செக்ஸ்: “கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)

Posted on ஜூன் 3, 2010

10


‘ஆசையே அலைபோலே…. நாமெல்லாம் அதன்மேலே…..

ஓடம்போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே……”

அப்படீன்னு ஒரு பாட்டை நீங்க எல்லாரும் கேட்டிருப்பீங்க இல்லீங்களா? அதே மாதிரி, ஆசையே துன்பத்துக்கு அடிப்படை அப்படீன்னு புத்தர்கூட சொல்லியிருக்காருங்கிறதும் உங்கள்ல பல பேருக்குத் தெரியும்! இந்த ஆசை படுத்துற பாடு இருக்கே, அது கொஞ்ச நஞ்சமில்ல! எல்லா வயசிலேயும், எல்லாருக்கும் ஆசைகள் இருக்கும். ஆனா, இந்த  பருவ  காலத்துல, பாலுணர்வால் தூண்டப்பட்டு, எதிர்பாலினத்துமேல வரும் பாருங்க ஒரு ஆசை. யப்பா…., மனுசன அப்படியே அல்லோல கல்லோலப் பட வச்சிடும் போங்க!! அது சரி, அனுபவமான்னு கேட்கக்கூடாது?!

இந்த பருவ வயது ஆசையினால வர்றதுதான் இந்த காதல், கத்திரிக்காய் அப்பறம் சமீபத்திய மேலைநாட்டு வரவான இந்த பாழாய்ப்போன டேட்டிங், ஹூக்கிங் கன்றாவி எல்லாம்! சில வருடங்கள் முன்னாடி வரைக்கும், கல்லூரியிலதான் இந்த காதல் ஆரம்பிக்கும் அப்படீங்கிறது என்னோட புரிதல்! ஆனா, இப்பெல்லாம் பசங்க ரொம்ப வேகமா போறாங்க போலிருக்கு, ஏன்னா காதல் கத்திரிக்காய்னு ஒன்னாவது ரெண்டாவதுலயே ஆரம்பிச்சிடுறாங்களாமே இந்த வாண்டுங்க?!

சரி அத விடுங்க. ஆமா, இந்த டேட்டிங்ல எத்தனை வகை இருக்குன்னு  தெரியுமா உங்களுக்கு?அதாங்க நம்ம பசங்க கூட, பிக் அப்பு….ட்ராப்பு….எஸ்கேப்பு அப்படீன்னெல்லாம் சொல்லுவாங்களே?! என்ன அப்படிப் பார்க்குறீங்க, தெரியாதா? என்னங்க இப்படி உலகம் தெரியாதவங்களா இருக்கீங்க?!

டேட்டிங்கும் ‘ஹூக்கிங்-அப்’பும்!

கல்லூரி, பல்கலைக்கழகங்கள்ல பொதுவா ரெண்டு வகை டேட்டிங் இருக்குதாம் (அமெரிக்காவுல!). ஒன்னு, டேட்டிங். இன்னொன்னு, ஹூக்கிங் அப்! இது நம்ம ஊருல எந்த நிலைமையில இருக்குன்னு எனக்குத் தெரியல, ஆனா அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் இப்படி எல்லா நாடுகள்லயும் (இன்னும் பலவற்றிலும்) இது சர்வ சாதாரணம். இந்த ரெண்டு விதமான ஆண்-பெண் உறவுகளுக்கும் என்ன பெரிய வித்தியாசம்னு கேட்டீங்கன்னா…..

டேட்டிங்: இந்த வகையான உறவுல, ஆண்கள்தான் முதல்ல ஆரம்பிப்பாங்க. அதாவது, ஒரு வயது வந்த ஆண்

credit: wikivorce.com

ஒரு வயது வந்த பெண்ணிடம், என்னுடன் வெளியில் வருகிறாயா என்று கேட்க, அந்த ஆணை பெண்ணுக்குப் பிடிக்கும் பட்சத்தில் அந்தப் பெண் ஒப்புக்கொண்டு, இருவரும் வெளியில் செல்லும் ஒரு நாளை ஆண் முடிவு செய்து பின் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவார்கள். இறுதியில் இந்த ஒரு நாள் உறவு செக்ஸில்/உடலுறவில் கூட முடியலாம்!

ஆக, டேட்டிங் கலாச்சாரத்தில், ஆண் பெண்ணிடம் கேட்கும்வரை பெண் பொறுத்திருக்கிறாள். கேட்கும் ஆணைப் பிடித்திருந்தால் வெளியில் செல்ல ஒப்புக்கொள்கிறாள் இல்லையென்றால் நிராகரித்துவிடுகிறாள்! இவ்வழக்கத்தில் ஆணுக்குப் பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் நன்கு தெரிந்திருக்கும்/தெரிந்துகொள்ள விரும்புவர். அதனால், பின்னாட்களில் காதல்-கல்யாணம் வரை போக வாய்ப்புகளுண்டு!

ஹூக்கிங் அப்: இந்த வகையான உறவுல, முன்பின் தெரியாத/சம்பந்தமேயில்லாத/நன்கு பரிச்சயமில்லாத ஒரு ஆணும் பெண்ணும், பார்த்த இடத்தில் (ஒரு பார்ட்டியில்) ஒருவரை ஒருவர் விரும்பி, அளவளாவி பின் முத்தம் கொடுப்பதில் தொடங்கி உடலுறவு வரை சென்று விடுவார்கள். இவ்வுறவில் காதல் கத்திரிக்காய் எல்லாம் எதுவும் இல்லை. பின்னாளில் வர வாய்ப்புகளுமில்லை! ஆக, இது ஒரு “ஒரு நாள் கூத்து”!

“ஏய், அதெல்லாம் சரிதாம்ப்பா, இதையெல்லாம் ஏன் இப்போ எங்ககிட்டே சொல்லிக்கிட்டு இருக்கே” அப்படீன்னு கேக்குறீங்களா?

அட அது வேற ஒன்னுமில்லீங்க, கல்லூரியில படிக்கிற காலத்துல இந்த காதல்ங்கிற பேர்ல, பொண்ணுங்க கூட பசங்க ஒன்னா சுத்துறது, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி, ஒன்னா சுத்தின ரெண்டு பசங்களப் பத்தி மத்த பசங்க, “அவங்க ரெண்டு பேரையும் அந்த கார்டன்ல நெருக்கமா பார்த்தேன், லைப்ரரியில பார்த்தேன், ராத்திரி 8 மணிக்கு சிட்டியில ஒன்னா பார்த்தேன்” அப்படி இப்படின்னு சொல்லி தப்பு தப்பா கேள்விப்படுறதுன்னு,  ஒரே கிசு கிசு மயமா இருக்கும்!

அப்பெல்லாம் தோனும், ஆமா இதுங்க எல்லாம் உண்மையாத்தான் லவ் பண்ணுதுங்களா, இல்ல காதல்ங்கிற பேர்ல எடுக்கிற அரிப்பை சரி பண்ணிக்க சுத்துதுங்களா அப்படீன்னு! ஏன்னா, நான் என்னோட பதின்மவயது குறிப்புகள்ல குறிப்பிட்டிருந்த மாதிரி, கல்லூரி வளாகத்துக்குள்ள அப்பப்போ, சில/பல நாய்க்காதல்களைப் பார்த்த அனுபவம் எனக்குமுண்டு!

அனேகமா, காதல் உறவுகள் பத்தி எனக்கு வந்த கேள்விகள்/சந்தேகங்கள் உங்களுக்கும் வந்திருக்கும்னு நெனக்கிறேன்! அப்படிப்பட்ட காதல்-காமம் சம்பந்தப்பட்ட நம்ம சந்தேகங்கள அறிவியல்பூர்வமா விளக்குறதுக்கு, ஒரு ஆய்வை செஞ்சு வெளியிட்டிருக்காங்க விஞ்ஞானிகள்! அந்த ஆய்வு இந்த மாதிரியான உறவுகளைப் பத்தி என்ன சொல்லுதுன்னுதான் நாம இந்த பதிவுல பார்க்கப் போறோம்……

காதலும் காமமும், கல்லூரியில்!

பெரும்பாலும் கல்லூரிகள்ல ஆரம்பிக்கிற பருவ வயது ஆண் பெண் உறவுகளைப் (டேட்டிங் மற்றும் ஹூக்கிங்-அப்) பற்றி ஆய்வு செய்ய, அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருக்கும் ஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழக ஆய்வாளர் கரோலின் ப்ராட்ஷா (Carolyn Bradshaw from James Madison University in Virginia), கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்களை டேட்டிங், ஹூக்கிங் அப் போன்ற உறவுகளின்பால் ஈர்க்கும் காரணங்களையும், மாணவர்களின் வாழ்க்கையில் அவ்விரு உறவுகள் ஏற்படுத்தும் நல்ல/கெட்ட பாதிப்புகள்/விளைவுகள் பற்றிய கல்லூரி மாணவர்களின் கருத்துகளையும் அறிய முற்பட்டார்!

இந்த ஆய்வுக்காக, ஒரு அமெரிக்கக் கல்லூரியின் 150 பெண்கள் மற்றும் 71 ஆண்களை, டேட்டிங் மற்றும் ஹூக்கிங் அப் சூழல்களுக்கு உட்படுத்தினார் ப்ராட்ஷா! கல்லூரி மாணவர்கள் உட்படுத்தப்பட்ட பல்வேறு சூழல்களுள், காதல் உறவுக்கான வாய்ப்புகள், அழகான ஆண்/பெண்ணுடன் பழகுவதற்க்கான வாய்ப்புகள் மற்றும் மது அருந்தும் வாய்ப்புகள் போன்றவையும் அடங்கும்!

உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு சூழலிலும், மாணவர்கள் டேட்டிங் மற்றும் ஹூக்கிங் அப் உறவுகளுள் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்று கேட்கப்பட்டது. மேலும் டேட்டிங், ஹூக்கிங் அப் உறவு முறைகளின் மூன்று தலையாய (?) பயன்கள் மற்றும் ஆபத்துகள் போன்றவற்றையும் பட்டியலிடுமாறும், ஆய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரின் கடந்த இரண்டு வருட காலத்தில், அவர்களுக்கு ஏற்பட்ட டேட்டிங், ஹூக்கிங் அப் குறித்த விவரங்களையும் விளக்குமாறு   கேட்டுக்கொள்ளப்பட்டது!

ஆய்வுடன் தொடர்புடைய ஒரு காணொளி கீழே…..

ஆய்வு முன்வைக்கும் முடிவுகள்/கருத்துக்கள்!

  1. பெரும்பாலும் ஆண்களே டேட்டிங் உறவுகளை தோடக்கியிருந்தாலும், முதல் டேட்டிங் அல்லது ஹூக்கிங் அப் அனுபவ எண்ணிக்கையில், ஆண்-பெண் வித்தியாசம் எதுவும் காணப்படவில்லை!
  2. ஆண், பெண் இருபாலருக்கும் டேட்டிங் எண்ணிக்கையவிட இரு மடங்கு அதிகமாக இருந்ததாம் ஹூக்கிங் அப்பின் எண்ணிக்கை! அப்ப….வெளங்கிடும்!!
  3. மொத்தத்தில், ஆண்-பெண் இருபாலரும், ஹூக்கிங் அப்பை விட பாரம்பரிய டேட்டிங் (அதாங்க நம்ம ஊரு காதல்!) உறவையே விரும்பினார்களாம்! இது கொஞ்சம் ஆறுதலா இருக்கு?!
  4. பாரம்பரிய டேட்டிங்கை விரும்பியவர்களில் பெண்களே அதிகமாம். (பெண்கள் 41%, ஆண்கள்-20%) இதுதான் முன்னாடியே தெரியுமே?!
  5. ஹூக்கிங் அப்பை பெரிதும் விரும்பியவர்களில் ஆண்களே அதிகமாம். (பெண்கள்2%, ஆண்கள்-17%) இதுவும்தான்!
  6. ஆண், பெண் இருபாலரும் டேட்டிங் மற்றும் ஹூக்கிங் அப் உறவுகள் குறித்து ஒரே மாதிரியான பயன்கள்/ஆபத்துகளை குறிப்பிட்டாலும், பெண்கள் டேட்டிங் உறவையே பெரிதும் விரும்பினார்களாம், ஆனால் ஆண்களோ ஹூக்கிங் அப்பைத்தான் விரும்பினார்களாம்! ஐய்யோ மானம் போவுதே….?!

உடனே, “ஓஹோ….அதானே பார்த்தேன். இந்த ஆண்கள், இப்படித்தான்னு முன்னாடியே தெரியும். இப்போ இந்த ஆய்வு மூலமா அது திரும்பவும் ஊர்ஜிதமாயிடுச்சி”, அப்படீன்னு உணர்ச்சிவசப்படுற (?) பெண்களே பொறுமை பொறுமை, நான் இன்னும் முடிக்கல!

என்னதான் ஆண்கள் பெண்களை விட அதிகமா, ஹூக்கிங் அப்பை விரும்பினார்கள்னு சொன்னாலும், காதல் கல்யாணம் அப்படீங்கிற வாய்ப்பு இருந்தப்போ ஆண்களும் டேட்டிங்கைத்தான் விரும்பியிருக்கிறார்கள்! அப்படியோரு காதல்-கல்யாண வாய்ப்பு இல்லாத பட்சத்தில்தான் பெண்களை விட அதிகமான எண்ணிக்கையில் ஆண்கள் ஹூக்கிங் அப்பை விரும்பினார்கள் என்று சொல்கிறது இந்த ஆய்வு! அப்பாடா…..இப்போதான் நிம்மதியா இருக்கு?!

டேட்டிங், ஹூக்கிங் அப் குறித்த காணொளிகளை தேடியபோது கிடைத்த ஒரு காணொளி உங்களுக்காக…..

ஆக மொத்தத்தில், இவ்விரு உறவுகள் குறித்த பயன்கள் மற்றும் ஆபத்துகளைப் பொறுத்தவரை, ஆண்-பெண் என இருபாலரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தாலும், சில வித்தியாசங்களும் இருக்கத்தான் செய்தன என்கிறது இந்த ஆய்வு…..

  • ஆண்களை விட பெண்களே ஒரு நீண்ட கால உறவு (காதலை) அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள். மேலும், பெண்கள் டேட்டிங் மற்றும் ஹூக்கிங் அப் என்ற இரு உறவுகளிலும், விருப்பமில்லாத ஒரு ஆணுடன், உணர்வு ரீதியாக தங்களை இழந்துவிடுவோமோ/சார்ந்துவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள்?!
  • பெண்களை விட ஆண்களே, சுதந்திரத்தை அதிகம் விரும்புகிறார்கள். ஹூக்கிங் அப் போன்ற, பொறுப்புணர்ச்சி இல்லாத உறவுகளில் கூட, பெண்கள் ஒரு நீண்ட கால உறவினை எதிர்ப்பார்த்துவிடுவார்களோ என்று ஆண்கள் அச்சப்படுகிறார்களாம்! அது சரி….?!

என்ன நண்பர்களே, இந்த ஆய்வு முன்வைக்கும் செய்தி/கருத்துகளில் எத்தனை உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கு/இல்லைன்னு எனக்குத் தெரியலை. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த ஆய்வின் பெரும்பாலான கருத்துக்கள் இன்றைய இளைய சமுதாய எண்ண ஓட்டத்தினை ஓரளவுக்காவது பிரதிபலிப்பதாய் இருக்கிறதென்றே நான் நினைக்கிறேன்!

மாற்றுக்கருத்துடையவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து விவாதத்தை தொடங்கலாம், நம் இளைய சமூகத்தினரை கருத்தில் கொண்டு…….

தொடர்புடைய சில பதிவுகள்:

செக்ஸ்:போர்னோ வீடியோக்களும் சில அதிர்ச்சிகளும்!!

ஃபேஸ்புக்கும் செக்ஸும்; உஷாரய்யா உஷாரு!!

“அந்த” ஹார்மோனின் லீலைகள்!

செக்ஸு வாங்கலையோ செக்ஸு…..

செக்ஸ்: ஒரு “புள்ளி” விவரம்!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Like This!

Add to Google Buzz