உளவியல்: காதலின் “அறிவியல்” கண்களின் வார்த்தைகளில்?!

Posted on ஜூன் 22, 2010

18


காதல்னா என்னன்னு நீங்க யாருக்கிட்டேயாவது கேட்டிருக்கீங்களா? குறைந்தபட்சம் சினிமாவுலயாவது பார்த்திருக்கீங்களா? கண்டிப்பா பார்த்திருப்பீங்க! இப்படி கேக்காதவங்களுக்கும் பார்க்காதவங்களுக்கும் நான் கேள்விப்பட்ட வரைக்கும் காதல்னா என்னன்னு சொல்லிட்டு நான் பதிவுச் செய்தியப் பத்தி சொல்றேன்!

இளமை ஊஞ்சலாடுகிற வயசுல தொடங்கி முதுமை தாலாட்டுகிற வயசு வரைக்கும் நம்ம வாழ்க்கையில காதல் நிறைஞ்சிருக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அந்தக் காதலுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா…..

“காதல் ஒரு தெய்வீக உணர்வு”

“காதல் என்பது ஒரு இனம்புரியாத உணர்வு”

“காதல் ஒரு தவிப்பு, சுகம், புத்துணர்ச்சி”

“காதல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி”

“உள்ளமெ உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்” அப்படீங்கிற மாதிரியான ஒரு நிலை

இப்படி சொல்லிக்கிட்டெ போகலாம். ஆனா, இதெல்லாம் கவிதைக்கும், சினிமாவுக்கும் நல்லா இருக்கும். காதல்னா என்னங்கிறதுக்கான அறிவியல்பூர்வமான விளக்கம் எதாவது இருக்கான்னு கேட்டா உதட்டப் பிதுக்குறத தவிர வேற ஒன்னும் செய்ய முடியாது நம்மால!

காதல்னா என்ன அப்படீங்கிற கேள்விக்கு ஒரு அறிவியல்பூர்வமான விடை தேடுற முயற்ச்சியில ஈடுபட்டு, ஒரு ஆய்வு ஒன்னு செஞ்சாங்க மேலை நாட்டுல! அந்த ஆய்வுல காதல் பத்தின ‘சுவாரசியமான’ ஒரு தகவல் கிடைச்சது. அதப்பத்திதான் நாம இந்தப் பதிவுல பார்க்கப் போறோம்…..

ஒரு ‘காதல்’ ஆய்வு!

முன்பின் தெரியாத ஒரு நாலு பேர, ஒரு மேடையில (பல நூறு பேருக்கு முன்னாடி) ஒரு தம்பதியரா சேர்ந்து  நிக்கச் சொன்னாங்க. அவங்க ரெண்டு பேருக்கும், ஒருத்தர ஒருத்தருக்கு….

  1. எந்த அளவுக்கு பிடிச்சிருக்கு?
  2. எந்த அளவுக்கு விரும்புறாங்க?
  3. எந்த நெருக்கமா உணர்றாங்க?
  4. எந்த அளவுக்கு ஈர்க்கப் படுறாங்க?

அப்படீன்னு 1-10 வரைக்கும், எதாவது ஒரு எண்  அளவுல குறிப்பிட சொன்னாங்க. அடுத்து, அந்த தம்பதிகள்கிட்ட ஒருத்தர ஒருத்தர், ஒரு 2 நிமிடம் கண்களால ஆழமா பார்த்துக்கச் சொன்னாங்க! அதாவது, ஒரு 2 நிமிடம் கண்களின் வார்த்தைகளால பேசிக்கச் சொன்னாங்களாம்?! இதுக்குப் பேரு ஆங்கிலத்துல ‘சோல் கேசிங்’காமாம் (Soul Gazing)!

கண்களின் வார்த்தைகள்/Soul gazing (image: google)

அதுக்கப்புறம் திரும்பவும், 1-10 வரைக்குமான எண்களின் அளவுகோள்ல ஒன்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னாங்களாம்! இப்போ ஆச்சரியம் என்னன்னா, கலந்துகிட்ட நாலு பேருக்கும் 14% அதிகமாச்சாம் அவங்களோட 1-10 எண் தரக்குறியீடு! நாலு பேரு பெற்ற இன்பம் (அதாங்க சோல் கேசிங்கு!) பார்வையாளர்கள்ல இருக்குற நாலாயிரம் பேரும் பெற, ஆய்வாளர் எல்லாரையும் அவங்க பக்கத்து இருக்கைக்காரங்ககூட சோல் கேசிங் செய்யச் சொல்லி, எத்தனைபேரு பக்கத்துல இருக்குறவங்கக் கூட நெருக்கமான உணர்வை அடைஞ்சீங்கன்னு கேட்டாராம். கிட்டத்தட்ட பார்வையாளர்கள் எல்லாருமே ஆமாங்கிற மாதிரி கையை உயர்த்தினாங்களாம்! அடப் பாவீகளா?!

