“சிந்த்தியா”, விஞ்ஞான உலகின் அட்டகாசமான ‘செயற்கை’ புதுவரவு!!

Posted on ஜூன் 1, 2010

15


நம்ம ஊருல “சந்தியா” யாரு தெரியுமான்னு கேட்டா, குறைஞ்சது நூத்துல 60-வது பேராவது, எடுத்த எடுப்பிலேயே “யாரு காதல் சந்தியாவத்தானே கேக்குறீங்க” அப்படீன்னு கச்சிதமா கேப்பாங்கன்னு நெனக்கிறேன். காரணம் என்னன்னு உங்களுக்கே நல்லா தெரியும்?!

நடிகை சந்தியா மூச்சு விட்டிருந்தாக்கூட, “சூடாக மூச்சு விட்ட காதல் சந்தியா” அப்படீன்னு பெட்டிச்செய்தியில கிசு கிசுவையும், அட்டைப்படத்துல சந்தியாவையும் போட்டு சும்மா அசத்திடுவாங்கல்ல நம்ம ஊடகத்தார்?! இது நம்ம சினிமா  (பொது?) அறிவுக்கு ஒரு சின்ன சான்று. அதனால, நாம சினிமா பொது அறிவைப் பத்தி எதுவும் கேக்கவே வேணாம். மக்கள்  எல்லாத்தையும் அப்படியே கரைச்சி குடிச்சிருப்பாங்க!

சரி அதவிடுங்க, சமீபத்துல உலகத்துக்கு அறிமுகமான “சிந்த்தியா” பத்தி உங்கள்ல யாருக்காவது தெரியுமா?  என்ன,  கோலிவுட்ல புதுசா இறக்குமதி ஆகியிருக்கிற நடிகையா இருக்குமோன்னு யோசிக்கிறீங்களா? சத்தியமா இல்லீங்க! சரி விடுங்க, தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் இன்றைய பதிவுல நாம சிந்த்தியாவை சும்மா பிரிச்சி மேய்ஞ்சிடுவோம் வாங்க…….

சிந்த்தியா; உலகின் முதல் செயற்கை உயிர்?!

credit: science.org, BBC

கடந்த 20-ஆம் தேதி, Science அப்படீங்கிற ஒரு முன்னனி அறிவியல் வார இதழில், உலகின் முதல் செயற்கை உயிரை மரபனுவியல் விஞ்ஞானி க்ரெய்க் வென்டர் (Dr.Craig Venter) அவர்கள் உருவாக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி விஞ்ஞான உலகத்தையே கொஞ்சம் புரட்டித்தான் போட்டுவிட்டது! அந்த செயற்கை உயிர்தான் நம்ம டார்லிங் “சிந்த்தியா”!

இது முழுமையான ஒரு செயற்கை உயிரா இல்லையா அப்படீங்கிறதப் பத்தி நாம அப்புறமா பார்ப்போம். முதல்ல சிந்த்தியா அப்படீன்னா என்னன்னு பார்ப்போம்…..

ஒரு பாக்டீரியாவின் (Mycopalsma genitalium) மரபனுக்கோப்பினை (Genome) முற்றிலும் தெரிந்துகொண்டு பின் அதே மரபனுக்கோப்பினை முழுமையாக சோதனைக்கூடத்தில் உருவாக்கி, உயிருள்ள ஒரு பாக்டீரியாவின் மரபனுக்கோப்பினை அகற்றிவிட்டு, செயற்க்கை முறையில் தயாரித்த மரபனுக்கோப்பினை அப்பாக்டீரியாவின் உடலினுள் செலுத்தி, மீண்டும் உயிர்பெறச் செய்தனர். அந்த புதிய உயிரைத்தான் சிந்த்தியா என்கின்றனர்.

அதாவது சிந்த்தெடிக் செல் (Synthetic cell) அல்லது செயற்கை அனு என்பதன் சுருக்கமே சிந்த்தியா! ஆக, சரியாகச் சொன்னால் இது ஒரு இயற்கை+செயற்கை (பாக்டீரியாவின் உடல்+செயற்கை மரபனுக்கோப்பு) கலவைதானே தவிர முழுமையான செயற்க்கை உயிர் அல்ல என்பதை நினைவில் கொள்க!!

சோதனைக்கூடத்தில் சிந்த்தியாவை எப்படி உருவாக்கினார்கள் என்று விளக்கும் அழகான இந்த கார்ட்டூன் காணொளியைப் பாருங்க…..

அதெல்லாம் சரி, இந்த செயற்கை உயிரை வச்சி என்ன பண்றது? இதனாலென்ன நமக்கு என்ன நன்மை அப்படீன்னு கேட்டா, ஒன்னு இல்ல ரெண்டு இல்ல. கிட்டத்தட்ட ஒரு டசன் நன்மைகள் இருக்கு அப்படீங்கிறாரு இதை உருவாக்கிய திரு.வென்டர்! உதாரணமா, நமக்குத் தேவையான மருந்துகளை இயற்கை முறையில், உருவாக்க வல்ல பாக்டீரியா தொழிற்சாலையை உருவாக்குவது, உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் வெப்பமயமாக்கல் வாயுக்களை உருஞ்சுவது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிவாயுக்களை உற்பத்தி செய்தல் இப்படி போய்க்கிட்டே இருக்கு சிந்த்தியாவினால் நமக்குக் கிடைக்கக்கூடிய  நன்மைகளின் பட்டியல்!

கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு, ஆனா இது நடைமுறையில சாத்தியமா?

கண்டிப்பா நாம பார்த்த நன்மைகள் எல்லாமே சிந்த்தியா மூலமா நமக்குக் கெடைக்குறதுக்கான வாய்ப்புகள் ஏராளம்தான்னாலும், அதுல எதுவும் சிக்கல்/ஆபத்து இருக்காதான்னு கேட்டா, “ஆபத்து இருக்கு……ஆனா, இல்ல” அப்படீங்கிற மாதிரியான வழ வழா கொழ கொழா பதில்தான் கெடைக்குது எல்லா விஞ்ஞானிகள்கிட்டேயிருந்தும்?!.

பதில்மட்டுந்தான் குழப்பமானது அப்படீன்னாக் கூட சரின்னு விட்டுடலாம். இந்த பாதி-செயற்கை உயிர்னால ஏற்படக்கூடிய அபாயகரமான விளைவுகள நெனச்சாத்தான் கதி கலங்குது அப்படீங்கிறாங்க சில விஞ்ஞானிகள்! விஞ்ஞானிகள் மட்டுந்தானா இப்படின்னு கேட்டா இல்லன்னுதான் சொல்லனும். ஏன்னா, இந்த ஆய்வைப் பற்றிய சரியான புரிதல் கொண்ட பல அறிவியல் வல்லுனர்களும், மத அமைப்புகளும் கூட இப்புதிய உயிரின் பிறப்பை எண்ணி ஒரு வித பயத்துடன் கூடிய மிகுந்த குழப்பத்தில்தான் இருக்கிறார்கள் என்கிறது ஒருசெய்தி

அப்படியென்னதான் இந்த சிந்த்தியாவால வரக்கூடிய பிரச்சினைகள் அப்படீன்னு பார்த்தா…..

இயற்க்கைக்கு நேர்மாறான வழியில் சென்று, செயற்கையான ஒரு மரபனுக்கோப்பை உருவாக்குவதே, விஞ்ஞானிகள் கடவுளாக முயற்ச்சிக்கும் ஒரு நீண்டகால ஆசையைத்தான் ஊர்ஜிதப்படுகிறது!

என்னதான் இந்த ஆய்வுக்கு 15 வருடம் செலவு செய்து, சுமார் $40 மில்லியன் டாலர்கள் பொருட்செலவு செய்திருந்தாலும், இயற்கையோடு இயைந்த, அனுசரித்துப்போகும் இயல்புள்ள ஒரு ஆராய்ச்சி இல்லை இது என்பதே பலரின் பயத்துக்கு காரணமாக இருக்கிறது?!

நல்ல எண்ணத்துடன் உலகின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில்னுட்பத்தை, தங்களின் சுய நலத்துக்காக, உயிரியல் ஆயுதம் (biological weapon) உருவாக்கி உலகை அழிக்கவும் சிலர் பயன்படுத்தக்கூடும் என்னும் ஒரு ஆபத்தான சாத்தியக்கூரும் சிந்த்தியாவில் அடங்கியுள்ளது!

சிந்த்தியாவை உருவாக்கும் ஒரு சோதனைக்கூடத்தில் ஏற்படக்கூடிய ஒரு கவனக்குறைவு அல்லது சிறு தவறுதலால் சில ஆங்கில சினிமாக்களில் (Will Smith-ன் I Am Legend) வருவதுபோல உலகை அழிக்க வல்ல ஒரு வினோதமான/பயங்கரமான உயிர்க்கொல்லி நுண்ணுயிர் தோன்றிவிடுவதற்க்கான பேராபத்துகளும் அடங்கிய ஒரு தொழில்னுட்பமே சிந்த்தியா என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்!

இப்படி இன்னும் சில/பல பிரச்சினைகளை உள்ளடக்கிய சிந்த்தியாவை குறித்த இரு வேறு விவாதங்கள் விஞ்ஞான உலகிலும், சமுதாயத்திலும் உலா வருகின்றன!

  1. சிந்த்தியா போன்றதொரு செய்ற்கை உயிரை உருவாக்குவது ஒரு அறம் (Ethics) சார்ந்த செயலா?  மனித ஒழுக்க நெறிமுறைகளின் படி ஏற்புடையதா இல்லையா?
  2. விஞ்ஞான அல்லது அறிவியல் ஆய்வு/கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்கள் எந்த அளவுவரை அனுமதிக்கப்படவேண்டும்? அல்லது விஞ்ஞான முன்னேற்றத்துக்கான வரையரை என்ன?

இந்த இரு விவாதங்களையும் இரு வேறு கோணங்களில் பார்க்க வேண்டியது மிக மிக அவசியம். ஒன்று, விஞ்ஞானிகளின் பார்வையில் மற்றொன்று சமுதாயத்தில் பார்வையில்! விஞ்ஞானிகளின் பார்வையும் பொதுமக்கள்/சமுதாயத்தின் பார்வையும் முற்றிலும் வேறுபட்டதாகவும், சில சமயங்களில் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாகவும் இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், ஒவ்வொரு விஞ்ஞானியும் அடிப்படையில் சமுதாயத்தின் ஒரு அங்கமான பொதுமக்களில் ஒருவரே!

விஞ்ஞானிகளின் பார்வையில் சிந்த்தியா!

விஞ்ஞானிகளில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என இருவகை உண்டு. ஆக, விஞ்ஞான முன்னேற்றங்கள் பற்றிய இவர்களின் கோணங்களும் அவர்களின் கடவுள் நம்பிக்கையை பொருத்தே அமையும். அத்தகைய விஞ்ஞானிகளின் பார்வையில் சிந்த்தியா எப்படி வெளிப்படுகிறது என்று பார்த்தால்…..

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மரபனுவியல் விஞ்ஞானி காஸ் மிக்லெம்மின் (Dr Gos Micklem) பார்வையில் “சிந்த்தியா சந்தேகமேயில்லாமல் மரபனுவியல் துறையின் ஒரு மயில்கல்”

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின், அறவியல்துறையின் பேராசிரியர் ஜூலியன் சாவுலெஸ்கின் பார்வையில் “சிந்த்தியாவினால் ஏற்படும் பலன்கள் வெகுதூரத்தில் இருப்பது உண்மையென்றாலும் இது ஒரு  தலைசிறந்த கண்டுபிடிப்பு/சாதனை!” (Professor Julian Savulescu, from the Oxford Uehiro Centre for Practical Ethics at the University of Oxford)

மரபனுவியல் கண்டுபிடிப்புகளை உற்று நோக்கும் ஒரு இங்கிலாந்து நிறுவனமான Genewatch-ன் விஞ்ஞானி ஹெலன் வாலேஸ் (Dr Helen Wallace) சிந்த்தியா பற்றி கூறுகையில், “சிந்த்தியா மிகவும் ஆபத்தான ஒரு நுண்ணுயிராகவும் மாறிட வாய்ப்புண்டு. இம்மாதிரியான புதிய உயிர்களை சுற்றுச்சூழலுக்கு அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் ஆபாயங்கள் என்னவென்று நமக்கு தெரியாது. ஆக, சிந்த்தியாவின் நன்மைகளை மட்டுமே பாராமல் தீமைகளையும் கவனித்தல் அவசியம்!” என்கிறார்.

இப்படி சிந்த்தியா பற்றிய நல்ல/கெட்ட அபிப்பிராயம் உள்ள விஞ்ஞானிகள் இருவருக்கு பொதுவான கருத்து ஒன்று உண்டு என்பது தெரியவருகிறது. அது, சிந்த்தியாவின் நன்மைகள் ஏராளம் என்றபோதும், தீமைகள் குறித்த புரிதல் இல்லாதபோது, இத்தொழில்னுட்பத்தை பயன்படுத்தும்முன் சில/பல ஆயத்தங்கள், ஆய்வுகள் செய்து நம்மை மேலும் உறுதிப்படுத்திக்கொள்வது மிக மிக அவசியம்! இல்லையென்றால் நாம் பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்!

சிந்த்தியா குறித்த பி.பி.சி. யின் செய்திக் காணொளி உங்களுக்காக……

என்னங்க, இப்பவே கண்ணக் கட்டுதா? எனக்கும்தாங்க! அதுக்காக, இத அப்படியே விட்டுட முடியுமா? இப்ப பொதுமக்களாகிய நீங்க சொல்லுங்க,

  1. “சிந்த்தியா”வைப் பத்தியும், அதன் நிறை குறைகளைப் பத்தியும் நீங்க என்ன நினைக்கிறீங்க?
  2. சிந்த்தியா போன்ற மரபனுவியல் கண்டுபிடிப்புகள் இந்த உலகத்துக்கு அவசியமா?
  3. செயற்கை உயிரை உருவாக்குவது என்பது ஒரு அறச்செயலா? பொதுமக்களுக்கு ஏற்புடையதா?
  4. விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேற வேண்டும்/சிந்த்தியா போன்ற கண்டுபிடிப்புகள் வரை செல்வது அனுமதிக்கத்தக்கதா?
  5. விஞ்ஞானிகள் செயற்கை உயிர்களை உருவாக்கி கடவுளாக முயற்ச்சிப்பதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

பொதுமக்களா நீங்க உங்க கருத்துகளச் சொன்னீங்கன்னா, ஒரு ஆய்வாளனாகவும், பொதுமக்கள்ல ஒருத்தனாவும் என்னோட கருத்துகள நான் சொல்றேன்? என்ன சரிதானே……?!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும் vote எனும்  ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி!

ஓட்டுப் போடலையோ ஓட்டு

Add to Google Buzz

Add to FacebookAdd to DiggAdd to Del.icio.usAdd to StumbleuponAdd to RedditAdd to BlinklistAdd to TwitterAdd to TechnoratiAdd to Yahoo BuzzAdd to Newsvine

Advertisements