ஆபத்து: திகிலூட்டும், உலகின் ’10 கொடிய’ மிருகங்கள்!

Posted on ஜூன் 5, 2010

8


பரந்து விரிந்த இந்த உலகத்துல, நம்மைச் சுத்தி எத்தனையோ உயிர்கள் இருக்கு. அதுல, சக மனிதர்களைவிட அன்பானதும், பண்பானதுமாக்கூட சில விலங்குகளைச் சொல்ல முடியும். உதாரணத்துக்கு, நன்றிக்கு வித்திட்ட நாய்க்குட்டியைச் சொல்லலாம்!

அதேமாதிரி, வீட்டில் வளர்க்கப்படுகிற அதே வகை மிருகங்கள் காட்டுக்குள்ளே தனக்கென்று ஒரு பெரிய ராஜாங்கமே நடத்துவதுமுண்டு! ஏன்னா, நாம வீட்டுல வளர்க்கிற நாய், பூனை, ஆடு, மாடு, பன்றி இப்படி எல்லா மிருகங்களும் காட்டிலும் வாழ்கின்றன. வீட்டுக்கும் காட்டுக்கும் ஒரே வித்தியாசம், உணவு! இந்த உணவு அப்படீங்கிற விஷயம் ஒரு விலங்கின் இயல்புத்தன்மையே மாற்றிவிடக்கூடும்! உதாரணமா, நான் சமீபத்தில் எழுதிய மனிதனைத் தின்னும் குறும்புக்கார சிங்கங்களைச் சொல்லலாம்!

நமக்குத் தெரிஞ்ச பெரும்பாலான மிருகங்கள், பொதுவா நம்ம வடிவேலு மாதிரி “நான் ரொம்ப நல்லவன்னு” ரொம்ப நல்ல புள்ளையாத்தான் இருக்கும்னாலும், அதே சாதுவான (?) மிருகங்கள் சில/பல சூழ்நிலைகள்ல, திடீர்னு நம்ம தமிழ் பட வில்லன்கள் மாதிரி மாறி படு கொடூரமாக்கூட நம்மைத் தாக்கக்கூடும் அப்படீங்கிறதுதான் நிதர்சனம்! இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னு உங்களுக்கு இப்போ கொஞ்சமாவது புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்!

இதுவரைக்கும், “அட, என்னமா சாதுவா இருக்கு? இந்த மிருகம் இப்படிக்கூட நல்ல புள்ளையா இருக்குமா என்ன?!” அப்படீன்னெல்லாம் நீங்க பிரமிச்சுப் பார்த்த சில/பல மிருகங்களோட இன்னொரு முகத்தைத்தான், இனி இந்தப் பதிவுல நாம  பார்க்கப்போறோம். என்ன திகில் பயணத்தை ‘ஹரி ஓம்’னு தொடங்கிடுவோமா……

1. விஷ அம்புத் தவளை (Poison Dart Frog)

wikipedia: LiquidGhoul

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழக்கூடிய, அதிக பட்சம் 2.5 அங்குலமே நீளமுள்ள, ஒரு வகையான தவளைகள் “விஷ அம்புத் தவளைகள்” என்றழைக்கப்படுகின்றன! பார்க்குறதுக்கு, ‘வாயில வெரலை வச்சாக்கூட கடிக்கத் தெரியாத’ மாதிரி (?) இருக்குற இந்தத் தவளையார், நரம்புகளைத் தாக்கும் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷத்தினை தன் முதுகுப்பகுதியில் சுரக்குமாம். இது எதிரிகளை “மேல பட்டா, உடம்பு சும்மா உதறமுல்ல” அப்படீங்கிற மாதிரியான எச்சரிக்கை விடுத்துத் தாக்க பயன்படும் ஒரு கருவியாம் இந்தத் தவளைகளுக்கு! அதுக்கு நமக்கு என்ன அப்படீன்னு அலட்ச்சியமாக் கேட்டீங்கன்னா, நீங்க பெரிய தப்பு பண்றீங்கன்னு அர்த்தம்?! ஏன்னா, ஒரு தவளை சுரக்கிர விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களைக் கொல்லக்கூடியதாம்! ஐய்யய்யோ…..நான் இல்ல சாமீ!! இந்த தவளையார் பற்றிய விரிவான விளக்கத்துக்கு இங்கு செல்லுங்கள்

2. கேப் எருமை (Cape Buffalo)

wikipedia: Chen Hualin

“எவ்வளவு சொல்லியும் கேட்காம எருமை மாடு மாதிரி எப்படிப் போறான் பாரு”ன்னு சுரணை இல்லாத ஒருத்தரை திட்ட,  இதுக்கு முன்னாடி நீங்க எருமை மாட்டுப் பேரை அனுமதியே இல்லாம (?) பயன்படுத்தி இருக்கலாம். ஆனா, இனிமே அப்படிப் பயன்படுத்துறதுக்கு முன்னாடி கண்டிப்பாக நீங்க ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிக்கத்தான் வேணும்! என்ன எருமை மாட்டுக்குப் போயி இப்படி ஓவரான பில்டப் பண்றேனேன்னு நீங்க நெனக்கலாம். அதுக்கு நான் ஒன்னும் சொல்றதிக்கில்லை!

ஏன்னா, ஆப்பிரிக்காவில் வாழும் நம்ம கேப் எருமையாரைப் பத்தி நான் சொல்லப் போறச் செய்தி அப்படி!   அதாவது, கேப் எருமைகள் ஒரு எதிரியைப் பார்த்துவிட்டால், சுத்தி வளைச்செல்லாம் தாக்குவதில்லையாம். நேரா ஒத்தைக்கு ஒத்தைதானாம்! சும்மா இல்ல, 1500 பவுண்டு எடை மற்றும் ‘சும்மா சீவின மாதிரி ரெண்டு அட்டகாசமான கொம்பு’ இது ரெண்டையும் பார்த்தாலே சும்மா அதிருதில்ல?! ஒன்னு வந்தா பரவாயில்லை, ஆயிரக்கணக்குல நம்மை நோக்கி வந்தா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க?! விரிவான விளக்கத்துக்கு இங்கே

3. பனிக்கரடி (Polar Bear)

wikipedia: Ansgar Walk

மிருகக்காட்சி சாலையில பார்க்கும்போது, “அப்படியே கட்டிப்புடிச்சி ஒரு முத்தம் கொடுக்கலாமா”ன்னு கூடத் தோனலாம் சில பேருக்கு, நம்ம பனிக்கரடியாரைப் பார்த்தா?! ஆனா, அவரப் பத்தி உங்களுக்குச் சரியாத் தெரியாது. ஏன்னா, இவரு தன்னோட பனிக்காட்டுல இருந்தா, கிட்டத்தட்ட ரெண்டு “யானைக் கடல் சிங்கங்களைக் (elephant seals) கூட சாப்பிட்டுடுவாராம் காலைச் சிற்றுண்டியாக! யப்பா….!!

அதுமட்டுமில்லீங்க, தெரியாத்தனமா இவரோட குட்டிகளுக்கு மத்தியில ஒரு முறை போய்ப் பாருங்க தைரியமிருந்தா?! தன்னோட கையால (முன்னங்கால்களால) ஒரே அடிதான், தலை தனியா போயிடுமாம் பல மைல்களுக்கு அப்பால!! இப்போ புரியுதா இவரு எம்மாம்பெரிய பலசாலின்னு?! இவரைப் பத்தி இன்னும் அதிகமாத் தெரிஞ்சிக்க இங்கே போங்க

4. யானை (Elephant)

wikipedia: nickandmel2006 on flickr

நல்ல நேரம், துர்கா மாதிரியான சில படங்கள்ல பார்க்கும்போது, “அடடா, இப்படி ஒரு யானை நம்ம வீட்டுலயும் இருந்தா எப்படி இருக்கும்”னு உங்களை மாதிரியே நானும் நெறைய தடவை நெனச்சிருக்கேன். அது, இப்போ நான் சொல்லப்போற செய்தியை படிக்கிற வரைக்கும்தான். ஏன்னா, “சொன்ன பேச்சைக் கேக்கனும் யானை மாமா, சின்ன பிள்ளைப் போல நீ அழுவலாமா”ன்னு அஞ்சலி ஷாம்லிக்கிட்ட சின்ன புள்ளையா அழுவுன யானை மாமாக்களோட சொந்தக்காரங்க (?) பல பேரு (அட யானைதாங்க!) ஒவ்வொரு வருஷமும், உலகத்துல கிட்டத்தட்ட 500 பேரு வரைக்கும் (மக்களைக்) கொன்னுடறாங்களாம்! ஐய்யய்யோ, அப்படியா?!

ஒரு ஆப்பிரிக்க யானை, சுமார் 16,000 பவுண்டு எடையுள்ளதாம்! என்னதான் இவ்வளவு பெரிய உடலை வச்சிருந்தாலும், தன்னொட கூர்மையான தந்தத்தால குத்திக்கொல்றதுதான் இவருக்கு ரொம்பப் புடிக்குமாம்! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?! இவரைப்பத்தி மேலும் விரிவாத் தெரிஞ்சிக்க இங்கு செல்லுங்கள்

5. ஆஸ்திரேலிய உப்புத்தண்ணி முதலை (Australian Saltwater Crocodile)

wikipedia: J. Patrick Fischer

முதலைப் பண்ணைகள்ல நாம பார்க்கும்போது, சில சமயம் “எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி சோம்பேரியா கெடக்குதே”ன்னு முதலைங்களப் பார்த்து தப்புக் கணக்குப் போட்டுடாதீங்க மக்களே?! ஏன் சொல்றேன்னா, அப்படிச் சோம்பேரியாக் (?) கெடக்கும்போதெல்லாம், யாராவது கடந்து போறாங்களான்னு நோட்டம் விட்டுக்கிட்டு இருக்குமாம் இந்த முதலைங்க! அது சரி, என்னா ஒரு வில்லத்தனம் பாருங்க?!

அப்படி யாராவது, செவனேன்னு கடந்து போனாங்கன்னு வைங்க, கண்ணிமைக்கிற நேரத்துக்குள்ள கவ்வித் தண்ணிக்குள்ள கடத்திக்கிட்டுப் போய், கை வேறு கால் வேறு தலை வேறையா கடிச்சிக்குதறி காலி பண்ணிடுவாராம் இந்த முதலையார்?! ஒன்னும் சொல்றதிக்கில்லை, மாட்டினா தப்பிக்கிறதுக்கில்லை!! இவரைப் பத்தி இன்னுமா நீங்க தெரிஞ்சிக்க விரும்புறீங்க?! அப்புறம் உங்க இஷ்டம், சரி இங்கே போங்க

6. ஆப்பிரிக்கச் சிங்கம் (African Lion)

wikipedia: Mila Zinkova

மேலே சொன்ன சிங்கங்கள் பத்தின பதிவைப் படிச்சிருந்தீங்கன்னா, உங்களுக்கு புரிஞ்சிருக்கும் “சிங்கங்கள் எவ்வளவு கொடிய மிருகங்களா கூட மாற வாய்ப்புண்டு”ன்னு?! சிங்கம் கொடிய மிருகமா மாறிடுச்சின்னா, நாம பயப்பட வேண்டியது முக்கியா நாலு விஷயங்களுக்காக…..

  1. பெரிய, கூரிய விஷப்பற்கள்
  2. மின்னல் வேகப் பாய்ச்சல்
  3. ரேசர் ப்ளேடை ஒத்த மிகக்கூர்மையான நகங்கள்
  4. கொடுமையான பசி

இது நாலும் இருக்குறதுனாலதான் ஒரு சிங்கம், அட்டகாசமான ஒரு வேட்டைக்காரனுக்குச் சமமாம். நான் சமீபத்துல நீங்க பார்த்த வேட்டைக்காரனைச் சொல்லலீங்கோவ்!! ஏய், நாங்கல்லாம் சிங்கம்ல….அப்படீன்னு சொல்ற இவரைப் பத்தி இன்னும் அதிகமா படிக்க இங்கே செல்லுங்கள்

7. வெள்ளை சுறா (Great White Shark)

wikipedia: Terry Gross

உண்மையச் சொல்லனும்னா, நான் இதுவரைக்கும் ஒரு சுறாவைக்கூட நேர்ல பார்த்ததில்லை! சமீபத்துல தமிழ்நாட்டுல வந்த சுறாவையும் சேர்த்துத்தான் சொல்றேன்!ஆனா, க்ரேட் வெள்ளை சுறான்னு ஒன்னு இருக்குதாம். சாதாரணமா, “எங்க வீட்டுக்காரனும் கச்சேரிக்குப் போனான்”னு கடலுக்குள்ள சுத்திக்கிட்டிருக்கிற இந்தச் சுறா, கடல் தண்ணியில ரத்தத்தைப் பார்த்துட்டுதுன்னா, அது பேச்சை அதுவே கேக்காதாம்?! அதாங்க, இரைகளை வேட்டையாட ஆரம்பிச்சிடுமாம்! அப்படி வேட்டையாடும்போது, கடலுக்குள்ள இரையைப் பிடிக்கக் கிட்டத்தட்ட தன்னோட 3000 பற்களையும் பயன்படுத்துமாம்! ரைட்டு…..!! மேலும் விவரங்களுக்கு இங்கே

8. ஆஸ்திரேலிய பெட்டி ஜெல்லி மீன் (Australian Box Jellyfish)

wikipedia: Victor gr

பார்க்குறதுக்கு அப்படியே பூ மாதிரி, மிருதுவா இருக்குற ஒரு வகையான மீன் இனத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பெட்டி ஜெல்லி மீன்களுக்கு”  “கடல் குலஇன்னொரு பேரும் இருக்குதாம். ஒரு சின்ன பீங்கான் கிண்ணம் அளவுடைய இந்த ஜெல்லி மீன்கள், கிட்டத்தட்ட கயிறு போன்ற, 15 அடி நீளமுள்ள 60 கைகளைக் (60 tentacles) கொண்டவையாம்!

ஒவ்வொரு கை/டென்டகுல்ஸிலும், சுமார் 5000 கொட்டும் விஷ அனுக்கள் முழுவதும் விஷத்தைத் தாங்கி இருக்குமாம். இது எத்தனை பேரை கொல்லக்கூடியதுன்னு எதாவது யூகமிருக்கா உங்களுக்கு? இருந்தா சரியான்னு பாருங்க……சுமார் 60 மனிதர்கள்! அடேங்கப்பா…!! விரிவான விளக்கத்துக்கு இங்கே

9.  ஆசிய நல்ல பாம்பு (Asian Cobra)

“பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல”, எனக்கு என்னமோ இந்த டயலாக்கை நம்ம நல்ல பாம்புக்குச் சொன்னா ரொம்பப் பொருத்தமா இருக்குதுன்னு தோனுதுங்க?! “பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்”னு பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மைன்னு இப்போதாங்க புரியுது?! ஏன்னா, என்னதான் உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புன்னு இந்த ஆசிய நல்ல பாம்பைச் சொல்ல முடியாதுன்னாலும், ஒரு வருஷத்துல உலகத்துல பாம்புக்கடியால உயிர்விடுற, கிட்டத்தட்ட 50, 000 பேர்ல  பெரும்பாலானவங்க இந்த ஆசிய நாகத்தாலதான் இறந்துபோறாங்கன்னு சொல்லுது வரலாறு!! இப்போ புரியுதுங்களா, பேரைக் கேட்டாலே ஏன் அதிருதுன்னு?! விரிவான விளக்கத்துக்கு இங்கே