காதலின் அறிவியலை உற்றுநோக்கிய சில ஆய்வுமுடிவுகள்!

உணர்வுப்பூர்வமான ஒரு நெருக்கத்தை தேவைக்கேற்ப/தேவையான நேரத்தில் அதிகரித்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு விடை சொல்லும்விதமாக அறியப்படும் சில ஆய்வு முடிவுகள்……

* உடலுழைப்பு/உடலுழப்பு சார்ந்த செயல்களில் மக்கள் ஈடுபடும்போது உணர்வுப்பூர்வ பந்தங்கள் உறுதியாக்கப்படுகின்றன! (உடற்பயிற்ச்சி செய்வது போன்றவை)

* ஆபத்தான சூழ்நிலையிலுள்ள இருவர் ஒரு பந்தத்துக்குள் நுழைகிறார்களாம். (பஞ்ஜீ ஜம்பெல்லாம் பண்ணுவாங்களே அந்த மாதிரி நேரங்கள்ல)

* சம்பந்தமேயில்லாத இருவர், இரண்டு நிமிடங்கள் கண்களுக்குள் கண்களை செலுத்தி (அதாங்க இந்த கண்ணாலேயே பேசிக்கிறதுன்னு சொல்லுவாங்களே) பார்த்துக்கொண்டால் காதல் உணர்வுகள் தோன்றிவிடுகிறதாம்! (இதத்தான் காலம் காலமா தமிழ் சினிமாவுல பார்த்துக்கிட்டு இருக்கோமே?!)

* ஒரு புது விஷயத்தை ஒன்றாகச் சேர்ந்து செய்யும்போது நெருக்கமான உணர்வு ஏற்படுகிறதாம்!

இம்மாதிரியான முடிவுகளைச் சொல்லும் கிட்டத்தட்ட 80 மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவாம் இதுவரை! இதப்படிச்சப் பிறகு,

“அதெல்லாம் சரி, குத்துமதிப்பா/திடீர்னு ஒருத்தரை கண்ணுக்குள்ள கண் வச்சிப் பார்த்தா, அவங்கள பயமுறுத்துற மாதிரி இருக்காதா?”

“அதுமட்டுமில்லாம, சும்மா கண்ணால பேசிக்கிறதுனால மட்டுமே ஏன் காதல் வந்துடனும்?”

“இப்படியெல்லாம் செஞ்சா காதல் வரனும்னு என்ன அவசியம்/காதல் வரும்னு என்ன நிச்சயம்?”

இப்படியான பல கேள்விகள் எழும் நம்ம மனசுக்குள்ள இல்லீங்களா? உண்மைதான். இதைப்பற்றிய ஆய்வில் கடந்த 7 வருடங்களாக ஈடுபட்ட உளவியலாளர், அவரோட ஆய்வுகள் மற்றும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் (arranged marriages) செய்துகொண்டவர்களை நேர்முகம் செய்தது போன்ற அனுபவங்களினடிப்படையில், கண்களின் வார்த்தைகள்னால காதல் ஏற்படுவதற்க்கான உளவியல் காரணங்கள சொல்றாங்க…..

மக்கள் ஆபத்தான/இக்கட்டான சூழ் நிலையிலிருக்கும்போது, இருவருக்கிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தங்கள் மேலும் உறுதியாகின்றனவாம்! (அதாங்க காதல்). அதுக்கான உளவியல் காரணங்கள் இரண்டு:

ஒன்று, ஆபத்தான/இக்கட்டான சூழ் நிலையிலுள்ள ஒருவரை நாம் பார்க்கும்போது, அவர்களை அரவணைத்து ஆறுதல் சொல்வது அல்லது காப்பாற்ற வேண்டும் என்றுதானே நாம் நினைப்போம்! அப்படி நினைக்கும்போது அவர்கள்மீது அன்பு ஏற்பட்டு நெருக்கமாக உணர்வோம். அதன் காரணமாக, உடல் ரீதியான நெருக்கமும் ஏற்பட்டுவிடுமாம்!

இரண்டு, நாமே ஒரு இக்கட்டான சூழ்நிலை/ஆபத்தான தருணத்தில் இருக்கும்போது, நம்மை காப்பாற்றி ஆறுதல் சொல்லும் ஒருவர்மீது ஒரு பற்று ஏற்படும். அதுவும் காதலில் முடிய வாய்ப்பு உண்டாம்! அதே மாதிரி, ஒரே சமயத்தில் ஆபத்தான சூழ்நிலையிலுள்ள இருவருக்கு, பற்றுதல் உணர்வு ஏற்பட்டு காதலாய் வளரவும் வாய்ப்பு உண்டுங்களாம். அது சரி!!

"இவிய்ங்க ரெண்டு பேரும் கண்ணாலையே பேசிக்கிறாங்களாமாம்" (www.wretch.cc.)

உணர்வுப்பூர்வமான பந்தங்கள் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் இத்தகையவைதானாம். ஆக, திடமான செக்ஸ் ஈர்ப்பு, திகிலூட்டும் சூழ்நிலைகள், மிதமிஞ்சிய/வெறித்தனமான உடற்பயிற்ச்சி, வினோதமான சில சூழ்நிலைகள் இப்படி எல்லாமே மக்களை மற்றொருவரின் உதவி/ஆறுதலை நாடும் ஒரு பரிதாப நிலைக்கு (make people feel vulnerable) தள்ளிவிடுகிறதாம். அதேபோலத்தான், கண்களால் பேசிக்கொள்ளும்போதும் காதல் உணர்வு ஏற்படுகிறது அப்படீங்கிறாங்க உளவியலாளர்கள்!

ரெண்டு பேரு மனசு ஒத்து கண்களால பேசிக்கிறதுக்கும், மத்தவங்களோட அனுமதி/ஒப்புதலே இல்லாம அவங்கள முறைச்சுப் பார்க்குறதுக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். ஆக, கண்களால பேசிக்கிற இருவர், தங்கள் இருவரின் ரகசிய உலகத்துக்குள் சஞ்சரித்துக்கொள்ள அனுமதித்துக்கொள்கின்றனர். ஆனா, அடிப்படையில இது கொஞ்சம் அதிர்ச்சியானதுதான். இது மாதிரியான சூழ்நிலைகள் ஒருவர் மற்றொருவரை சார்ந்து வாழவோ/விரும்ப/காதல் செய்யத்தூண்டுகின்றன என்கிறது உளவியல்!

காதல் விளையாட்டுக்கள்!

ஒருவழியா, கண்ணால பேசிக்கிறதுனால ஏன் ரெண்டு பேருக்குள்ள நெருக்கம் ஏற்படுதுன்னு, பொதுமக்களை வச்சி செய்த ஒரு சோதனையில கண்டுபிடிச்சாச்சு/விளக்கம் சொல்லியாச்சு. சரி, அத்தோட முடிஞ்சுபோச்சா இந்த காதல் சோதனை அப்படீன்னு கேட்டீங்கன்னா இல்லைன்னுதான் சொல்லனும். ஏன்னா, இந்த கூட்டு ஆய்வோட கடைசி அரை மணி நேரத்துல காதல் விளையாட்டுன்னு ஒன்னு விளையாடச் சொல்லியிருக்காங்க மக்களை! காதல் விளையாட்டுன்ன உடனே நீங்க தப்பா நினைச்சுடாதீங்க. அது வேற ஒன்னுமில்ல, இருவருக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் ஒருவகையான யுக்தி அவ்வளவுதான்!

காதல் ஒளிவட்டம் (The Love Aura), என்னை உள்ளே அனுமதி (Let Me Inside) மற்றும் நான் உன்னை காதலிக்கிறேன் (I-Love-You Game) இப்படி மூனு வெவ்வேறு விதமான காதல் விளையாட்டுகள விளையாடினாங்க சோதனையில் பங்கேற்ற பார்வையாளர்கள்! ஐ லவ் யூ அப்படீங்கிற இந்த மூனாவது விளையாட்டைப் பத்தி உங்களுக்கு ஒன்னும் பெருசா விளக்க வேண்டியதில்லைன்னு நெனக்கிறேன். இருந்தாலும் அதைப்பத்தி பேசத்தான் நெறைய இருக்கு இந்த ஆய்வைப் பொருத்தவரைக்கும்!

ஐ லவ் யூ……காதல்!

உங்களுக்கே நல்லாத் தெரியும், உலகத்துலயே ரொம்ப கஷ்டமான/சொல்ல முடியாத மூனு வார்த்தை இருக்குன்னா, அது இந்த ஐ…லவ்…யூ அல்லது நான்…உன்னை….காதலிக்கிறேன் அப்படீங்கிற மூனு வார்த்தைகள்தான், இல்லீங்களா? நமக்கு பிடிச்ச ஒருத்தரப் பார்த்து, இந்த மூனு வார்த்தை சொல்றத விட நம்ம வாழ்க்கையிலேயே கஷ்டமானது வேற ஒன்னுமில்ல. ஏன்னா, அப்படிச் சொல்றதுல வெட்கம், மானம், சுயமரியாதை இன்னும் எத்தனையோ விஷயங்களைப் போட்டு குழப்பிக்குவோம் நாம. அதுக்குக் காரணம், நாம சொல்ற அந்த வார்த்தைகளுக்கு கிடைக்கப்போற பதில்தான்.  ஆக, இதுமாதிரியான சூழல்கள் ஒருத்தரை மிகவும் இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளிவிடுகிறது.

இந்த ஐ லவ் யூ விளையாட்டுல, பக்கத்துல இருக்குற ஒருத்தரை பார்த்து ஐ லவ் யூன்னு சொல்லச் சொன்னாங்களாம். முதல்ல, கூச்சப்பட்டு நெளிஞ்ச பார்வையாளர்கள் அப்புறம் ஒருவழியா மனசத் தேத்திக்கிட்டு/தைரியத்தை வரவச்சிக்கிட்டு உணர்வுப்பூர்வமா, உண்மையா ஐ லவ் யூன்னு சொன்னாங்களாம்! அப்படிச்சொன்னப்போ, அந்த நெருக்க அளவுகோளானா 1-10 வரையிலான எண்களின் அளவு, வெறும் ரெண்டே நிமிஷத்துல இரு மடங்காச்சாம்! அதுமட்டுமில்லாம, அப்படிச்சொல்லிக்கிட்ட சம்பந்தமில்லாத இருவருக்குள்ள, ஒரு ஆத்மார்த்தமான நட்பு உருவாயிடுச்சாம் விளையாட்டு முடிஞ்சப் பின்னாடி!  அட….இது நல்லாருக்கே?!

இந்திய உறவுகளும் மேலை நாட்டு உறவுகளும், ஒரு காதல் பார்வை!

“ஆமா, இதெல்லாம் ஊரை ஏமாத்துற வேலையில்லையா? அதான் இந்த காதல் விளையாட்டு விளையாடுறது, கண்ணால பேசிக்கச் சொல்றது, அப்புறம் கடைசியில காதல் வந்துடுச்சி காது குத்துறது இதெல்லாம்?” அப்படீன்னு நீங்க கேக்கலாம். நான்கூட அப்படித்தான் நெனச்சேன் முதல்ல. ஆனா, உளவியலாளர் சொல்ல வர்றது முற்றுலும் வேறு! உண்மைதாங்க, மேலே நீங்க படிச்ச யுக்திகள்/சோதனை வேணும்னா உங்களுக்கு, “அறிவில்லாதவனுக்கு ஒழுவில்லாத வேலை மாதிரி” தெரியலாம். ஆனா, உளவியலாளரின் ஆய்வு அனுபவப்படி, மேலை நாடுகளின் உறவுமுறைகள் நிறைய தவறான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. அதனாலேயே விவாகரத்துக்கள், பொய்யான காதல் உறவுகள்னு எல்லாமே தோல்வியில முடிகிறதாம்!

அத்தகைய உறவு முறைகளை மேலும் மேன்மையானதாக, உணமையானதாக மாற்றிட முடியும்னு சொல்றாரு ஆய்வாளர் (இது மேலை நாட்டினருக்கு, நமக்கு இல்ல!). ஏன்னா, மேலை நாட்டு உறவுகள் பொதுவாக, உடல் ரீதியிலான ஈர்ப்பிலேயே தொடங்குகிறது. அதைப் பெரும்பாலும் “காதல்” என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள் (மேலை நாட்டினர்) என்கிறார் அவர்!  காலப்போக்கில், காதல் உணர்வு அல்லது ஒருவகையான ஈர்ப்பு குறையத்தொடங்குகிறது. அப்படிக் குறைவது காலத்தின் கட்டாயம் அல்லது விதி என்று நினைத்துக்கொண்டு அதன் போக்கிலேயே (மேலை நாட்டினர்) விட்டுவிடுகிறார்களாம்!

ஆனால், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் காதல் என்பது முற்றிலும் வேறு திசையில் பயணிக்கிறது என்கிறார்! இந்நாடுகளில், ஒரு நட்பில் தொடங்கும் உறவானது காதலாகி, காலப்போக்கில் மேலும் மேலும் வளர்கிறதே தவிர குறைவதில்லை. அதுமட்டுமில்லாமல், காதல் உறவில் ஈடுபடும் இருவர் தத்தம் உணர்வுகளுக்கு பொறுப்பேற்று,  தங்கள் காதலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்களாம்! அதனால், காலம் போகப் போக காதல் வளர்கிறது, தேய்வதில்லை! உதாரணமாக இந்தியாவில்,

“முதலில் கல்யாணம்…..பிறகுதான் காதல்” என்னும் வழக்கம் நடைமுறை/வழக்கத்திலிருக்கிறது என்று காதல் உறவின்  மேன்மை/தனித்துவத்துக்கு இந்தியாவை ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறார் ஆய்வாளர்!  வாசகர்கள் (நம்மவர்கள்) கவனிக்க!!

சம்பந்தமேயில்லாத இருவர், திடீரென ஒரு நாள் திருமண பந்தத்துக்குள் நுழைந்து, பல வருடங்களுக்கு காதலுடன் ஒத்து வாழ்வது எப்படிச் சாத்தியமென்பதை மேலே குறிப்பிட்ட விளையாட்டு, கண்களால் பேசிக்கொள்ளும் நிகழ்வு போன்றவை மூலம் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார் ஆய்வாளர் மரியட் (Mariette)! ஆக, இந்தியா போன்ற நாடுகளில் வழக்கத்திலிருக்கும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் போன்றவற்றை, மேலை நாட்டினருக்கேற்றவாறு மாற்றி வாழப் பழகிக்கொண்டால், காதல் குறையாமல் காலங்கள் பல மனமொத்து வாழ முடியும் என்று சோதனையில் கலந்துகொண்ட அமெரிக்க பார்வைவாளர்களுக்கு தாம் விட்டுச்செல்லும் கருத்து என்கிறார் உளவியலாளர் மரியட்!

இந்த வித்தியாசமான காதல் சோதனையின் முடிவில், பார்வையாளர்களிலிருந்து வந்த ஒருவர் மரியட்டைப் பார்த்து,”தனக்குச் சம்பந்தமேயில்லாத/முன்பின் தெரியாத ஒருவரை கண்களுக்குள் கண் வைத்துப் பார்க்கும் பயிற்ச்சி/சோதனையின்போது பார்த்தவிட்டு, அழுதேவிட்டேன். ஏனென்றால், நான் பார்த்த அந்தக் கண்களுக்குள் ஒரு வித்தியாசமான முழு உலகத்தையே பார்க்க முடிந்தது” என்றாராம்! ஓஹோ….அப்படியா சங்கதி?!

எனக்குக்கூட ரொம்ப நாளா ஒரு சந்தேகம். என்னன்னு கேக்குறீங்களா? அதாவது, இந்த காதலிக்கிறவங்க எல்லாரும் கண்ணாலையே பேசிக்கிறோம்னு சொல்றாங்களே அது நெசமாவே சாத்தியமா? இல்லை அப்படிப்பேசினா அதுக்குப் பேரு காதலா அப்படீன்னு? என்ன உங்களுக்குமா? அதுல என்னதான் நடக்குதுன்னு இப்போ ஓரளவுக்குப் புரியுது! ஆக, கண்களின் வார்த்தைகள்ல காதல் இருக்கு போல?!

அப்படீன்னா, இந்த மௌனம் பேசியதே படத்துல வர்ற சூர்யா, “காதல்னா (கண்ணைக் காமிச்சு) இங்கேயிருந்து வரக்கூடாது. (இதயத்தைக் காமிச்சு) இங்கேயிருந்து வரனும். அதுக்குப் பேருதான் காதல்” அப்படீன்னு சொல்லுவாப்பலையே அது உணமையில்லையா? காதல் கண்ணுலேயிருந்துக்கூட வரலாமா?!

அதனாலதான், “கண்டேன் கண்டேன் கண்டேன்…..காதலை! கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை…..” அப்படீன்னு பாட்டெல்லாம் பாடுறாங்க போலிருக்கு சினிமாவுல. சரி அத விடுங்க, இந்த கண்களின் வார்த்தைகள் பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லிட்டுப்போங்க……

தொடர்புடைய சில பதிவுகள்:

செக்ஸ்: “கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)

“அந்த” ஹார்மோனின் லீலைகள்!

சீ….போங்க, எனக்கு கூச்சமா இருக்கு?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு