கடலில் அலைகள் தோன்றுவது ஏன்?

Posted on ஓகஸ்ட் 8, 2010

22


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

தினமும் பழங்களும், காய்கறிகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுத்துவதற்க்கான வாய்ப்புகள் குறைவாம். அதுமட்டுமில்லாமல், பழங்களும் காய்கறிகளும் நோய்கள் மற்றும் தொற்றுகள் வருவதை தடுக்கிறதாம்!

நாம வாழுற இந்த உலகத்துல சில விஷயங்கள் இருக்கு. நாம இருந்தாலும் இல்லைன்னாலும் அது பாட்டுக்கு நடந்துகிட்டேதான் இருக்கும். உதாரணமா சொல்லனும்னா, இந்த சூரியன் காலையில் எழுவதையும் மாலையில் மறைவதையும் சொல்லலாம். அதேமாதிரி, பூக்கள் மலர்வது, வண்டுகள் அதில் தேன் எடுப்பதுன்னு இப்படி நெறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

அப்படிச் சொல்லிக்கிட்டே போகும்போது உருவாகுற பட்டியல்ல எத்தனை விஷயங்களுக்கு நம்ம பகுத்தறிவுத் திறனை பயன்படுத்தி காரணம் அல்லது விளக்கங்கள் சொல்ல முடியும்னு பார்த்தா கணக்கு போட்டுச் சொல்ல வேண்டிய அவசியமெல்லாம் இருக்காது. ஏன்னா, ஒரு சராசரி மனிதனோட (நம்ம) அறிவுக்கு எட்டியதுன்னு பார்த்தா மிகச் சொற்பம்தான். அப்படிப்பட்ட அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான, ஆனால் ஏன் அது நிகழ்கிறது என்பதற்க்கான காரணம்/விளக்கத்தை நாம் பெரிதாக அலட்டிக்கொண்டு யோசிக்காமல் கடந்துசெல்லும் ஒரு விஷயம்தான் கடலில் தோன்றும் அலைகள்!

அலைகள் ஓய்வதில்லைன்னு யாராவது சொன்னா, உடனே அது கார்த்திக்கும், ராதாவும் அறிமுகமான பாரதிராஜாவோட படம்னு டக்குன்னு சொல்லிடுவேன் நானு! ஏன்னு, நாங்களும் சினிமாவை தவறாம பார்க்குற தமிழனுல்ல?! ஆனா, அலைகள் ஏன் வருதுன்னு என்னைக் கேட்டா, சத்தியமா எனக்குத் தெரியாது. ஆனா, சின்ன வயசுல அலைகள் பத்தி கேட்ட கதை ஒன்னு சுமாரா நியாபகத்துல இருக்கு.

அந்தக் கதையில, ஆண் அலை பெண் அலைன்னு ரெண்டு வித்தியாசமான அலைகளைப் பத்தி சொல்லுவாங்கன்னு மட்டுந்தாங்க இப்போ நியாபகத்துல இருக்கு.மத்ததெல்லாம் மறந்து போச்சுங்க?! அந்தக் கதையைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சா கொஞ்சம் மறுமொழி எழுதி சொல்லிட்டுப் போங்களேன்!

சரி, இனி நாம இன்றைய பதிவுச் செய்தியை பார்ப்போம்……

கடலில் அலைகள் தோன்றுவது ஏன்?

credit: Rolf hicker

இந்த அலைகள் இருக்குங்களே, அதுங்கள சாதாரணமானதுன்னு நெனச்சிடாதீங்க. மேலோட்டமா பார்க்குறதுக்கு வேணும்னா அலைகள் உங்களுக்கு சாதாரணமா தெரியலாம். ஆனா, இந்த உலகத்துல முதல் முதல்ல டெலஸ்கோப் வச்சி நட்சத்திரங்களையே ஆய்வு செஞ்ச விண்வெளி விஞ்ஞானியான, ஆணானப்பட்ட கலிலியோவுக்கு தண்ணிக்காட்டி இருக்குங்க இந்த அலைகள்னா பார்த்துக்குங்களேன்?!

அதாவது அலைகள் தோன்றுவது குறித்து ஒரு கோட்பாட்டை நிறுவினாராம் கலிலியோ. ஆனா, கடைசியில அது அர்த்தமே புரியாத, விளங்காத ஒரு கோட்பாடா ஆகிப்போச்சாம்?! அடப்பாவமே….! இப்படி கலிலியோவுக்கே கல்தா கொடுத்த இந்த அலையைப் பத்தி இன்னிக்கு ஓரளவுக்கு தெரியும் சில/பல பேருக்கு. அதாவது…..

பூமி, நிலவு மற்றும் சூரியனுக்கு இடையிலான ஈர்ப்புசக்தியினாலேயே அலைகள் தோன்றுகிறது அப்படீங்கிற உண்மைதான் அது. அலைகள் உருவாவதில் இம்மூன்று கிரகங்களுக்கும் பங்குண்டு என்றாலும், அலைகள் உருவாவதில் அதிக பங்கு நிலவுக்குத்தானாம்!”

பூமி மீதான நிலவின் ஈர்ப்பு சக்தியானது, பூமியின் சமுத்திரங்களை பொங்கச் செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாம்! அதுமட்டுமில்லாமல், உலகில் வேறு எந்த ஈர்ப்பு விசையும் இல்லாதுபோகும் பட்சத்தில், பூமி தன்னைத்தானே சுற்றிவருகையில் ஏற்படும் ஒரு ராட்சத அலையினால், உலகக் கடலின் கரைகளெல்லாம் கடலுக்குள் (நிலவின் ஈர்ப்பு விசையினால் உருவாகும் அந்த ராட்சத அலைக்குள்) மூழ்கிவிடக்கூடிய அபாயம் ஏற்படுமாம்! (அநியாயத்துக்கு இயற்பியலா இருக்குங்க! ஒன்னும் விளங்கல?!)

ஆனா, ஒன்னும் கவலைப்படாதீங்க! ஏன்னா, நகர்ந்துகொண்டே/இடம்மாறிக்கொண்டே இருக்கும் எந்தவொரு பொருளும் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும் இனர்ஷியா என்னும் உலகின் இயல்பு/தன்மையினால், உலகச் சமுத்திரங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன என்பதால், ஒரு முறை தோற்றுவிக்கப்படும் அலையானது தொடர்ந்துகொண்டே இருக்கும் என்கிறது விஞ்ஞானம்!

இந்த இனர்ஷியா (Inertia) என்னும் இயல்பானது, சமுத்திரத்தையும் நிலவின் ஈர்ப்புவிசையின் திசையில் தொடர்ந்து நகரச்செய்யுமாம் பூமி சுற்றிக்கொண்டிருக்கும்போதே! அதனால், உலகிந் சமுத்திரங்கள் இருமுறை எழும்புகின்றனவாம். முதல்முறை, நிலவை பூமி நெருங்கிவரும்போது அந்தப் பக்கத்தில் சமுத்திரமானது இருக்கும்போதும், அடுத்தது நிலவை பூமி சுற்றிவரும்போது பூமியானது நிலவுக்கு மிகத்தொலைவில் இருக்கும்போது அந்தப்பக்கத்தில் சமுத்திரம் இருக்கும்போது என இருமுறை சமுத்திரங்கள் எழும்புகின்றனவாம்! அப்படீன்னு நான் சொல்லல, அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் நகர சமுத்திர ஆய்வு நிறுவனமான, வுட்ஸ் ஹோல் ஆய்வுக்கூட (Wood’s Hole Oceanographic Institution) ஆய்வாளர்கள் சொல்றாங்க. ஓஹோ அப்படியா?!

உலகின் புவியியல் அலைகளை பல வகையில் பாதித்தாலும், பூமியின் பல இடங்களில் 24 மணி நேரம் 50 நிமிடங்களில் இரண்டு ராட்சத உயர்ந்த அலைகளும் (high tides) இரண்டு தாழ்ந்த அலைகளும் மட்டுமே தோன்றுகின்றனவாம்! அதென்ன கொசுறா ஒரு 50 நிமிஷம்னு கேக்குறவங்களுக்கு, பூமியை தினமும் நிலவு சுற்றிவரும்போது நிலவு எடுத்துக்கொள்ளும் நேரமாம் அந்த சொச்ச 50 நிமிடங்கள் (The extra 50 minutes is caused by the distance the moon moves each day as it orbits Earth). கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு சாமீய்….!!)

சூரியனும் அலைகளும்!

அலைகள் (ஏன்) ஓய்வதில்லைங்கிறதுக்கு நிலவு மட்டுந்தான் காரணம்னு பார்த்தா, “ஏய் நாங்களும் இருக்கோமுல்ல காரணமா” அப்படீன்னு சொல்லிக்கிட்ட வர்றாரு சூரியனார். அட ஆமாங்க, சூரிய அலைகள்னு ஒன்னு இருக்குதாமுல்ல. அதாவது, சூரியனின் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளுக்கு சூரிய அலைகள்னு (Solar tides) பேராம். ஆனால், நிலவினால் ஏற்படுற அலைகளைவிட சூரிய அலைகள் சக்தி குறைந்தவையாம். ஓஹோ….?!

நிலவைவிட 27 மடங்கு பெரியது சூரியன். அதேசமயம் பூமிக்கு நிலவிருக்கும் தூரத்தைவிட 390 மடங்கு அதிக தொலைவில் இருக்கிறதாம் சூரியன். அதனால, நிலவுக்கிருக்கும் அலைகள் உருவாக்கும் சக்தி/விசையில் (tide-generating forces, TGFs) 46% மட்டுமே சூரியனுக்கு இருக்கிறதாம் தேசிய சமுத்திர மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் (National Oceanic and Atmospheric Administration, NOAA) கூற்றுப்படி!

உலக அலைகள்; சில சுவாரசியங்கள்!

  1. கனடா நாட்டின் ஃபன்டி என்னு விரிகுடாவில் உலகின் மிகப்பெரிய அலைகள் தோன்றுகின்றனவாம். சுமார் ஒரு 4 மாடிக்கட்டிடம் அல்லது 49 அடி (15 மீட்டர்) உயரம்வரை எழும்புமாம் இந்த அலைகள்!
  2. இங்கு உருவாகும் ஒவ்வொரு அலையும் சுமார்  110 பில்லியன் டன் நீரை தள்ளுகின்றனவாம். அடேங்கப்பா….!

அலைகளைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்; அன்றும் இன்றும்!

கடந்த 1595 ஆம் வருடம், விண்வெளி விஞ்ஞானி திரு.கலீலியோ கலீலி அவர்கள், அலைகள் தோன்றுவதற்க்கான காரணங்களை விளக்க முயன்று ஒரு கோட்பாட்டை உருவாக்கியபோது, நிலவை கோட்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டாராம் அவர். மாறாக, பூமி சூரியனைச் சுற்றி வருவதையும், உலக சமுத்திரங்களின் இனெர்ஷியாவை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டாராம் கலீலியோ!

ஆனால், கடந்த 1687 ஆம் வருடம், இயற்பியல் விஞ்ஞானி திரு.சர் ஐசாக் நியூட்டன் அவர்கள்தான் அலைகள் தோன்றுவதற்க்கான காரணம் ஈர்ப்பு விசை என்று சரியாக கணித்தாராம். வாழ்க நியூட்டன் ஐயா அவர்களின் புகழ்!!

என்னங்க, விவேக் ஸ்டல்ல “அடப்பாவிகளா, நேரம் கிடைக்கும்போது கடற்கரைப் பக்கம் போனோமா, காலாற பத்து நிமிஷம் நடந்தோமா, ரெண்டு சுண்டலை வாங்கி உள்ளே போட்டோமான்னு சிவனென்னு போய்க்கிட்டு இருந்த என்னை, அலைகள் தோன்றுவது ஏன்னு சொல்றேன் கூப்பிட்டு, இப்படி காதுல (கண்ணுல?) ரத்தம் வரவச்சிட்டியேன்னு கேக்குறீங்களா?

சரி விடுங்க, பதிவரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா…..?!

தொடர்புடைய சில பதிவுகள்:

பிரபஞ்சத்துக்கு விளிம்பு இருக்கிறதா?

தொடுவானம் எவ்வளவு தூரம்?

பனிப்பாறைகள் ஏன் மிதக்கின்றன?

விரைவில் உறைவது எது, வெந்நீரா குளிர்ந்த நீரா?

ஆத்மாவின் எடை என்ன?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (இன்ட்லி கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி இன்ட்லியில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். நன்றி!

Advertisements