ஸ்டெம் செல்கள் (குறுத்தனுக்கள்) தொடர்-பாகம் 1

Posted on ஜூன் 7, 2010

22


“வளரும் பயிர் முளையிலேயே தெரியும்”

அப்படீன்னு ஒரு பழமொழிய நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க! வளரும் ஒரு பயிரின் எதிர்கால வளர்ச்சி நிலையை, அதன் முளையினுடைய செழிப்பு/ஆரோக்கியத்திலேயே சுலபமாக கண்டறிந்துவிடலாம், அப்படீங்கிறது இந்தப் பழமொழியோட அர்த்தம். அதெப்படி ஒரு முழுப்பயிரோட வளர்ச்சியை அதன் ஒரு சிறு பாகமான முளையை வைத்து கணக்கிடுவது என்று ஒரு கேள்வி எழும்?! இல்லீங்களா?

கண்டிப்பா கணக்கிட முடியும், காரணம் முளையில் நிறைந்துள்ள, உயிர்களின் ஆதார அனுக்களான ஸ்டெம் செல்கள். இந்த ஸ்டெம் செல்கள் எல்லா தாவரங்களின் குறுத்துகளிலும் இருப்பவை!  ஸ்டெம் செல்கள் பத்தி உங்களில் சில/பலருக்குத் தெரிந்திருக்கும்! இதுவரைக்கும் ஸ்டெம் செல்கள் பற்றி உங்களுக்கு எந்த மாதிரியான புரிதல் இருக்கு, அதன்மீதான உங்களின் ஆர்வம் எவ்வளவு, இப்படி எதுவும்  எனக்குத்தெரியாது. ஆனால், ஸ்டெம் செல்கள் பற்றிய பல்வேறு குழப்பங்களும், சந்தேகங்களும், சர்ச்சையான கருத்துக்களும் நிச்சயம் உங்களில் சிலருக்காவது இருந்தே ஆகவேண்டும். காரணம் ஸ்டெம் செல் ஆய்வுக் குறித்து வெளிவரும் சூடான பல செய்திகள்!

இத்தொடரின்மூலம், ஸ்டெம் செல் குறித்த ஒரு எளிய அறிமுகமும், குறைந்தபட்சம் உங்களின் சில சந்தேகங்களுக்கான தெளிவான விளக்கத்தையுமாவது என்னால் தர முடியும் என்ற நம்பிக்கையில், இதோ உலக உயிர்களின் ஆதார அனு/செல்லான ஸ்டெம் செல் உலகினுள்ளே  உங்களுடன் ஒரு அறிவியல் சுற்றுலா…..

ஸ்டெம் செல் என்றால் என்ன?

மனித உடலிலுள்ள சுமார் 1 லட்சம் கோடி அனுக்களின் ஆதாரம் அடிப்படையில் ஒரு வகையான அனு/செல், அதுதான் ஸ்டெம் செல்! இவ்வகையான அனுக்கள் உலகின் பல செல் உயிரிகள் அனைத்திலும் உண்டு. ஸ்டெம் செல்கள் அடிப்படையில் உயிர் தோன்றக் காரணமான இரு செல் உயிர்/சிசுவினுள்ளே இருப்பவை (பார்க்க படம்). உடலின் பிற அனுக்களுக்கு இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே உண்டு. அது ஸ்டெம் செல்லின் பிரத்தியேகமான இரண்டு குணங்கள்…..

  1. தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு (ஆங்கிலத்தில் Self renewal), ஒரே பண்புடைய மற்றொரு அனுவை தானே உருவாக்கிக்கொள்ளும் திறன்
  2. உடலின் உள்ள எல்லா வகையான (210 வகை!) அனுக்களாகவும் தன்னை உருமாற்றிக்கொள்ளும் (கிட்டத்தட்ட கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற) ஒரு அமானுஷ்ய திறன்! (Totipotency/Pluripotency)

உடலின் எந்த ஒரு அனு/செல்லுக்கு, தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலின் 210 வித்தியாசமான அனுக்களாகவும் தேவையான தருணத்தில், தன்னை உருமாற்றிக்கொள்ளும் திறனும் இருக்கிறதோ அந்த செல்லையே ஸ்டெம் செல் என்கிறது உயிரியல்/அறிவியல்.

இது தமிழில் குறுத்தனுக்கள் அல்லது பலுக்கல் என்னும் கலைச்சொல்லால் அழைக்கப்படுகிறது! (தாவரங்களில் குருத்துக்களிலும், மனிதர்களின் வளரும் தன்மையுள்ள சில உடல் பாகங்களிலும் இருப்பவையாதலால் இப்பெயர்!)

wikipedia: Mike Jones

ஸ்டெம் செல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

இயற்க்கையான ஸ்டெம் செல்கள் அடிப்படையில் இரு வகைப்படும். அவை,

  1. சிசு ஸ்டெம் செல்கள் (Embryonic Stem cells, ESC)  (சிசுக்களில் இருப்பவை)
  2. திசு ஸ்டெம் செல்கள் (Tissue stem cells/Adult stem cells) (உடலின் சில வகையான திசுக்களில் இருப்பவை)

இயற்கையான அப்படீன்னு சொன்னாலே செயற்க்கையான ஒன்று இருக்க வாய்ப்பு இருக்குமில்லையா? ஸ்டெம் செல்களிலும் அது உண்டு. செயற்கை ஸ்டெம் செல்கள் என்ற ஒரு வகை ஸ்டெம் செல்களும் உண்டு. அவை, தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் அல்லது இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல்கள் (Induced pluripotent stem cells, iPS cells). அதாவது,

உடலின் சில வகை (தோல், ரோமம்) அனுக்களை  மரபனுவியல் தொழில்னுட்பத்தின் மூலம், சில வகையான மரபனுக்களைக் கொண்டு ஸ்டெம் செல்லாக மாறத் தூண்டப்பட்டு, மனிதனால் செயற்க்கையாக உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களே தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் எனப்படுகிறது!

ஸ்டெம் செல் குறித்த ஒரு அழகான அறிமுகக் காணொளி உங்களுக்காக…..

ஸ்டெம் செல்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள். அனேகமா இப்போ உங்களுக்கு ஓரளவுக்குப் புரியலாம் ஸ்டெம் செல் ஆய்வுகள் ஏன் சர்ச்சைக்குள்ளாகின்றன அப்படீன்னு?! (புரியலைன்னாலும் பரவாயில்லை தொடரின் ஒரு பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்)

இவை மூன்றையும் தவிர்த்து, ஒரு புதுவகையான ஸ்டெம் செல்களும் ஆய்வுலகை கொஞ்சம் ஆட்டித்தான் படைத்துக்கொண்டிருக்கின்றன 1995 ஆம் ஆண்டிலிருந்து. அவை, புற்றுநோய் ஸ்டெம் செல்கள் (Cancer stem cells) எனப்படுகின்றன.

புற்றுநோய் ஸ்டெம் செல்கள்!

உடலில் ஏற்படும் எல்லாவகையான புற்று நோய்களுமே, சிகிச்சைக்குப்பின் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மையுடையவை! இதற்க்கான அடிப்படைக் காரணங்கள் இதுவரை தெரியவில்லை. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் நடத்தப்பட்ட புற்றுநோய் ஆய்வில், சில புற்று நோய்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை அனுக்கள், ஸ்டெம் செல்களின் பிரத்தியேக குணங்களான, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் மற்றும் புற்றுநோயின் எல்லா வகையான செல்களையும் உருவாக்கும் தன்மையுடனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது! புற்றுநோயிலுள்ள இவ்வகை அனுக்கள் திசு ஸ்டெம் செல்களிலிருந்து, மரபனு சேதங்களால் (மரபனுத்திரிபு/mutation) பாதிப்படைந்து, புற்று நோய் அனுக்களாக மாறியிருக்கக் கூடும்/வேண்டும் என்ற யூகத்தினடிப்படையில், இவ்வகை அனுக்களை புற்றுநோய் ஸ்டெம் செல்கள் என்கிறது புற்றுநோயியல்/புற்றுநோய் ஆய்வு உலகம்! ஆக,

புற்றுநோயிலுள்ள, திசு ஸ்டெம் செல்களிலிருந்து, மரபனு சேதங்களால் (மரபனுத்திரிபு/mutation) பாதிப்படைந்து, அதனால் புற்றுநோய் அனுக்களாக மாறி, பொதுவான புற்றுநோய் அனுக்களை தாக்கும் தன்மையுள்ள, சிகிச்சையின் கதிர்வீச்சு மற்றும் வேதியல் மருந்துகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் திறனைப் பெற்று, புற்றுநோய்க்கு அழியா வரம் அளிக்கும் இவ்வகையான அனுக்களை புற்றுநோய் ஸ்டெம் செல்கள் என்கிறார்கள் புற்றுநோயியல் ஆய்வாளர்களில் ஒரு சாரார்! (அடியேன் பத்மஹரி, முனைவர் பட்ட ஆய்விற்க்காக மார்பகப் புற்றுநோய் ஸ்டெம் செல்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளேன் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன்!) மேலதிக தகவல்களுக்கு இங்கு செல்லுங்கள்

என்னங்க, இப்பவே கண்ணக் கட்டுதா? நோ நோ….அதுக்குள்ள கண்ணக்கட்டினா எப்படி? இன்னும் பாதி கிணறு கூட தாண்டலியே?! இப்போதான் தொடரோட முக்கியமான பகுதிக்கு வந்திருக்கோம்…..

ஏன்னா இனிமேதான் உங்களுக்கு, புற்றுநோய்க்கும் ஸ்டெம் செல்களுக்கும் நடந்த திருமணத்தைப் (?) பற்றிய ஒரு சுவாரசியமான உண்மைச் சம்பவக்கதை ஒன்னு சொல்லப்போறேன்……

புற்றுநோய் மருத்துவத்தில் ஸ்டெம் செல்கள்!

ஸ்டெம் செல்கள் தாங்கள் பிறந்த பயனையே புற்றுநோய் மூலமா அடைஞ்சிது, தெரியுமா உங்களுக்கு? ஒன்னும் புரியலீங்களா? அதாவது, ஸ்டெம் செல்கள் ஆய்வு வெறும் ஆய்வாக மட்டுமே இல்லாம, மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு சில உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மனித இனத்தை காக்கும் வல்லமை படைத்தது என்பதை கடந்த 1975 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவச் சிகிச்சை நிரூபித்தது. அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க…..

ஸ்டெம் செல்-ரத்தப் புற்றுநோய், 30 வது திருமண நாள்!

ஒரு இளைஞர் ஒரு உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்படுவது என்பதே மிகவும் கொடுமையானது. அதைவிடக்

John Kersey-David Stahl, credit: http://www.mmf.umn.edu/

கொடுமையானது, அந்த நோய் சிகிச்சையே/மருந்தே இல்லாத, சில வருடங்களிலேயே உயிரைக் குடித்துவிடும் தன்மையுடையது என்பது!


அப்படிப் பாதிக்கப்பட்ட 16 வயது இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்த திரு.டேவிட் ஸ்டால். அவரை பாதித்த அந்த நோய், லிம்ஃபோமா என்னும் ஒரு வகையான உயிர்கொல்லி ரத்தப்புற்று நோய்! எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையானது, 30 வருடங்களுக்கு முன் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டது. ஏன்னு கேக்குறீங்களா?

1970-களில், புற்றுநோய் ஆய்வு/சிகிச்சை முறைகள் அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்த நாட்கள் அவை!  அப்போதெல்லாம் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிட்டது என்று சொன்னால், அவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பது போன்ற ஒரு புரிதல் மக்களிடையே பரவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! ஆக, புற்றுநோய்=இறப்பு என்பதைப் போன்றது என்கிறார் ஸ்டால்!

திடீரென்று ஒரு நாள், மிக மோசமான வயிற்று வலியால் துடித்தார் ஸ்டால். மருத்துவமனைக்கு சென்றவருக்கு வயிற்றில் ஏதோ நுண்ணுயிரி தொற்றுனோய் இருப்பதாகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஆனால், திடீரென்று ஒரு நாள் மூச்சுக் கூட விடமுடியாமல் தவித்தவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சில சோதனைக்குப்பின், ஒரு X-ray அவருக்கு நுரையீரல் முழுவதும் ஒரு திரவம் நிரம்பியிருப்பதாகக் காட்டியது! 15 நிமிடங்களுக்குப் பின் வந்திருந்தால் இறந்திருப்பார் என்றார்கள் மருத்துவர்கள்!

மேலும் சில சோதனைகளுக்குப்பின், மின்னசோட்டா பல்கலைக்கழக மருத்துவமனை (University of Minnesota Hospital) அவரின் வயிற்றில் திராட்ச்சைபழ அளவிலான ஒரு புற்று நோய்க்கட்டி இருப்பதாக உறுதி செய்தது! அது Burkitt’s lymphoma என்னும் ஒரு ரத்தப் புற்றுநோய், வெறும் 5% பிழைக்கும் வாய்ப்பையே பெற்றிருந்தார் ஸ்டால்!  மருத்துவர்களால் அவரின் புற்றுநோய் வளர்வதை குறைக்கத்தான் முடிந்தததே தவிர தடுக்க முடியவில்லை!

“புற்று நோய் மிக வேகமாக வளர்வதாகவும், பிழைப்பதற்க்கான நம்பிக்கை எதுவும் இல்லை என்றும் சொன்னார்கள்”, என்கிறார் ஸ்டால்! வாழ்க்கை இருண்டே போய்விட்டது அவருக்கு! ஆனாலும், ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் இருப்பதாகச் சொன்னார்கள் மருத்துவர்கள்?!

அது சோதனை முறையிலான எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை (Experimental Bone marrow transplant) சோதனை முறையிலான என்றால், இதுவரை யாருக்கும் பலனளிக்காத ஒரு சிகிச்சை என்று அர்த்தம்! அந்தக் காலகட்டத்தில், லியூக்கிமியா என்னும் ரத்தப் புற்றுநோய்க்கு மட்டுமே எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!

“எலும்பு மஞ்சையில் உள்ள ஸ்டெம் செல்கள் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டவரின் ரத்த அனுக்களை மீண்டும் உருவாக்கி, புற்று நோயிலிருந்து நோயாளியை பாதுகாக்குமாம்”

எப்படியிருந்தாலும் பரவாயில்லை, கடவுள்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, இந்த சோதனைமுறை சிகிச்சையை முயன்றே பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார்கள், ஸ்டாலும் அவரது குடும்பத்தாரும்!  ஆனால், சிகிச்சையை கடவுள் செய்யவில்லை. மின்னசோட்டா பல்கலைக்கழக எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை மருத்துவர் ஜான் கெர்சீதான் (John Kersey, M.D) செய்தார்!

“வேறு ஒருவரின் எலும்பு மஞ்சையை ஒரு நோயாளிக்கு செலுத்துகிறோம் என்றால், ஒரு புது ‘நோய் எதிர்ப்பு சக்தியை’ கொடுக்கிறோம் என்று அர்த்தம்! எலும்பு மஞ்சையால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோயாளியின் புற்றுநோயை எதிர்த்து போராடி அழிக்கும் திறன் கொண்டது என்பதை கவனத்தில் கொள்க” என்கிறார் ஜான் கெர்சீ!

இறுதியில், லிம்ஃபோமா ரத்தப்புற்று நோய்க்கு உலகின் முதல் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சையை,  கடந்த அக்டோபர் 7, 1975-ல், நோயாளி ஸ்டாலின் அவர்களின் சகோதரரின் எலும்பு மஞ்சையையும்,  கதிர்வீச்சு  மற்றும் மருந்து சிகிச்சையையும் (radiation and chemotherapy), சேர்த்து வெற்றிகரமாக செய்து முடித்தார்!

இன்று, சிகிச்சைக்கு பின்னான 30 வருடங்களுக்கு பிறகு, எலும்பு மஞ்சை மாற்றும் சிகிச்சைதான் லிம்ஃபோமா புற்றுநோய்க்கு, நம்பிக்கையான, உயிர்காக்கும் ஒரு சிகிச்சையாய் நிலைபெற்றுள்ளது! டேவிட் ஸ்டால், Golden Valley company என்னும் ஒரு நிறுவனத்தில் தொழில்னுட்ப வல்லுனராக பணியாற்றுகிறார்! மீன் பிடித்தல், கோல்ஃப் விளையாட்டுகள் எனப் பல்வேறு அன்றாட செயல்களில் ஈடுபடுகிறார் திடகாத்திரமாக!

இப்போது ஸ்டால் மருத்துவமனை செல்வதில்லை, கெர்சீயை மருத்துவத்துக்காக சந்திப்பதில்லை! ஆனால், அவர்களிருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டெம் செல்-புற்றுநோய் மருத்துவச் சிகிச்சையின் 30 வது ஆண்டுவிழாவை சேர்ந்து கொண்டாடினார்கள்!

கதை கதையாம் காரணமாம் அப்படீன்னு ஸ்டெம் செல் சிறப்புக்கான கதை சொல்லக் கிளம்பி, ஒரு வழியா முடிச்சாச்சு! அதுக்காக நீங்க கதையை நியாபகத்துல வச்சிக்கிட்டு, ஸ்டெம் செல்களை மறந்துடாதீங்க! இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்துல நாம என்னென்ன பார்க்கப் போறோம்னு ஒரு சின்ன பட்டியலையும் கீழே படிச்சிட்டு மறந்துடாமா இந்தத் தொடர் பத்தின உங்க மேலான கருத்துகளையும் மறுமொழியா/மின்னஞ்சலா எனக்கு எழுதி அனுப்புங்க!

அடுத்த பாகத்தில்……

  • சிசு ஸ்டெம் செல்லும் சில/பல சர்ச்சைகளும்
  • பல்வேறு ஸ்டெம் செல் சிகிச்சைகள்

டிஸ்கி: ஸ்டெம் செல்கள்/குறுத்தனுக்கள் (Stem cells) எனும் மனித உடலின் ஒரு வகை மூல/ஆதார அனுக்களைப் பற்றிய இத்தொடரில் இடம்பெறும் கருத்துக்கள், செய்திகள், விவாதங்கள் யாவும் இத்துறை குறித்த என் அடிப்படை அறிவு/புரிதலே! அவற்றில் தவறிருக்கவும் வாய்ப்பிருப்பமையால், வாசகர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கு தொடரில் இடம்பெறும் தொடர்புகளுக்குச் சென்று, மேலதிக விவரங்களை சேகரித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி.

தொடர்புடைய இடுகைகள்:

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

புற்றுநோயும் தேனீயும்

“குடி”மகனே வா….எனும் புற்றுநோய்!?

செல்போன் பயன்படுத்தினால் மூளைப்புற்றுநோய்?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Like This!

Add to Google Buzz