வினோதம்: புலனறிவில் மனிதர்களைத் தோற்கடிக்கும் 10 விலங்குகள்-2

Posted on ஜூலை 9, 2010

2


இன்றைய உடல் நலக்குறிப்பு:

சாப்பிடுவதற்க்கு/சமைப்பதற்க்கு முன் எல்லா வகையான பழங்கள், காய்கறிகளையும் நன்கு சுத்தம் செய்தல்/கழுவுதல் மிக மிக அவசியம். இது கடையில் வாங்கும் மற்றும் வீட்டில் விளைந்த காய்கறி/பழம் எல்லாவற்றிற்க்கும்  பொருந்தும்!

“வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்திலும் உண்டு”, அப்படீன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். ஆனா, அந்த வல்லவனுக்கு வல்லவன் யாரு, அவனோட/அதோட திறமைகள் என்னென்னன்னு ஒருவர் ஆய்வு செய்து சொல்லும்வரை நம்மில் நிறையபேருக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதுதான் நிதர்சனம்! தொடர்ந்து இப்பதிவை வாசிப்பதற்க்கு முன், இதன் முந்தைய பாகத்தை வாசித்துவிடுங்கள் இங்கே

அல்ட்ரா வயலெட் கதிர்களையும், இன்ஃப்ரா ரெட் வெப்பத்தையும் துல்லியமாக கணக்கிட்டு தன் இரையை கண்டறிவது,  தன்னைப் பாதுகாத்துக்கொள்வது என தங்களின் அன்றாட வாழ்க்கையை மேற்க்கொள்ளும் சில விலங்குகளின் வரிசையில் மேலும் 5 விலங்குகளைப் பற்றியும், அவற்றின் அசாத்திய புலனறிவுத்திறன்களைப் பற்றியும்தான் இப்பதிவில் மேற்கொண்டு நீங்க வாசிக்கப்போறீங்க. என்ன ரெடியா…..

6. பாம்புகள் (Snakes)

wikipedia

இந்தப் பாம்புங்க இருக்குங்களே, நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுக்குறத நீங்க பார்த்திருக்கலாம். அது எதுக்கு அப்படிச் செய்யுதுன்னு தெரியுமா உங்களுக்கு? நமக்கெல்லாம் மூக்கு செய்யுற வேலையைத்தான் பாம்புக்கு அதோட நாக்கு செய்யுது! கொஞ்சம் குழப்பமா இருக்குதுல்ல?! என்னவாயிருக்கும்னு யூகிச்சிருப்பீங்களே இந்நேரம்……?!

அட ஆமாங்க, பாம்புகள் ஒவ்வொரு முறை தன்னோட நாக்கை வெளியே நீட்டும்போதும், சுற்றுச்சூழல்/காற்றிலிலுள்ள வாசனைத் துகள்களை இழுத்து,  வாயின் உட்புறமுள்ள குழி போன்ற ஒரு உறுப்புக்குள் செலுத்தித்தான், சுற்றியுள்ள வாசனைகளை உணர்கிறதாம். அந்த உறுப்புக்குப் பேரு, ஜேக்கப்சன்ஸ் ஆர்கன் (Jacobson’s organs). அது சரி, இதுவரைக்கும் நான் என்னமோ பாம்புங்க எல்லாம், நாக்கால ருசியைத்தான் உணருதுங்களோன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்! நீங்க கூடத்தானே?!

7. வண்டுகள் (Moths)

wikipedia

இரவு நேரத்துல நம்ம வீடுகளுக்குள்ள, பெரிய, பார்க்குறதுக்கே அறுவறுப்பான ஒரு வகை வண்டுகளை நீங்க பார்த்து/அடிச்சி தூக்கிப்போட்டிருப்பீங்க. அந்த வகை வண்டுகள் வாசனை ஹார்மோன்களான ஃபீரோமோன் என்னும், ஒரு வகை வேதியல் பொருட்களை சுமார் 7 மைல்களுக்கு அப்பால் இருந்தே நுகரும் சக்தி படைத்தவையாம்! இந்த ஃபீரோமோன்களை  தன் காதலி/காதலன்களான எதிர்பாலின வண்டுகள் தூரத்திலிருந்து வெளியிடும்போதே, “நுகர்ந்தேன் காதலை” அப்படீன்னு காதலர்களை தேடி ஓட ஆரம்பித்துவிடுமாம் இவ்வண்டுகள்!

“இது என்ன பிரமாதம், நாங்கக் கூடதான் எங்க ஃபிகரு தூரத்துல வரும்போதே கரெக்டா கண்டுபிடிச்சிருவோம்” அப்படீன்னு  நீங்க சொன்னாக்கூட, இந்த வண்டுகள் முன்னாடி மனித வாசனை நுகரும் திறனெல்லாம் சும்மா சப்பை மேட்ட்ருன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! உண்மைதானே, இருக்கட்டும் விடுங்க!

8. எலிகள் (Rats)

ராத்திரியில நம்மளையெல்லாம் பயமுறுத்தி, இம்சையைக் கொடுக்கிற இந்த எலிகளுக்கு அடிப்படையில பார்வை ரொம்பக் குறைவாம். ஆனா, குறைவான பார்வைக் குறையை நிவர்த்தி செய்ய, இயற்கை இந்த எலிகளுக்கு, அவற்றின்  மூக்கில் ஒருவகையான நீண்ட ரோபங்களைக் கொடுத்துள்ளது. ஆங்கிலத்தில் இதை  வைப்ரிசியே (vibrissae) என்கிறார்கள்.

இரவில் நகரும்போது, சுற்றியுள்ள தட்டுப்படும் பொருட்களின் மீது இந்த நீண்ட ரோமங்கள் படும்போது, அப்பொருட்களின் தன்மையை மூளை கணக்கிட்டு விடுமாம்! இதைக்கொண்டு சுற்றுச்சூழலின் தன்மையை உணர்ந்து பயணிக்குமாம் எலிகள். அப்படிப்போடு அருவாள!!

9. மேள மீன் (Drum Fish)

wikipedia: Aquaimages

மேள மீன், பேரே கொஞ்சம் வித்தியாசமா இருக்குதுல்ல? மேள மீன் என்றழைக்கப்படும் ஒருவகை மீன்கள், தங்கள் செதில்களைக் கொண்டு கேட்கும் திறன் படைத்தவையாம். அதாவது, உடலின் உட்பகுதியிலிருக்கும் உள்காதுகளுக்கு, வெளியிலுள்ள ஒலி அதிர்வுகளை, வெப்பீரியன் அப்பாரட்டஸ்  (Weberian apparatus) என்னும் மத்திய/நடுக்காதுகளின் வழியாகக் கடத்தும் வேலையைத்தான் செதில்கள் செய்கின்றனவாம் இம்மீன்களில்!

அது சரி, இந்த ஒலி அலைகளை மூளைக்கு யாரு அனுப்புறாங்க இந்த மீன்கள்ல அப்படீன்னு நீங்க கேட்கலாம். உள்காதுகளிலுள்ள சிறு ரோமங்கள்/ரோம அனுக்கள்தான் ஒலி அலைகளை, மீனுடைய மூளைக்கு அனுப்புகிறதாம்.  என்ன , ஒன்னும் புரியலை. கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்குங்கிறீங்களா? எனக்குந்தான்…..!

10. கடல் தாண்டும் பறவைகள் (Migratory birds)

wikipedia: Image created by USGS Alaska Sciencce Center

பொதுவா பெரும்பாலான பறவையினங்கள், குறிப்பாக கடல்தாண்டி/கண்டம் விட்டுக் கண்டம் வரை பறந்து செல்லும் பறவைகள், செல்லும் வழி/தடம் மாறிவிடாமலிருக்க பூமியின் காந்த சக்தியை பயன்படுத்திக்கொள்கின்றனவாம்! இதை பறவைகள் எப்படிச் செய்கின்றன என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சமீபத்திய ஒரு ஆய்வுப்படி,  பறவைகளின் கண்களுக்கு பூமியின் காந்த சக்தியானது நிறக்கோடுகளாக/ஒளிக்கீற்றுகளாக தெரியக்கூடும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்!

அப்படியே நம்ம நிலைமையை கொஞ்ச யோசிச்சுப் பாருங்க. திசைகளை கணிக்க நாம் சில பரிச்சயமான இடங்கள்/கட்டிடங்கள் அல்லது சூரியனின் திசையை கணக்கிட்டுத்தானே கணிக்கிறோம். இப்போ சொல்லுங்க, நாம பெரியாளா இல்ல இந்த பறவைகளா? சத்தியமா இந்த பறவைகள்தான்னு நான் நெனக்கிறேன்!

இந்த பட்டியல்ல இடம்பெற்றிருக்குற சில/பல விலங்குகளின் அசாத்திய புலனறிவுத் திறன்களைப் பத்தி உங்களுக்கு முன்பே கூட தெரிந்திருக்கலாம். இது தவிர இன்னும் எத்தனையோ விலங்குகள் சார்ந்த உண்மைகள் /கூற்றுக்கள் கண்டிப்பா இருக்கு.

அதப் பத்தி தெரிஞ்சாலோ, நீங்க கேள்விப்பட்டு/படிச்சிருந்தாலோ அதைக்கொஞ்சம் மறுமொழியில குறிப்பிடுங்க. நானும் நம்ம வாசகர்களும் தெரிஞ்சிக்கிறோம். மத்தபடி வேறு எதாவது முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும் தெரியப்படுத்துங்க விவாதிக்கலாம்!

டிஸ்கி: இந்த பதிவு மூலமா, மனிதர்களைவிட பரிணாம வளர்ச்சியில் பல நிலைகள் பின்தங்கியிருந்தாலும், சில விலங்குகளின் அசாத்திய புலனறிவுத்திறன்கள் மனிதர்களின் கற்பனைக்குக்கூட எட்டாத வகையில் இருக்கிறது என்பதை பதிவுசெய்யவே நான் முயற்ச்சி பண்ணியிருக்கேன். அதுக்காக, மனுசன் ஒரு வெத்துவேட்டு அப்படீன்னு அர்த்தம் இல்லை. அதுக்கான ஆதாரங்களோட மனிதனின் அசாத்திய திறன்களைப் பற்றிய ஒரு இடுகையில் கூடிய விரைவில் சந்திப்போம்!

தொடர்புடைய சில பதிவுகள்:

வினோதம்: புலனறிவில் மனிதர்களைத் தோற்கடிக்கும் 10 விலங்குகள்!!

பாம்புகளால் நன்கு பார்க்க, கேட்க, நுகர முடியுமா?

இ.வா.ந: சிங்க மீன், கடலுக்கு கதாநாயகனா, வில்லனா?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements