ரகசியம்: ‘நோய் எதிர்ப்பு’ மரபனுக்களைத் தூண்டும் ‘தாய்ப்பால்’!

Posted on ஜூன் 18, 2010

8


ரு தாயின் மூலமா இந்த உலகத்துக்கு அறிமுகமாகிற பெரும்பாலான குழந்தைகள், உண்ணும் முதல் உணவு தாய்ப்பால்தான். சில/பல இயற்கை (உடலியல்) மற்றும் செயற்கை (விருப்பு/வெறுப்பு)  காரணங்கள்னால சில/பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலம் தங்கள் தொடக்க நாட்களை தொடர்ந்து, வளரும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது! அப்படி மறுக்கப்படும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பலவற்றை (அறிவாற்றல், சீரிய உடல் வளர்ச்சி) இழந்துவிடுகிறார்கள் என்று சொன்னால், உங்களில் எத்தனைபேர் அதை மறுப்பீர்கள் என்று  தெரியவில்லை!

ஆனால், ஒரு குழந்தையின் முழுமையான உடல்/மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பாலே சிறந்தது என்பது இதுவரை அறிவியல்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு உண்மை என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்! உதாரணமாக, இதுவரையிலான சில பல ஆய்வுகள் தாய்ப்பாலினால் ஏற்படும் (புட்டிப்பாலினால் ஏற்படாத) நன்மைகளாக சொல்பவைகளில் சில…..

  1. அதிக அறிவாற்றல் அல்லது ஐ.க்யூ (IQ, Intelligence quotient)
  2. குறைந்த சதவிகித குழந்தை உடல் பருமன் நோய், ஒவ்வாமை
  3. சரிவிகித போஷாக்கு (வைட்டமின், புரதங்கள், நோய் எதிர்க்கும் காரணிகள் (ஆன்டிபாடிகள்/Antibodies)
  4. சரியான மூளைவளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி
  5. ஆஸ்துமா, நீரிழிவு நோய், செரிமானக் கோளாறு குறைபாடுகள் போன்ற நோய்களுக்கு உறுதியான நோய் எதிர்ப்பு சக்தி

அதெல்லாம் சரி, இதே நன்மைகள் புட்டிப்பால்/மாட்டுப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு கிடைக்காதா என்றால் நிச்சயமாக கிடைக்காது! கிடைக்காதென்பது சரி, ஆனால் ஏன் கிடைக்காது? கிடைக்காமல் போவதற்க்கான அறிவியல்பூர்வமான காரணங்கள்/விளக்கங்கள் என்ன? இப்படியெல்லாம் சில/பல கேள்விகள் நமக்கு எழுவது இயற்கை. அந்தக் கேள்விகளுக்கான பதிலை ஆய்வுகள் இதுவரை ஆதாரங்களுடன்/நேரடியாக சொன்னதில்லை.

பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் கொடுத்து வளர்ப்பது அவசியம், அதனால இந்த நன்மை ஏற்படுது, அந்த நன்மை இருக்கிறது அப்படீன்னு மேலோட்டமா சொல்லிக்கிட்டிருக்கிறதை விட,

“தாய்மார்களே….. நீங்க உங்க குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறதுனால, அவங்க உடல்ல இன்னின்ன மாற்றங்கள் இன்னின்ன மாதிரி ஏற்படுது, அதனால இன்னின்ன பலன்கள் உண்டாகுது” அப்படீன்னு எளிமையா, விளக்கி சொன்னோம்னு வைங்க, எல்லா தாய்மார்களும் கண்டிப்பா புரிஞ்சிக்கிட்டு, அதை நடைமுறைப்படுத்தவும் செய்வாங்க!

அந்த வேலையைத்தான், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் திரு. ஷேரான் டொனொவான்  (Sharon Donovan of the University of Illinois) செய்ய முயற்ச்சி பண்ணியிருக்காங்க! கடந்த மே மாதம், உடலியக்க மருத்துவ மாத இதழான American Journal of Physiology-ல் வெளியான, டொனோவான் அவர்களோட ஆய்வறிக்கையின் சாராம்சத்தைத்தான் இனி நாம பார்க்கப்போறோம்…..

தாய்ப்பாலும், மரபனு வெளிப்பாட்டு வினைகளும்!

உணவு, உடை உறையுள் இப்படி எந்த உலகியல் வாழ்க்கைத் தேவை பத்தின கவலையெதுவும் இல்லாம, அம்மா வயித்துக்குள்ள சுகமா வாழ்ந்துவிட்டு, உலகைப் பார்த்த சில நிமிடங்களிலேயே பசியினால் அழத்தொடங்கும் குழந்தை உண்ணும் முதல் உணவு தாய்ப்பால்! அந்தத் தாய்ப்பால் குழந்தையின் மரபனுக்களை தூண்டி, அவற்றின் நீண்ட கால சீறிய செயல்பாட்டுக்கு வழிவகுத்து, குழந்தையை தாக்கக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுக்காக்கிறது என்று யூகிக்கிறார் ஷேரான்!

ஒரு குழந்தையின் முதல் உணவு, அதன் மரபனு வெளிப்பாட்டினை கட்டுபடுத்துகிறது என்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இதுவே தாய்ப்பால், ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது என்னும் புரியாத புதிர்/மர்மத்தை புரிந்துகொள்ள உதவலாம் என்கிறார் ஷெரான்!

மரபனு வெளிப்பாடு (Gene expression): உடலின் ஒவ்வொரு அனுவினுள்ளும் இருக்கும் க்ரோமோசோம் இழைகளுக்குள், ஆயிரக்கணக்கான மரபனுக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மரபனுவும், தன்னுள்ளே எழுத்துக்களாய் பொதிந்திருக்கும் உடலியல் இயக்கங்களை, சரியான தருணத்தில், சரியான உந்துதலினால் புரதங்களாக உருமாற்றுவதையே, மரபனு வெளிப்பாடு என்கிறது மூலக்கூறு அறிவியல்!

மரபனு வெளிப்பாட்டினை தூண்டக்கூடியவை என நம் சுற்றுச்சூழலில் உள்ள பல பொருள்களைச் சொல்லலாம். உதாரணமாக, நாற்றம், சுவை, உணர்வுகள் இப்படி நிறைய. இவற்றுள் மிகவும் முக்கியமானது உணவு! மரபனுக்களின் இத்தகைய ஒரு குணம், ஏன் தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகள், புட்டிப்பால்/மாட்டுப்பால் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளிலிருந்து நோயினடிப்படையில் வேறுபடுகிறார்கள் என்பதை விளக்க உதவக்கூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்!

இந்த ஆய்வில், புட்டிப்பால்/சந்தையில் விற்க்கும் குழந்தை பால் மாவு கொடுத்து வளர்க்கப்பட்ட, மூன்று மாதமான 10 குழந்தைகள் மற்றும் அதே வயதுடைய, ஆனால் தாய்ப்பால் கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளின் குடல் பகுதியிலிருந்து இயற்கையாக, சிதைந்து மலம் மூலம் வெளியேறும் தசை/அனுக்களிலிருந்து, புரதங்களின் ஆதாரமான ஆர்.என்.ஏ (RNA) சோதனை செய்தார்கள். RNA என்பது மரபனு வெளிப்பாட்டின் அளவுகோள் என்பதை கவனத்தில் கொள்க!

மத்திய ஆதாரமில்லா நம்பிக்கை கொள்கை (Central Dogma Theory):

(அனுவுக்குள்) டி.என்.ஏ  ——–>  ஆர்.என்.ஏ   ——->  புரதங்கள்

DNA  ——->  RNA  ——->  Proteins

மூலக்கூறு அறிவியலின் ஆதாரமும், அடிப்படைக்கொள்கையுமான மத்திய ஆதாரமில்லா நம்பிக்கை கொள்கையின்படி, ஒவ்வொரு அனுவுக்குள்ளும் இருக்கும் க்ரோமோசோம் இழைகளில் நிறைந்துள்ள மரபனுக்களிலிருந்து, அதாவது டி.என்.ஏ (DNA) விலிருந்து ஆர்.என்.ஏ என்னும் வேதிப்பொருள் உருவாக்கப்படுகிறது. இவ்வினையின் அடுத்தகட்டமாக, ஆர்.என்.ஏ (RNA) விலிருந்து புரதங்கள் (Proteins) உருவாக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு புரதத்திற்க்கும், உடலின் பல்வேறு இயக்கங்களை வழி நடத்திச் செல்லும் தன்மையுண்டு! (இக்கொள்கையின் காணொளி வடிவம் கீழே)

நோய் எதிர்ப்பு மரபனுக்களைத் தூண்டும் தாய்ப்பால்!

தாய்ப்பால்/புட்டிப்பால் உண்ட குழந்தைகளுடைய சுமார் 146 மரபனுக்கள் வேவ்வேறு விதமாக தூண்டப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது! தாய்ப்பால் மூலமாக தூண்டப்பட்டுள்ள (கிட்டத்தட்ட) எல்லா மரபனுக்களும் வேகமான குடல் வளர்ச்சி மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு பகுதி வளர்ச்சி ஆகியவற்றை தூண்டுபவை/மேம்படுத்துபவை என்பது குறிப்பிடத்தக்கது!  எல்லாவகையிலும் பாதுகாப்பான ஒரு தாயின் வயிற்றிலிருந்து பூமிக்கு வரும் குழந்தைகள், முதற்கட்டமாக சமாளிக்க வேண்டியது இவ்வுலகின் (சுற்றுச்சூழலில்) கோடிக்கணக்கான நோய்க்கிருமிகளை. அடுத்தகட்ட சோதனை, குடல் வழியாக உணவை ஜீரணித்து சக்தி பெறுதல்.

ஆக, இவ்விரண்டு தொடக்க சோதனைகளும், ஒவ்வொரு குழந்தைக்கும் இவ்வுலகம் வைக்கும் பரீட்சை! இச்சோதனகளை வெற்றிகரமாக சமாளித்து அடுத்தகட்டத்துக்கு முன்னேறிச் செல்வதென்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிக மிக அவசியம். இப்பரீட்சையில் அவர்கள் தேர்ச்சி பெற, மிக முக்கியமானவை, குடல் வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியும்! குடலும், நோய் எதிர்ப்பு சக்தியும் ஆராக்கியமாக இருக்கும்பட்சத்தில் மூளை மற்றும் உடல் வளர்ச்சியும் சீராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது!

மேற்குறிப்பிட்ட தாய்ப்பாலினால் தூண்டப்படும் 146 மரபனுக்களில் சில, ஒழுகும் குடல் (leaky gut) என்னும் ஒருவகையான குடல் நோயிலிருந்து குழந்தைகளைக் காக்கிறதாம். ஆபத்தான வெளிப்பொருட்கள் குடல் வழியாக ரத்த நாளங்களுக்குள் சென்று, அதன் காரணமாய் ஒவ்வாமைகள், திசுக்காய நோய்களான (allergies and inflammatory diseases) ஆஸ்துமா, காலிடிஸ் மற்றும் க்ரான்ஸ் நோய் (asthma, colitis and Crohn’s disease) வரும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. இந்நோய்கள் அனைத்தும் புட்டிப்பால் உண்ணும் குழந்தகளில் பெரும்பாலும் காணப்படுபவை என்பதை முந்தைய ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷெரான் டொனொவான்!

தாய்ப்பால்/புட்டிப்பால் மரபனு வெளிப்பாட்டினை இரு வேறு வகையில் பாதிக்கலாம்…..

  1. க்ரோமோசோம்களின் மரபனுக்கள் நிறைந்த டி.என்.ஏ பகுதிகளை, மரபனு வெளிப்பாட்டுக்கு அவசியமான நிலையில் தயார்படுத்தும் காரணிகளை (புரதங்கள்)  மாற்றலாம் (அல்லது)
  2. க்ரோமோசோம் இழைகளை லாவகமாக பிரித்து/சிக்கவிழ்த்து, மரபனு வெளிப்பாட்டினை தொடங்கும் புரதக்காரணிகள் மரபனுக்கள்மீது உட்கார ஏதுவாய், மரபனுக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, மரபனு வெளிப்பாட்டினை தொடக்கிவைக்கும் மேல்மரபனுவியல் மாற்றங்களை (epigenetic effect) தூண்டலாம்!

மேல்மரபனுவியல்: க்ரோமோசொம்களின் முறுக்கிய இழைகளுக்குள் புதைந்துள்ள மரபனுக்களை, சிதைக்காமல், வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தாமல், அவற்றின் மேற்புறத்தை மட்டும் சில/பல வேதியல் மாற்றங்களுக்குட்படுத்தி, மரபனு வெளிப்பாட்டினை தேவைக்கேற்றவாறு தொடங்கியும் அல்லது தடுத்தும் கட்டுப்படுத்துவது மேல்மரபனுவியல் எனப்படுகிறது! (மேல்மரபனுவியல் பத்தி ஒரு பதிவுல பிரத்தியேகமா கூடிய விரைவில் நாம பார்ப்போம்!)

குழந்தையின் முதல் உணவு (தாய்ப்பால்), அதன் நீண்டகால உடல் ஆரோக்கியத்துக்கு அவசியம்னு பதிவுத்தொடக்கத்துல பார்த்தோம் இல்லீங்களா, அதுக்கு அடிப்படையே இந்த மேல்மரபனுவியல் மாற்றங்களாகக் கூட இருக்கலாம் என்று யூகிக்கிறார் ஷெரான்?!. இவ்வகை மாற்றங்கள் பொதுவாக, ஒரு முறை நிகழ்ந்தால் நிரந்தரமாக இருந்துவிடக்கூடியவை என்பதை கவனத்தில் கொள்க!

பரிணாமப்படி, தாய்ப்பால் மனிதக் குழந்தைகளின் உணவுக்காக உருவானவை. அதில்  ஹார்மோன்கள், வளர்ச்சிக் காரணிகள் மற்றும் ஏராளமான நார்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது! ஆனால், மாட்டுப்பால் கன்றுகளுக்கு உண்வாக உருவானவை. அதனுள்ளே இருக்கும், உயிர்தூண்டு காரணிகள், பாலைக்காய்ச்சுவதால் அழிக்கப்பட்டுவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது!

என்னதான் கோடிக்கணக்கான வருடங்களாய் இவ்வுலகில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டு வந்தாலும், அதனை அப்படியே செயற்க்கையாக உருவாக்கிவிட, பல்வேறு ஆராய்ச்சிகளை நிறுவனங்கள் நடத்தினாலும், இன்னும் ஒன்னும் வேலைக்காகலை! தாய்ப்பாலைப் பத்தி நாம இன்னும் எவ்வளவோ கத்துக்கனுமுங்க என்கிறார் ஷெரான்.

இப்போ புரியுதுங்களா, ஏன் மாட்டுப்பாலைவிட தாய்ப்பால்தான் சிறந்தது அப்படீன்னு? தாய்ப்பாலின் நற்குணங்கள்பத்தி நீங்கள் கேட்ட/படித்த, உங்களுக்குத்தெரிந்த விஷயங்கள் எதாவது இருந்தா சொல்லுங்கள் தெரிந்துகொள்வோம்…..

தொடர்புடைய சில பதிவுகள்:

“சிந்த்தியா”, விஞ்ஞான உலகின் அட்டகாசமான ‘செயற்கை’ புதுவரவு!!

மனித உடலும் “மரபனு ஆர்கெஸ்ட்ராவும்”!

“போர்வீரன் மரபனுவும்” மரபுவழி வன்முறையும்!!

“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Like This!

Advertisements