அதிர்ச்சி: ‘குள்ளமானவர்’களைத் தாக்கும் ‘இருதய’ நோய்கள்?!

Posted on ஜூன் 16, 2010

7


டிஸ்கி: கீழே நீங்கள் வாசிக்கவிருக்கும் பதிவுச்செய்தி ஒரு ஆய்வறிக்கையே. இது விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட ஒரு பதிவு. இச்செய்தியை, நம் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் ஆரோக்கியமானதாக்கி, நோய்கள் வருமுன் காக்கும் முயற்ச்சிகளை தூண்டும் ஒரு மருத்துவச்செய்தியாக மட்டுமே பார்க்குமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! வீணான பயங்கள், உளைச்சல்கள் அவசியமில்லை!! நன்றி.

உங்குத்தமா…..எங்குத்தமா……யார நானும் குத்தஞ்சொல்ல…..?!

அப்பா கொடுத்தாரா…..அம்மா கொடுத்தாங்களா…..எனக்கு ஒன்னும் புரியலையே?!

என்னங்க, உங்களுக்கும் ஒன்னும் புரியலையா? மேலே இருக்குற பாட்டுல இருக்குற முதல் வரி நம்ம ஊரு ஒளி-ஓவியர் தங்கர்பச்சானோட அழகி படத்துலயிருந்துன்னு உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும். உங்க குழப்பமெல்லாம் அந்த ரெண்டாவது வரியை எழுதினது யாரு, அது எந்தப் பாட்டுல வருது அப்படீங்கிறதுதான்னு எனக்கு நல்லாத் தெரியும்?! இந்த எதுகை மோனைக்கு பாட்டே தேவலாம் அப்படீன்றீங்களா?

சரி விடுங்க, இனிமேலும் அறிமுகம்ங்கிற பேர்ல ரம்பம் போட்டு உங்ககிட்ட அடிவாங்குறதுக்கு நான் தயாராயில்லை! அதனால, நாம நேரடியாவே விஷயத்துக்கு வந்துருவோம். நீங்க மேல படிச்ச அந்த ரெண்டாவது வரியை எழுதினது அடியேன் மேலிருப்பான்தான்! ஏன்னா, இன்னைக்கு நாம பார்க்கப் போற மருத்துவப் பதிவுக்கு பொருத்தமா இருக்குதேன்னு அழகி பாட்டுக்கூட அப்படியே நைசா கோர்த்துப்புட்டேன்! அதுக்காக என்னை கும்ம நினைக்கிறவங்க எல்லாம் அப்படியே ஓரமா வரிசைகட்டி நில்லுங்க, எல்லாருக்கும் கண்டிப்பா ஒரு வாய்ப்பு உண்டு?! அவ்வ்வ்வ்….!

இப்போ நாம, பதிவுக்கும் அப்படியே பாட்டுக்குமான என்னோட விளக்கத்தைப் பார்ப்போம்……

அதாவது, இதுவரைக்குமான ஆய்வுகள்ல, இருதய நோய்களுக்கு அடிப்படைக் காரணமா பெரும்பாலும் (கொழுப்புச் சத்து நிறைந்த) உணவுப் பழக்கவழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், வயது முதிர்ச்சி, ஆண்களாய் பிறத்தல் (?) அப்புறம் ரொம்ப முக்கியமா மரபுவழிநோய் பெறுதல் அப்படீன்னுதான் ஒரு பட்டியல் கொடுத்திருந்தாங்க! ஆனா, இப்போ திடீர்னு குள்ளமாக/உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு (ஆண்-பெண்), இருதய நோய்கள் வர அதிக வாய்ப்பிருக்கிறதா சுடச்சுட ஒரு ஆய்வுச் செய்தி வெளியாகி உலக குள்ளமானவங்களையெல்லாம் அல்லோல கல்லோல பட வச்சிட்டுது!

அதப்பத்தி உங்களுக்குச் சொல்லலாமுன்னு பதிவு எழுத உக்காந்த உடனே, பதிவு ஆரம்பத்துல நீங்க படிச்ச அந்த பாட்டுவரிகள்தான்  முதல்ல வந்து  நின்னுது. அதான் சரின்னு எழுதினேன். அதுக்கு அடுத்த வரி என்ன சொந்த கற்பனையா இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்து, அதை இங்கே எழுதினேனான்னு கேக்கக்கூடாது! ஏன்னா, அந்த வரியும் இந்த ஆய்வுச் செய்தியப் பத்தித்தான்! பதிவை முழுசாப் படிச்சிட்டு அப்புறம் சொல்லுங்க அது சரியா தவறான்னு?!

உயரமும் இருதயக் கோளாறுகளும், வினோதமான ஒரு முடிச்சு!

இருதய நோய் ஏற்படுவதற்க்கான  காரணங்களாக, இதுவரைக்கும் நீங்களும் நானும் கேள்விப்பட்டிருக்கக்கூடியது கொழுப்புச்சத்து சார்ந்த உணவுகள், உடல் பருமன், புகைப்பிடித்தல், உடலுழைப்பின்மை, மரபுவழிவருவது மற்றும் வயது இப்படியான விஷயங்களைத்தான். ஆனா, நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத மற்றுமொரு வினோதமான காரணமும் இருந்துவருவதாக ஆய்வுகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதுதான் உயரத்துக்கும் இருதய நோய்க்குமான ஒரு வினோத தொடர்பு. சத்தியமா எனக்கு இதுவரைக்கும் தெரியாதுங்கோவ்…..!

கடந்த 1951 ஆண்டுதான் முதன்முதலில், ஒருவரின் உயரத்தையும் இருதய நோய்க்குமான தொடர்பையும் பற்றிய ஒரு ஆய்வறிக்கை வெளியானது. உயரம் குறைவாக இருந்தால் இருதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதே அது?! அதன்பின்னர், இன்றுவரையில் சுமார் 1900 ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன உயரக்குறைவையும், இருதய நோயையும் தொடர்புபடுத்தி! ஆனா இதுவரைக்கும், ஆய்வுலகில் ஒரே நோய் குறித்து பல வருடங்களாக வெளியான ஆய்வுகளை மறுஆய்வு செய்ய, பொதுவாக மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட மறுஆய்வு (systematic review) மற்றும் மெட்டா அனாலிசிஸ் (meta-analysis) என்று சொல்லப்படும் ஒரு வகையான விரிவான, ஆழமான மறுஆய்வு என இவை இரண்டும்,  உயரம்-இருதய நோய் தொடர்பு குறித்த ஆய்வுகளில் மேற்கொள்ளப்படவில்லை!

இவ்விரண்டு வகையான சோதனைகளை மேற்கொள்வதன்மூலம், நூற்றுக்கணக்கான ஆய்வுகளின் முடிவினை, சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை,  சில யூகங்கள் மற்றும் புள்ளியியல் சோதனைகள் போன்றவற்றினால் மறு ஆய்வு செய்து, அதன்பின்னரும் அந்த முடிவுகள் தகுதியானவைதானா என்று சரிபார்த்துக்கொள்ள  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது! 1900 ஆய்வறிக்கைகளும், குள்ளமானவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் இருந்தாலும், மேற்சொன்ன இரு சோதனைகளில் வெற்றியடைந்தாலொழிய அம்முடிவுகள் செல்லுபடியாகாது என்பதால், அவ்விரு சோதனைகளையும் செய்தார் ஃபின்லாந்து நாட்டின் டாம்பீரே பல்கலைக்கழக மருத்துவர் திரு.டியூலா பாஜானென் (Dr Tuula Paajanen, University of Tampere, Tampere, Finland)

‘இருதயநோய் ஆபத்தாகும்’ குறைவான உயரம்?!

உயரம் குறித்த வெவ்வேறு வகையான விஷயங்களை சோதனையில் பயன்படுத்திய 1900 ஆய்வுகளிலிருந்து, மிகவும் அதிகபட்ச உயரம் மற்றும் மிகவும் குறைந்தபட்ச உயரம் ஆகிய இரு விவரங்களை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு உயரத்துக்கும் இருதய நோய்க்குமான தொடர்பினை வரையறுக்க மறு ஆய்வை மேற்கொண்டார் பாஜானென்.

  1. இந்த விசேஷ கணக்குக்குள் பொருந்தியது 52 ஆய்வுகளை மட்டுமே (1900-1848=52)
  2. சுமார் 3,012,747 நோயாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
  3. இச்சோதனையில் (ஆண், பெண் இருபாலரும்) சராசரியாக குள்ளமானவர்களின் உயரம் 160.5 செ.மீ மற்றும் உயரமானவர்களின் உயரம் 173.9 செ.மீ என்பதும் குறிப்பிடத்தக்கது.
  4. ஆண், பெண் என வெவ்வேறாக பிரித்தால், ஆண்களுக்கான சராசரி குறைவான உயரம் 165.4 செ.மீ மற்றும் பெண்களுக்கு 153 செ.மீ. உயரமான ஆண்களின் சராசரி உயரம் 177.5 செ.மீ மற்றும் பெண்களுக்கு 166.4 செ.மீ!
ஆக, இந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது என்னன்னா, இருதய நோயால் இறந்துபோகும் வாய்ப்பு, உயரமானவர்களைவிட குள்ளமானவர்கள் 1.5 தடவை அதிகமாயிருந்தது/இருதய நோய் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவர்/மாரடைப்பு வரும் வாய்ப்பு என்றும் தெரியவந்தது என்கிறார் பாஜானென்! ஆண், பெண் என இருவகையாக பிரித்து சோதித்துப் பார்த்ததில், இருதய நோய் காரணிகளால் இறக்கும் வாய்ப்பு உயரமானவர்களைவிட குள்ளமானவர்களுக்கு, ஆண்கள் 37%  மற்றும்   பெண்கள் 55% அதிகமாக இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது! அடப்பாவிகளா, இப்படி வயித்துல புளியக் கரைக்கிறீங்களே….?!

அதெல்லாஞ்சரி, “குள்ளமானவர்கள்ல இருதய நோய் வரும் வாய்ப்பு குற்ப்பிட்ட எந்த (அளவு) உயரத்துடன் தொடர்புடையது அப்படீன்னு சொல்லவேயில்லையே?” அப்படீன்னு கேட்டீங்கன்னா, அதுக்கு இன்னும் திட்டவட்டமான ஒரு பதில் தெரியலைன்னு சொல்றாங்க ஆய்வாளர்கள். காரணம் என்னன்னா, இதுவரை நடத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஆய்விலும் வெவ்வேறு உயர அளவுகளை, வெவ்வேறு இன மக்களில் கடைப்பிடித்து ஆய்வு செய்துள்ளமையால், குறிப்பிட்ட ஒரு உயர அளவை வரையறுத்துச் சொல்வது கடினம் என்பதே!

இருதய நோய் குறித்த ஒரு காணொளி……

திட்டமிடப்பட்ட மறுஆய்வு முன்வைக்கும் கருத்துகள்/எச்சரிக்கைகள்!

இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறார் பாஜானென். இம்முடிவுகள் மூலம் ஒருவருக்கு இருதய நோய் ஏற்படும் வாய்ப்பினை அவரின் உயரத்தைக் கொண்டும் கணக்கிட முடியும் என்பது தெளிவாகிறது என்கிறார்.

ஏன் குறைவான உயரம் இருதய நோயுடன் தொடர்புடையதாக இருக்கிறது அல்லது இருக்க வேண்டும் என்பது  இன்னும் ஒரு புரியாத புதிரே?!

ஆனா, இத்தகைய ஒரு வினோத தொடர்புக்கான காரணங்களை யூகிக்க முடியும் என்கிறார் பாஜானென்!  அவருடைய சில யூகங்கள்……

  1. குள்ளமானவர்களில், இருதய நோய்க்கு காரணமான ஒரு வகை ரத்த நாளங்களான கரோனரி ரத்த நாளங்கள் சிறியதாக இருக்கலாம். இந்த மாற்றமானது, சரியான உணவின்மை அல்லது சிலவகை தொற்றுகள் காரணமாக சிறு வயது (சிசு) முதல் தொடர்ந்திருக்கலாம்.
  2. இந்த சிறிய ரத்த நாளங்கள், ரத்த ஓட்டத்தினை பாதிக்கும் மாற்றங்களால் கூட பாதிக்கப்படலாம்.
  3. ஆனால் உயரம் குறித்த  சமீபத்திய சில மரபனுவியல் ஆய்வுகளின்படி, இருதயநோய்-உயரத்துக்கான தொடர்பை மரபுவழி பெறப்படும் சிலவகையான  மாற்றங்கள் மற்றும் உடல் எடை போன்றவற்றால் விளக்க முயற்ச்சிக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது!

எது எப்படி இருந்தாலும், குறைவான உயரம்/குள்ளமா இருந்தா இருதய நோய்கள் வருவதற்க்கான வாய்ப்பு அதிகம் அப்படீங்கிறது கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கு அப்படீன்னு பயப்படுறவங்களுக்கு, “உயரம் என்பது இருதய நோய் வருவதற்க்கான எத்தனையோ காரணங்கள்ல ஒன்று மட்டுமே! மேலும், ஒருவர் தன் உடல் எடை, உணவுப்பழக்கம், உடற்பயிற்ச்சி, மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் முடியுமே தவிர உயரத்தை அல்ல. அதுமட்டுமல்லாமல், ஒருவரின் இருதய நோய்க்கு மேற்சொன்ன எல்லா காரணங்களும் சேர்ந்துதான் பங்களிக்கின்றன என்பதால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்கிறார் பாஜானென்!

இது குறித்த, பன்முனை பார்வை மற்றும் பிரத்தியேகமான காரணிகளைக் குறித்த பல ஆய்வுகளை மேற்கொண்டால் மட்டுமே இத்தொடர்புக்கான அடிப்படைக் காரணங்களை அறிய முடியும்.  அதேசமயம், குள்ளமானவர்கள் இருதய நோய் வராமலிருக்க தகுந்த வருமுன் காக்கும் யுக்திகளை கையாண்டு, உயரமானவர்களைவிட அதிக கவனத்துடன் தம் இருதய ஆரோக்கியத்தை காத்துக்கொள்வது அவசியம் என்கிறது இந்த ஆய்வு! அதுமட்டுமில்லாமல், பிறப்பிலேயே குள்ளமாக பிறக்கும் குழந்தைகளின் இருதய ஆரோக்கியத்தை அவர்களின் சிறுவயது முதல் மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து, அதற்கேற்ற வாழ்க்கை முறைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோரின் கடமையாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்!

இன்னொரு விஷயம் என்னன்னா, இருதய நோய்க்கு எதிரான வருமுன் காக்கும் முயற்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றியடைவது , உயரமானவர்களைவிட குள்ளமானவர்களுக்கு சற்று எளிதாகவும், மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்குமாம்?! இறுதியாக, நம்மில் பெரும்பாலானோர்க்கு நம் உயர அளவு நன்கு தெரியும். ஆக, நம் உயரம் 160.5 செ.மீ (ஆண்கள்) அல்லது 153 செ.மீ (பெண்கள்) இருக்கும் பட்சத்தில், இருதயநோய் வருமுன் காக்கும் யுக்திகளை மிகுந்த சிறத்தையுடன் மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், உயரமானவர்களின் உயரமானது இருதயநோயிலிருந்து அவர்களை பாதுகாக்கிறது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது! மாறாக, அவர்களும் இருதய நோய்க்கு எதிரான முயற்ச்சிகளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுதல் அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

இந்த ஆய்வு குறித்த ஆய்வறிக்கையை வாசிக்க இங்கே (“Short stature is associated with coronary heart disease: a systematic review of the literature and a meta-analysis.” European Heart Journal)

“Is tall beautiful and the heart healthy?”. European Heart Journal. இங்கே

தொடர்புடைய சில பதிவுகள்:

மரணத்தை வென்று புன்னகையுடன் ஹன்னா க்ளார்க்!

மூடிய இருதய அறுவை சிகிச்சையும் ஜீன் தெரபியும்!

செக்ஸ்: ‘உடலுறவு’ இதயத்துக்கு நல்லது; மாரடைப்புக்கு பின்னும்!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Like This!

Advertisements