செக்ஸ்: ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்து, செக்ஸ்; ஒரு மர்மத் தொடர்பு?!

Posted on ஜூலை 14, 2010

8


இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

கொலஸ்டிரால் என்னும் இருதய எதிரியை அழிக்கவல்ல ஆயுதங்கள்: பூண்டு, மீன்கள், பழரசம் (Wine) மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்ச்சி என்கிறது மருத்துவ உலகம்!

இந்த மில்லியன் டாலர் கேள்வி, மில்லியன் டாலர் கேள்வி அப்படீன்னு (ரெண்டு இல்ல!) ஒன்னு அமெரிக்காவுல சொல்லுவாங்க தெரியுமில்ல உங்களுக்கு? கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்! அதான் ஒலகமயமாக்கலுன்னு ஒன்னு வந்து, ஒலகத்தையே புரட்டிப்போட்டது மட்டுமில்லாம, நம்ம ஊரு பாதாம் கீரெல்லாம் காணாமப் போயி, குளிர்பானம்ங்கிற பேர்ல பூச்சிமருந்தையெல்லாம் ரசிச்சி, ருசிச்சி குடிக்கிறோமே!

அதனால உங்களுக்கெல்லாம் அமெரிக்காவோட மில்லியன் டாலர் கேள்வி பத்தி நல்லாவே தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன். நாம படிக்கிற/நமக்கு பரிச்சயமான உயிரியல், இயற்பியல், வேதியல், பொறியியல் இப்படி ஒவ்வொரு துறையிலயும் இருக்குற பதிலில்லாத பல கேள்விகள் இந்த மில்லியன் டாலர் கேள்வி பட்டியலுக்குள்ள அடங்கிடும். அந்த கேள்விங்க எல்லாமே இன்னும் வெறும் கேள்விங்களாவேதான் இருக்குதே தவிர, இதுவரைக்கும் எந்த பதிலையும் காணோம்.

அப்படி ஒரு கேள்விதான் இந்தப் பதிவுல இனிமே நாம பார்க்கப் போறது. அது என்ன கேள்வின்னா…..

ஒட்டகச்சிவிங்கிக்கு கழுத்து நீண்டது/நீண்டிருப்பதற்க்கு விஞ்ஞானப்பூர்வமான காரணம் என்ன?

இப்படியொரு கேள்வியை, பரிணாமவியலாளர்கள் அல்லது பரிணாமம் படிச்ச ஒருத்தர், இப்படி யாருகிட்ட கேட்டாலும், உடனே ஒரு பதில் வரும். அது என்னன்னு உங்கள்ல சில/பலருக்குத் தெரிஞ்சிருக்கும். அதாவது, சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, உயரமான மரங்களிலிருக்கும் (உணவான) இலைகளை உண்பதற்க்காக தன் கழுத்தை நீட்டி நீட்டி இலைகளை உண்டு பழகிய (ஒட்டகச்சிவிங்கியின் மூதாதையர்) ஒட்டகச்சிவிங்கிக்கு, காலப்போக்கில் கழுத்து கொஞ்சம் கொஞ்சமாக நீண்டு(?) இன்று நம்மிடையே வாழும் ஒட்டகச்சிவிங்கி உருவானது என்று போகிறது அந்த வாதம்!

ஆனா, துரதிஷ்டவசமா இது இன்னும் வாதமாகவேதான் இருக்குது. காரணம் இந்த வாதத்தை உறுதியாக்கும் சரியான ஆதாரம்/விளக்கம், இப்படி எதுவுமே இல்லை என்பதுதான்! ஆனா, சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையின் ஆய்வுக்குழு ஒன்னு, யுரேகா….யுரேகா….அப்படீன்னு கத்தாத கொறையா, ஒட்டகச்சிவிங்கிக்கு ஏன் கழுத்து நீளமா இருக்குன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன் அப்படீன்னு சொல்லுது. அது என்னன்னுதான் பார்ப்போம் வாங்க…..

ஒட்டகச்சிவிங்கியும் அதன் நீண்ட கழுத்தும்!

wikipedia: Hans Hillewaert

Giraffa camelopardalis அப்படீங்கிற அறிவியல் பேரும், 4.5 முதல் 5 மீட்டர் உயரமுமுள்ள இக்கால ஒட்டகச்சிவிங்கிதான் உலகத்துலயே உயரமான வாழும் விலங்கினமாம்! ஆப்பிரிக்காவின் புல்வெளிகளிலும், காடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்விலங்கு சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது என்கிறது பரிணாம ஆய்வு!

wikipedia: Apokryltaros

ஆனா, 15 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி, மான் மாதிரியான ஒரு விலங்கு ஆப்பிரிக்க புல்வெளிகளில் வாழ்ந்தது. மத்த விலங்குகளுக்கு அதுக்கு ரொம்ப பெரிய வித்தியாசம் ஒன்னுமில்லைன்னாலும், கழுத்து மட்டும் கொஞ்சம் நீளமா இருந்தது. அதன்பின்னான, 6 மில்லியன் ஆண்டுகளில் கழுத்து மட்டும் நீண்ட மான் மாதிரியான அந்த விலங்கு, இக்கால ஒட்டகச்சிவிங்கியை ஒத்த ஒரு விலங்காக உருமாறியதாம்! ஆனா, இப்போ இருக்குற ஒட்டகச்சிவிங்கி சுமார் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியதாம்!

இப்படி தோன்றிய ஒட்டகச்சிவிங்கிக்குதான் உயரமான மரங்களிலுள்ள இலை உணவுகளை உண்பதற்க்காக கழுத்து நீண்டிருக்கிறது அப்படீன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க பரிணாம ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும்! ஆனா, ஒட்டகச்சிவிங்கிக்கு கழுத்து நீளமா இருக்குறதுக்கும், உணவுக்கும் சம்பந்தமில்லை/உணவு மட்டுமே காரணமில்லைன்னு சொல்றாங்க சமீபத்தில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து குறித்த ஒரு ஆய்வை செய்த தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள்!

ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தும், செக்ஸும்!

“ஒட்டகச்சிவிங்கியின்கழுத்து நீண்டது/நீண்டிருப்பது உணவு உண்ணத்தான்” அப்படீங்கிற இதுவரைக்குமான நம்பிக்கைக்கு போதிய ஆதாரம் இல்லை/உறுதியாக இல்லை. ஏன்னா, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒட்டகச்சிவிங்கிகள், உயரமான மரங்களில் இலைகளை தேட நீண்ட நேரம் செலவிட்டு உணவு உண்ணுமாம். ஆனால் இதற்க்கு நேர்மாறாக, ஆப்பிரிக்காவின் பிற இடங்களில் உள்ள ஒட்டகச்சிவிங்கிகள் உணவே இல்லையென்றாலும் உயரமான மரங்களையெல்லாம் சட்டை செயவதே இல்லையாம்!

ஆக, ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதுக்கு வேறு காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள் தென்னாப்பிரிக்கா ஒட்டகச்சிவிங்கி ஆய்வாளர்களான சிம்மன்ஸ் மற்றும் ஆல்ட்வெக்.  அந்த காரணம்தான் துணை தேர்வு போட்டி (sexual selection). ஒட்டகச்சிவிங்கியவிட கழுத்து நீளமான விலங்குகளும் பரிணாம ஏனியில் வாழ்ந்ததற்க்கான ஆதாரங்கள் உண்டு என்கிறார்கள் இவர்கள். சாரோபாட் இன டினோசர்களான (Sauropod dinosaurs) மேமென்கைசாரஸ்  (Mamenchisaurus) டினோசர்களுக்கு கிட்டத்தட்ட 9 மீட்டர் நீளமுள்ள கழுத்து இருந்ததாம்!

நீண்ட கழுத்து இருப்பது ஒன்றும் கொடுப்பினை இல்லையாம், பெரிய இம்சைதானாம்! ஏன்னா, நீண்ட கழுத்து இருக்குற ஒட்டகச்சிவிங்கியின் மூளையானது, அதன் இருதயத்தைவிட சுமார் 2 மீட்டர் மேலே இருக்கிறது. அதனால, ஒட்டகச்சிவிங்கியின் இருதயம் மிகவும் பெரியதாகவும், பலம் பொருந்தியதாகவும் இருக்க வேண்டும். ஏன்னா, 2 மீட்டருக்கு மேலே இருக்கிற மூளைக்கு எப்போதும் ரத்தத்தை பாய்ச்சனும்னா, வேறு எந்த விலங்குகளுக்கு இல்லாத அளவு அழுத்தம் வேணும். அப்பதான் மூளைக்கு சீராக ரத்தத்தை அனுப்ப முடியும்!

ஆக, இவ்வளவு பிரச்சினையுள்ள கழுத்த இருக்க மிக முக்கியமான காரணம் இருக்கனும் அப்படீங்கிறாரு சிம்மன்ஸ். சமீபத்திய கொள்கையின்படி, “தனக்கான பெண் துணையை தேர்வும் செய்யும் போட்டியில் பிற ஆண் ஒட்டகச்சிவிங்கிகளை வென்று, தன் விருப்ப பெண் துணையை போட்டியின்றி தேர்வு செய்யவே ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

கழுத்துச் சண்டை (Necking)!

ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கிக்காக கோதாவில் இறங்கும் இரு ஆண் ஒட்டகச்சிவிங்கிகள், ஒன்றுக்கொன்று பக்கவாட்டில் நின்றுகொண்டு, போட்டியில் வெல்ல தங்களின் நீண்ட கழுத்துகளை ஒன்றோடொன்று இடித்து முதுகுப்பக்கம் அழுத்துமாம். பார்க்குறதுக்கே ரொம்ப பயங்கரமா இருக்குற இந்தச் சண்டையில ஜெயிக்கிறதுக்குன்னே, அதுங்களோட கழுத்து எலும்புகளும், மண்டை ஓடும் ரொம்ப உறுதியானதா இருக்குதாம்.

இப்படியெல்லாம் கழுத்தாலையும், தலையாலையும் சண்டைபோட்டு ஜெயிக்கிற ஆண் ஒட்டகச்சிவிங்கிக்குதான் அந்த பெண் ஒட்டகச்சிவிங்கி ஃபிகராம்! அது சரி, நல்லாத்தான் இருக்கு. என்ன பார்க்காமையே சொல்றேன்னு பார்க்குறீங்களா, இல்லல்ல அந்தக் கொடுமையை நல்லா பார்த்துட்டுதாங்க சொல்றேன். நீங்களே பாருங்க அந்த ஒட்டகச்சிவிங்கி சண்டையை கீழேயிருக்குற யூ ட்யூப் காணொளியில…..

இந்தக் கொள்கைப்படி, ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்க்கான காரணமாக துணை தேர்வு போட்டியை ஏற்றுக்கொள்ளலாம். ஏன்னா, உணவுக்காக கழுத்து நீண்டது அப்படீங்கிற பழைய கொள்கைப்படி பார்த்தா,  உயரமான மரங்களின் இலைகளை உண்ண கழுத்துமட்டுமில்லாம காலும்தானே நீண்டிருக்கனும்?! ஆஹா, அப்படிப்போடு! சபாஷ் சரியான கேள்வி?!

இதையெல்லாம் பார்த்துட்டு/படிச்சிட்டு, “ஓஹோ அப்படியா, அட பரவாயில்லையே”ன்னு சொல்லிட்டு சரி விடுங்கன்னு அடுத்த வேலையைப் பார்க்க போலாமுன்னா, விட மாட்டாய்ங்க போலிருக்கு! ஏன்னா, “தருமிக்கு பொற்காசு குடுக்க  ஈசனோட பாட்டுலையே  பிழையிருக்குன்னு வாதாடின நக்கீரன் மாதிரி, இந்த ஒட்டகச்சிவிங்கி கழுத்து நீண்ட (புது)கொள்கையிலயும் பிழையிருக்குன்னு சொல்றாரு தென்னாப்பிரிக்காவின் ப்ரிடோரிய பல்கலைக்கழக ஆய்வாளர் க்ரஹாம் மிட்ச்செல் (Graham Mitchell of the University of Pretoria in South Africa)!

புதுக்கொள்கையும், பழைய கொள்கையும்; சபாஷ் சரியான போட்டி!

செக்ஸ்/துணை தேர்வு போட்டியில் வெல்லவே ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டிருக்கிறது அப்படீங்கிற புதுக்கொள்கையில ஒரு முக்கியமான குழப்பம்/பிழை இருக்கு! அது என்னன்னா, ஒரு பெண் துணையை தேர்வு செய்யத்தான் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு கழுத்து நீண்டிருக்கிறதுன்னு சொன்னா, போட்டியிடும் ஆண் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு மட்டும்தானே கழுத்து நீண்டிருக்க வேண்டும்?!

ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்பு, சிம்பாப்வே நாட்டில் திரு.மிட்ச்செல் நடத்திய ஆய்வில், ஆண் பெண் வித்தியாசமின்றி சராசரியாக எல்லா ஒட்டகச்சிவிங்கிகளுக்குமே கழுத்து நீளமாகத்தான் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. ஆக, இக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது அப்படின்னு, கிட்டத்தட்ட “இப்ப என்னா பண்ணுவீங்க…..இப்ப என்னா பண்ணுவீங்க” அப்படீங்கிற ரேஞ்சுக்கு வாதிடுகிறார் திரு.மிட்ச்செல்!

“நாங்க மட்டும் என்ன, சும்மாவா? வா…..நீயா நாங்களான்னு ஒரு கை பார்த்துடுவோம்” அப்படீன்னு தங்கள் பங்குக்கு புதுக்கொள்கையை நிரூபிச்சே தீருவோம்னு கெளம்பிட்டாங்க தென்னாப்பிரிக்காவின், கேப் டவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்களான ராப் சிம்மன்ஸும் ரெஸ் ஆல்ட்வெக்கும் ( Rob Simmons and Res Altwegg of the University of Cape Town, South Africa).

சபாஷ்…..சரியான போட்டி…..!!

சிம்மன்ஸும், ஆல்ட் வெக்கும் திரு.மிட்ச்செல்லின் ஆய்வறிக்கையை அக்கு வேறா, ஆணி வேறா சும்மா பிரிச்சி மேஞ்சிட்டு, நம்ம நாட்டாமை ரேஞ்சுக்கு, மிட்ச்செல்லின் ஆய்வறிக்கையிலுள்ள முடிவுகள் “செல்லாது செல்லாது”ன்னு சொல்றாங்க. அதாவது, மிட்ச்செல்லின் முடிவுகளிலேயே பெண் ஒட்டகச்சிவிங்கியைவிட, ஆண் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு சராசரியாக அதிக நீளம் இருக்கிறது என்கிறார்கள்.

ஆக, மிட்ச்செல் தனது ஆய்வு முடிவுகளை தவறாக புரிந்துகொண்டுள்ளார் அப்படீங்கிறாங்க சிம்மன்ஸும், ஆல்ட்வெக்கும்! அதுமட்டுமில்லாம, நமிபியா நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு பெண் ஒட்டகச்சிவிங்கிகளைவிட உறுதியான ம்ற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வளரும் தன்மையுள்ள கழுத்தும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என புதுக்கொள்கைக்கான உறுதியான ஆதாரங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்!

ஆக மொத்தத்துல, இறுதி முடிவாக சிம்மன்ஸ் மற்றும் ஆல்ட்வெக் முன்வைக்கும் கருத்துக்கள் என்னன்னா, ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்து தொடக்கத்தில் வேண்டுமானால் உயரமான மரங்களில் இலைபறித்து உண்பதற்க்காக நீண்டிருக்கலாம். ஆனால், காலப்போக்கில் கழுத்து தொடர்ந்து நீளமாக வளர்ந்தமைக்கும், அதுவே தொடர்ந்தமைக்கும் “துணைத் தேர்வு போட்டி”/கழுத்துச் சண்டைதான் அடிப்படைக் காரணமாக இருந்திருக்க வேண்டும் அப்படீன்னு அடிக்காத ஒரு குறையா சொல்றாங்கன்னா பார்த்துக்குங்களேன்!

இந்தக் கொள்கைக்கு வலு சேர்க்கும் வண்ணம், பரிணாமத்தில் மயில் போன்ற பறவை இனங்களில் இனச்சேர்க்கையில் வெற்றி பெறுவதற்க்காக, ஆண் மயில்களுக்கு மட்டுமே நீண்ட, வேலைப்பாடுகள் நிறைந்த அழகான தோகைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள் சிம்மன்ஸ் மற்றும் ஆல்ட்வெக்!

அட ஆமாங்க எனக்குக்கூட, ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீளமாக இருப்பதற்க்கு காரணத்தை, சிம்மன்ஸ் மற்றும் ஆல்ட்வெக் சுட்டிக்காட்டும் புதுக்கொள்கையான “செக்ஸ்/துணைத்தேர்வு போட்டி”தான் பொருத்தமாகவும், அறிவியல்பூர்வமாக பார்த்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்குன்னு படுது. ஆமா, உங்களுக்கு எப்படிப் படுது?!

தொடர்புடைய சில பதிவுகள்:

ஒட்டகத்தின் முதுகில் தண்ணீர் இருக்கிறதா?

டினோசர்களின் பரம எதிரி யார்?

பெரிய “உடல்”, ஆனால் சிறிய “பாதங்கள்”; ஏன்?

ஓணான்கள் தண்டால் செய்வது ஏன்?

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements