ஆய்வு: வாரக்கடைசி தூக்கத்தால் “தூக்கக் கடனை” அடைக்க முடியாது!!

Posted on ஓகஸ்ட் 20, 2010

17


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

பணியிடத்தில் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து விடுதலைபெற ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு சிறு நடைபழகுங்கள். இதையே அன்றாட பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். மேலும் மூச்சுப்பயிற்ச்சியும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்!

சரியா மூச்சுவிடகூட நேரமில்லாத அளவுக்கு, வேலை வேலை வேலைன்னு ஓடிக்கிட்டு இருக்குற நாம எல்லாருமே ஒரு விஷயத்துல ஒத்துப்போவோம். அது என்னன்னா, குடும்பத்தலைவர்களுக்கு வேலை, குடும்பச் சுமை, குழந்தைகளின் கல்வி இப்படி பலவகையான பொறுப்புகளை சுமந்து, எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவங்கவங்களோட ஆரோக்கியத்தை பத்தி பெருசா அலட்டிக்கமாட்டாங்க.

விக்கிப்பீடியா: Alessandro Zangrilli

மாணவர்களைப் பொறுத்தவரை, எப்படியாவது படிச்சு வாழ்க்கையில முன்னேறனும் அப்படீங்கிற ஒரு லட்சியவெறியோட கல்வியில ஈடுபடுறதுனால, ஆரோக்கியம் பத்தி பெருசா கவலைப்படமாட்டாங்க. ஏன்னா, இந்த வயசுல நமக்கு என்ன ஆயிடப்போகுது, வயசான காலத்துலதான பிரச்சினை அப்போ பார்த்துக்கலாம் அப்படீங்கிற ஒரு அலட்சியப்போக்கு!

இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் நாம், வேகமான இந்த வாழ்க்கையில தினமும் இழந்துபோகிற ஒரு முக்கியமான விஷயம் உறக்கம்! வார நாட்கள்ல திங்கள் தொடங்கி வெள்ளிவரை சரியான உறக்கமின்மை அப்படீங்கிறது ஒரு தொடர்கதையாகவே மாறியிருக்கும் நம்மில் பலருக்கு! தினமும் ஏற்படுற இந்த உறக்க இழப்பு பத்தி அதிகமா அலட்டிக்காத சிலர் நம்மிடையே இருந்தாலும், பலரோட நிலைப்பாடு என்னன்னா, “சரி வார நாட்கள்ல தூங்க முடியலைன்னா என்ன, அதான் வாரக்கடைசியில ரெண்டு நாள் விடுமுறை இருக்குதே அப்போ ஒரு 2 மணி நேரமோ இல்லைன்னா ஒரு 4 மணி நேரமோ அதிகமா தூங்கினா சரியாப்போயிடப்போகுது” என்பதுதான்!

ஆனா, உறக்க இழப்பு பத்தின நம்மோட இந்த கணிப்பு தவறானது என்று சொல்கிறது அமெரிக்காவின் பென்சிவேனியா பல்கலைக்கழக மருத்துவத்துறையின் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ் அவர்களின் சமீபத்திய  உறக்கம் தொடர்பான ஒரு ஆய்வு! இந்த ஆய்வில் எட்டப்பட்ட முடிவுகள், முன்வைக்கப்படும் கருத்துக்கள், பரிந்துரைகள் என்னென்ன, நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க நம் அன்றாட உறக்கம் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்களைத்தான் நாம இந்தப் பதிவுல மேற்கொண்டு பார்க்கப்போகிறோம்…..

தூக்கக்கடனும் வாரக்கடைசி தூக்கமும்!

பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தினசரி உறக்க அளவு 6 முதல் 8 மணி நேரம் வரை! ஆனால், சராசரியாக நம்மில் பலர் தினமும் பணி முடிந்து இரவு உறங்கச்செல்லும் நேரம் குறைந்தது 12.30 என்று வைத்துக்கொள்வோம். பின்பு அடுத்த நாள் பணிக்குச் செல்ல வேண்டிய நேரம் 8.30 அல்லது 9 என்றால், நாம் உறக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் 6 அல்லது 7 மணி என்று வைத்துக்கொள்வோம். ஆக, தினசரி நாம் 5.30 முதல் 6.30  மணி நேரம்வரை உறங்குகிறோம். இது பரவாயில்லை!

ஆனால், சிலர் இரவு 1 மணி அல்லது 2 மணிக்கு உறங்கச் சென்று காலை 5 அல்லது 6 மணிக்கு எழுவதும் உண்டு. இப்படியான உறங்கும் பழக்கம் இருப்போருக்கு தினசரி உறக்கம் வெறும் 4 மணி நேரமே! இது ஆரோக்கியமான உறக்க நேரத்தைவிட 2 முதல் 4 மணி நேரம் குறைவு. இப்படியே வாரம் 5 நாட்கள் தூங்கினால், தினமும் 4 மணி நேரம் சேர்ந்து மொத்தம் 10 முதல் 20 மணி நேர உறக்க இழப்பு (Sleep deprivation) சேர்ந்துவிடுகிறது. இத்தகைய உறக்க இழப்பு சேர்வதையே உறக்கக் கடன்/தூக்கக் கடன் (sleep debt) என்கிறார்கள். இந்தக் கடனை அடைக்க வாரக்கடைசியில் ஒரு நாள் இரவு 10 மணிக்கு உறங்கி, அடுத்த நாள் காலை 8 மணிக்கோ அல்லது 10 மணிக்கோ எழுந்தால் போதும் என்பதுபோன்ற ஒரு பொதுவான கருத்து இதுவரை நிலவி வந்தது.

ஆனால், இது போன்று தூக்கக் கடனை வாரக்கடைசியில் அடைத்துவிட்டாலும், பணியில் கவனக்குறைவு மற்றும் செயல்திறன் குறைவு ஆகிய பிரச்சினைகளை மக்கள் சந்திக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது! இந்த ஆய்வு முடிவானது முந்தைய சில ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஆய்வாளர் டேவிட்!

சமீபத்திய ஆய்வின்படி, அன்றாட வாழ்க்கையில் கவனக்குறைவு, செயந்திறன்குறைவு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க வாரக்கடைசியில் தூங்கும் 10 மணி நேரம் உறக்கம் போதாது என்றும், மேலும் பல இரவுகள் அதே போல உறங்க வேண்டியது அவசியம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தூக்கக்கடனை அடைக்காமல் அதிகரித்துக்கொண்டே போவதால் பணியில் கவனக்குறைவு மற்றும் வேறு சில தவறுகளையும் இழைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவருகிறது என்கிறார் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ்!

சராசரியாக 30 வயதான, ஆரோக்கியமான சுமார் 159 பேரை ஆய்வுக்குட்படுத்திய இந்த ஆய்வு, இதுவரை சோதனைக்கூடத்திலேயே வைத்து மேற்கொள்ளப்பட்ட  “உறக்கக் கட்டுப்பாடு” ஆய்வுகளிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது!

உறங்காமலேயே இரவு முழுக்க பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்தல் அவசியம்!

பல்வேறு உடல் பாகங்களைக் கொண்ட நம் உடலியக்கமானது, சூரிய ஒளி தொடங்கும் பகலில் விழித்து இருப்பதற்க்கும், சூரிய ஒளி மறைந்துவிடும் இரவில் உறங்குவதற்க்குமே இயற்க்கையால் வடிவமைக்கப்பட்டது. சூரிய ஒளியை மையமாக/அடிப்படையாகக் கொண்டு,  பகல் இரவு நேரத்திற்க்கேற்ப இயங்கும் ஒரு கடிகாரமான உயிரியல் கடிகாரத்தின் (Biological clock) இயக்கத்தின் அடிப்படையிலேயே நம் உடலியக்கம் நிகழ்கிறது. இதற்க்கு பகல்-இரவுக்கு அடிப்படையான சூரிய ஒளி தொடங்கி மறையும் ஒரு சுழற்ச்சியே (circadian rhythm) அடிப்படைக் காரணம்.

ஆக, 5 வார நாட்கள் தொடர்ந்து 4 மணி நேரம்வரை மட்டுமே உறங்கிவிட்டு, திடீரென்று ஒரு நாள் அதிக வேலை வந்துவிட, சரி இன்று இரவு உறங்காமலேயே இந்தப் பணியை முடித்துவிட்டு நாளை முழுதும் உறங்கிவிடுவோம் என்று சில சமயம் இரவுமுழுக்க உறங்காமல் விழித்திருப்பதால், ஒருவரின் ‘கவனம்’ குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது அல்லது சம்பந்தப்பட்டவர் கவனச்சிதறல்/கவனக்குறைவு பிரச்சினையால் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரிக்கிறார் டேவிட்!

அதனால், இயன்றவரை தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்குவதை பழக்கப்படுத்திக்கொண்டு, அடிக்கடி இரவு முழுக்க விழித்திருக்கும் பழக்கத்தை தவிர்த்தல் நலம் என்கிறார் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ்! சரி, இந்த ஆய்வு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

தொடர்புடைய சில பதிவுகள்:

நூறு வருடங்கள் வாழ்வது எப்படி?

உயிரியல் கடிகாரமும் உடல் பருமனும்…..

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?

சிலர் குறட்டை விடுவது ஏன்?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

போடுங்கய்யா ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements