ஆபத்து: மாரடைப்புக்கு பலியாகிக்கொண்டிருக்கும் இந்தியா!!

Posted on ஜூலை 11, 2010

15


இன்றைய இருதயநலக் குறிப்பு:

உணவுக்கு முன் இயன்றவரை ஒரு சூப் அருந்த முயற்ச்சியுங்கள். அது நாம் உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும். குறைவாகவே சாப்பிடுங்கள் ஆனால் நாளில் பலமுறை! இது உணவுச் செரிமான வேதியல் மாற்றங்களை அதிகரிக்கும்.

சில வருடங்களுக்கு முன்புவரை ‘மாரடைப்பு’ அப்படீன்னா நம்ம மக்கள் மத்தியில ஒரு சில கருத்துக்கள் இருந்தது. அது, மாரடைப்பு ஏற்படுற ஒருத்தருக்கு குறைந்தது அறுபது வயதாவது ஆகியிருக்கனும், சம்பந்தப்பட்டவர் சில காலங்களேனும் ரத்தக் கொதிப்பினால பாதிக்கப்பட்டு மாத்திரைகள் சாப்பிட்டிருக்கனும், அடிக்கடி மயக்கம் வரனும் இப்படி சிலவற்றை உதாரணமாகச் சொல்லலாம்!

ஆனா, இந்த மாதிரியான நம்பிக்கைகளுக்கு பெரும்பாலும் காரணமா இருக்கறது கதைகள், சினிமாக்கள் மாதிரியான ஊடகங்களில் காட்டப்படும் காட்சி அமைப்புகளும், சூழ் நிலைகளும்தான்னு நான் நெனக்கிறேன். இந்த வகையான காரணங்கள்/கருத்துக்கள் மாரடைப்புடன் தொடர்புடைய முக்கியமான  மருத்துவ காரணங்களை மேம்போக்காகவும், குறைந்தபட்ச அறிவியல் உண்மைகளையும் மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவைன்னு நம்மில் பலருக்குத் தெரிவதில்லை!

அதுக்கு உதாரணமா, எனக்குத் தெரிஞ்சி நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை முதல்ல உங்களுக்குச் சொல்லிட்டு நான் பதிவுச் செய்தியப் பத்திச் சொல்றேன்……

நான் முதுகலை உயிர்தொழில்நுட்பவியல் படிப்பு முடிஞ்சி, சில மாதங்களுக்குப்பின் ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வுக்கூடத்துல இளநிலை ஆய்வாளரா சேர்வதற்க்காக, நேர்முகத்தேர்வுக்கு போயிருந்தேன். அப்போ அந்த தேர்வுக்காக இன்னும் சில மாணவவர்களும் வந்திருந்தாங்க.

அதுல ஒருத்தர் நேர்முகத்தேர்வு முடிஞ்சி, அந்த வேலை/படிப்பு தனக்குக் கெடைக்கும்னு நம்பிக்கை இருக்கறதா சொல்லிட்டுப் போனாரு. அவர எனக்கு நல்லா நியாபகம் இருக்கு இன்னும். அவருக்கு ஒரு 25-26 வயதிருக்கும். நல்ல உயரம், திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பான பேச்சு இப்படி அந்த வயதுக்குரிய குணாதீசியங்களும் இருந்தது அவருக்கு!

நேர்முகத் தேர்வு முடிஞ்ச சில நாட்கள்ல, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அந்த ஆய்வு/வேலைக்கு நான் தேர்வாகியிருந்தேன். அதுக்கப்புறமும், எங்க ஆய்வுக்கூடத்துக்கு அவர் சில முறை வந்தாரு. அங்குள்ளவர்களுடன்  ஏற்பட்ட நட்பினால அப்படி அவர் வருவது வழக்கம்! அதுக்குப்பிறகு சில மாதங்களா அவர் வரவில்லை.

திடீர்னு ஒரு நாள், எங்க துறையில் பணியிலிருக்கும் ஒரு நண்பர், நான் மேலே குறிப்பிட்ட அந்த நபருக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, நான் வேலை செய்யும் அந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகச் சொன்னார். ரொம்ப அதிர்ச்சியாயிருந்தது! நம்பவும் முடியல, நம்பாமலும் இருக்க முடியலை!

என்னால மட்டுமில்ல. அவரைத் தெரிஞ்சிரிந்த எங்க யாராலையுமே அந்த செய்தியை நம்பவே முடியலை. ஏன்னா, வெறும் 26 வயதே ஆன, சுறுசுறுப்பான, ஆரோக்கியமான இளைஞன் திடீர்னு மாரடைப்பினால இறந்துட்டார்ங்கிறத எங்க மருத்துவ அறிவும், அனுபவ அறிவும் சுத்தமா ஏத்துக்க மறுத்ததுதான் காரணம்!

