உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!

Posted on ஒக்ரோபர் 9, 2010

48


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

மதிய உணவுக்குப்பின் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இருதயத்துக்கும், மூளைக்கும் மிகவும் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மதிய உணவுக்குப்பின் சுமார் 30 நிமிடம் உறங்குவதுதால்,   நியாபக சக்தியும், செயல்திறனும் மேம்படுகிறதாம். அட, இது நல்லாருக்கே…!!

விஞ்ஞானம் ஒரு கத்தி மாதிரி, அதை வச்சி ஆப்பிளையும் நறுக்கலாம், ஆளையும் வெட்டலாம்! ஆக, இது ரெண்டுல எதை செய்யப்போறோம்ங்கிறது கத்தி எடுக்கிற ஆளைப்பொறுத்தது. ஏன்னா, விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லைன்னா, இப்போகூட நம்ம வாழ்க்கை கற்க்கால மனிதனுடையது மாதிரிதான் இருந்திருக்கும்ங்கிறதுதான் நிதர்சனம். அதுக்காக விஞ்ஞான கண்டுபிடிப்புகள், முயற்ச்சிகள் எல்லாத்தையும் ஆஹோ, ஓஹோன்னும் புகழ முடியாது?!

“இப்போ இவன் என்னதான் சொல்ல வர்றான்னு ஒன்னும் புரியலையே” அப்படீன்னு குழப்பமா இருக்குதுங்களா? சரி, நாம மேட்டருக்கு வந்துடுவோம். அதாவது, உயிரியல், மருத்துவம், தாவரவியல் சார்ந்த விஞ்ஞான முன்னேற்றங்களின் பயனாக நமக்கு சில நவீன அறிவியல் துறைகளோட அறிமுகம் கிடைத்தது. அத்தகைய துறைகளுள் ஒன்றுதான் மரபனுவியல்! இந்த மரபனுவியல் துறை ஆய்வுகள் முன்னேற முன்னேற, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ அப்படீங்கிற மரபுப்பொருளின் வருகை, உயிரியலில் மற்றுமொரு துறையையும் அறிமுகம் செய்தது.

அந்தத் துறையின் பெயர்தான் மூலக்கூறு அறிவியல் (மாலிக்கியூலர் பயாலஜி). அதாவது, இத்துறையின் உதவியுடன் உயிரிகளின் ஆதாரமான உயிரணுக்கள்/செல்களின் உள்ளே புகுந்து, அவற்றின் முக்கிய மூலக்கூறான நியூக்ளியஸில் புதைந்திருக்கும் மரபுப்பொருளான டி.என்.ஏ-வை இஷ்டத்துக்கு(?) பிரித்து மேய்வதாலேயே இந்தப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது! மூலக்கூறு அறிவியலின் புத்திசாலியான வாரிசுதான் “மரபுப்பொருள் மறுசேர்க்கை தொழில்நுட்பம்” (ரீக்காம்பினன்ட் டி.என்.ஏ டெக்னாலஜி). 1970-களில் பிறந்த இந்தத் துறையின் வருகையை, மூலக்கூறு அறிவியலில் நிகழ்ந்த ஒரு விஞ்ஞானப் புரட்சி என்று சொன்னால் அது மிகையல்ல!

ரீக்காம்பினன்ட் டி.என்.ஏ டெக்னாலஜி ஏற்படுத்திய விஞ்ஞானப்புரட்சியின் பலனாக/விளைவாக, இந்த உலகம் க்ளோனிங், ஜீன்-தெரபி போன்ற பல புதுமைகளைச் சந்தித்தது. அவற்றுள் ஒன்றுதான், இயற்கை மற்றும் செயற்கையான பல நிகழ்வுகள், உயிர்கள் மற்றும் பொருட்களால், பல இன்னல்களைச் சந்தித்துவந்த உலக விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்த(?) ஒரு தொழில்நுட்பமான,

“ஒரு உயிரியிலிருந்து (தாவரம் அல்லது விலங்கு) எடுக்கப்பட்ட ஒரு மரபணுவை, மற்றொரு உயிரியின் உயிரணு/செல்லுக்குள் செலுத்தி, அந்த உயிரியின் மரபணுக்ககோப்புக்குள் இரண்டறக் கலக்கச் செய்து, பின் இயல்பாக செயல்படவைத்து,   மரபணுமாற்று  உயிர்” (Genetically modified organisms, GMO) உருவாக்கும் ஒரு தொழில்நுட்பம் அல்லது உயிரியல் விஞ்ஞான முன்னேற்றம்”

“ஆனா, இந்த தொழில்நுட்பம் விவசாயிகளோட வயித்துல பாலை மட்டும் வார்க்கல, கூடவே சேர்த்து கொஞ்சம் விஷத்தையும் வார்த்துட்டுது அப்படீங்கிறதுதான் நிதர்சனம்” அப்படீன்னு வாதம் செய்பவர்களும் உண்டு. அது பல வகையில் உண்மையும்கூட என்பதுதான் அறிவியல் ஆதாரப்பூர்வமான உண்மை! இந்த தொழில்நுட்பம் மூலமா, இதுவரை மனித சமுதாயத்துக்கு கெடைச்ச மரபணுமாற்ற உணவுப்பயிர்கள் என்னென்ன, அவற்றுடன் தொடர்புடைய சில சர்ச்சைகள் என்னென்ன அப்படீங்கிறதப்பத்தி ஓரளவுக்கு விளக்கமாகவும், சுருக்கமாகவும் எடுத்துச் சொல்றதுக்குத்தான் இந்தப் பதிவு! வாங்க என்னன்னு பார்ப்போம்……

இதுவரையிலான மரபணுமாற்ற உணவுப்பயிர்கள்!

உலகில் முதல்முதலில் சந்தைக்கு வந்த, முதல் மரபணுமாற்ற உயிரி ஒரு தாவரம். அது கடந்த 1994 ஆண்டு, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு தக்காளி! அதன்பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக கடந்த  2009 ஆம் ஆண்டும் உருவாக்கப்பட்ட வறட்சி தாங்கும் பிரத்தியேகமான சாபாகி அரிசி வரை 6 தாவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உருவாக்கப்பட்டது மட்டுமில்லாம, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பெரும்பாலான மேலை நாடுகளில், மனுஷனோட அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன இவற்றில் பல! “அது சரி, 1994-லிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலான விஞ்ஞான முன்னேற்றத்தை கணக்கிலெடுத்துக்கொண்டால் வெறும் 6 மரபணுமாற்ற பயிர்தான் கண்டுபிடிச்சிருக்காங்களா?! ம்ம்…..அப்படியா? அப்படின்னா எங்கியோ இடிக்குதே” அப்படீன்னு உங்கள்ல சிலர் யோசிக்கிற மாதிரி இருக்குதே?

அப்படின்னா, அதுக்கான காரணமா நீங்க நெனக்கிற விஷயங்களையும், யூகங்களையும் நீங்களே கொஞ்சம் மறுமொழியில எழுதிடுங்களேன். அதுக்கப்புறமா, என்னோட கருத்தை நான் பதிவு செய்றேன். சரிங்களா? சரி, இப்போ நாம அந்த 6 மரபணுமாற்ற பயிர்களைப் பத்தின ஒரு சிறுகுறிப்பையும், தொடர்புடைய சில சர்ச்சைகளையும் பார்போம் வாங்க…..

1994: ப்லேவர் சேவர் தக்காளி (Flavr Svr Tomato)

படம்: விக்கிப்பீடியா (உருவாக்கிய விஞ்ஞானியின் கையில் மரபணுமாற்ற தக்காளி!

பொதுவா, பல காய்கறி/பழங்கள் மாதிரி தக்காளியும் (குளிர்பதனப்பெட்டிக்குள்ள வச்சாக்கூட) அழுகாம, ரொம்ப நாளைக்கு ஃப்ரெஷா இருக்குறதில்லன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டத்தான், பல நாட்களுக்கு அழுகாம இருக்குற மாதிரி, மரபணுமாற்ற யுக்தி மூலமா ஒரு தக்காளியை உருவாக்கினாங்க, கால்ஜீன் அப்படீங்கிற கலிஃபோர்னிய நிறுவனத்தைச் சேர்ந்த  விஞ்ஞானிகள்!

இந்தத் தக்காளியின் வருகைக்குப்பின், பொதுவாக காயாக இருக்கும்போதே செடிகளிலிருந்து பறித்துவிடப்படும் தக்காளியை, விற்பனைக்குச் செல்லும்வரை செடிகளிலேயே விட்டு, விற்பனைக்குச் சற்றுமுன் பறிக்கும் அளவுக்கு விவசாயிகளின் நிலை மாறியது என்பது குறிப்பிடத்தக்கது! விளைவு….சுவையான, உறுதியான தக்காளிகள்! மேலதிக விவரங்கள் இங்கே
1996 : மரபணுமாற்ற சோளம்/பி.டி கார்ன் (Bt Corn)

image: mindfully.org

பூச்சிக்கொல்லிகளின் தேவையை முற்றிலும் இல்லாமல் செய்த பி.டி சோளம்தான் மரபணுமாற்ற தாவரங்களின் இரண்டாம் வரவு! “பெசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus thuringiensis)” என்னும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மரபணுவே, (சோளப்பயிரினுள் செலுத்தப்பட்டபின்) ஒரு பூச்சிக்கொல்லியாக செயல்படத்தொடங்கிவிடும் என்பதால்,  ரசாயன பூச்சிக்கொல்லியின் தேவை இல்லாமற்போனது!

இதனால் என்ன பயன் அப்படீன்னா, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும்,  அதன் விளைவாக மனிதர்களில் புற்றுநோய் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கவும் காரணமாகும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்பதுதான்!  ஆனா, ஒரு விஷயத்துல நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்குமில்லயா? அந்த வகையில, இதனால என்ன கெடுதல்னு பார்த்தா,  கெட்ட பூச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொல்லாம, மகரந்தக் கடத்தல் செஞ்சு, விவசாயத்துக்கு உறுதுணையா இருக்குற  தேனீ, பட்டாம்பூச்சி மாதிரியான நல்ல பல பூச்சிகளையும் குத்துமதிப்பா கொல்லும் தன்மையுடையது இந்த பி.டி சோளம் என்பதே! ஆனா, இந்தச் சோளத்துக்கும் தேனீ க்களின் அழிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உறுதி செய்தது ஒரு ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது! மேலதிக விவரங்கள் இங்கே

1998: மரபணுமாற்ற உருளைக்கிழங்கு (GM Potato)

GM potato (image credit:BBC News)

மரபணு மாற்ற தொழில்நுட்பத்தின் மூன்றாம் வரவு, “மரபணு மாற்ற உருளைக்கிழங்கு”. மேற்கண்ட சோளம் போலவே, உருளைக்கிழங்கு செடியின் செல்லுக்குள் ஒரு பூச்சிக்கொல்லி மரபணுவை செலுத்தி, உருவாக்கப்பட்டதுதான் இந்த மரபணுமாற்ற உருளைக்கிழங்கு! இது தொடர்பான ஒரு சர்ச்சையும் உண்டு?! அதாவது, ஸ்காட்லாந்தின் ரோவெட் ஆய்வு மைய ஆய்வாளர் அர்பத் புஸ்டை என்பவரின் ஆய்வில், மரபணுமாற்ற உருளைக்கிழங்கை உண்ட எலிகள், வளர்ச்சி குன்றியும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தும் பாதிப்புக்குள்ளாயின என்பது கண்டறியப்பட்டது!

இந்த ஆய்வு பொய்யானது என்று கூறி, ஆய்வாளர் புஸ்டை முதலில் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், பின்பு சக ஆய்வாளர்களின் ஆய்வுகள் மூலம் அவரது ஆய்வு சரியானது என்று நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது! மேலதிக  விவரங்கள் இங்கே
1999: மரபணுமாற்ற “கெனோலா எண்ணைப்பயிர் (Rapeseed)”

Canola (rapeseed) (Image: wikipedia)

சமையல் எண்ணைகளிலேயே, உடல்நலத்துக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும், கொழுப்புச்சத்து குறைவானதாகவும், “ஒமேகா ஃபேட்டி ஆசிட்ஸ்” அதிகமாக உடையதாகவும் கருதப்படுவதும், முதலில் கனடாவில் பயன்படுத்தப்பட்டு, பின்பு அமெரிக்கா, ஜப்பான்  உள்ளிட்ட சில நாடுகளில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு வகை எண்ணைப்பயிர்தான் “கெனோலா எண்ணைப்பயிர் (canola oil/rapeseed oil)”! மரபணுமாற்ற தொழில்நுட்பத்தின்  நான்காம் இலக்கு இந்த கெனோலா எண்ணைப்பயிர்தான்.

இது தொடர்பாகவும் ஒரு சர்ச்சை உண்டு?! அதாவது, அதிகமான களைக்கொல்லி  அளவுகளைக் தாக்குப்பிடிக்கும் வண்ணம் ஒரு மரபணுவை கொண்ட மரபணுமாற்றத்துக்குள்ளான இந்த எண்ணைப் பயிரின் மகரந்தமானது, வயலை அடுத்த சுமார் 3 மைல்களுக்கு அப்பாலுள்ள, ஒரு தேன்கூட்டின் அருகில் இருந்தது கண்டறியப்பட்டது! இதனால என்ன பிரச்சினைன்னு கேட்டீங்கன்னா, இந்த மகரந்தம் பிற தாவரங்களுடன் (களைகள், புற்கள்) சேர்ந்துவிட்டால், இதே குணமுடைய தேவையில்லாத ஒரு (களை?) தாவரம் உருவாகி, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் ஒரு ஆபத்து இருக்கிறது என்பதே! அப்படி ஒரு தேவையில்லாத (இயற்கை) மரபணுமாற்றத் தாவரம் உருவாகிவிட்டால், பின்பு அதைக் கட்டுப்படுத்துவது மிக மிகக் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது! மேலதிக விவரங்கள் இங்கே
2000: தங்க அரிசி (Golden rice)

வலது: தங்க அரிசி (படம்: cosmosmagazine.org)

வைட்டமின் ஏ (vitamin A) குறைபாட்டினால் ஏற்படும் கண்பார்வைக்கோளாறு என்பது வளரும் நாடுகளின் ஒரு வேதனையான நிகழ்வு! மேலும், உலகளவில் சுமார் 400 மில்லியன் மக்களை பாதிக்கும் இந்த வைட்டமின் குறைபாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, கடந்த 2000-மாவது ஆண்டு, இந்தியாவின் சர்வதேச அரிசி ஆய்வு மையமும் (International Rice Research Institute, IRRI), ராக்கெஃபெல்லர் அமைப்பும்  (The Rockefeller Foundation) இணைந்து, காரெட்டிலிருக்கும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் என்னும் மரபணுக்களைக் கொண்டு உருவாக்கியதுதான் வைட்டமின் ஏ அதிகமாக உள்ள, மரபணு மாற்ற உயிர்களில் 5 வது வருகையுமான “தங்க அரிசி (Golden rice)”!

தங்க அரிசியை உருவாக்கியது ஒரு லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமென்பதால், இந்த அரிசி விதை ஓபன் சோர்சாக, அதாவது யார் வேண்டுமானாலும் இலவசமாக பெற்று, சாகுபடி செய்யும் வண்ணம் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது! இதுல மிக முக்கியமான விஷயம் என்னன்னா, அமெரிக்காவின் “மான்சான்டோ (Monsanto) மற்றும் கார்கில் (Cargill)” மாதிரியான நிறுவனங்கள், மரபணுமாற்ற தொழில்நுட்பம் மூலம், (இயற்க்கை அளித்த) பூமியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விதையை, அறிவுக்காப்புரிமைக்குட்பட்ட (intellectual property) பொருட்களாக்கி, அளவுக்கதிகமான பணம் பண்ணுகிறார்கள். இது ஒரு பெரிய மோசடி மற்றும் பகற்கொல்லை என்பது குறிப்பிடத்தக்கது! இம்மாதிரியானவர்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்க, தங்க அரிசி மாதிரியான பொதுவுடைமை ஆக்கப்பட்ட மரபணுமாற்ற உயிரிகள், ஒரு நல்ல உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது!

மேலதிக விவரங்கள் இங்கே

2009: வறட்ச்சி தாங்கும் அரிசி (“Sahbhagi Dhan” Drought-Resistant Rice)

"வறட்ச்சி தாங்கி அரிசியுடன் விவசாயி" (படம்: BBC news)

நம்ம எல்லாருக்குமே தெரியும், அரிசி அல்லது நெற்பயிர் ஒரு நஞ்சை நிலப்பயிர் என்பது. ஆக, தண்ணீரின் தேவை எப்போதும் வேண்டும் நெற்பயிருக்கு! ஆனா, சமீபகாலங்களாக உலகின் அதிக அளவு நிலங்கள், வறண்ட பாலைவனங்களாகிவரும் நிலையில், மழையும் இல்லாமற்போய்விடுகிறது. விளைவு, வானம் பார்த்த பூமிகளின் பயிர்கள் மடிந்து, நிலம் வறண்டு பாலைவனங்களாகி, உணவுப் பற்றாக்குறையும், பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது!

இந்த நிலையை மாற்ற, சுமார் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் பலனாக, சர்வதேச அரிசி ஆய்வு மையமும் (International Rice Research Institute, IRRI) மத்திய மழைவளர்த்த மேல்நில அரிசி ஆய்வு நிலையமும் (Central Rainfed Upland Rice Research Station, CRURRS) இணைந்து, கடந்த 2009 ஆண்டு உருவாக்கியதுதான் வறட்சி தாங்கி அரிசியான “சாபாகி தான் (Sahbhagi Dhan)” அல்லது “கூட்டு அரிசி”! மேலதிக விவரங்கள் இங்கே
“அதெல்லாஞ்சரி, கடந்த 16 வருடங்களாக நடந்துவரும் மரபணுமாற்ற உயிர்கள் உருவாக்கும் ஆய்வுகள்ல, பயனுள்ள ஒரு மரபணுமாற்ற விலங்கு எதையும் உருவாக்கலியா இந்த விஞ்ஞானிங்க” அப்படீன்னு கேட்டீங்கன்னா, “ஓ….உருவாக்கியிருக்காங்களே” அப்படீன்னுதான் சொல்லனும்! அட….அப்படியா? சொல்லவேயில்ல…..?! ஆமா, அது என்ன விலங்கு? அப்படீன்னு ரொம்ப ஆர்வமா நீங்க கேப்பீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும்னாலும், அது என்ன விலங்குன்னு தெரிஞ்சிக்க, அடுத்த பதிவு வரைக்கும் நீங்க கொஞ்சம் காத்திருக்கத்தான் வேணும்னு சொல்றதைத் தவிர எனக்கு வேற வழியில்ல வாசக நண்பர்களே!
அதனால, உலகின் முதல் மரபணு மாற்ற விலங்கான அந்த விலங்கு பத்தின தகவல்களோட அடுத்த பதிவுல மீண்டும் உங்களை சந்திக்கும் வரை, உஙகளிடமிருந்து விடைபெறுவது, உங்களன்பு மேலிருப்பான் பத்மஹரி (இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல அப்படீங்கிறீங்களா…..சரி சரி வுடுங்க, வலைவாழ்க்கையில இதெல்லாம் ஜகஜமப்பா…..!)
தொடர்புடைய சில பதிவுகள்:
இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements