ரகசிய ஆய்வு: ஆஸ்கர் விருது பரிந்துரைகள் பற்றிய ரகசியங்கள்!

Posted on ஜூலை 2, 2010

12


இன்றைய உடல்நலக் குறிப்பு:

நீங்கள் உட்கொள்ளும் பல வகையான வைட்டமின் மாத்திரைகளும், தாது மாத்திரைகளும் ஆரோக்கியமான உணவுக்கு ஒருபோதும் ஈடானவையல்ல. அதனால், வைட்டமின்கள்/தாதுக்கள் நிறைந்த இயற்க்கை உணவு வகைகளை உண்பதை பழக்கமாக்கிக்கொள்வது மிகவும் உகந்தது!

wikipedia: karthiknagarajan

நம்ம உலக நாயகன் கமலஹாசன், நாயகன்ல ஆரம்பிச்சு இதுவரைக்கும், எப்படியாவது ஒரு ஆஸ்கார் விருதையாவது வாங்கியே தீருவேன்னு கங்கனம் கட்டிக்கிட்டு சும்மா நடிச்சு தள்ளிக்கிட்டேதான் இருக்காரு! ஆனா பாருங்க, கழுத அந்த ஆஸ்கார் விருதைத்தான் இன்னும் குடுக்கவே மாட்டேங்கிறாய்ங்க அமெரிக்காகாரைங்க!

ஆனா, சத்தமே இல்லாம ஒரு யுத்தம் நடத்துறது மாதிரி ஸ்லம்டாக் மில்லியனர்னு ஒரு படத்துக்கு இசையமைச்ச நம்ம இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், கூச்சப்படாம (ஒன்னு இல்ல) ரெண்டு ஆஸ்கார் விருதை சும்மா அப்படியே அள்ளிக்கிட்டு வந்துட்டாரு. அதுக்காக, ஒலக நாயகன் நடிப்புத்தெறமைக்குக் கிடைக்காத விருது, இப்போதைய இந்திய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானோட இசைத்திறமைக்குக் கெடச்சிட்டுதுன்னு நான் சொல்ல வர்றேன்னு நீங்க தப்பா நினைச்சுடாதீங்க!

பொதுவா, உலக சினிமாக்கள் மற்றும் சினிமா/தொலைக்காட்சி கலைஞர்கள் இப்படி எல்லாருக்குமே, பிரமாதமா நடிச்சி தங்களோட வாழ்நாள்ல, ஒரே ஒரு ஆஸ்கார் விருதையாவது வாங்கிடனும்னு ஒரு தீராத (பேராசை?) ஆசை இருக்கும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்! ஆனா, அந்த ஆசை நிறைவேறுவதற்க்கும்/நிராசையாவுறதுக்கும் என்னென்ன காரணம்னுதான் நம்ம யாருக்குமே தெரியாது!

ஆஸ்கார் விருது வாங்குறதுக்கு வெறும் நடிப்பு மட்டுமிருந்தா போதுமா, இல்ல வேற ஏதாவது விசேஷ திறமைகள்/குணாதீசியங்களும் வேணுமான்னு தெரிஞ்சிக்க, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்களான நிக்கோல் எச்பர்சாவும், கேப்ரியல் ராஸ்மேனும் சமீபத்துல ஒரு ஆராய்ச்சி ஒன்னு செஞ்சாங்க. (Sociologists Nicole Esparza of Harvard University and Gabriel Rossman of the University of California)

அவங்க செஞ்ச ஆய்வுல, ஆஸ்கார் விருது பரிந்துரைகள் பற்றிய சில ரகசியங்கள் தெரியவந்திருக்கு. அதைப்பத்தின ஒரு சின்ன விளக்கத்தைத்தான் இந்தப் பதிவுல நாம பார்க்கப்போறோம்…..

ஆஸ்கார் வாய்ப்பை நிர்ணயிக்கும் நடிப்பைத் தவிர்த்த வேறு காரணிகள்!

நம்மில் நிறைய பேர் நெனச்சிக்கிட்டு இருக்கலாம்/இருக்கோம் ஒரு ஆஸ்கார் விருது வாங்கனும்னா, அப்படியே உருகி உருகி நடிக்கனும்னு. ஆனா, அதுதான் இல்ல. அட, ஆமாங்க! நடிப்பைத் தவிர்த்த எத்தனையோ விஷயங்கள் ஒருத்தரோட ஆஸ்கார் வாய்ப்பை நிர்ணயிக்குதுன்னு ஆச்சரியப்பட்டு சொல்றாங்க ஆய்வாளர்கள் நிக்கோலும், கேப்ரியலும்!

கடந்த 1927 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையில், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களை இணையத் திரப்படக் களஞ்சியமான IMDB (Internet Movie Database)-லிருந்து சேகரித்து, அப்படங்களில் எந்தெந்த காரணிகள் ஆஸ்கார் விருது வாய்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடுமென்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.

ஒரு நடிகரின் ஆஸ்கார் வாய்ப்பானது, அவர் நடிக்கத்தொடங்குவதற்க்கு முன்னரே ஒரு வகையில் முடிவு செய்யப்பட்டு விடுகிறது என்று தெரியவந்துள்ளது! உதாரணமாக, படப்பிடிப்பு தொடங்குமுன், கதையை முடிவு செய்தவுடன், கதையை இயக்கப்போகும் இயக்குனரை தேர்ந்தெடுத்தவுடன் அல்லது நடிகர்களை தேர்வுசெய்தவுடன் என, இப்படி ஏதாவது ஒரு தருணத்திலேயே!

