தாவரம், விலங்கு (இயற்கை) ரொம்ப பாவமுங்க….ஒரு வாசகரின் கோபம்!!

Posted on ஒக்ரோபர் 15, 2010

32


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

கீரைகள், தக்காளி, எலுமிச்சை, கேரட், வெங்காயம், பூண்டு ஆகிய உணவு வகைகள், கொலஸ்டிராலைக் குறைத்து, ப்ரீ ரேடிக்கள்ஸ் என்னும் உடலில் சேரும் நச்சுப்பொருளை எதிர்த்து செயல்படக்கூடியவை. மேலும் பழம் மற்றும் காய்கறி சேர்ந்த பானங்களைக் குடித்தால், அவற்றிலிருக்கும் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் இந்த ப்ரீ ரேடிக்கல் நச்சை குறைத்துச்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறமென்னங்க, உங்க அன்றாட உணவுமுறையில இவற்றைச் சேர்த்து இருதய நலனைப் பாதுகாத்துக்குங்க!

முதல்ல, ஒரு அறிவியல் பதிவு எழுதவேண்டிய இடத்துல இப்படியொரு பதிவை முன்வைப்பதற்க்காக என்னை மன்னியுங்கள் நண்பர்களே! மேலிருப்பானின் ஒருவருட வலைப்பயணத்தில் இப்படியொரு பதிவு பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையும்கூட. அதற்க்குக் காரணமும் உண்டு! அதை பதிவில் புரிந்துகொள்வீர்கள்! மேலும், இப்பதிவை ஒருவரின் கருத்தாக பாராமல் ஒரு சமூகத்தின் கருத்தாகப் பாவித்து, உங்கள் எதிர்வினைகளை/கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போ மேட்டருக்கு வருவோம்……

விஞ்ஞானம் தொடர்பான என்னோட சில/பல பதிவுகளுக்கு தன்னோட கருத்துக்களைத் தயங்காமல் பதிவுசெய்த, செய்துகொண்டு இருக்கிற, மேலிருப்பான் தளம்மூலம் எனக்கு அறிமுகமான, மேலிருப்பானின் இளம்வாசகர்களுள்  ஒருவரான (?) அபராஜிதன் என்னும் 10 ஆம் வகுப்பு மாணவரின்  எதிர்வினைகளில், பதிவுக்கேற்ற சில கருத்துக்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், இந்தக் கருத்தில் பொதிந்திருக்கும், சாதக-பாதகங்கள், சாத்தியக்கூறுகள், அவசியத்தன்மை, பின்விளைவுகள், முன்னேற்றம் இப்படி பலவகையான உட்கருத்துக்கள்மீதான உங்கள் அனைவரின் கருத்துக்களை அறியவும், அதன்மூலம் உலக நன்மைக்காக (இங்கே ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கனும் நீங்க……

இயற்கை (படம்: விக்கிப்பீடியா)

அதாவது, உலக நன்மைன்னு சொன்னா, அதை “மனுஷங்களோட நன்மை”ன்னு குறுகிய மனம்பான்மை/பார்வையோட பொருள்கொள்கிற என்னை மாதிரி சில/பல பேரு, நம்ம சமுதாயத்துல இருக்காங்க. அதனால, உலக நன்மைன்னா, இயற்கை, ஒரு செல் உயிரிதொடங்கி–தாவரங்கள்–விலங்குகள்வரையிலான, மனிதன் அடங்கிய உயிர்களின் நன்மைக்குன்னு அர்த்தம்) நம் அன்றாட வாழ்க்கைமுறையில் சில/பல மாற்றங்களைச் செய்துகொண்டு, இயற்கைச் சமநிலைக்கேட்டினை சரிசெய்வதில் நம் பங்கு தொண்டினை செய்யவேண்டுமென்பதற்க்காகவுமே! மேலும், அவரின் சில கேள்விகளும், விவாதங்களும் நியாயமானவை என்பதால், அதை வெகுஜன பார்வைக்கு கொண்டுவருவதற்க்காகவும் ஒரு கேள்வி பதிலாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது…..

