ஆச்சரியம்: உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டு?!

Posted on ஜூலை 6, 2010

4


இன்றைய உடல்நலக் குறிப்பு:

நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியென்றால்  அடுத்தமுறை  நொறுக்குத் தீனி சாப்பிடத்தோனும்போது, உலர்ந்த திராட்சை/ வேறு உலர்ந்த பழங்களை சாப்பிட்டுப் பாருங்கள்!

இப்பெல்லாம் சிக்ஸ் பேக் வச்சிக்கிறதுன்றது ஒரு சப்ப மேட்டராகிப்போச்சுன்னு நெனக்கிறேன். அட ஆமாங்க, வாரணம் ஆயிரம்ங்கிற படத்துக்காக சிக்ஸ் பேக் வேணுமுன்னு, நம்ம சூர்யா மாதிரி கிட்டத்தட்ட ஒரு வருஷம், தினமும் மாங்கு மாங்குன்னு உடற்பயிற்ச்சி செஞ்சி சிக்ஸ் பேக் வரவச்சதெல்லாம் அந்தக் காலம்!

ஏன் அப்படிச் சொல்றேன்னு தெரிஞ்சிக்கனுமுன்னா, கோவில் படத்துல ‘புல்லட் பாண்டியா’ வர்ற நம்ம வடிவேலுவை பார்த்தீங்கன்னாதான் புரியும். ஏன்னா, அதுலதான் சும்மா படிக்கட்டு மாதிரி 8 பேக்குல உடம்பு வச்சிருப்பாரு வைகைப் புயல் வடிவேலு. ஆனா ஒரு பத்துகிலோ எடையைக் கூட தூக்க முடியாம மூக்கை உடைச்சிக்கிட்டு ரத்த வழியும், அதையெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது?!

இதையெல்லாம் ஏன் உங்ககிட்டச் சொல்றேன்னா, சமீப காலமா இந்த சிக்ஸ் பேக் மேனியா நம்ம தமிழ்நாடு பூரா பரவி, தமிழ் நாட்டையே அல்லோலக் கல்லோலப் படவச்சது உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனா,  இந்த சிக்ஸ் பேக்கெல்லாம் எத்தனப் பேருக்கு சாத்தியமுன்னு கேட்டா, ரொம்ப சொற்பமான எண்ணிக்கையினருக்குத்தான்னு சொல்லனும்.

ஆனா, சிக்ஸ் பேக்கையெல்லாம் வச்சிக்கிட்டு நாம என்ன சினிமாவுலயா நடிக்கப்போறோம்?! அதனால, சிக்ஸ் பேக்கெல்லாம் வேணாம் நமக்கு! ஆனா, உடல் எடையைக் கண்டிப்பா குறைத்தே ஆகனும் அப்படீங்கிறது ரொம்ப முக்கியம். ஏன்னா, இருதய நோய்கள், மூளைக்கோளாறுகள், நீரிழிவு நோய் என பலவகையான நோய்களுக்கெல்லாம் மூல காரணமே இந்த உடல் பருமன்தான் அப்படீன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

அந்த வரிசையில இப்போ புதுசா ஒன்னு சேர்ந்திருக்கு. “ஐய்யய்யோ, அது என்ன புது நோயா?” அப்படீன்னு உணர்ச்சிவசப்படாதீங்க. ஏன்னா, அது நோயில்லை, நோய்களிலிருந்து நம்மை காக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி. ஒன்னும் புரியலையே அப்படீன்றீங்களா? அதைப்பத்தி விவரமாச் சொல்லத்தான் இந்தப் பதிவே! வாங்க என்னன்னு பார்ப்போம்…..

உடல் பருமனும் நோய் எதிர்ப்பு சக்தியும்!

wikipedia

சமீபத்துல வெளிவந்த ஒரு ஆய்வறிக்கையில, வயிற்றைச்சுற்றிய மிதமிஞ்சிய கொழுப்புச்சத்தானது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கெதிராக திசை திருப்பி விட்டு, இருதய மற்றும் இதர நோய்களை ஏற்படுத்துகிறதுன்னு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க!

உடல் பருமனால இருதய நோய் எப்படி வருதுன்னு கேட்டா, கொழுப்புச்சத்தான கொலஸ்டிரால் ரத்த நாளங்களுக்குள் அடைப்புகளை உருவாக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு ஏற்படக் காரணமாகிறதுன்னு உங்கள்ல பலபேரு சொல்லிடுவீங்க. ஆனா, கொழுப்புச்சத்துக்கும் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தொடர்பிருக்குன்னு சொன்னா, “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி” ஒன்னுமே புரியலையேன்னு நீங்க குழம்பலாம்.

கவலையை விடுங்க, என்ன ஏதுன்னு விளாவாரியா, சும்மா பிரிச்சி மேஞ்சிடுவோம்……

நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது, அடிப்படையில் நோய் ஏற்படுத்தும் கோடிக்கணக்கான கிருமிகள், வைரஸ்கள் போன்றவற்றிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க, பல்வேறு அனுக்களைக் கொண்டு  இயங்கும் ஒரு முக்கிய உறுப்பு. இவ்வனுக்கள் ஒன்றையொன்று சார்ந்து, ஒரு சம நிலையில் இருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ஆனால், உணவு மற்றும் அதிகப்படியான கொழுப்பானது, இந்த அனுக்களின்  சம நிலையை குலைத்து, நம் உடலையே தாக்கும் குணாதீசியம் கொண்ட ஒருவகையான அனுக்கள் உருவாக காரணமாகிவிடுகின்றன என்கிறது விஞ்ஞானம்!

கொழுப்புச்சத்தும் திசுக்காய அனுக்களும்!

அதிகப்படியான கொழுப்புச்சத்து, குறிப்பாக வயிற்றைச்சுற்றிய கொழுப்புச்சத்தானது, உடலில் திசுக்காயத்தை உண்டாக்கும் “முதல் நிலை-திசுக்காய நோய் எதிர்ப்பு அனுக்கள்” (“pro-inflammatory” immune cells) என்னும் ஒருவகையான அனுக்களை உற்பத்தி செய்து, அவற்றை ரத்தத்தின் மூலம் உடலின் பல்வேறு பாகங்களுக்குப் பரவச் செய்து, உடலில் திசுக்காயத்தை உண்டாக்கிவிடுகின்றன.

இதனால், நீண்ட கால திசுக்காயம் (chronic inflammation) என்னும் நிலை ஏற்பட்டு, இருதய நோய் மற்றும் பல்வேறு இதர நோய்கள் தோன்றுகிறது! இது தவிர, அடிப்படையில் நோய்க் கிருமியை உண்டு அழிக்கும் குணாதிசியம் கொண்ட மேக்ரோஃபேஜஸ் என்னும் ஒருவகையான நோய் எதிர்ப்பு அனுக்களும் திசுக்காயத்தை தூண்டிவிடுகின்றனவாம்! காரணம் அதிகபட்ச கொழுப்புச்சத்து!

இந்த ஆய்வில், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes) என்னும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,600 கலோரி உணவு என 24 வாரங்களுக்கு உணவுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர். 12வது வாரத்திலிருந்து, வயிற்றுப்பட்டை (Gastric banding) என்னும் வயிற்றைச்சுற்றி ஒருவகையான பட்டையைக் கட்டி, இன்னும் குறைந்த அளவே உணவு உண்ணும்படி உணவுக்கட்டுப்பாட்டை அதிகரித்தனர்.

இத்தகைய உணவுக் கட்டுப்பாட்டுக்குப்பின், திசுக்காய அனுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80% குறைந்துபோனதாம்! அது மட்டுமில்லாம, திசுக்காயம் ஏற்படுத்தும் மற்றொரு அனுவான மேக்ரோஃபேஜஸும் வெகுவாக குறைந்துபோனதாம்.

உடல் எடையைக் குறை; நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டு!

உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் சுமார் 6 கிலோ எடையைக் குறைப்பதால், மெலிதானவர்களின் உடலிலுள்ள (ஆரோக்கியமான) அளவுக்கு திசுக்காய அனுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது என்று கண்டறிந்துள்ளார் இந்த ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய விஞ்ஞானி சமாராஸ்! அப்படிப்போடு….!

இது தவிர, ஒருவரின் உடலிலுள்ள  நோய் எதிர்ப்பு அனுக்களின் (ஆரோக்கிய) நிலையை வைத்தே, சம்பந்தப்பட்டவரின் உடல்பருமன் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, எவ்வளவு எடை குறையும் என்பதையும் கணித்துவிட முடியும் என்கிறார் சமாராஸ்!

இந்த கண்டுபிடிப்பானது, உடல் பருமனால் பாதிக்கப்பட்டு (அறுவை) சிகிச்சை செய்துகொள்ளும் இருவேறு நபர்களுள், ஒருவருக்கு மீண்டும் உடல் பருமன் கூடுவதற்க்கும், மற்றொருவருக்கு சிகிச்சை பலனளித்து உடல் எடை ஆரோக்கியமான நிலைக்கு மாறிவிடுவதற்க்குமான காரணம் உடலின் திசுக்காய அனுக்களின் எண்ணிக்கையும், செயல்பாடுமே என்னும் உடல் பருமன் குறித்த ஒரு விஞ்ஞான புரிதல் ஏற்படுவது இதுவே முதல்முறை  என்றும் கருத்து தெரிவிக்கிறார் சமாராஸ்!

இது குறித்த மேலும் விரிவான/தெளிவான விஞ்ஞான புரிதல் ஏற்படுவதற்க்கு மேலதிக ஆய்வுகளும், சோதனைகளும் அவசியமென்றும் சொல்கிறார் ஆய்வாளர் சமாராஸ்! இப்போ சொல்லுங்க, நோய் எதிர்ப்புடன் கூடிய ஒரு ஆரோக்கியமான வாழ்விற்க்கு உடல் எடையைக் குறைக்கிறது ரொம்ப அவசியம்தானே?!

தொடர்புடைய சில பதிவுகள்:

அதிர்ச்சி: தொப்பையும் ‘டிமென்ஷியா’ நரம்புக்கோளாறும்!

தினமும் 100 மி.கி உடற்பயிற்ச்சி?!

உயிரியல் கடிகாரமும் உடல் பருமனும்…..

ஒரே கல்லுல மூனு மாங்காய்

வேகமாக சாப்பிடுவதால் தொப்பை விழுகிறது!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements