உளவியல்: ‘மனிதவெடிகுண்டு’களின் மூளை/மனதுக்குள்ளே ஒரு பயணம்?!

Posted on ஜூலை 23, 2010

2


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

மன உளைச்சல்/மன அழுத்தம் நிறைந்த வேலையுள்ளவர்களுக்கு, சோம்பேறித்தனம் மிகுந்த ஒரு விடுமுறை நாளும், சுவாரசியமில்லாத ஒரு வேலையுள்ளவர்களுக்கு, மலையேற்றம் மற்றும் இயற்க்கை நிறைந்த இடங்களில் நடைபயணமும் அவசியமென்கிறது இருதய மருத்துவம்!

இந்த உலகத்துல உருவான உயிர்கள் எல்லாவற்றுக்குமே சுகமான, அமைதியான, விருப்பத்திற்கேற்ற வாழ்க்கை வாழ்வதற்க்கான அடிப்படை உரிமையும், ஆசையும் இருக்குங்கிறத உங்கள்ல யாரும் மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன். ஆனா, இந்த இயற்க்கை நியதிக்கு எத்தனையோ தடைகள் இயற்க்கையாலும், மனிதன் உருவாக்கும் செயற்க்கையான நடைமுறைகள், கட்டுப்பாடுகளினாலும் ஏற்படுவது உலகறிந்த நிதர்சனம்!

இயற்க்கையான மரணம் தவிர்த்த எந்தவொரு வகையிலான உயிரிழப்பும், இந்த உலகத்தின் பார்வையில் கொலையே! ஒரு கொலை என்பது மனிதாபிமானத்தை, அறத்தை மீறிய ஒரு செயல். அதனால், பொதுவாக கொலையை யாருமே வரவேற்ப்பதோ/ஊக்குவிப்பதோ இல்லை! இருந்தாலும், கொலைகள் ஏற்றுக்கொள்ளப்படும் சில தருணங்கள்/சூழ்நிலைகளும் நாம் வாழும் இவ்வுலகில் உண்டு!

அத்தகைய ஒரு சூழ்நிலைதான் நாம் வரலாறுகளாக புத்தகங்களிலும், சமகால நிகழ்வுகளாக ஊடகங்களில் படித்தும்/பார்த்தும்  இருக்கக்கூடிய போர். ஒரு போருக்கான அடிப்படைக் காரணங்கள் இரண்டு, நம் சுற்றம் நட்பின் உரிமைகளை பாதுகாக்க மற்றும் பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுக்க! போர்களில் பலவகையுண்டு. இந்தக் கட்டுரைக்கு தொடர்புடையது மக்கள் போர்/உள்நாட்டுப் போர்! (Civil war)!

நாம வாழுற இந்த உலகத்துல, சமகாலத்துல எத்தனையோ மக்கள் போர்கள் நடந்தாலும் நமக்கு நன்கு பரிச்சயமானது, இலங்கையின் ஈழப்போரும், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரும்தான். கடந்த 27 வருடங்களாக நடந்து வந்த ஈழப்போருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 80,000-100,000 என்கிறது விக்கிப்பீடியா. இதில் 27,639 ஈழத்தமிழ் போராளிகளும், 23,327 சிங்கள படைவீரர் மற்றும் காவல்துறையினரும், 1,155 இந்திய படைவீரர்களும், மீதமுள்ள ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அடங்குவர்.

இந்தப் போர் சரியானதா, தவறானதா என்ற விவாதத்துக்கு இந்தக் கட்டுரையில் இடமில்லை என்பதால், நாம் நேராக விஷயத்துக்கு வந்துவிடுவோம்! ஈழப்போராகட்டும், இஸ்ரேல்-பாலஸ்தீன போராகட்டும், இந்தப் போர்களில் மக்களின் பார்வையை அதிகம் ஈர்த்து விவாதத்துக்குள்ளானவர்கள், மனிதவெடிகுண்டு/தற்கொலைப்படையினர்!

மனிதவெடிகுண்டுகள் எப்படிபட்டவர்கள்?

பாலஸ்தீன மனிதவெடிகுண்டுகள் (djhotpoint.wordpress.com)

மனிதவெடிகுண்டுகளான மனிதர்களை நம்மில் எத்தனைபேருக்கு தெரியும், பரிச்சயமிருக்கும், அல்லது நெருங்கிப்பழகியிருப்போம் என்றால் மிக சொற்பமான எண்ணிக்கையிலானவர்களே என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனா, அவங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க ஆசைப்படுறவங்க பட்டியல்னு பார்த்தா, அதுல நம்மில் முக்கால்வாசிப்பேர் கண்டிப்பாக இருப்போம்.

ஆனா, அதுக்கான வாய்ப்பு நமக்கு மிக மிக சொற்பமே! இருந்தாலும், ஒரு மனிதவெடிகுண்டாக மாறிவிட்ட மனிதர் ஒருவரின்…..

“எண்ண ஓட்டம், விருப்பு-வெறுப்பு, கொள்கை, எதிர்காலம் (?), குடும்பம் மீதான பற்று, ஒழுக்கம், காதல், உணர்வுகள், நட்புவட்டம் என ஒரு சராசரி மனிதனுக்குறிய இயல்புகளின் நிலை என்ன” அப்படீன்னு தெரிஞ்சிக்கறதுல நம்ம எல்லோருக்குமே ஒரு அதீத ஆர்வம் கண்டிப்பாக இருக்கும், இல்லீங்களா?

இவை எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள, மனிதவெடிகுண்டுகளின் மனதுக்குள் நுழைந்து பார்ப்பது அவசியம். அது பொதுமக்களான நம்மால முடியாது. ஆனா, உளவியலாளர்களாக கண்டிப்பா முடியும். அப்படி ஒரு உளவியலாளரின் மனிதவெடிகுண்டுகள் மற்றும் அவர்களின் தலைவர்களுடனான சந்திப்பிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கேள்விகளும் அதற்க்கான விடைகளும்தான் இன்றைய பதிவாக உங்களுக்கு! வாங்க பயணத்தை தொடர்வோம்…..

ஏரியல் மெராரி என்பவர், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர். பாலஸ்தீன மனிதவெடிகுண்டுகள்  உட்பட்ட தீவிரவாதிகளுடனான அவருடைய சந்திப்புகள், ஆய்வுகள் ஆகியவற்றின் சாராம்சத்தின் அடிப்படையில் அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும், அதற்க்கான பதில்களும் பின்வருமாறு…..

கேள்வி: மனிதவெடிகுண்டு தீவிரவாதிகளும், பிற தீவிரவாதிகளும் உளவியல் ரீதியாக வித்தியாசமானவர்களல்ல என்றே இதுவரை நம்பப்பட்டது. ஆனால் வெடித்துச்சிதறத் தவறிய ‘வருங்கால மனிதவெடிகுண்டுகள்’ மீதான தங்களின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் எதிர்மறையான கருத்தை முன்வைக்கின்றன. நீங்கள் கண்டறிந்த உண்மைதான் என்ன?

மனிதவெடிகுண்டாக மாறத் தயாராக இருப்பவர்கள், வெடிகுண்டு தீவிரவாதத்துக்கு உட்படுத்தப்பட ஏதுவான, தானாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சில பண்புநலன்களை உடையவர்களாக இருக்கிறார்கள்! நான் நேர்முகம் கண்ட 15 வருங்கால மனிதவெடிகுண்டுகள் யாருமே மனநிலை பிறழ்வு நோயான psychosis-ல் பாதிக்கப்படவில்லை!

அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், தங்களுக்கு மேலதிகாரிகளாக, தலைவர்களாக இருப்பவர்களின் ஆணைகளுக்கு “முடியாது” என்று சொல்ல முடியாத குணநலன் உடையவர்கள். அதுமட்டுமில்லாமல், தங்களின் மனசாட்சிக்கு எதிரான செயல்களிலும் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும், உணர்வு ரீதியாக தெளிவில்லாமலும், பொதுமக்களின் கருத்துக்களால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் கண்டறிந்தோம்!

இம்மாதிரியான குணாதீசியமுடையவர்கள், தாங்களாக முன்வந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் என்றாலும், அவர்களின் செயலார்வம் செயல்களை வெற்றிகரமாக முடிக்கும்வரை உறுதியாக இருப்பதில்லை!

கேள்வி: அவர்கள் தீவிரவாத கொள்கையுடையவர்களாக இருந்தார்களா?

இல்லை. ஒரு  சராசரி பாலஸ்தீனரை விட அதிகபட்ச தீவிரவாத எண்ணமுடையவர்களாகக் கூட அவர்கள் இருக்கவில்லை! அவர்களில் பலருக்கு இந்த மனிதவெடிகுண்டு தாக்குதலே முதல் தீவிரவாதச் செயல். கொள்கை ரீதியாக ஊக்கம் அவர்களை தீவிரவாதிகளாக்கவில்லை. மூன்றில் இரண்டு பங்கினர் சாவுக்கு பயந்தும், குடும்பத்தைப் பற்றிய கவலையாலுமே தீவிரவாதிகளாகியிருந்தனர்!

கேள்வி: ஒரு குறிப்பிட்ட இலக்கு அல்லது திட்டத்தினை இறுதிவரை எப்படி முன்னெடுத்துச் செல்கிறார்கள்?

மனிதவெடிகுண்டுகளில் சிலர், “ஒட்டுறவின்மை (dissociation)” என்னும் உளவியல் மனநிலைக்குள் சென்றுவிடுகிறார்கள். அத்தகைய நிலையில் தங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களை தவிர்த்து/நிறுத்திவிடுகிறார்கள்!

“ஒரு பேருந்தில் தன்னை வெடித்துக்கொள்ள முயன்ற ஒரு மனிதவெடிகுண்டு நபர், தான் அத்தீவிரவாதச் செயலுக்கு பணிக்கப்பட்டதிலிருந்தே பயந்துகொண்டே இருந்திருக்கிறார். குறிப்பிட்ட நாள் நெருங்கியதும் பயம் அதிகமாகியிருக்கிறது.  ஆனால் அவர், தான் பேருந்தில் ஏறியபின் என்ன ஆனதென்று தனக்கே தெரியாது என்கிறார்”

நான் அவரை நம்புகிறேன். காரணம், அதம்பின்னர் என்ன நடந்ததென்று பயணிகளிடமிருந்து தெரிந்துகொண்டேன். “சம்பவத்தின்போது, பேருந்தின் நடுப்பகுதிக்குச் சென்று,  வெடிகுண்டை செயலாக்க முயன்று, அது செயல்படவில்லை. மீண்டும் முயற்ச்சித்தும் முடியவில்லை! அதற்க்குள் பயணிகள் அனைவரும் அவரை சூழ, அவர்களிடமிருந்த விடுபட சண்டையிட்டு, உறக்க சத்தம் போட்டிருக்கிறார்”.

ஆனால், அவருக்கு ஒன்றும் நியாபகமில்லை! அதனால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டார். காரணம், தனக்குள்ளேயே ஒரு பெரிய குழப்பம் இருந்ததால்!

கேள்வி: நீங்கள் மனிதவெடிகுண்டுகளை உருவாக்கிய, பாலஸ்தீன தீவிரவாத குழுக்களின் மூத்த தலைவர்கள் 14 பேரையும் நேர்முகம் கண்டிருக்கிறீர்கள். மனிதவெடிகுண்டுகளுடன் ஒப்பிடும்போது, அவர்களின் மனநிலையின் உளவியல் நிலை எப்படி இருந்தது?

தலைவர்களின் மனநிலை மிகவும் வித்தியாசமாக இருந்தது!அவர்கள், பிறரை தங்களின் தேவைக்கேற்ப மாற்றும் தன்மையுள்ள, மனிதவெடிகுண்டுகளைவிட புத்திசாலியான, வயதில் முதிர்ந்தவர்களாக  (சராசரியாக 27 வயது, மனிதவெடிகுண்டுகள் 19 வயது!) இருந்தார்கள்.

சிலர் பல்கலைக்கழக படிப்புவரை சென்றிருந்தார்கள். வெளியுலகுக்கு நல்லவர்கள்போலவும், உண்மையில் பாவ புண்ணியம் பார்க்காத, மனிதாபிமானமற்ற, தீய எண்ணம் உடையவர்களாக இல்லாமல் (not psychopathic) மிகவும் யதார்தமான, தாங்கள் செயவது சரி, அது தங்கள் நாட்டுக்காக செய்கிறோம் என்றும், அதில் எந்தவித சந்தேகமுமில்லாதவர்களாகவும் இருந்தார்கள்!

கேள்வி: வருங்கால மனிதவெடிகுண்டுகளாக மாற இருந்தவர்களுடன் உரையாடும்போது எப்படி உணர்ந்தீர்கள்?

மனிதவெடிகுண்டுகளை கொலையாளிகளாக உருவகிக்கும் பொதுமக்களின் கற்பனைக்கு முற்றிலும் வேறுபட்டிருந்தார்கள் வருங்கால மனிதவெடிகுண்டுகள்!  பாவப்பட்ட சின்ன பசங்க மாதிரி இருந்தாங்க அவங்க. பிறரை தாக்கும் எண்ணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை!

நேர்முகங்களின்போது, சாதுவாகவும் கருணையுடையவர்களாகவும் தென்பட்டார்கள். முற்றிலும் மாற்றப்பட்ட மனிதர்களாகவே அவர்களை என்னால பார்க்க முடிந்தது!

ஆனால், தலைவர்களைப்பொறுத்தவரை முற்றிலும் வேறுபட்டிருந்தார்கள்.  அவர்களுடன் உரையாடும்போது, அப்பாவி மக்களை கொல்ல பல இளைஞர்களை ஏவியவர்கள் இவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அவர்களையும் மனிதர்களாகவே நான் பார்த்தேன். என்ன ஒன்று எந்த ஒரு ஒட்டுறவுமின்றி இருந்தேன்!

“இம்மாதிரியானவர்களை ஊக்குவிப்பது எது என்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால்,  அவர்களுடன் உரையாடும்போது நாம ஒரு நீதிமானைப் போல் இருக்கக் கூடாது! அவர்கள் இழைத்த படுபாதகச் செயல்களையெல்லாம் என்னால் அப்போது நினைத்துப் பார்க்கமுடியவில்லை!”

இதுவரை, ஒரு மனிதவெடிகுண்டாக மாறிய ஒரு மனிதரின் மனநிலையை ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருந்தாலும், இப்பதிவு என் யூகங்களில் பாதிக்குமேல் முற்றிலும் தவறென்று நிரூபித்தது.

உண்மையில் மனிதவெடிகுண்டுகளில் பலர், ஒருவித உணர்ச்சி வேகத்திலும், அதிகாரமுள்ளவர்களின் ஆணைகளுக்குட்பட்டுமே பெரும்பாலும் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரிகிறது. சொந்த விருப்பத்தினால் பெரும்பாலானவர்கள் மனிதவெடிகுண்டுகளாக மாறுவதில்லை!

ஆமா, இந்தப் பதிவு பத்தியும், மனித வெடிகுண்டுகள் பத்தியும் நீங்க என்ன நெனக்கிறீங்க?

தொடர்புடைய சில பதிவுகள்:

வார்த்தைகள்கூட வலிக்கின்றன, ஏன்?

செக்ஸ்: உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!!

வலி வந்தால் நாம் ஏன் அலறுகிறோம்?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

மேலிருப்பான் தளம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா இங்கே அழுத்தவும்

Advertisements