1. மனிதனை, மனிதனின் நலனை மையப்படுத்தி செய்யும் ஆய்வுகள் அவசியமா, நியாயமானதா/ நடுநிலையானதா? அவற்றைத் தடைசெய்யவேண்டுமல்லவா?

இப்படியொரு கேள்வியை முன்வைத்து அபராஜிதன் விவாதிக்கும் கருத்துக்கள் கீழே…..

அபராஜிதன்: இதுதான் சார், உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம். நீங்க மனிதகுல முன்னேற்றத்திற்க்கு விஞ்ஞானம் அவசியம் அப்படிங்கறீங்க.. நானோ பூமியையும் பிற உயிர்களையும் முன்னிலைப்படுத்தி அவற்றைக் காக்க இவ்வாறான ஆய்வுகளை தடைசெய்யுங்கள் என்கிறேன்..

உலகில் ஆயிரக்கணக்கில் மக்கள் சாவதைப் பற்றிச் சிந்திக்கும் நீங்கள், கோடிக்கணக்கில் உயிரினங்கள் விஞ்ஞானத்தால் சாவதை நினைப்பதில்லையே. ஏனெனில், (எனது கருத்துப்படி) நீங்கள் வெளியில், மனிதனும் ஒரு விலங்குதான் என்பதை ஒத்துக்கொண்டாலும் உங்கள் அடிமனம் இதை ஏற்பதில்லை.. கடவுளின் படைப்பின் உச்சமே மனிதன் எனவும், பிற உயிர்கள் யாவும் மனிதனுக்காகவே படைக்கப்பட்டன எனக்கூறும் ஆபிரகாமியக் கொள்கையையே நீங்கள் அடிமனதால் ஏற்றுக் கொள்கிறீர்கள் என நான் நினைக்கிறேன். (இதுவும் என் (premature conclusion) ஆக இருக்கலாம். ஆனால் நான் என் கருத்துக்களை சொல்லத் தயங்குவதில்லை.. தவறுகள் இருந்தால் மன்னித்து திருத்தவும்)

நீங்கள் ஒரு இந்து என நினைக்கிறேன். எனில், உலகின் மறுகோடியில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை, நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இந்தியனான நீங்கள், இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை ஆதரித்தீர்களா? இல்லைதானே?

எனில், சக நாட்டவருக்கும், சக மதத்தவருக்கும் நீங்கள் காட்டும் கருணையும், மதிப்பும், அபிமானமும் ஏன் சக இனங்களான விலங்குகளிடம் காட்டுவது இல்லை? நாசிக்கள் யூதர்கள் மீது அவர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொடூரமாக ஆய்வுகள் செய்ததை கேட்கும்போது உங்கள் நெஞ்சம் துடிக்காதா? யூதர்களுக்கு இருந்த அதே வலிதானே ஆய்வுக்கூட எலிகளுக்கும் சிம்பன்சிகளுக்கும்?! விலங்குகளால் தெளிவாகச் சிந்திக்க முடியாத காரணத்தினாலேயே அவை ஜடங்கள் ஆகிவிடுமா? உண்மையில், தாங்கள் ஏன் எதற்கு கொல்லப்படுகின்றோம் எனத் தெரிந்து சாகும் யூதர்களை விட, தெரியாமல், கத்த முடியாமல், உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் சாகும் எலிகளும் சிம்பன்சிக்களும்தான் அதிக வலியை அனுபவிக்கின்றன.

மேலிருப்பான்: முற்றிலும் உண்மை! மனிதனின் சுய நலத்துக்காக விலங்குகளையும், தாவரங்களையும் இஷ்டம்போல பயன்படுத்துவது தவறுதான். ஆனால், இதற்க்கான சுமூகமான முடிவு, விலங்குகளை/தாவரங்களை/ஒரு செல் உயிரிகளை பயன்படுத்தும் ஆய்வுகள் மொத்தத்தையும் முற்றிலும் தடைசெய்வதுதானா? இதற்க்கான என் எதிர்வினையை பதிவுசெய்தால், ஒரு ஆய்வாளனாக இருந்துகொண்டு பதிலளிப்பதாக, அது ஓரவஞ்சனையாகவே (partial/biased) இருக்கலாம்/எடுத்துக்கொள்ளவும்படலாம்! அதனால், இந்தக் கேள்விக்கான பதிலை பொதுமக்களிடம் எதிர்பார்க்கிறேன்…..(மறுமொழியில்!)

பொதுமக்கள்: ???

2. தனது தவறுகளை குறைந்த காலத்தை எடுத்துக்கொண்டு சரி செய்யும் இயற்கை, தனக்கு அப்பாற்பட்ட விஷயத்தால் ஏற்படும் பாதிப்பை நீக்க நிச்சயம் அதிக காலம் எடுக்குமல்லவா?

அபராஜிதன்: உதாரணமாக…..

காட்டுச் சூழலில் ஒரு விலங்கினத்தின் (x) எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது என வைத்துக்கொள்வோம். (இதற்கு, எதிரிகள் குறைந்தமை, உணவுக்கான போட்டி குறைந்தமை போன்றவற்றை காரணங்களாக கொள்ளலாம்) இப்போது, குறைந்த கால அவகாசத்தில், அதாவது (x)இனத்தின் உணவாகும் பிற இனங்கள் முழுதாக அழியும் முன்னரே, தானாக, (x)இனத்தின் எதிரிகள் அதிகரிப்பது மூலமோ, ஒரே இனத்துக்குள்ளேயே உணவுக்காக போட்டி அதிகரிப்பது மூலமோ, தொற்று நோய்களின் வேகமான பரம்பல் மூலமோ, இயற்கை அழிவுகள் (காட்டுத்தீ, நிலநடுக்கம்) மூலமோ (x) ஐக் கட்டுப்படுத்தி, மீண்டும் தன் சமநிலையை நிலைநாட்டும்..

ஆனால், மனிதன் விடயத்திலோ, நாம், இயற்கைக்கு பரிச்சயமற்ற முறைகளை (நவீன தொழில்நுட்பம்) பயன்படுத்தி, எமது எதிரிகளையும், சக உணவுப் போட்டியாளர்களையும் வீழ்த்தி நமது ஜனத்தொகையை வெற்றிகரமாக அதிகரிக்கிறோம். எனவே, இயற்கை தனது வழக்கமான அஸ்திரங்களை பிரயோகித்துப் பார்த்தாலும் நாம் அவற்றை பெரும்பாலும் முறியடிக்கிறோம் (ஒரே இனப் போட்டி- GM Food, தொற்றுநோய்-மருத்துவம், அழிவு-தொழிநுட்ப ஆரூடங்கள், etc…) எனவே, இயற்கை தனது சமநிலையை மீளக் கொண்டுவர முட்டி மோதி அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. (கவலைப்படாதீர்கள்.. என்றாவது ஒருநாள் இயற்கை, மனிதனை அழித்து புவியைக் காக்கத்தான் போகிறது)

மேலிருப்பான்: இதுவும் உண்மையே! இதற்க்கு நானும் என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். மனிதனின்/மனிதவாழ்க்கையின் சுயநலத்தை  மட்டுமே கருத்தில்கொண்டு, ஒரு சில நன்மைகளுக்காக, ஒட்டுமொத்த இயற்கையின் சமநிலைக்கு ஆப்பு வைப்பது, ஒரு சக உலக உயிரின் பார்வையிலிருந்து நோக்கினால் எவ்விதத்தில் நியாயமாகாது. அநியாயமே!  மேலும், காசு கொடுத்து நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வது போல என்றுகூடச் சொல்லலாம்!

பொதுமக்கள்: ???

3. உலகை (மனித இனத்தை)க் காப்பதற்காக பூமியை அழிக்க முற்படும் (அல்லது, என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத) முயற்சிகளை தவிர்ப்பது தானே நியாயம்?

