வேர்டுபிரஸ் வலைப்பயணங்களில்…..365!

Posted on ஜூன் 8, 2010

52


“வாழ்க்கைன்னா ‘நவரசம்’ வேணும், சாப்பாடுன்னா ‘நல்ல ரசம்’ வேணும்”, அப்படீன்னு நம்ம மனோரமா ஆச்சி ஒரு வெளம்பரத்துல சொல்லுவாங்க, அதேமாதிரி “வலைப்பதிவுன்னா ‘சுவாரசியம்’ வேணும்”, அப்படீன்னு நெனக்கிறவன் நான்!

இப்படித்தான், கடந்த வருடம் ஜுன் மாதம் 7-ஆம் தேதி, பசங்க அப்படீன்னு ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்த்தேன். அத்தி பூ/குறிஞ்சிப் பூ பூத்த மாதிரி, நம்ம தமிழ் சினிமாத்தோட்டத்துல (திரையுலகம்) பூத்த ஒரு திரைப்பூவாதான் அந்தப் படம் எனக்குத் தோனுச்சி?! இதுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான், இணையத்துல, தமிழ்ல இந்த வலைப்பதிவு…..வலைப்பதிவு அப்படீன்னு ஒரு சமாச்சாரம் இருக்குறதா கேள்விப்பட்டு, ஒரு நல்ல நாளாப் பார்த்து, அந்த வலைப்பதிவு ஜோதியில சீக்கிரம் நாமளும் ஐக்கியமாயிடனும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்!

பசங்க படம் பார்த்ததிலேர்ந்து அதப்பத்தின என்னோட கருத்துகள யாருகிட்டயாவது சொல்லியே ஆகனும் இல்லைன்னா தலையே வெடிச்சிடும் போலிருந்தது! சரி, இந்த படத்தைப் பத்தின என்னோட புரிதலையே ஒரு கவிதை (?) முதல் பதிவா எழுதி ஒரு வலைப்பதிவு தொடங்கிடுவோம்னு, பசங்க…..என் பார்வையில்! அப்படீங்கிற ஒரு பதிவோட, நம்மளோட வலைப்பதிவு பயணத்த வேர்டுபிரஸ் ஓசி வலைப்பக்கத்தோட “ஹரி ஓம்”னு ஆரம்பிச்சிட்டோம்ல?!

வலைப்பதிவு ஆரம்பிச்சிட்டு, “ஏய்….நானும் ரௌடிதாங்கிற நம்ம வடிவேலு மாதிரி, நானும் வலைப்பதிவர்தான்” அப்படீன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்(?) கொஞ்ச நாளைக்கு!

இப்படி, “எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான்”னு ஆரம்பமான மேலிருப்பானோட வலைப்பதிவு, கொஞ்ச நாள்லயே  சேது பட விக்ரம் மாதிரி “எங்கே செல்லும் இந்தப் பாதை…..யாரோ, யாரோ அறிவார்”ன்னு தடுமாற ஆரம்பிச்சிட்டுது! ஐய்யய்ய இது என்ன வம்பா போச்சுன்னு, சினிமா, கவிதை (?), சமுதாயச் செய்திகள்னு தடம் மாறி, தப்பு பண்ணி தப்பு பண்ணி திருந்தி, ஒரு  வழியா “நல்லதொரு குடும்பம்….பல்கலைக்கழகம்”னு, வலைப்பதிவு குடும்பத்துல ஒரு அங்கமா, பெரும்பாலும் அறிவியல், உளவியல், தொழில்னுட்பம் செய்திகள கொஞ்சம் சுவாரசியமா எழுதுற ஒரு வலைப்பதிவாளனா, எனக்குன்னு ஒரு பாதைய வகுத்துக்கிட்டு, மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது அப்படீங்கிற கொள்கையோட, புதுமையான விஷயங்கள நெறைய எழுதனும்னு முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்?!

அதெல்லாஞ்சரி, அதென்னாதது “வேர்டுபிரஸ் வலைப்பயணங்களில்…..365” அப்படீன்னு ஒரு வினோதமான தலைப்புன்னு கேக்குறீங்களா? அட, அது ஒன்னுமில்லீங்க. நான் வேர்டுபிரஸ் மூலமா தமிழ் வலையுலத்துக்குள்ள, வலைப்பதிய வந்து இன்னியோட (ஜூன் 8, 2010) சரியா 365 நாட்கள் ஆகுது. அதாங்க ஒரு வருஷமாவுது! அதான் இந்த நாளை ஒரு வித்தியாசமான பதிவோட தொடக்கலாமேன்னு, தலைப்பையே கொஞ்சம் வித்தியாசமா வச்சிட்டேன்!

“ஆமா, வலைப்பதிவுல இருந்த இந்த ஒரு வருஷத்துல, என்னாத்த பெருசா எழுதி கிழிச்சிட்ட நீ”,  அப்படீன்னு கேட்டீங்கன்னா…..

 1. எழுதிக்கிழிச்சது—–மொத்தம் 244 பதிவுகள்
 2. மறுமொழியா வாங்கிக்கட்டிக்கிட்டது—–1074 (என்னோட பதிலையும் சேர்த்து!)
 3. தமிழிஷில் பிரசுரமான பதிவுகள்—–125
 4. அலெக்சா தரவரிசையில்—–155,707 (உலகில்), 7694 (ஜப்பானில்), 72,210 (இந்தியாவில்)
 5. அதிகபட்ச பார்வைகள்—– 1550 (ஒரு நாளில்), 16,408 (ஒரு மாதத்தில்)

இப்படி இன்னும் இத்யாதி, இத்யாதின்னு, நம்ம கேப்டன் விஜயகாந்த் மாதிரி பட்டியல் போடப்போறேன்னு பயந்துடாதீங்க! நான் இந்த வலைப்பக்கத்துல எழுதிக்கிழிச்சதெல்லாம் களஞ்சியம் அப்படீங்கிற பேர்ல, இடது பக்க முகப்புலதான் இருக்கு. நீங்களே நல்லா ஆர, அமர படிச்சிப்பார்த்துட்டு, நான் புடுங்கிய ஆணி எத்தனை, அதுல எத்தனை ஆணி மழுங்கிப்போனது அப்படீன்னு புரிஞ்சிக்குங்க!

ஆனா ஒன்னுங்க, வலைப்பக்கத்துக்கு எழுத வந்த இந்த ஒரு வருஷத்துல, நல்லா/பரவாயில்லை மாதிரி பதிவுகள் எழுதுறேன்னு சில/பல பேர் சொல்லியிருக்காங்களே தவிர, யாரும் “நீ ஆணியே புடுங்க வேணாம்”னு இதுவரைக்கும் சொல்லல. அது ஒரு பெரிய ஆறுதல்?! அதுக்கு சாட்சி, இதுவரைக்கும் இந்த வலைப்பக்கத்துக்கத்துல வாசகர்கள் எழுதின சுமார் 500-600 மறுமொழிகள்ல நான் மட்டறுக்கும்போது அழிச்சது (டெலீட்) வெறும் 5 மறுமொழிகள்தான் அப்படீங்கிறதுதான்!

பாவம், உங்களுக்கு இப்பவே கண்ணக் கட்டியிருக்கும்னு நெனக்கிறேன். அதனால…..என்ன, போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்லப்போறேன்னு பார்த்தீங்களா? அதுதான் இல்ல?! அட ஆமாங்க, இன்றைய பதிவுச்செய்தியே இனிமேதான வரப்போகுது. ஒன்னும் புரியலீங்களா? மீண்டும் தலைப்பை ஒரு முறைப் படிங்க, இப்போ சொல்லுங்க. தலைப்புல இருக்குற 365-க்கு, வெறும் வருஷத்தோட 365 நாட்கள் மட்டுந்தான் அர்த்தம்னு நெனச்சீங்களா? அப்படீன்னா, அது தவறு!

ஏன்னா, இன்றைய பதிவுல நாம, இதுவரை உங்களுக்குத் தெரியாத (?), பலவிதமான அறிவியல் உண்மைகள், வினோதங்கள், மர்மங்கள் இப்படி 365 அறிவியல் துணுக்குகள்/செய்திகளத்தான் பார்க்கப்போறோம்! (365ன்னு குத்து மதிப்பா சொல்லிட்டேனே தவிர எத்தனை எழுத முடியும்னு தெரியல?!). இன்னைக்கு எத்தனைதான் தேருதுன்னு பார்ப்போம் வாங்க……

அறிவியல் உண்மைகள்!

 1. ஒளியின் வேகம் நொடிக்கு 186,000 மைல்கள்
 2. சூரிய ஒளி சூரியனிலிருந்து பூமியை வந்தடைய 8 நிமிடம் 17 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது
 3. கடந்த 1999 ஆம் ஆண்டு, அக்டோபர் 12 ஆம் தேதி உலகின் மக்கள்தொகை 6 பில்லியன் (The Day of Six Billion)
 4. உலகில் பிறந்த 10% மனிதர்கள் இக்கணம் உயிரோடு இருக்கிறார்களாம்
 5. பூமி தன்னைத்தானே மணிக்கு 1000 மைல்கள் வேகத்தில் சுற்றுகிறது, ஆனால் பிரபஞ்சத்தில் அது நகரும் வேகம் மணிக்கு 67,000 மைல்கள்
 6. உலகை ஒவ்வொரு வருடமும் சுமார் 10 லட்சம் பூகம்பங்கள் தாக்குகிறது
 7. ஒவ்வொரு நொடியும் சுமார் 100 மின்னல்கள் பூமியை தாக்குகின்றன
 8. ஒவ்வொரு வருடமும் மின்னல்கள் சுமார் 1000 பேரை கொன்றுவிடுகின்றன
 9. கடந்த 1999 ஆண்டு அக்டோபர் மாதம், லண்டன் அளவுள்ள ஒரு பனிப்பாறை அன்டார்டிகா பனிமலையிலிருந்து உடைந்தது
 10. மனித நாக்குபூச்சி (tapeworms) சுமார் 22.9 மீட்டர் வரை வளருமாம்
 11. பூமியின் வயது 4.56 பில்லியன் வருடங்கள் (நிலவும் சூரியனும் கூட இதே வயதுதானாம்?!)
 12. ஆல்ப்ஸ் மலை தோன்றுவதற்க்கு முன்பே டினோசர்கள் அழிந்துவிட்டன
 13. கருப்பு விதவை எனும் ஒரு வகை சிலந்திகள் உடலுறவுக்குப் பின் தன் ஆண் துணையை சாப்பிட்டுவிடுமாம்!
 14. ஒரு வேளை சூரியனின் குறுக்களவு (diameter) ஒரு அங்குளமாக இருந்தால், நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரம் வெறும் 445 மைல்கள்தானாம்!
 15. ஆஸ்திரேலியாவின் billygoat plum என்னும் ஒரு வகை பழம் ஆரஞ்சுப்பழத்தைவிட 100 மடங்கு வைட்டமின் சி உடையதாம்.
 16. வின்வெளி வீரர்களால் ஏப்பம் விட முடியாதாம். காரணம், காற்றையும் திரவத்தையும் பிரிக்க புவி ஈர்ப்பு சக்தி கிடையாதாம்
 17. எவரெஸ்ட் மலையில், 29,029 அடியில் உள்ள காற்றின் அடர்த்தி கடல் மட்டத்தில் இருப்பதில் மூன்றில் ஒரு பங்குதானாம்!
 18. பெருவெடிப்புக்கு (Big Bang)  ஒரு மில்லியன், மில்லியன், மில்லியன், மில்லியன், மில்லியன் நொடிகளுக்குப் பிறகு பிரபஞ்சத்தின் அளவு ஒரு பட்டானி அளவுதானாம் (புரியலையே?)
 19. முதன்முதலில், டி.என் ஏ வை  (DNA) 1869 ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் ஃப்ரெட்ரீஷ் மெய்ஷர் (Friedrich Mieschler) கண்டுபிடித்தார்
 20. உலகின் முதல் செயற்கை க்ரோமோசோம், கடந்த 1977 ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.
 21. வெப்பமானி விஞ்ஞானி கலிலியோவால், 1607 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
 22. பூதக்கண்ணாடியை இங்கிலாந்தின் ரோஜர் பேகான் (Roger Bacon) என்பவர் 1250 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்
 23. 1866 ஆம் ஆண்டு, ஆல்ஃப்ரெட் நோபல் அவர்கள் டைனமைட்டை உருவாக்கினார்
 24. உலகின் முதல் நோபல் பரிசை நில்ஹெல்ம் ரோஞ்சன் அவர்கள் தனது எக்ஸ் ரே கண்டுபிடிப்புக்காக தட்டிச் சென்றார்
 25. உலகின் மிக உயரமான மரம் 1872-ல் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது. அதன் உயரம் 435 அடிகள்!
 26. உலகின் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை Christian Barnard என்பவரால் 1967-ல் மேற்கொள்ளப்பட்டது. அந்த நோயாளி 18 நாட்கள் உயிர் வாழ்ந்தார்
 27. போயிங் 747 (Boeing 747) விமானத்தின் ஒரு இறக்கை மட்டுமே ரைட் சகோதரர்களின் முதல் விமானத்தைவிட நீளமாம்!
 28. ஒரு மின்சார ஈல் மீன் (electric eel) சுமார் 650 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யுமாம்!
 29. உலகின் முதல் மதுபான உற்பத்தியாளர்கள் (earliest wine makers) எகிப்து நாட்டில் 2300 கி.பி வாழ்ந்தார்களாம்
 30. எபோலா வைரஸ் என்னும் வைரஸ் தாக்கும் 5 மனிதர்களில் நான்கு பேர் இறந்துவிடுகிறார்களாம்!
 31. இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின் சூரியன் ஒளியிழந்து சிவப்பு பிழம்பாகிவிடுமாம் (?!)
 32. ஒட்டகச்சிவிங்கிகள் 24 மணி நேரத்தில் வெறும் 20 நிமிடங்கள்தான் உறங்குகின்றனவாம்! அவை ஒரு போதும் படுப்பது இல்லையாம்!
 33. ஒரு பன்றியின் உச்சகட்டம் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடிக்குமாம்!
 34. நமது உணவுக்குழாயில் உள்ள வழுவழுப்பான தோல் இல்லையென்றால் குடல் செறிமானமாகிவிடும்
 35. மனிதர்களின் க்ரோமோசோம்களின் எண்ணிக்கை 46, பட்டானிக்கு 14, க்ரே மீனுக்கு-200
 36. நம் உடலின் மொத்த ரத்த நாளங்களின் நீளம் சுமார் 60,000 மைல்களாம்!
 37. உடலை ஒரு சுத்து சுத்தி வர ஒரு ரத்த அணு எடுத்துக்கொள்ளும் கால அளவு வெறும் 60 நொடிகள்தானாம்!
 38. அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களை புதைத்த தினம் அமெரிக்க தொலைபேசி நிலையம் 1 நிமிடம் காலம் நிறுத்தப்பட்டதாம்
 39. humpback whale என்னும் ஒரு வகை திமிங்களத்தின் சத்தமே உலகில் ஒரு உயிரினத்தின் அதிக பட்ச சத்தமாம்!
 40. உலகின் கால்பகுதி தாவரங்கள் 2010 க்குள் அழிந்துவிடுமாம்!
 41. ஒரு மனிதன் தன் வாழ் நாளில் சுமார் 18.9 கிலோ தோலை உதிர்க்கிறானாம்
 42. ராட்சத ஸ்க்விட் (giant squids) என்னும் ஒரு கடல் வாழ் உயிரினத்தின் கண்கள் 15 அங்குலமாம். இதுவே உலகின் பெரிய கண்களாம்!
 43. ராட்சத கேலக்சிக்கள் மில்லியன் மில்லியன் நட்சத்திரங்களைக் கொண்டவையாம்.
 44. பிரபஞ்சத்தின் மொத்த கேலக்சிக்களின் எண்ணிக்கை 100
 45. முத்தமிடுவதை விட கைகுலுக்குவதாலேயே அதிக கிருமிகள் பரவுகின்றனவாம்!
 46. உலகின் மிக நீளமான பனித்தொடர் அன்டார்டிகாவில் உள்ளது. அதன் நீளம் சுமார் 250 மைல்கள். அகலம் 40 மைல்கள்
 47. ஒரு மழைத்துளியின் மிக அதிகமான வேகம் மணிக்கு 18 மைல்களாம்!
 48. ஒரு திடகாத்திரமான/ஆரோக்கியமான மனிதனின் உடலில் சுமார் 6000 மில்லியன், மில்லியன், மில்லியன் ஹீமோக்ளோபின்கள் இருக்கின்றனவாம்!
 49. உலகின் மிகச் சிறிய இறக்குயுடைய பூச்சி, தான்சேனியாவின் குலவியாம். அதன் அளவு ஒரு யின் கண்கள் அளவுதானாம்!
 50. ஒரு வேளை சூரியன் ஒரு கைப்பந்து அளவு இருந்தால், ஜுப்பீட்டர் கிரகத்தின் அளவு கோல்ஃப் பந்து அளவும், பூமிபட்டானி அளவும்தானாம்!

என்னங்க, போதும் ஆள விடுப்பா சாமீங்கிறீங்களா? நீங்க சொல்லலன்னாலும் நான் சொல்லிடுவேன் போலிருக்கு?! ஏன்னா, எனக்கு இப்போ கண்ண நல்லாவே கட்டிடுச்சி!! அதுக்காக அப்படியே விட்ற முடியுமா. குறைஞ்சது ஒரு 100 செய்தியையாவது எழுத வேணாம்?! அதனால, இன்னொரு 50 மர்மங்கள் பத்தி மட்டும் எழுதிட்டு இன்னிக்கு கோட்டாவை முடிச்சிக்கிறேன். இனி அடுத்தடுத்தப் பதிவுல மீதி 100, 100, 65 செய்தியப் பார்ப்போம். சரிங்களா? வாங்க ஒரு மர்மச் சுற்றுலாவுக்கு போய்ட்டு வருவோம்……

அறிவியல் மர்மங்கள்!

 1. கடல்வாழ் உயிரினமான ஆக்டோபஸ்ஸுக்கு 3 இருதயங்களாம்?!
 2. புலியை ரோமங்களே இல்லாம பார்த்தாக்கூட கோடுகள்/பட்டைகள் இருக்குமாம். ஏன்னா, அது உடல்ல இருக்குற கோடுகளாம்!
 3. நம்ம உடல்ல இருக்குற அனுக்களை விட 20 மடங்கு அதிகமா நுண்ணுயிரிகள்தான் இருக்குதாம்!
 4. உலகில் பூச்சிகள் நம்மை எண்ணிக்கையில் தோற்கடித்து விடுகின்றனவாம்!
 5. ஒரு சராசரி மனுசன், ஒரு வருஷத்துல தெரிஞ்சோ தெரியாமலோ, சுமார் 430 பூச்சிகளை சாப்பிடுறானாம். ஐய்யய்ய…. நான் இல்லைப்பா!
 6. முதலைகளுக்கு மாற்றுப் பல்லே தேவையில்லையாம். ஏன்னா, அது வாழ்நாள்ல சுமார் 2000-3000 பற்கள் வரை வளருமாம்!
 7. கடல்ல உள்ள உப்பு நம் கண்டங்களை முழுதும் மூடி, சுமார் 500 அடி உயரம் வரை வருமாம் நிரப்பினால்!
 8. மழை பெய்யும்போது தவளைகளும், மீன்களும் கூட பெய்யுமாம். உண்மைதான், சமீபத்தில் செர்பியா நாட்டில், 2005-ல், தவளை மழை பெய்ததாம்!
 9. நம்ம பிரபஞ்சத்துல இருக்குற நட்சத்திர இடைவெளியில் இருக்குற, காற்று மண்டலத்துல சுமார் பில்லியன், பில்லியன், பில்லியன் லிட்டர் மது இருக்கிறதானம்! (ஆல்கஹால்)
 10. உலகம் இன்னும் வளர்ந்துகிட்டு இருக்குதாமாம். வினோதம் ஆனால் உண்மை என்கிறார்கள் சில விஞ்ஞானிகள்!
 11. ஒரு மின்னல் சுமார் 100 மில்லியன் முதல் ஒரு பில்லியன் வோல்ட்ஸ் மின்சாரத்தை தாங்கி வருகிறாதாம்!
 12. ஒரு நொடியில் சுமார் 100 மின்னல்கள் மின்னி மறைகிறதாம். அதுமட்டுமில்லாம, ஒவ்வொரு மின்னலும் ஓசோன் அப்படீங்கிற ஒரு வாயுவை உருவாக்கி உலகத்தை UV கதிர்களிலிருந்து காக்கிறதாம்!
 13. சனி கிரகத்தின் திடம் தண்ணீரை விட குறைவாம். அதனால், அதை கடலில் போட்டால் மிதக்குமாம்!
 14. நம்ம பூமிதான் பிரபஞ்சத்துல இருக்குறதுலேயே திடமானதாம். அதனால, கடல்ல போட்டா முழ்கிடுமாம்!
 15. Black Ironwood tree (Olea laurifolia) அப்படீங்கிற ஒரு மரத்தின் பலகையால கப்பல் செஞ்சா மிதக்குமாம், மூழ்காதாம்!
 16. எரிமலைக்கற்களைக் கொண்டும் கப்பல் செய்தால் கடலில் மிதக்கவே செய்யுமாம். மூழ்காதாம்!
 17. ஒரு நாணய அளவுள்ள neutron star அப்படீங்கிற நட்சத்திரம் பூமியில சுமார் 100 மில்லியன் டன் எடையுடையதாய் இருக்குமாம்!
 18. giant redwood மரம் அப்படீங்கிற ஒரு வகை மரம் தீயில் எரியாதாம் (Fireproof)!
 19. துள்ளும் தன்மையுள்ள ஒரு ரத்தம் உருஞ்சும் பூச்சியான Flea ஒரு முறை துள்ளினால், ஒரு ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்க்கு பயன்படும் சக்தியை விட 20 மடங்கு அதிக சக்தியாம் இந்தப் பூச்சிக்கு!
 20. ரேடியோ அலைகள் ஒலி அலைகளை விட பன்மடங்கு வேகமானதாம். அதனால், 18,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவர் ரேடியோ முலம் கேட்டதற்க்கு பின் தான் ஒரு அறையில் பேசும் அரசியல்வாதியின் சொற்கள் அந்த அறையில் உள்ளவர்களுக்கு கேட்குமாம்!
 21. 7 அடி, 220 பவுண்டு எடையுள்ள Mississippi paddlefish அப்படீங்கிற ஒரு மீன் தான் உலகின் மிகப்பெரிய தூய நீர் வாழ் விலங்கினமாம்!
 22. புலியை போன்று இருக்கும் Toyger என்னும் ஒரு வகை பூனைகள் வீட்டில் வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவையாம்
 23. சில கொரில்லாகள் மனிதர்களைப் போலவே பல நிலைகளில் உடலுறவு கொள்கின்றனவாம்!
 24. ஒரு பாக்டீரியா சுமார் 8 மில்லியன் ஆண்குகளாய் உயிர்வாழ்கிறதாம் (current championship crown)
 25. ஒரு நெருப்புக்கோழியின் கண்கள் அதன் மூளையை விட பெரியவையாம்!
 26. உலகில் ஒரு வருடத்தில், சுறா தாக்கி இறந்துபோகும் மனிதர்களை விட தென்னை மரத்திலிருந்து விழும் தேங்காயினால் இறந்துபோகிறவர்களே அதிகமாம்!
 27. Jewel wasp என்னும் ஒரு குலவி கொட்டும் ஒரு கரப்பான் பூச்சியானது, அந்த விஷத்தினால் ஸாம்பி கரப்பான் பூச்சியாகிவிடுகிறதாம்!
 28. Golden Mushrooms என்னும் ஒரு வகை உலோகம் தங்கத்தைவிட விலை உயர்ந்ததாம். ஒரு அவுன்ஸ் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை விலைபோகுமாம்!
 29. “Ghost Chile” என்னும் ஒரு வகை மிளகாய்தான் உலகின் மிக மிக காரமான மிளகாயாம்!
 30. அதிக சக்திவாய்ந்த ரேடார் குழாய் அருகே சென்ற ஒருவரின் பாக்கெட்டிலிருந்த சாக்லேட் உருகிவிட்டதாம். அதன்பின் தான் மைக்ரோ வேவ் ஓவன் கண்டுபிடிக்கப்பட்டதாம்!
 31. மனித உடல் 60% நீரினால் ஆனது. அதாவது, 2/3 பங்கு ஹைட்ரஜன்! நம் உடலிலும், சுற்றியுள்ள உலகிலும் இருக்கும் எல்லா ஹைட்ரஜன் வாயுக்களும் பெரு வெடிப்பின்போது, சுமார் 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாம்!
 32. விண்வெளியிலும் ஈர்ப்பு சக்தி இருக்கிறதாம். ஆனால்,அங்கே உந்து சக்தி=ஈர்ப்பு (acceleration=gravity) சக்தி என்பதால் ஈர்ப்பு சக்தி இல்லாதது போல தெரிகிறதாம்!
 33. வாட்சன் மற்றும் கிரிக் இருவருக்கும் முன்பே ஃப்ரெட்ரீஷ் மெய்ஷர் என்பவர் 1869-ல் டி.என். ஏ வை கண்டுபிடித்தார். ஆனால் டி.என்.ஏக்கு அவரிட்ட பெயர் நியூக்ளீன் (Nuclein)
 34. சூப்பில் ஜூரத்தை தடுக்கும் ஆன்டி இன்ஃபளாமேட்டரி பலன்கள் இருக்கிறதாம்.
 35. மூளையின் தண்டுப்பகுதி (Brain stem) இருந்தால், தலையில்லா கோழிகூட வாழுமாம். தலையில்லாமல் என்றால், மூளையின் தண்டுப் பகுதி தவிர்த்த பிற பாகங்கள்! அந்தமாதிரி 18 மாதங்கள் தலையில்லாமல் வாழ்ந்த கோழியைப் பற்றி ஒரு செய்தி இருக்கிறது இங்கே!
 36. தாவரங்களுக்குக் கூட குடும்ப பாசம் இருக்கிறதாம். உதாரணமாக, தன் இனமில்லாத தாவரத்தின் அருகில் வாழும்போது மிக அடர்த்தியாக, வேகமாக வளர்ந்துவிடுகின்றனவாம்!
 37. உலகின் மிகக் கொடிய விலங்கு கொசுதானாம்!
 38. ஒரு வகை உன்னிகள் செயற்கை செக்ஸ் உருப்புகளைக் கொண்டவையாம். சில சில்மிஷக்கார உன்னிகளிடாமிருந்து தப்பிக்கவே இந்த பரிமானமாம்!
 39. கடல் குதிரைகளில் தந்தைகள், கருதாங்கி குழந்தை பெற்றுக்கொள்கின்றனவாம்!
 40. மனித உடல்களை உறைய வைத்து மறுசுழற்ச்சி செய்து, உலோகங்கள் தயாரிக்கிறார்களாம் சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள்!
 41. பழங்காலத்தில் அட்டைகளை (Leeches) தண்ணிர் குடுவைகளுக்குள் அடைத்து, வானிலை அறிக்கை செய்தார்களாம். புயல், மழை வரும்போது குடுவையின் அடி பாகத்திலிருந்து மேலே வேகமா எழும்பி, புயல் ஓய்ந்த பின் திரும்பவும் அடியில் தங்கிவிடுமாம் அட்டைகள்!
 42. 100க்கு 100 அதுர மைல்கள் அளவுள்ள ஒரு சோலார் தகடு உற்பத்தி செய்யும் மின்சாரம், அமெரிக்காவின் எல்லா அனல்மின் நிலையங்களும் உருவாக்கும் மின்சாரத்தைக் கொடுக்க வல்லதாம்!
 43. பொலிவியா நாட்டிலுள்ள ஒரு உணவு விடுதி முற்றிலும் உப்பினால் கட்டப்பட்டதாம். (Hotel de Sal Playa in the Uyuni salt flats of Bolivia.)
 44. உலகின் 97% தண்ணிர் அருந்தக்கூடிய குடி நீர் அல்ல!
 45. மனிதர்களைப் போலவே டால்ஃபின் மீன்களும் சந்தோஷத்துக்காக உடலுறவு கொள்கின்றனவாம்!
 46. Humming Bird இன பறவைகள் நடப்பதே இல்லையாம்!
 47. Panamanian golden frogs என்னும் ஒரு வகை தவளை தன் நுரையீறலால் ஒலியைக் கேட்கிறதாம்!
 48. ஆக்டோபஸ் மனிதர்களைப் போலவே தன் உணவை தன் கைகளால் சாப்பிடுகிறதாம்!
 49. pistol shrimp என்னும் ஒரு வகை இறால் எழுப்பும் சத்தம் சுற்றியுள்ள மீன்களைக் கூட கொன்றுவிடக்கூடியதாம்!
 50. ferret என்னும் ஒரு வகை விலங்கு செக்ஸ் இல்லையென்றால் இறந்துவிடுமாம்!

அப்பாடா ஒரு வழியா, 100 அறிவியல் செய்திகள இன்னிக்கு எழுதி முடிச்சாச்சுங்க! 365 செய்திகளையும் இன்னிக்கே எழுதலையேன்னு நீங்க ஒன்னும் கோவிச்சுக்காதீங்க! அடுத்தடுத்த பதிவுகள்ல கூடிய சீக்கிரம் மீதமுள்ள 265 செய்திகளையும் எப்படியாவது எழுதிபுடுறேன். சரிதானுங்களே?!

தொடர்புடைய சில பதிவுகள்:

வலைப்பூவில் நூறு ஓட்டங்கள்

“யூத்ஃபுல் விகடனுக்கு மேலிருப்பானின் மனமார்ந்த நன்றிகள்”

பதிவு-200!

“ஆனந்தி” இதழும் அரிசி விற்கும் “அழகியும்”!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Like This!

Add to Google Buzz

Advertisements