என்னங்க, புரியலையா இல்லை நம்புறதுக்கே கஷ்டமா இருக்கா? எப்படியிந்தாலும் சரி, அப்படியே இதையும் கொஞ்சம் படிங்க.

மக்களை/பார்வையாளர்களை வயிறு குலுங்க/விழுந்து விழுந்துச் சிரிக்க வைக்கும் திறமையுள்ள ஒரு நடிகரை விட,  தன் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் மக்களை கண்ணீரில் குளிக்கச் செய்துவிடும் நடிப்புத் திறமையுள்ள ஒரு நடிகருக்கே ஆஸ்கார் விருதை தட்டிச்செல்லும் வாய்ப்பு 9 மடங்கு அதிகம் என்று கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்! அப்படியா….சொல்லவேயில்ல?!

பொதுவா கேளிக்கைத்துறையில (அதாங்க சினிமா/நாடகம்/இசை) எந்தவொரு விருதுக்குமான பரிந்துரைக்கும்,  நாடகத்தன்மை/உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள்தான் முதலிடத்தைப் பிடிக்கும்னு நம்மில் பல பேருக்குத் தெரியும். ஆனா, அதோட முக்கியத்துவம்/வீச்சு எத்தனை சதவிகிதம் அதிகம்னு இப்போதான் புரியுதுன்னு ராஸ்மேன் சொல்றாரு!

இந்த ஆய்வைப்பொறுத்தவரையில், ஆஸ்கார் வாய்ப்பை நிர்ணயிக்கும் இரண்டாவது விஷயம்……

ஒரு படமோ, நடிகரோ ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வருடத்தில், எத்தனை படங்கள் திரைக்கு வந்துள்ளன என்பதும் ஆஸ்கார் வாய்ப்பை பாதிக்கிறதுன்னு சொல்றாரு ராஸ்மேன். அதாவது, குறைவான திரைப்படங்கள் வெளியான ஒரு வருடத்தில் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் அந்த பரிந்துரையுடன் போட்டிக்கு வரும் மற்ற பரிந்துரைகளின் எண்ணிக்கை குறைவதால், வாய்ப்பு அதிகமாகிறதாம்!

ஆஸ்கார் விருது வாய்ப்பை நிர்ணயிக்கும் மூன்றாவது காரணி……

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவர் ஆணாக இல்லாமல் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், எல்லா வகை பரிந்துரைகளிலும் அவருக்கான ஆஸ்கார் வாய்ப்பு அதிகமாகிறது. இதற்க்கு, சினிமாத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் ஒரு காரணமாம். அதாவது, ஒரே ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் ஆண் நடிகர்களும் பெண் நடிகர்களும் எண்ணிக்கையில் அதிகமாகவும், குறைவாகவும்  இருக்கையில், குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்க்கே (பெண்கள்) விருது வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு!

Cate blanchett (wikipedia: Sashandre)

இவையெல்லாம் தவிர்த்து, அதிக முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்/நடிகைகளுக்கும், பரிந்துரைக்கப்பட்ட கதையாசிரியர் அல்லது இயக்குனருடன் அதிக திரைப்படங்களில் தொடர்புடையவராக இருந்தாலும், அவர்களுக்கான ஆஸ்கார் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்!

கடந்த 2007 ஆண்டு, “Elizabeth: The Golden Age” என்னும் திரைப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான பரிந்துரையும், “I’m Not There,” என்னும் திரைப்படத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்த ஹாலிவுட் நடிகை கேட் ப்ளான்ச்செட்டுக்கு (Cate Blanchett) மேற்சொன்ன காரணிகள் எல்லாமே பொருந்தும் என்கிறார் ஆய்வாளர் ராஸ்மேன்?!

இப்போதான புரியுது, ஆஸ்கார் விருது வாங்கனும்னா, என்னென்ன திறமைகள் இருந்தாலும் சில திறமை சாராத விஷயங்கள் இல்லைன்னா, விருது கிடைக்காதுன்னு! ஆமா, இதப்பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?!

இன்றைய உடற்பயிற்ச்சிக் குறிப்பு:

நம் உடலில் ஒரு பவுண்டு அல்லது 0.45 கிலோ எடை கூட, சுமார் 3500 கலோரி சக்தி தேவைப்படுகிறது. ஆக, ஒரு வாரத்துக்கு நீங்கள் ஒரு பவுண்டு எடையிழக்க வேண்டுமென்றால், அன்றாட உணவில் 250 கலோரி குறைத்தும், 250 கலோரி சக்தி விரயமாகும்படி அன்றாடம் உடற்பிற்ச்சியில் ஈடுபடுவதும் அவசியம்!

தொடர்புடைய சில பதிவுகள்:

தாதாசாஹேப் பால்கேவும் இந்தியாவின் அடுத்த ஆஸ்காரும்….

கமலும் “அந்த” 6 வாரங்களும்….

உலக நாயகனும் வருங்கால உலக நாயகியும்!!

ஹாலிவுட்டின் அதிரடி மும்மூர்த்திகளின் ஆக்ஷன்படம்

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements