பயமும் மூளையும்; பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

Posted on செப்ரெம்பர் 16, 2010

10


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

உடற்பயிற்ச்சியைப்போலவே செக்ஸ் அல்லது உடலுறவும் இருதயத்துக்கு உகந்ததுதானாம். ஆனால், உடற்பயிற்ச்சியை தொடர்ச்சியாக செய்யாமல் போனால் எப்படி உடலுக்கு பயனெதுவும் இருக்காதோ அதேப்போல, உடலுறவும் தொடர்ச்சியாக இல்லாமல் போனால், இருதயத்துக்கு பயனெதுவும் இருக்காதாம்! அதனால், வாரம் இருமுறை உடலுறவில் ஈடுபடுவதால், இருதயத்துக்கு பலனுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்!

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்…..

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

அப்படீன்னு நம்ம புரட்சிக்கவி பாரதியார் சொல்லியிருக்காருன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்! இது தவிர இன்னும் பல இலக்கியவாதிகள், தமிழறிஞர்கள் இப்படி எல்லாருமே அச்சப்படக்கூடாதுங்கிறதப் பத்தி, பல செய்யுள்களும் எழுதியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, நம்ம தமிழ் சினிமாவுல வந்த எத்தனையோ பாட்டுக்கள்லேயும், பயப்படாம இருக்கனும்னுங்கிறத வலியுறுத்துற பாடல்வரிகளை நாம கேட்டிருப்போம்!

அதெல்லாம் சரி, பயப்படாம இருக்கனும்னு வலியுறுத்துற செய்யுள் படிக்கிறதும், பாட்டுக் கேக்குறதும் ரொம்ப சுலபம். ஆனா, பயப்படும்படியான, அடிவயிற்றைக் கலக்கும்படியான பயங்களை உருவாக்கும் சில நிகழ்வுகள் நிஜவாழ்க்கையில ஏற்படும்போது, அதை சந்திக்கும்போது பயப்படாம எப்படி இருக்க முடியும்? உதாரணமா, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச இந்த பேய், பிசாசு, முனி மாதிரியான விஷயங்களையே எடுத்துக்குங்களேன்.

பொதுவா பேய்-பிசாசு சம்பந்தப்பட்ட கதைகள நண்பர்கள், உறவினர்கள் இப்படி யாராவது சொல்லி கேட்கும்போது, “அட இதெல்லாம் சும்மா உடான்சுப்பா. இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு இருக்கக்கூடாது, வாழ்க்கையில தைரியமா இருக்கனும்” அப்படீன்னு ரொம்ப தைரியமா (?), வீராப்பா பேசிட்டு, அர்த்த ராத்திரியில வயல்வெளிக்கோ, இல்ல ஆள் நடமாட்டமில்லாத ஒரு சாலையிலயோ நடந்துபோகும்போது, பக்கவாட்டுல இருக்குற சருகுக்குள்ள, அதுபாட்டுக்கு சிவனேன்னு போயிக்கிட்டு இருக்குற ஒரு பூச்சியோ, புழுவோ ஏற்படுத்துற சத்தத்துல சப்த நாடியும் ஒடுங்கி, உறைஞ்சுபோயி நிக்குற சுபாவமுள்ளவங்க நம்மைச்சுத்தி எத்தனையோ பேரு இருக்காங்கங்கிறதுதான் நிதர்சனம் இல்லீங்களா?

அமிக்டலேவும் (amygdalae) உறைய வைக்கும் அந்த சில நொடிகளும்!

படம்: brainconnection.com

இம்மாதிரியான, பயத்தை ஏற்படுத்தும் அல்லது உறைந்துபோகவைக்கும், சிலிர்ப்பூட்டும் தருணங்களின்போது மனிதனின் மூளைக்குள்ளே என்ன நடக்கிறது அல்லது பயங்களுக்கு எதிரான ஒருவரின் மூளையின் எதிர்வினையை அறிவியல்பூர்வமாக எப்படி விளக்குவது போன்ற கேள்விகள் நரம்பியல் துறை விஞ்ஞானிகள் மத்தியில் ஏகப்பிரசித்தம்!  இந்த கேள்விக்கான விடையை நோக்கிய ஆய்வுப்பயணத்தில், மூளையின் ஆபத்துப் பகுதி என்ற ஒன்றை நிர்ணயித்தார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள். அதாவது, ஒரு ஆபத்து நேரும்போது, பய உணர்வு ஏற்பட்டு, அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவோ, உறைந்துபோய் நின்றுவிடவோ என இருவகையான செயல்களுக்கு அடிப்படையான மூளைப்பகுதியைத்தான், ஆங்கிலத்தில் அமிக்டலே (amygdalae) என்கிறார்கள். மூளையின் மத்தியப்பகுதியிலுள்ள இரட்டை பாகங்கள்தான் இந்த அமிக்டலே என்பது குறிப்பிடத்தக்கது!

பயம் குறித்த இதுவரையிலான நரம்பியல் ஆய்வுகளினடிப்படையில், அமிக்டலே என்னும் மூளைப்பகுதியானது, உயிர்களின் அதீத உணர்வுகளான, அளவுக்கதிகமான கோபம் (அதாங்க, நம்ம விஜயகாந்த் படத்துல எல்லாம், அவரோட கண்ணு ரெண்டையும் செவப்பாக்கி, அவரு கோவப்படுறதா காமிப்பாங்களே அதுமாதிரி!) மற்றும் உறைய வைக்கும் திகில் உணர்வு ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது! மேலும், இந்த பயஉணர்வுகளின் விளைவாக செய்யப்படும் செயல்களான, சுற்றும்முற்றும் ஓடுவது, மறைவான ஒரு இடத்தில் ஒளிந்துகொள்வது மற்றும் சத்தமாக அலறுவது ஆகிய செயல்களுக்கும் அமிக்டலேதான்  காரணமாக இருக்கிறது என்று ஒரு பொதுவான புரிதல் இருக்கிறது விஞ்ஞானிகள் மத்தியில்!

அமிக்டலே ஆய்வு குறித்த ஒரு காணொளி……..

ஆனால், அமிக்டலேவின் செயல்பாட்டினை, இப்படி பொத்தாம் பொதுவாக சொல்வது இனியும் சரியல்ல என்றும், பயம் குறித்தான் நம் அறிவியல்பூர்வமான புரிதலை மாற்றம்வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் சொல்கிறது ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் சோதனைக்கூடமான EMBL மற்றும் க்ளாக்சோ ஸ்மித்க்ளைன் (GlaxoSmithkline) என்னும் பிரபல மருந்து நிறுவனம் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று! நியூரான் (Neuron) என்னும் மருத்துவ இதழில், சமீபத்தில் வெளியான இந்த ஆய்வின் முடிவுகள், பயத்துக்கும் மூளைக்குமான தொடர்பைப்பற்றியும், அமிக்டலேவைப்பற்றியும் என்ன சொல்கின்றன என்பதைத்தான் இனி இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். சரி சரி, ஒன்னும் பயப்படாம வாங்க, பயத்தைப் பத்தி தெளிவா பார்ப்போம்……

பயத்துக்கெதிரான மூளையின் எதிர்வினைகளும், அமிக்டலேவும்!

இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம், ஒருவர் திகிலடையும்/பயப்படும்படியான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது, அதிலிருந்து தப்பித்து ஓடுவதா இல்லை உறைந்துபோய்விடுவதா என எப்படி தீர்மானிக்கிறார் என்றும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் குறிப்பிட்ட மூளைப்பகுதி எது என்று கண்டறிவதுமே! இவ்விரு கேள்விகளுக்குமான விடை காண வேண்டுமானால், பயத்துடன் தொடர்புடைய அமிக்டலே பகுதியை கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.

அமிக்டலே பகுதியை தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, மரபனுமாற்றம் செய்யப்பட்ட ஒரு எலியை (genetically engineered mice) உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு மருந்தை எலியின் மூளைக்குள் செலுத்துவதன்மூலம், அமிக்டலே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அனுக்கள் மட்டும் செயலிழந்துபோகும்படியான ஒரு பிரத்தியேக மரபனுமாற்ற எலியை உருவாக்கினார்கள். ஆக, ஒரு மருந்தைச் செலுத்தினால் சோதனை எலியின், அமிக்டலேவின் குறிப்பிட்ட அனுக்கள் மட்டும் செயலிழந்து, பிற பகுதிகள் எப்போதும்போல் செயல்படும்படியான ஒரு நிலையை உருவாக்கினார்கள் ஆய்வாளர்கள்!

அமிக்டலே பகுதியில் மாற்றங்களுக்குட்பட்ட, இத்தகைய மரபனுமாற்ற எலிகள், குறிப்பிட்ட ஒரு சப்தம் கேட்டவுடன் மின்சார அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டன. இத்தகைய பயிற்ச்சிக்குப்பின், குறிப்பிட்ட அந்த சப்தம் கேட்டவுடன் நமக்கு மின்சார அதிர்ச்சி நிச்சயம் என்பதுபோன்ற ஒரு நிலையை உணர்ந்த மரபனுமாற்ற எலிகள், சாதாரண எலிகளைப்போல பயந்து நடுங்கவில்லை! மாறாக, அந்த சப்தம் கேட்டவுடன்,   பயந்து நடுங்காமல், சப்தம் வந்த திசையை நோக்கி முன்னேறிச்சென்று, சப்தத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டன என்பது கண்டறியப்பட்டது!

இதிலிருந்து தெரியவரும் ஒரு ஆச்சரியமான உண்மை என்னன்னா, இதுவரையிலான ஆய்வுகளினடிப்படையில், பயத்துடன் தொடர்புடைய சில செயல்பாடுகள் மொத்தத்திற்க்கும் அமிக்டலேதான் காரணம் என்ற ஒரு புரிதல் தவறானது என்பதும், அமிக்டலே என்னும் மூளைப்பகுதியானது பயத்துக்கும், பயத்தினால் உறைந்துபோகும் தன்மைக்கும் மட்டுமே அடிப்படை என்பதுமே! ஆக, திடீரென்று ஏற்படும் பய/திகில் உணர்வால் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி, உறைந்துபோவதற்க்கு மட்டும்தான் அமிக்டலேவானது அடிப்படைக்காரணம் என்று முதல்முறையாக தெளிவாக தெரியவருகிறது!

“சரிப்பா, அதனாலென்ன என்ன இப்போ” அப்படீன்னு உங்கள்ல சிலபேருக்கு கேட்கத்தோனலாம். நமக்கு இது வெறும்  ஆச்சரியமான அறிவியல் செய்திதான்னாலும், பயம் குறித்த ஆய்வுகளில் நீண்டகாலமாய் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஏன்னா, இந்த வகையான ஆய்வாளர்களின் அடிப்படை நோக்கம், உலகில் அவ்வப்போது நிகழும் அல்லது நிகழப்போகும் ஆபத்துகளுக்கு எதிராக சராசரி மக்களை தயார்படுத்தவேண்டும் என்பதே. அதற்க்கு, அவர்களின் பயத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

உதாரணமாக, சமீபத்துல வெளியாகி உலகையே அல்லோலக் கல்லோலப்பட வைத்துக்கொண்டிருக்கும், “டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியப்போகிறது?!” என்பது மாதிரியான புரளிகள்/பயங்கள், சில/பல ஹாலிவுட் படங்களில் காண்பிக்கப்படும் வினோதமான விலங்குகள், வேற்றுக்கிரக ஜீவராசிகள் போன்றவற்றால் பயந்து நடுங்கும் தன்மையுள்ள மக்களை அப்பயங்களுக்கு எதிராக செயல்பட தயார்படுத்த, அமிக்டலே தொடர்பான இந்தப் புதிய உண்மை பெரும் உதவியாக இருக்குமென்கிறார்கள் பயத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்னும் ரீதியிலான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள சில நரம்பியல் விஞ்ஞானிகள்!

மேலே நான் சொன்னது நல்ல எண்ணங்களுள்ள விஞ்ஞானிகளின் முயற்ச்சிகளைப் பற்றியது. ஆனா, தீய எண்ணமுள்ள விஞ்ஞானிகளும் இருக்காங்க இல்லீங்களா இந்த உலகத்துல?! அவங்களுக்கும் இந்த ஆய்வு சொல்லும் உண்மை பயன்படும். ஆனா, நல்ல வழியில இல்ல தீய வழியில! சரி இந்த பகுதிய உங்க யூகத்துக்கு விட்டுடுறேன். அதாவது, இதே ஆய்வு முடிவை தீய விஞ்ஞானிகள் தங்கள் அழிவுப்பாதையிலான திட்டங்களுக்கு பயன்படுத்தினா, அமிக்டலே பகுதியை எப்படி மாத்துவாங்க? அதனால, பயம் தொடர்பான நம் மூளையின் செயல்பாடு எப்படி மாறக்கூடும்?!

உங்க யூகங்கள மறுமொழியில எழுதுங்க! எத்தனை வகையான யூகங்கள் வருது, அதில் எத்தனை யூகங்கள் சாத்தியமானவைன்னு அதுக்கப்புறமா நாம சேர்ந்து விவாதிப்போம்! நன்றி.

தொடர்புடைய சில பதிவுகள்:

மர்மம்: மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்!

மனித மூளை குறித்த ‘வினோதமான’ மர்மங்கள்-2

கண்ணடிக்கும் நரம்புகளும் கண்கூடாகும் உணர்வுகளும்?!

வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements