்புடைய சில பதிவுகள்:

இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்ய வேண்டும்?!

சூர்யாவும் சில விதைகளும், இந்தியாவுக்கு பல விருட்சங்களைக் கொடுக்க…..

தாவரம், விலங்கு (இயற்கை) ரொம்ப பாவமுங்க….ஒரு வாசகரின் கோபம்!!

உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements