60 நொடி அறிவியல் (19.6.10)

Posted on ஜூன் 19, 2010

12


இந்தப் பதிவுக்கு ஒரு சின்ன அறிமுகம்!

நான் படிக்கிற, கேள்விப்படுகிற, படித்து ஆச்சரியப்படுகிற, அதிர்ச்சியாகுற, பிரமிக்கிற இப்படி ஒரு நாளைக்கு எத்தனையோ அறிவியல், விஞ்ஞான, மருத்துவ, உளவியல், தொழில்னுட்ப, மர்மச் செய்திகள் எல்லாத்தையுமே தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது என் பல நாள் ஆசை! ஆனா, ஆசை மட்டுந்தான் ரொம்ப நாளா இருக்குதே தவிர அதுக்கான போதிய நேரம் கிடைக்கிறதே இல்லை. இது போதாதென்று இவ்வருடந்தான், என்னுடைய முனைவர் பட்டப்படிப்பின் இறுதி வருடம்! ஆக, வேலைப்பளுவுக்கிடையில் அறிவியல் தமிழை வலையில் எழுதி, “யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற” அன்றாடம் முடிவதில்லை!

அதனாலதான் சமீபகாலமா, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு பதிவென்று எழுதி வர்றேன்னு என்னோட வாசகர்கள் (உங்களில்) சிலருக்குத் தெரிந்து/புரிந்து இருக்கும்னு நெனக்கிறேன். அதுமட்டுமில்லாம, என்னோட பதிவுகள் எல்லாமே(?) ஒரு செய்தியின் ஆழமான புரிதலுக்கும், சுவாரசியத்துக்கும் எழுதப்படவேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஆனா, நீண்ட பதிவுகளை முழுதாக படிக்க எத்தனை பேருக்கு நேரமும் பொறுமையும் இருக்குன்னு எனக்குத் தெரியலை!  உங்கள்ல சிலர்/பலர் சைன்டிஃபிச் அமெரிக்கன் என்னும் அறிவியல் இதழின் 60 நொடி அறிவியல் அப்படீங்கிற ஒலிப்பதிவைக் கேட்டுக்கொண்டு/கேட்டிருக்கலாம்! அதன் ஈர்ப்பில் இனி மேலிருப்பானிலும், முடிந்த அளவுக்கு பல துறைகள்சார்ந்த செய்திகளின் சாரத்துடன், தினமும் (?) ஒரு கலவை பதிவை எழுதலாம்னு முடிவு செஞ்சுருக்கேன்!

இப்படிச்சொன்னவுடனே, “ஓஹோ….அப்படீன்னா, இனிமே மேலிருப்பான்ல ஆழமான, கருத்துச்செறிவு நிறைந்த பதிவுகளை எதிர்ப்பார்க்க முடியாதா/வேணாமா”ன்னு யோசிக்காதீங்க! என்னோட தனித்துவமான, என் பாணியிலான பதிவுகள், தொடர்கள் (இன்னும் நிறைய எழுதுற யோசனை இருக்குறதுனால இந்தப் பன்மை!) கண்டிப்பா மேலிருப்பானில் தொடரும்! ஏன்னா, இந்த மேலிருப்பானோட இணைய அடையாளமே அதுதாங்க! அதே சமயம் மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது அப்படிங்கிறத உறுதியா நம்புறவன் நான்! அதனால,மேலிருப்பானுடைய தனித்துவத்தோடு, என்னோட இந்தப் புதுமையான முயற்ச்சியையும் ஆதரிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

இனி இன்றைய 60 நொடி அறிவியல்……

அறிவியல்: மனிதன் தோன்றிய காலத்தே உடன் தோன்றிய மலேரியா?!

Photo Credit: James Gathany (wikipedia)

இதுவரைக்கும், மனுசன் தோன்றினதுக்கப்புறம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் கழித்துத்தான் மலேரியா நோய் தோன்றியிருக்கும்னு நெனச்சிக்கிட்டு இருந்தாங்க ஆய்வாளர்கள். ஆனா, இப்பத்தான் தெரியுது, மலேரியாவும் மனுசன்கூடவே ஒன்னோட ஒன்னா, சுமார் 60-80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே தோன்றி இதுவரைக்கும், இணைபிரியாம மனுசன்கூட உற்ற நண்பனா இருந்துக்கிட்டு வருதுன்னு இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஒரு ஆய்வுல தெரியவந்திருக்கு! என்ன, சீரியசான விஷயத்துலபோய் இவன் காமெடி பண்றானேன்னு பார்க்குறீங்களா? அட….நீங்க வேற அது காமெடி இல்லீங்க, வயித்தெரிச்சல்?! மேலதிக தகவல் இங்கே

மருத்துவம்: உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் குடல் பாக்டீரியா!

Credit: Rocky Mountain Laboratories, NIAID, NIH

நம் வயிற்று/குடலுக்குள் வாழ்கின்ற பல்வேறு பாக்டீரியாக்களில் ஒரு வகை பாக்டீரியாக்கள் ஆர்த்திரைட்டிஸ் (arthritis) என்னும் ஒரு வகை தானியங்கி நோய் எதிர்ப்பு நோயை (autoimmune disorders) ஏற்படுத்துகிறதாம். இதுக்குப் பேருதான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றதுன்னு நெனக்கிறேன்?! கை, கால் மூட்டுக்களில் காயமேற்பட்டு (திசுக்காயம்/Inflammation) வலியுண்டாக்கும், நம் நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடல் அனுக்களை அழித்து, நமக்கெதிராகச் சதிசெய்யும் மனித உடலின் பல்வேறு நோய்களில் ஒன்றுதான் இந்த ஆர்த்திரைட்டிஸ் (arthritis). பொதுவாக, உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பாக்டீரியாக்களும் நம் வயிற்றில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவற்றுள் ஒரு வகை ஆர்த்திரைட்டிஸ் நோயையும் ஏற்படுத்தவல்லது என்று கண்டுபிடித்துள்ளார்கள் அமெரிக்காவின், நியூ யார்க் பல்கலைக்கழகத்தின்  ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆய்வாளர்கள்! மேலதிக தகவல்கள் இங்கே

தொழில்நுட்பம்: குழந்தைகளை படிக்க, கொஞ்சி விளையாடும் குழந்தை ரோபாட்!

இந்த ஜப்பான்காரங்க இருக்காய்ங்களே, ரோபாட் ரோபாட்டுன்னு எதையாவது கண்டுபிடிச்சிக்கிட்டேதான் இருப்பாங்க. நான் இந்த நாட்டுக்கு வந்த புதுசுல, இந்த மக்கள் கூட ஒரு விதத்துல இயந்திரத்தனமா இருந்தாங்க. அப்பத்தான் புரிஞ்சுது ஏன் ஜப்பான்காரங்க உலகத்துலயே ரோபாட் தொழில்நுட்பத்துல எப்பவுமே முதல் இடத்துலயே இருக்காய்ங்கன்னு?! சரி நாம மேட்டருக்கு வருவோம்.

பிறந்த குழந்தைகளை அறிவியல்பூர்வமா நல்லா புரிஞ்சிக்கிட்டு, அவங்களுக்கு வர்ற பிரச்சினைகள இன்னும் தரமான முறையில சமாளிக்கவும், ஒரு மனிதன் எப்படி வளர்கிறான் அப்படீன்னு புரிஞ்சிக்கவும், குழந்தைகளை அப்படியே ஒத்து செயல்படும் ஒரு வகையான குழந்தை ரோபாட்டுக்களை  உருவாக்கியிருக்காரு ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் திரு.யாசுயோ குனியோஷி (Tokyo University professor Yasuo Kuniyoshi). 71 செ.மீ உயரமும், 7.9 கிலோ எடையும் உள்ள இந்தக் குழந்தை ரோபாட் ஒரு 9 மாதக் குழந்தையை அப்படியே பிரதிபலிக்குமாம்! அதுசரி, காலம் கலிகாலம்ங்கிறது சரியாப் போச்சு! எது எப்படியிருந்தா என்ன, விஞ்ஞானத்தால் நாலு நல்லது நடந்தா சரிதானே?! மேலதிக தகவல்கள் இங்கே

மர்மம்: கடலில் மிதக்கும் நோயை பரப்பும் தன்மையுள்ள “கடல் பனியும் கிருமி தீவுகளும்“!

உப்பில்லாத பண்டம் குப்பையிலேங்கிற மாதிரி மர்மமில்லாத வாழ்க்கையில உப்புமில்ல சப்புமில்லைன்னுதான் நெனக்கிறேன். என்ன நீங்களும்தானே? தினமும் எதாவது ஒரு மர்மச் செய்தி/விஷயம் பத்தி கேள்விப்பட்டுக்கிட்டேதான் இருக்கிறோம். சமீபத்திய ஒரு ஆய்வுல, கடலில் மிதக்கும் மக்கிய கழிவுகளுடன் ஒட்டிக்கொண்டு வாழும் கிருமிகளையும் , பாக்டீரியாக்களையும் “கிருமி தீவுகள்” (Germ islands) அப்படீன்னு சொல்றாங்க.  இந்தக் கிருமித்தீவுகள் ஒட்டிக்கொள்கிற மக்கிய தாவரம்/விலங்கு/மண் எல்லாம் சேர்ந்த ஒரு வகையான வெள்ளை கலவைக்கு “கடல் பனி” (marine snow)ன்னு பேராம்.

அது என்ன பேரா வேணுமுன்னா இருந்துட்டுப்போகட்டும் அதைப் பத்தி நமக்கு கவலையில்ல. ஆனா, அதனால நமக்கு ஏதாவது பிரச்சினை இருக்கா அப்படீங்கிறதுதான் நம்ம கவலை, இல்லீங்களா? ரொம்பப் பெரிய பிரச்சினை இல்லைன்னாலும், தண்ணீர் மூலமா பரவும் சில நோய்களை இக்கிருமித்தீவுகள் பரப்பலாம்நு சந்தேகப்படுறாங்க விஞ்ஞானிகள். மேலும் ஆய்வு செய்தாலொழிய உண்மை தெரிய வாய்ப்பில்லை அப்படீங்கிறாங்க! மேலதிக தகவல் இங்கே

சரிங்க, இந்தப் பதிவு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்களேன், நன்றி!

(டிஸ்கி: இந்தப் பதிவு எழுதனும்னு தோனினதுக்கு முக்கியக் காரணம், மேலிருப்பான் பக்கதுல தினமும் எதாவது ஒரு பதிவு இருக்குனு நம்பி வர்ற வாசகர்கள் ஏமாறக்கூடாதே அப்படீங்கிறதுதான்!)

தொடர்புடைய சில பதிவுகள்:

டாஸ்மாக்குக்கு, தண்ணியடிக்க போன “வைரஸ்” தீவிரவாதி!

உங்க “பாக்டீரியா கையெழுத்து” தெரியுமா உங்களுக்கு?!

99% மனித மரபனுக்கள் எல்லாம் பாக்டீரியாக்களுடையது?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Advertisements