ஆனா நிதர்சனம் என்னன்னா, அந்த இளைஞன் மாரடைப்பினால இறந்துட்டார். அதுக்கான மருத்துவ ரீதியிலான காரணமா மருத்துவர்கள் சொன்னது  “அவர் ரத்தத்திலிருந்த மிதமிஞ்சிய அளவிலான கொலஸ்டிரால்” என்பதுதான். இதைக் கேட்டதும் இன்னும் பெரிய அதிர்ச்சி. ஏன்னா, அந்த அதிகப்படியான கொலஸ்டிரால் அவர் உடலில் இருந்தது, அவர் இறக்கும்வரை அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.

இனி நாம பதிவுச் செய்திக்குப் போவோம்…..

மாரடைப்பும் இந்தியாவும்!

ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பைக் காட்டும் படம் (படம்: http://www.nhlbi.nih.gov/)

கடந்த 60 வருட ஆய்வுகள்ல, இந்தியர்கள் மத்தியில இருதய நோய் மற்றும் இளமையில் இருதய நோய் என இருவகையான நோய்கள் அதிர்ச்சிகரமான வேகத்துல பரவிகிட்டிருக்கிறதா சொல்லுது ஒரு மருத்துவ ஆய்வுக் கூற்று! இது முதன்முதலில் 1950களில் கண்டறியப்பட்டதேயொழிய இதுவரையில் அதன் வேகத்தை தடுக்கவோ, குறைக்கவே பெரிதாக எதுவும் செய்யமுடியவ்ல்லை மருத்துவ மற்றும் ஆய்வுலகினால்!

விளைவு, இன்று தெற்காசியாவையே தன் கோரக்கரங்களால் அழிக்கத்தொடங்கியிருக்கும் ஒரு அசுரத்தனமான உயிர்க்கொல்லி நோயை  எதிர்கொல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறோம். கொடுமையிலும் கொடுமை, இந்தியா அதன் மையமாக ஆகிப்போனதுதான்!

இருதய நோய்க்கு, வெள்ளையர்களைவிட இந்தியர்கள் சுமார் 4 மடங்கு அதிகம் பலியாகக்கூடிய நிலையில் இருப்பதாக சொல்கிறது ஒரு கணக்கீடு! அதைவிட பேரதிர்ச்சி, இருதய நோய்க்கு பலியாகும் சுமார் 25% மக்கள் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதே! அதிலொன்றுதான் நான் விவரித்த அவல நிகழ்வு.

அதிகம் நொறுக்குத்தீனி இல்லாத இந்திய உணவுகளை உண்டு வாழும் நகர்வாழ் இந்தியர்களில் 12%-டினரை தாக்கும் இருதய நோய்கள், மேக் டொனால்டு மாதிரியான அவசர உணவுக்கடைகளிலேயே கதியாய் கிடக்கும் அமெரிக்கர்களில் வெறும் 5%-டினரைத்தான் பாதிக்கிறதாம்.

“இது என்ன கொடுமைடா சாமீ….?!”

“ஆமா, இதெல்லாம் பெரிய அநியாயமா இல்ல?!”

“நல்ல சாப்பாடு சாப்பிடுற (?) நமக்கு ஏன் இந்த கதி?!”

இப்படியெல்லாம் நீங்க ஆதங்கமும், வருத்தமும் அடையறதுனால ஒன்னும் ஆகப்போறதில்லை. ஆனா அதுக்குப்பதிலா…..
“இப்படி ஒரு நிலைக்கு யார் காரணம்/எது காரணம்?”

“இதை அப்படி முறியடிப்பது?”

“இந்த கோரத்திலிருந்து இந்தியாவை எப்படி காப்பாற்றுவது?”
இந்த மாதிரியான கேள்விகளை கேட்டுக்கொண்டு, அதற்க்கான தகுந்த மருத்துவ ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றி வாழ்க்கை முறையை சீரமைச்சிக்கிட்டோமுன்னா இந்தியாவின் நாளைய  பொழுது இருதய நோயின்றி நல்லதாகவே புலரும்!
இருதய நோய்க்கான காரணிகள் என்னென்ன?

இந்தியர்களை இருதய நோய்கள் பெருமளவு தாக்கக்காரணம் என்ன?
 1. தொடர்ந்த உடலுழைப்பு அல்லது உடற்பயிற்ச்சியின்மை?!
 2. ரத்தத்தின் அதிகப்படியான கொலஸ்டிரால் அளவுகள்?!
 3. ஆரோக்கியக் குறைவான உணவு பழக்க வழக்கங்கள்?!
 4. மன உளைச்சல்?!
துரதிஷ்டவசமாக சரியான காரணம்/காரணங்கள் இன்னும் தெரியவில்லை! ஆனால், மேற்கூறியவற்றில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களோ இருதய நோய்க்கு அடிப்படையாக இருக்க வாய்ப்புண்டு. இவையல்லாத, மரபனுக்கள்கூட காரணமாக இருக்க வாய்ப்புண்டு?!
இம்மாதிரியான சந்தேகங்கள், இந்தியாவின் அப்போல்லோ மருத்துவமனை மற்றும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் நிறுவனங்களை, இருதய நோய்க்கு காரணமாக இருக்கும் மரபனுக்களை தேடி ஆய்வு செய்து, இந்தியர்களை இருதய நோயிலிருந்து பாதுகாக்கும் ஒரு கூட்டாய்வை நடத்தத் தூண்டியுள்ளது! ஆக, இருதய நோயுடனே நாம் பிறக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறது மருத்துவ ஆய்வு!
“அது சரி, அதுக்காக நாம அந்த நோயோடவே வாழனுமா என்ன?”

கண்டிப்பா இல்ல! ஏன்னா, அந்த கோர நோயை முறியடிக்கவும், இருதய நோயற்ற ஆரோக்கிய வாழ்வை வாழவும் சில வழிமுறைகள் இருக்கின்றன.  அதைப்பத்திதான் இனிமே நாம பார்க்கப்போறோம்…..

மருத்துவ ஆய்வு முன்வைக்கும் காரணிகள்!

இதுவரையிலான இருதய நோய் குறித்த மருத்துவ ஆய்வுகள் முன்வைக்கும் காரணிகள் மொத்தம் 7! இவையனைத்தும் இருதய நோயை கட்டுப்படுத்தும், குறைக்கும், நாம் எல்லோரும் மனது வைத்தால் இருதய நோயை (இந்தியாவைவிட்டு) அறவே ஒழித்துக்கூட கட்டிவிடும் அன்றாட பழக்க வழக்கங்கள்!

 1. புகைப்பழக்கம்: புகைப்பழக்கமுள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட  இரு மடங்கு அதிகமாம். அதனால புகைப்பழக்கத்தை விட்டுடுங்க. கஷ்டம்தான், ஆனா முயற்ச்சி செஞ்சா நீங்களும், உங்களால பாதிக்கப்படுற (புகைப்பிடிக்காத) மத்தவங்களும் பாதுகாக்கப்படுவாங்க!
 2. கொலஸ்டிரால்/கொழுப்புச்சத்து: உங்க கொலஸ்டிரால் அளவுகளை அடிக்கடி பரிசோதனை செஞ்சுக்குங்க. கொலஸ்டிரால் குறைவான உணவை உண்ணுங்கள். தொடர்ந்த உடற்பயிற்ச்சி உடலிலுள்ள நல்ல கொலஸ்டிராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்டிராலை குறைக்க  உதவும்!
 3. ரத்தக்கொதிப்பு: கொலஸ்டிராலைப் போலவே ரத்தக்கொதிப்பு பரிசோதனையையும் அடிக்கடி செய்து கொண்டு, சரியான வாழ்க்கை முறை, உணவுபபழக்க மாற்றம், உடற்பயிற்ச்சி, உடல் எடை குறைத்தல் மற்றும் தேவைப்பட்டால் மருந்துகளும் எடுத்துக்கொண்டு  ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துங்கள்.
 4. நீரிழிவு நோய்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தாவிட்டால், அது இருதயத்தை பாதித்து இறப்புவரை கூட செல்ல வாய்ப்புண்டு என்கிறது மருத்துவம். நீரிழிவு நோயையும், உணவுக்கட்டுப்பாடு,  உடற்பயிற்ச்சி, சரியான உடல் எடை மற்றும் மருந்துகள் போன்றவற்றால் கட்டுப்படுத்த முடியும்.
 5. வாழ்க்கைமுறை: இன்றைய அவசர உலகில் யாருக்குமே உடற்பயிற்ச்சி செய்ய நேரமில்லை. அதனால், உட்கார்ந்த இடத்திலேயே வேலை, நடமாட்டம் குறைந்த அன்றாட வாழ்க்கை என உடலுழைப்பு குறைந்துவிட்டது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள், தோட்டப் பராமரிப்பு, நடைப்பயிலுதல் என உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு உடற்பயிற்ச்சி செய்தால் போதுமானது.
 6. உணவுப்பழக்கம்: இயன்றவரை இருதயத்துக்கு ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உப்பு , கெட்ட கொழுப்பு, கொலஸ்டிரால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை குறைந்த உணவை உண்ணுங்கள். வைட்டமின் மற்றும் போஷாக்குகல் நிறைந்த உணவினை அதிகப்படுத்துங்கள். முக்கியமாக, பழங்கள், பருப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத முழு தானிய உணவினை உண்ணுங்கள்.
 7. உளைச்சல்: சரியான கட்டுப்பாட்டில் இல்லாத மன உளைச்சலும், கோபமும்கூட ஒருவரின் மாரடைப்பில் சென்று முடிந்துவிடும் என்று  எச்சரிக்கிறது மருத்துவம்! இவ்விரண்டு பிரச்சினைகளையும் எதிர்கொண்டு கட்டுப்படுத்த/குறைக்க யோகா மற்றும் தியானம் பழகுங்கள்.
இதுவரைக்கும் சொல்லியிருக்குற விஷயங்களை கவனத்துல வச்சிக்கிட்டு, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினா, நீங்க மட்டுமில்ல இந்தியா மொத்தமும் இருதய நோயிலிருந்து விடுதலையடையும். ஆனா, இந்தியா மொத்தமும் இருதய நோயிலிருந்து விடுதலை பெற இது மட்டும்போதாது. நீங்க இன்னொன்றும் செய்யனும்.
அப்போல்லோ மருத்துவமனையும், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழும் இணைந்து உருவாக்கியுள்ளBillionheartsbeeatingஎனும் இணைய முகவரிக்குச் சென்று, உங்க இருதய ஆரோக்கியத்தை காக்கும் அன்றாட வாழ்க்கைமுறை மாற்றத்துக்கான ஒரு உறுதிமொழியை எடுத்துக்கனும்!
அப்படி நீங்க ஓவ்வொருத்தர் எடுத்துக்கிற ஒவ்வொரு உறுதிமொழியும், ஒரு ஏழை/நடுத்தரவர்க்க/பணக்காரருக்கோ அப்போல்லோ மருத்துவமனையின் மருத்துவ முகாமின் மூலமாக, இலவச இருதய மருத்துவ பரிசோதனையை பரிசாக வழங்கும்! இந்த சேவையை ஆதரிக்க Billionhearts Facebookpage அப்படீங்கிற ஃபேஸ்புக் பக்கத்திலையும் சேர்ந்து உங்க ஆதரவை தெரிவியுங்கள். நன்றி

இப்பதிவை வாசிக்கும் ஒவ்வொருத்தரும் தயவு செஞ்சு இந்த உறுதிமொழியை எடுத்துக்குங்க! நாம எடுத்துக்கிற உறுதிமொழி நம்மை மட்டுமில்லாம, நம் சொந்தம், பந்தம், நட்பு வட்டம் இப்படி எல்லா இந்தியர்களையும் இருதய நோயிலிருந்து காப்பாற்ற உதவும்ங்கிறத மனசுல வச்சிக்குங்க!

இன்னொரு வேண்டுகோள், உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தயவு செய்து எனக்கு ஒரு மறுமொழி எழுதி உறுதிப்படுத்தினீங்கன்னா, இந்தப் பதிவு எத்தனை உறுதிமொழிகளை உருவாக்கியதுன்னு எனக்குத் தெரியப்படுத்தும்!
பொதுவா என் வலைக்கு வரும் வாசகர்களை, இப்பதிவுக்கு தமிழிஷில் தயவு செஞ்சு ஓட்டுப் போடுங்கன்னு பிரத்தியேகமா நான் கேக்குறதில்ல. ஆனா, ஏனோ இந்தப் பதிவுக்கு கேக்கனும்னு தோனுது. அதனால இந்தப் பதிவு வெகுஜன மக்களை சென்றடைய, தமிழிஷுல ஒரு ஓட்டுப்போட்டீங்கன்னா, நம்ம சுற்றமும் நட்பும் இருதய நோயில்லாம வாழ ஒரு வழி பொறக்கும். நன்றி!
இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

தொடர்புடைய சில பதிவுகள்:

அதிர்ச்சி: ‘குள்ளமானவர்’களையே குறிவைத்துத் தாக்கும் ‘இருதய’ நோய்கள்?!

மரணத்தை வென்று புன்னகையுடன் ஹன்னா க்ளார்க்!

மூடிய இருதய அறுவை சிகிச்சையும் ஜீன் தெரபியும்!

Advertisements