10. கொசு (Mosquito)

wikipedia: Alvesgaspar

மேலே பார்த்த எல்லா மிருகங்களையும் பார்த்துட்டு/படிச்சிட்டு அட…..போட்ட நீங்க, பட்டியல்ல 10வது வந்த கொசுவைப் பார்த்துட்டு, “யோவ் மேலிருப்பான், கேக்கறவன் கேனையனா இருந்தா, எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொல்லுவாங்களாம். அது மாதிரி, கொசுவையெல்லாம் பத்து கொடிய மிருகங்கள் பட்டியல்ல போட்டு எங்களுக்கு எல்லாம் காது குத்தலாம்னு பார்க்குறியே இது உனக்கே நல்லாருக்கா?!” அப்படீன்னு உணர்ச்சிவசப்படுற நண்பர்களே அமைதி, அமைதி!

“பார்க்குறதுக்கு கொசு மாதிரி தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு, என்னென்ன வேலை பண்ணுது பாரு”ன்னு நீங்க யாரையாவது திட்டிக்கீட இருக்கலாம் இதுவரைக்கும். ஆனா, கொசுவோட அளவைப் பார்த்துட்டு, அவரப்பத்தி சும்மா அல்பமா நெனச்சிடாதீங்க! ஏன்னா, உங்களக் கடிச்சி கொஞ்சூண்டு ரத்தத்தைக் குடிச்சிட்டு நீங்க அடிக்கிறதுக்குள்ளப் பறந்துபோற சாதாக் கொசுக்களுக்கு மத்தியில, ஒரு பயங்கரவாதி கொசுவும் இருக்குன்றத மறந்துடாதீங்க. அது யாருன்னு தெரியுமா? அவருதான் நம்ம மலேரியா பரப்புற உயிர்க்கொல்லி கொசு!ஒரு வருஷத்துல சுமார் 20 லட்சம் பேரை தயவு தாட்சண்யமே இல்லாம மலேரியாவுக்கு காவு கொடுத்துட்டு, சும்மா அசால்டா போய்க்கிட்டு இருக்குற, நீங்க நினைக்குற கைப்புள்ளதான் இந்தக் கொசு!! எதுக்கும் கொஞ்சமில்ல, ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க இவருக்கிட்ட?!

என்னங்க, “இந்தத் திகில் போதுமா…..இன்னுங்கொஞ்சம் வேணுமா”ன்னு கேக்குற மாதிரி இருக்கா? உண்மைதான். நீங்க விரும்பினா இன்னொரு இடுகையில இவுகளோட அழிச்சாட்டியங்கள (அதாங்க, கொடூரங்கள) தாங்கி வர்ற காணொளிகளையும் வெளியிடுறதுக்கு நான் ரெடி…..நீங்க ரெடியா?

This slideshow requires JavaScript.

நன்றி: Wikipedia (Images)

தொடர்புடைய சில இடுகைகள்:

பாம்பு: அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள்!

கலிபோர்னியாவில் பேய்சுறா….

இ.வா.ந: சிங்க மீன், கடலுக்கு கதாநாயகனா, வில்லனா?!

தந்திரக்கார “வில்” மீனும் “தண்ணீர்”அம்பும்?!

ராணி தேனீயைக் கொல்லும் “வேலைக்கார” தேனீக்கள்!

வினோதமான “எலும்புத்தின்னி” புழுக்கள்!!

மனிதனை தின்னும் குறும்புக்கார சிங்கங்கள்!!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Like This!

Add to Google Buzz

Advertisements