அதே போல்தான் உயிரியல் ஆய்வுகளும். இயற்கைச் சமநிலை என்பது, ஒரு புத்தகத்திற்குள் அடக்கக் கூடிய அளவு எளிதானதல்ல.. அது உலகின் எல்லாக் கணினிகளின் மூலமோ அல்லது எல்லா மனிதர்களின் சிந்திக்கும் திறனையும் ஒன்று சேர்த்தாலும் கணக்கிட முடியாத, ப்ரோட்டான் முதல் பிரபஞ்சம் வரை பரவியுள்ள, ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட மிகச் சிக்கலான சமன்பாடுகள் நிரம்பியது. இப்படிப்பட்ட இயற்கைச் சமநிலையில், நாம் எமது நன்மைக்காக, இயற்கைக்கு அப்பாற்பட்டு, இயற்கைக்கு பரிச்சயமல்லாத ஒரு சிறு மாற்றத்தை உண்டாக்கினாலும் அது மிகப்பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஆண் மையப் பார்வை கொண்ட அறிவியல்கள் எல்லாமே இவ்வாறன எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இதற்கு உயிரியல் விதிவிலக்கல்ல..

4. என்னதான் இருந்தாலும் இயற்கைக்கு அப்பாற்பட்டு நாம் செய்யும் காரியங்களின் விளைவுகள் நிச்சயமாக இயற்கைக்கு எதிராகத்தான் இருக்கும்?!

அபராஜிதன்: உதாரணமாக…..

1. முதல்ல மருத்துவத்தை எடுத்துக்கலாம்….பண்டைய காலத்தில் (இயற்கையோடு ஒன்றி) கண்டுபிடிக்கப்பட்டு, இற்றைப்படுத்தப்பட்டு (இயற்கையிலிருந்து சிறிது சிறிதாக விலகி) வந்துள்ள மருந்துகளும், சிகிச்சை முறைகளும் பலகோடி மக்களை, மிக அதிக எண்ணிக்கையில் காப்பாற்றி, இயற்கையின் வழக்கமான நடைமுறையான, இயற்கை சமநிலையை பேணுவதற்கு நோய்கள் பரவுதல், பிரசவத்தின்போதும் அதன் பின்னரும், சுகாதாரக் கேடாலும், எதிரி விலங்குகளாலும் தவறுதலாக மரணங்கள் நிகழ்தல் போன்றவற்றின் விளைவுகளை பெருமளவில் குறைத்து, மனித ஜனத்தொகை இயற்கைச் சமநிலையை உடைத்துக்கொண்டு அதிவேகத்தில் பெருகியதற்கு மிக முக்கியமான காரணங்களாக அமைந்தன.

2. ஆயுதங்கள்: இதுவும், பண்டைய காலத்தில் விலங்குகளிடமிருந்து நம்மை காக்கவும் விலங்குகளை நம் வசதிப்படி கொல்வதற்காகவும் (இயற்கையோடு ஒன்றி) கண்டுபிடிக்கப்பட்டு (வில் அம்பு, வேல்) இற்றைப்படுத்தப்பட்டு (இயற்கையிலிருந்து சிறிது சிறிதாக விலகி) வந்துள்ள ஆயுதங்கள், இன்று சூழலை மாசுபடுத்தும் முக்கிய காரணியாக , இயற்கையை அழிப்பதிலும் முன்னிற்கிறது.. (வியட்னாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய காடழிப்பு ஆயுதமான ப்ளு-82, 2nd Wolrd war இல் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகள் என்பன உதாரனத்திற்குள் உதாரணங்கள்)

3. வேதியியல்: இதுவும், பண்டைய காலத்தில் இயற்கையோடு ஒன்றி வளர்ந்து பின் இயற்கையை எதிர்த்து, இன்று பாலிதீன், கிருமிநாசினி, பூச்சிக்கொல்லி, CFC, வேதியல் ஆயுதங்கள் என வளர்ந்து நிற்கிறது..

4. விண்வெளி ஆய்வு: இது மட்டும்தான் செய்முறை ஆய்வுகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே இயற்கைக்கு ஆப்பு வைக்கிறேன் பேர்வழி எனக் களத்தில் குதித்த துறை.. (உதாரணம் தேவையில்லை என நம்புகிறேன்)

5. உயிரியல்: இது ரொம்ப முக்கியம். இதுவும் வழக்கம்போல இயற்கையுடன் ஒன்றி உயிர்களை இனம்பிரிக்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து, இன்று அப்பாவி எலிகளில் ஆய்வு செய்வதும், ஜெனடிக்ஸ் என்று இயற்கையின் வேலையை கையிலெடுக்கிறேன் என, புது உயிர்களை உருவாக்குவதும், பின் அவற்றைத் திருத்துவதுமாக ஏதோ சாப்ட்வேர் ப்ரோக்ராமிங் செய்வதுபோல பேட்ச் ஒட்டிக் கொண்டும், சர்விஸ் பேக் போட்டுக்கொண்டும், “அத எடுத்து இங்க போடு, இத எடுத்து அங்க போடு” என்று ஒரு சில “மனிதனுக்கு தேவையில்லாத” பிராணிகளை ஒழிக்க அவற்றின் எதிரிகளை எடுத்து இவற்றோடு கலப்பதும், பின் புது உயிர்கள் தமது புது சூழலில் எதிரிகள் இல்லாத காரணத்தினால் இயற்கை சமநிலையை மீறி பல்கிப் பெருகுவதும், பின் அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட உணவு தீர்ந்ததும் வேறு ஒரு புது உணவை (பெரும்பாலும் மனிதனின் செல்லப்பயிர்கள்) பெருமளவில் தின்று தீர்ப்பதும், உடனே உயிரியல், ஐயையோ.. எனக் கூவிக்கொண்டு இப்புது உயிர்களின் எதிகளை சூழலில் கலப்பதும் என இயற்கையுடன் விளையாடுவதில் படு பிஸியாக இருக்கிறது.

மேலிருப்பான்: நல்ல புரிதல்! ஆனா, அதுக்காக இயற்கையுடன் ஒன்றி இருக்க வேண்டும் என்னும் காரணத்தை அழுத்தமாகச் சொல்கிறேன் பேர்வழி என்று, உலக உயிர்கள் (மனித) பரிணாமத்தின் பல மைல்கற்களான, மரபனுவியல்,  மூலக்கூறு அறிவியல் என எல்லாவற்றையும், குத்துமதிப்பாக தவறென்று வாதிடுவது சரியானதுமல்ல, ஏற்கத்தக்கதுமல்ல! மாறாக அது ஒரு குறுகிய மனம்பான்மையை, பக்குவமற்றத் தன்மையையே காட்டுகிறது என்பது என் கருத்து! ஏன்னா, பிற உயிர்களுக்கு இல்லாத ஒரு திறன் மனிதனுக்கு மட்டுமேயுள்ள பகுத்தறியும் திறன்! அதை வைத்துக்கொண்டு, இயற்கையோடு ஒன்றி விவசாயம் மட்டுமெ செய்துகொண்டு காலத்தை ஓட்ட முடியாது. பரிணாமத்தின்போக்கும் அதுவல்ல! அதுக்காக, நான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு? உயிர்களை உருவாக்கி, இருக்கும் பிரச்சினை போதாதென்று இன்னும் சேர்த்துவைக்கவும் சொல்லவில்லை!

மாறாக, இயற்கையை கடவுள் என்று சொல்லத் தொடங்கி, சேர்த்துவைத்திருக்கிற எண்ணற்ற மூட நம்பிக்கைகளும், அதனால் மனிதன் மட்டுமல்லாத உலக உயிர்களுக்கும், இயற்கைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதகங்களும் களையப்பட வேண்டுமானால், விஞ்ஞானம் அவசியம்! ஆனால், அந்த விஞ்ஞானம் எந்தத் துறையினதாயினும், அழிவுப்பாதையை நோக்கிச் செல்வது அனுமதிக்கத்தக்கதல்ல!

அபராஜிதனின் மற்றும் அவரைப்போன்ற கருத்துள்ளவர்களின் பார்வையிலுள்ள மற்றுமொரு அணுமுறைக் கோளாறு,

ஒரு துறையினால் ஏற்பட்ட பாதகங்களை மட்டுமே ஊதிப்பெரியதாக்கி, பூதாகரமான விளைவுகளை முன்னிலைப்படுத்தி விஞ்ஞானம்/நவீன ஆய்வுகள் வேண்டாமென்று வாதிடுவது! உதாரணமாக, இயற்க்கையின் போக்கிலேயே சென்று, அதற்க்கு எதிராக எதையுமே செய்யக்கூடாது என்று வாதிடுவோமேயானால், எண்ணற்ற இயற்கைச் சீற்றங்களான பூகம்பம், டைஃபூன், காடுத்தீ, புயல் ஆகியவற்றுக்கு என்றோ இறையாகி, இன்று ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், நாட்டு மக்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருப்பதோடு, அவர்களால் மனித இனத்துக்கு கிடைத்த, இயற்கை பாதிக்காத பல தொழில்னுட்பங்களும் கிடைக்காமலே போயிருக்கும் என்பதே உண்மை! ஆக, மனித இனமும், அவற்றுடன் பிற இனமும் அழிவதுதான் இயற்கை, அப்படித்தான் நிகழவேண்டும் என்றால் அதை ஏற்றுக்கொள்பவர்கள் எத்தனைபேர்? அவர்களுக்கு வாழ உரிமையில்லையா? என பல கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை……!

எந்தவொரு முயற்ச்சியிலும், நன்மையுமுண்டு, தீமைகளுமுண்டு! ஆக, இயன்ற வரையில் உலக உயிர்கள் அனைத்திற்க்கும், தீமைகளற்ற/குறைந்த அதேசமயம், நன்மைகள் தரக்கூடிய ஆய்வு இந்த உலகத்துக்கு மிகவும் அவசியம். இதை ஒரு ஆய்வாளனாய் அல்ல, விஞ்ஞான முன்னேற்றத்தின் பயனாய் பல சவுகரியங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான உலக மக்களில் ஒருவனாய் சொல்கிறேன்.

அதெல்லாஞ்சரி, இதுக்கு என்னதான் முடிவு???

அதாவது, இயற்கைக்கு எதிரான அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆய்வு/விஞ்ஞான முயற்ச்சிகள் தொடரவேண்டுமா?  முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டுமா? இதுக்கு என்னதான் முடிவு என்று உங்களிடன் யாராவது கேட்டால்க் என்ன சொல்வீர்கள் என்று மறுமொழியில் சொல்லுங்கள்! என்னைக்கேட்ட அபராஜிதனுக்கும், என் பொதுவான கருத்துக்களும் பின்வருமாறு…..(இது மறுமொழியிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது!)

மேலிருப்பான்: இங்கே ஒரு அடிப்படை விஷயத்தை நீங்க ஏத்துக்க மறுக்குறீங்கன்னு நான் நெனக்கிறேன்?! அதாவது, “பூமியையும் பிற உயிர்களையும் முன்னிலைப்படுத்தி” நீங்க யோசிக்க ஆரம்பிச்சீங்கன்னா, நீங்க காலையில எந்திரிச்சது முதல் இரவு உறங்கச்செல்லும்வரையிலான பல விஷயங்களை தலைகீழா மாத்திக்க வேண்டிவரும். {உதாரணமா, நீங்க உங்க தினசரி வாழ்க்கையில பயன்படுத்துற இயற்கை சாராத, இயற்கைக்கு எதிரான, இயற்கையை பாதிக்கிற, இயற்கைச் சமநிலையை ஏதோ ஒருவகையில் (சில சமயங்களில் irreversible-ஆக) பாதிக்கக்கூடிய பல பொருட்களை தவிர்க்க வேண்டும்).

அதுக்கு நீங்க தயாரா? ரைட்டு…. நீங்க ப்ளூ க்ராஸ் ஆளுங்கிறதால பரவாயில்லப்பா. சரின்னுகூட பல்லைக்கடிச்சிக்கிட்டு மாத்திக்கிறீங்கன்னு வச்சிக்குவோம்! மத்தவங்களப் பத்தி கொஞ்சம் யோசிங்க. அவ்வளவு ஏங்க, உங்க குடும்பத்தாரோட அணுகுமுறையை முதல்ல உங்களால மாத்த முடியுமா? சரி, உங்களோட குடும்பம், சுற்றம், நட்பு இவர்கள்ல எத்தனைபேரு ப்ளூ க்ராஸ் எண்ணங்கள் உடையவர்கள்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? ஏன் இப்படிச்சொல்றேன்னா, மாற்றம் என்பது சுலபமானதல்ல! அதற்க்கான ஆயத்தங்களும் அப்படியே. ஆக, வெறும் பேச்சளவில், விவாத அளவில் கருத்துப்பறிமாற்றம் செய்வதால் மனித மனங்களை, இயற்க்கையுடன் ஒன்றிய வாழ்க்கைக்கு தயார்படுத்த முடியாது. களப்பணிகள் பல அவசியம் என்பதை நாம் அனைவருமே புரிந்துகொள்ளவேண்டும்

இங்கெ இன்னொரு விஷயத்தையும் நீங்க புரிஞ்சிக்கனும். நான் (என்னைப்போன்ற அணுகுமுறையுள்ள இன்னும் பலரும்!) Human/Mankind centered-ஆன ஆளுன்னு நீங்க நெனக்கிறீங்க, அதனால அப்படியொரு ஆளாவே என்னை பாவிச்சு, சித்தரிக்கவும் ஆரம்பிச்சிட்டீங்க.  ஆனா, அடிப்படையில நானும் ஒரு ப்ளூ க்ராஸ் ஆளுதான். ஆனா, உலகத்தோட நிதர்சனம், யதார்த்தத்தை யாரும் மறைக்கவோ, மறுக்கவோமுடியாதுன்னு உங்களுக்கும் தெரியும்னு நான் நம்புறேன்.

உதாரணமா, சுயநலம், இனவெறி, கொலைவெறி, பெண்-பொன் பற்று, காமம், க்ரோதம், வக்கிரம் இப்படி எத்தனையோ காரணங்களினடிப்படையில், சக மனிதர்களையே கொன்று குவித்து (இலங்கை ஒரு நெருங்கிய உதாரணம்!) கூச்சப்படாம, உலக அரங்குல நானும் ரவுடிதாங்கிற மாதிரி, ரொம்ப நல்லவனா காட்டிக்கிற எத்தனை நாடுகளையும்/நாட்டவர்களையும் தினசரிகள்ல பார்க்குறீங்க? இப்படிப்பட்ட சக இனமான மனிதருக்குள்ளேயே பல்வேறு காரணங்களைக் காட்டி வேற்றுமை பாராட்டும்/அழிக்கத்துடிக்கும் உலகத்தவரை எப்படிங்க இயற்க்கைச் சமநிலையை, இயற்கையை/தாவர-விலங்குகளைக் காக்க திசைதிருப்பப் போறீங்க? கொஞ்சம் சொல்லுங்க….(அப்படியே நீங்க உங்க முயற்ச்சியில வெற்றியே கண்டாலும், அப்போ நிங்களும், நானும் (மனித இனம்) அழிந்தேபோயிருப்போம்?!)

அதுக்காக இப்படியே மனிதனை முன்னிலைப்படுத்தியே இருக்குறதுதான் சரின்னு நான் வாதாடுறேன்னு முடிவுபண்ணிடாதீங்க! பல நூற்றாண்டுகளாக இப்படியே வாழ்ந்து பழகிட்ட, மாற முயலாத மனித மனங்களை முதலில் மாற்ற வேண்டும். பின் அவர்களின் செயல்களை மாற்ற வேண்டும்! அது அவ்வளவு சுலபமல்ல, அதனால வாழ்க்கைமுறை மாற்றங்களை சிறுக சிறுக ஏற்படுத்திக்கொண்டு, படிபடியாகத்தான் முயற்ச்சிக்கனும். அதுக்கான ஆயத்தங்கள் உலகுதழுவிய ஆயத்தங்களா இருக்கனும். இலங்கை அபராஜிதனும், இந்திய ஹரியும் வாதிட்டா மட்டும் போதாது!!

உலக உயிர்கள் அனைத்துமடங்கிய உலக நன்மைக்காக, ஒரு சார்பற்ற பார்வைகொண்ட, இயற்க்கையுடன் ஒன்றிய  (விஞ்ஞானம் உள்ளடங்கிய) வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக்கொள்வதே, அழியும் தருவாயில் இருக்கும் உலகினை காக்கக்கூடிய ஒரு முயற்ச்சியாக இருக்கும்! அதைவிடுத்து, மனிதனை முதன்மையாய்க் கொண்டியங்கிக்கொண்டிருக்கும் ஒரு பரிணாமநிலையில்/காலகட்டத்தில், மனிதன் தவிர்த்த இயற்கையை மற்றும் உயிர்களை முதன்மையாக்கி, மனித முன்னேற்றங்களை ஏளனம் செய்வது, முட்டாள்தனமானதும், பரிணாம வளர்ச்சிக்கு எதிரான பாதையில் பயணிப்பது போன்றது என்பது என் பக்குவமற்ற புரிதலாகக்கூட இருக்கலாம். மேலும் வித்தியாசமான புரிதல்களை அறிந்துகொள்ளவே இந்தப் பதிவு எழுதப்பட்டது!

இன்னும் எழுதினால், அது ஒரு கை ஓசையைப் போன்றதாகிவிடுமென்பதால், என் உளறல்களை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மேலும், மேற்கண்ட என் புரிதல்கள் யாவும், என் குறைந்தபட்ச பொது அறிவுக்கு எட்டிய,  உலக நிகழ்வுகள் குறித்த என் தெளிவான மற்றும் தெளிவில்லாத உள்வாங்குதல்களின் கலவையான, முதிர்ச்சியடையாத வெளிப்பாடுகளே ஆகும். அதில் தவறிருப்பின் பொறுத்துக்கொண்டு, சுட்டிக்காட்டி, இந்த விவாதத்தை தனிமனித காழ்ப்புணர்ச்சியற்ற, மனித இனத்தை (உலகை) முன்னேற்றப்பாதையிலிட்டுச்செல்லும் கருத்துக்களுடன் தொடரவேண்டுமாறு, வாசகர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! (தயவு செஞ்சு இதுக்கான உங்க எதிர்வினையை பதிவு செஞ்சுட்டுப்போங்க!)

பின்குறிப்பு: பதிவெழுதுவதிலும், பதிவுக்கான எதிர்வினைகளை பதிவுசெய்வதிலும் யார் பெரியவன் என்ற அணுகுமுறையை நான் எப்போதும் கையாண்டதுமில்லை, அவ்வாறு கையாளுமொருவரை ஆதரித்து/அனுமதித்ததுமில்லை! இந்தப் பதிவின் நோக்கம், என் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்மறையான அணுகுமுறை/கருத்துக்களை உடையவராயினும், அவர் சொல்லும் நல்ல கருத்துக்களை வெகுஜன பார்வைக்கு கொண்டுவருவதே! இதில் தனிமனித காழ்புணர்ச்சி எங்காவது தலைதூக்கியிருப்பின், அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சம்பந்தப்பட்டவரிடமும், அன்பான என் வாசகர்களிடமும் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்.

அன்புடன்……உங்கள் மேலிருப்பான்!

தொடர்புடைய சில பதிவுகள்:

உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!

“சிந்த்தியா”, விஞ்ஞான உலகின் அட்டகாசமான ‘செயற்கை’ புதுவரவு!!

மூடிய இருதய அறுவை சிகிச்சையும் ஜீன் தெரபியும்!

மருத்துவம்: பார்வையை மீட்டுக் கொடுத்த ஜீன் தெரபி!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements